மெய்யுலகிற்கு அப்பால் ‘மெட்டாவெர்ஸ்’ பிரபஞ்சம்!

நித்திஷ் செந்தூர்

திண்ணைகளில் அமர்ந்து அளவளாவுவது அன்றைய வழக்கமாக இருந்தது. முகம் பார்த்துப் பேசலாம். நேரடியாக நலம் விசாரிக்கலாம். இன்று எல்லாம் திரைக்குப் பின்னால் நடைபெறுகின்றன என்றாலும் ‘ஃபேஸ்புக்’, ‘டிவிட்டர்’ முதலிய சமூக ஊடகத் தளங்கள் நவீனத் திண்ணைகளாகத் திகழ்கின்றன. மக்கள் இந்தத் தொழில்நுட்பத் திண்ணைகளில் கருத்துகளைப் பரிமாறி கொள்வதும் நலம் விசாரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. விசைப்பலகை வீரவசனங்களுக்கும் பஞ்சமில்லை.

காலச் சுழற்சியில் புதுப்புது தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் மனித வாழ்க்கையில் ஊடுருவிய வண்ணம் உள்ளன. அறிமுகம் இல்லாத நபர்களை நண்பராக்கிக் கொள்ளலாம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதை மனித மூளை மெய்ப்பித்துள்ளது. ஒருகாலத்தில் யார் எண்ணியிருப்பார்கள் உலகம் இப்படி இணையத்தில் சங்கமித்துச் சுருங்கிவிடும் என்று?

அண்மையில் பரவலான பேச்சுபொருளாக ‘மெட்டாவெர்ஸ்’ (Metaverse) விளங்கிவருகிறது. ‘Metaverse’ என்பது ஒரு மெய்நிகர் உலகம். பிரபஞ்சம் என்றே சொல்லலாம். நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் மெய்நிகர் உலகத்தில் நமக்குப் பிடித்தமான தோற்றத்தை உருவாக்கி ‘அவதாரங்களாக’ வாழ்வது. மிகை மெய்நிகர்த் தொழில்நுட்பமும் (Augmented Reality) மெய்நிகர்த் தொழில்நுட்பமும் (Virtual Reality) இணைந்து நிஜ மனிதர்களை மெய்நிகராக வாழச்செய்யும் இடத்தை மெட்டாவெர்ஸ் எனலாம். சுருக்கமாகச் சொன்னால் நமது மெய்யான உலகத்துடைய ஒரு மெய்நிகர் நீட்சி.

மெட்டாவெர்ஸின் பின்னணி

மெட்டா, யூனிவர்ஸ் (Meta, Universe) ஆகிய இரு சொற்களின் புணர்ச்சியே மெட்டாவெர்ஸ். கிரேக்க மொழியில் ‘Meta’ என்றால் அப்பால். ‘Universe’ என்றால் பிரபஞ்சம். எழுத்தாளர் நீல் ஸ்டிவன்சன் (Neal Stephenson) எழுதி 1992ஆம் ஆண்டில் வெளிவந்த ‘Snow Crush’ அறிவியல் புனைகதை நாவலில் இச்சொல் அறிமுகம் கண்டது. மக்கள் தங்களுக்கென ஓர் உலகத்தை உருவாக்கிச் செயற்கையாக ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் மெய்நிகர் உலகம்தான் மெட்டாவெர்ஸ் என அந்நாவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கனவாக உருவான மெட்டாவெர்ஸ், 2003ஆம் ஆண்டில் ‘Second life’ எனும் இணையப் பல்லூடகத் தளத்தில் நனவானது. அதில் பயனர்கள் தங்களுக்கென ஓர் ‘அவதாரை’ (avatar) உருவாக்கி மற்ற பயனர்களுடன் உரையாடி உல்லாசமாகப் பொழுத்தைக் கழித்தனர். அதனைத் தொடர்ந்து ‘World of Warcraft’, ‘Minecraft’, ‘Fortnite’ முதலிய விளையாட்டுகளில் மெய்நிகர் உலகத்தின் அம்சங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘மெட்டா’ எனப் பெயர் மாற்றம் கண்ட ‘ஃபேஸ்புக்’

‘Facebook Horizon’ எனும் சமூக மெய்நிகர் உலகத்தை ‘ஃபேஸ்புக்’ 2019ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதில் பயனர்கள் மெய்நிகர் உலகில் மற்றவர்களுடன் உரையாடுவதோடு சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம், நிகழ்ச்சிகளை நடத்தலாம். அதனைத் தொடர்ந்து 2021இல் ‘மெட்டா’ (Meta) என ‘ஃபேஸ்புக்’ பெயர் மாற்றம் கண்டது. அந்நிறுவனத்தின் அனைத்துச் செயலிகளையும் தொழில்நுட்பங்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தது மெட்டா. மெய்நிகர் உலகத்தை வாழ்க்கையின் ஓர் அங்கமாக்குவதும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தி தொழில்களை வளர்ப்பதும் மெட்டாவின் நோக்கமாக விளங்கியது. அந்நிறுவனம் மெய்நிகர் உலகத்தில் கால்பதிக்க முயன்று வருகிறது.

மெய்நிகர் உலகில் தமிழர்த் திருமண வரவேற்பு

மெட்டாவெர்ஸில் தமிழ்த் திருமணம்

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியர் தினேஷ், ஜனகநந்தினி தங்களின் திருமண வரவேற்பு நிகழ்வை மெய்நிகர் உலகில் நடத்தி கவனத்தை ஈர்த்தனர். கொவிட் கிருமிப்பரவலின் காரணமாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலகட்டம். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாது; சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. அதன் காரணமாகத் தங்களின் திருமண வரவேற்பை ‘ஹேரி பாட்டர்’ கருப்பொருளுடன் மணமக்கள் மெய்நிகர் உலகத்தில் நடத்தி அசத்தினர். ஏறக்குறைய 6,000 விருந்தினர்கள் மெய்நிகர் அவதார்களாகக் கலந்துகொண்டனர். உலகின் எந்த மூலையிருந்தாலும் முப்பரிமாணத்தில் முகத்தைப் பார்த்து மகிழமுடிந்தது.

ஜனகநந்தினியின் மறைந்துவிட்ட தந்தையும் ‘அவதார்’ பாத்திரமாகத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு சிறப்பித்தார். மெய்நிகரில் நடைபெற்றாலும் மொய்ப் பணத்தைத் தரலாம், இணையம் மூலமாக. என்ன, திருமண விருந்தை மட்டும்தான் அனுபவிக்க முடியாது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற காலம் மறைந்து திருமணங்கள் மெய்நிகர் உலகில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற காலம் மலர்வதற்கு வெகு காலம் இல்லை என்றே தோன்றுகிறது.

மொழிபெயர்ப்புத் தேவை கூடுமா?

மெய்நிகர் உலகில் உலகெங்கிலும் இருந்து அவதார்கள் ஒன்றுகூடும்போது, அவர்கள் மொழித் தடைகளைக் கடந்து உரையாட வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த வகையில் மொழிபெயர்ப்பு மெய்நிகர் உலகில் ஒரு முக்கிய அம்சமாகத் திகழும் எனக் கருதப்படுகிறது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பு கேள்வரிகளாக (subtitles) இடம்பெறுமா அல்லது ‘சிரி’ (Siri) மென்பொருளைப் போல உரைபெயர்ப்பு செய்து வழங்கப்படுமா என்பதைத் தற்போது துல்லியமாகக் கூற முடியாது. இருப்பினும் மொழிபெயர்ப்புக்கான தேவை மெய்நிகர் உலகில் அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூற முடியும்.

இயந்திர மொழிபெயர்ப்புத் தளங்கள் வெகுவாகக் கைகொடுக்கும். துரிதமாகவும் துல்லிதமாகவும் மொழிபெயர்ப்புத் தளங்கள் செயல்படும்போது, ஏககாலத்தில் எண்ணற்ற மொழிபெயர்ப்புகளை மெய்நிகர் உலகில் நிகழ்த்தலாம். அந்த நிலையை எப்போது அடைவோம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதனை எட்டும் வரையில் மனித மொழிபெயர்ப்பு மெய்நிகர் உலகத்திற்குத் தேவைப்படக்கூடும்.

‘கற்றார்’ மெய்நிகர் இசையுலகம்

இவ்வாண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ‘கற்றார்’ எனும் மெய்நிகர் உலகத்தை அறிமுகப்படுத்தினார். இசையிலும் இதர கலை வடிவங்களிலும் புதிய படைப்புகளை ஊக்குவிக்கும் தளமாக ‘கற்றார்’ விளங்கக்கூடும். மூன்று கட்டங்களாக அது செயல்படவுள்ளது; முதலாவது, துடிப்பான இசைப் பிரியர் சமூகத்தை உருவாக்குவது. இரண்டாவது, புதிய திறனாளர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய வருவாய் முறையை அமைப்பது. இறுதியாக, மெய்நிகர் உலகில் இணைந்து கலைப் படைப்புகளை உருவாக்குவது. இயந்திரக் கை ஒன்று ஓலைச்சுவடியை ஏந்தியவாறு கற்றாரின் இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் இயல்பாக இணைத்து, அரவணைத்துச் செல்வதை அந்த இலச்சினை குறிக்கிறது.

மெய்யை விஞ்சும் மெய்நிகர்

உலக மக்கள்தொகையை விஞ்சிவிடும் அளவுக்கு அவதார்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இன்றைய உலக மக்கள்தொகை சுமார் 8 பில்லியன் என்றால், சுமார் 100 பில்லியன் அவதார்கள் மெய்நிகர் உலகில் வலம் வரலாம் எனக் கணிக்கப்படுகிறது. அதற்கான சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலருக்கும் மேல் இருக்கும் எனவும் முன்னுரைக்கப்படுகிறது.

மெட்டாவெர்ஸில் கட்டுரையாளரின் அவதாரங்கள்

என்ன தான் மெய்நிகர் உலகம் சாதகமாகச் சமூகத் தொடர்புகளை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத பாதகங்களும் மறைந்துள்ளன. மாணவர்கள் மெய்நிகர் உலகில் மூழ்கிப் போனால், நிஜ உலகில் அவர்கள் மற்றவர்களுடன் பழகவும் உரையாடவும் சிரமப்படுவார்கள். கவனச் சிதறல் ஏற்பட்டு, வாழ்க்கையே திசை மாறக்கூடிய ஆபத்தும் உள்ளது. நிஜ வாழ்க்கையின் மீதான பிடிமானம் குறைந்துபோகலாம். மனிதர்களை மறந்து அவர்களின் மீதான உணர்வும் உணர்ச்சியும் மரத்துப்போகலாம். உறவுகளையும் உறவு முறைகளும் மெய்நிகர் உலகம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கலாம்.

தனியுரிமை, சட்டம், பாதுகாப்பு முதலிய அம்சங்களிலும் ஊடுருவல் விவகாரங்களிலும் உறுதியான வரையறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. மெய்நிகர் பிரபஞ்சத்திற்கான சட்டங்கள் விரைவில் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் நிஜ மனிதர்களைப் பிரதிபலிக்கும் அவதார்களும் நிம்மதியாக மெய்நிகரில் வாழ முடியும்.

மெய்நிகர் உலகத்தில் நாம் உற்சாகத்துடன் உலவப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதுவரை சற்று மெய்மறந்து உறங்கலாம்.