வாசகர் கடிதம்

வானதி பிரகாஷ், சிங்கப்பூர்.

தி சிராங்கூன் டைம்ஸ் ஜூன்’23 மகளிர் சிறப்பிதழைப் படித்தேன். பெண்கள் மீதான வன்முறை பிறப்புக்கு முன்பே தொடங்கி விடுகிறது என்று முன்னுரையில் இருக்கும் வரி. அது வரி அல்ல, வலி. இன்று எவ்வளவுதான் அறிவியலிலும் வளர்ந்திருந்தாலும், பெண்கள் மீதான வன்முறை முடிந்தபாடில்லை. சமூக அக்கறையோடு படைக்கப்பட்டப் பயனுள்ள இதழ்.

முதலில், ஜெமினி அச்சகம் காந்தி தேவியின் வாழ்க்கைப் பயணத்தைப் படிக்கும்போது பிரமிப்பாக இருந்தது. கற்றுக்கொள்ள அவர் கொண்ட ஆர்வம், வேலை ஈடுபாடு, சவால்களைச் சாதனைகளாய் மாற்றிய முயற்சி, கடந்து வந்த பாதையில் அடைந்த அனுபவங்கள் என ஒவ்வொன்றும் மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறது. நிறுவனத்தைப் பற்றி அவர் சொன்ன செய்திகள் அனைத்தும் தொழில் செய்யும் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமூட்டும். மற்ற பெண்களுக்குச் சொந்தத்தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்.

மொழிக் கற்றல் குறைபாட்டை மீறி வென்ற ஜரீன் “கரடு முரடான வாழ்க்கைப் பாதையின் ஒவ்வோர் அடியிலும் போராடிப் பயணித்தது” உருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. தொடர்ந்து படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. வறுமையை நினைத்து வாடாமல், குறையை நினைத்துக் கலங்காமல், முயற்சியை ஆயுதமாக்கி வென்று காட்டியுள்ளார். கடினமான பாதைகளைக் கடந்து வந்த இவர் பலருக்குக் கலங்கரை விளக்கமாய் இருப்பார் என்று உணர முடிகிறது. இந்தச் செய்தி பலருக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

‘அத்துமீறலும் அஞ்சா நெறியும்’ பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றுக்கான தண்டனைகளைப் பற்றியும் அறிய முடிந்தது. தெரியாத செய்திகள், தெளிவான விளக்கங்கள் பாரதியின் கவிதையைக் கொண்டு தொடங்கி பாரதியை வைத்தே முடித்தது மேலும் சிறப்பாக இருந்தது.

‘தெய்வத்துடனும் பேசக்கூடாது’ வித்தியாசமான தலைப்பு. மாதவிடாயின் பின்னுள்ள மூடநம்பிக்கை, அறிவியல், நடைமுறைகளை ஒட்டிய கருத்துகள் எனக் கண்முன் நடப்பது போலவே இருந்தது. ‘‘நான் மரத்துப் போன ஒரு சிரிப்பை அப்படியே மாற்றாமல் வைத்துக் கொண்டிருந்தேன்’’ அருமையான வரி. ‘நாளை விடியற்காலை’ மிகவும் உருக்கமான கவிதை. கல்லறையில் மீளாத்துயில் கொண்டிருக்கும் மகளைப் பார்க்கப்போகும் பயணம் என்று அறிந்தவுடன் மனம் காரணமில்லாமல் கனத்தது.

‘எரிமலை’ மகளுக்காகத் தன்னையே தியாகம் செய்து கொண்டிருந்த ஐரினின் கதை. பின்பு வாழ்க்கை அந்த எரிமலையைப் படிக்க வைத்தது கருத்தான கதை. அலுவலகக் காட்சிகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் காண்பது போலவே அமைந்திருந்தன. நல்ல கதையோட்டம். கதை, கட்டுரை என்று தொடர்ந்து சொல்லாமல் இடையிடையே நூற்றாண்டு நினைவு நாணயம், கழிவுகளிலிருந்து விமான எரிபொருள், பழையன கழிதலும், உடனடி மின்சார உற்பத்தி நிலையம் போன்ற செய்திகள் இடம்பெற்றது மிகவும் சிறப்பு.

‘புகையில் மறையும் கவிதை’ என் மனத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. எழுதிய வார்த்தைகளும் வசனமும் படைப்போடு வாழவைத்தது. பெண்கள் பலர் இன்றும் திருமணத்திற்குப் பின்பு அவர்களின் திறமையை அடுக்களையில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘‘உன்னால பேனா பேப்பரை மட்டும்தான் வாங்கித் தர முடியும். எழுதறதுக்கான மனநிலையை வாங்கித் தர முடியுமா?” மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றிய உணர்வுபூர்வமான வரி. பலமுறை படித்தேன். ஒவ்வோர் எழுத்தும் முத்து முத்தாய்ப் பிரகாசித்தது.

மேலும், கமலா மன்றத்தின் வரலாறு பற்றியும் ஆ.பழனியப்பன், சாந்தி பெரேரா ஆகியோரைக் குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. சிங்கப்பூர்ப் பெண்களின் வளர்ச்சி 1959 முதல் 2022 வரை எப்படி இருந்தது என்பதை அட்டவணை போட்டுக் காண்பித்து அசத்திவிட்டீர்கள். ‘கருப்பும் சிவக்கும் அழகோ அழகு’ ஆழமான அறிவைக் கொண்டு உருவாக்கிய அசத்தலான தயாரிப்பு. இறுதியாக, ‘ஒன்றுகூடுவோம்! படித்து மகிழ்வோம்’ நிச்சயம் ஒன்றுகூடிப் படிக்க வேண்டியது.

பெண்களை முன்னிலைப்படுத்தி அமைந்த இந்த இதழ் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு புதிய விஷயத்தைக் காட்டுகிறது. சாதாரணப் பெண்களும் சாதனைப் பெண்களாகலாம் என்ற எண்ணத்தை மனத்தில் விதைப்பதாய் அமைந்திருக்கிறது.

படிக்கப் படிக்க சுவாரசியமான வரிகள், புரிந்துகொள்ள அர்த்தமுள்ள புகைப்படங்கள். அரிய பல செய்திகள் என அனைத்தையும் சிறப்பாகப் படைத்த உங்கள் குழுவிற்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

மாதம் தவறாமல் சென்னை கன்னிமாரா நூலகத்தில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ வாசிப்பது எனக்கு உவப்பான விஷயம். எந்த அயல்நாட்டுக்கும் சென்றதில்லை என்றாலும் பிடித்தமான நாடான சிங்கப்பூர் குறித்து இதழ் மூலம் பல சுவாரசியங்களை அறிந்து கொள்வது ஆச்சரியமூட்டும். ஜூன்’23 மகளிர் சிறப்பிதழில் தொடக்கமாக ‘ஜெமினி அச்சகம்’, நிறைவாக ‘ஒன்று கூறுவோம் படித்து மகிழ்வோம்’ கட்டுரைகள் அமைந்ததால் புத்தகச் சிறப்பிதழ் போலவும் தோன்றியது.

லீ குவான் இயூ நூற்றாண்டு நினைவு நாணயம், மூடப்போகும் அலெக்ஸாண்டிரா அஞ்சலகம் போன்றவற்றைப் படங்களுடன் படித்ததில் பரவசம். மகளிர் சிறப்பிதழ் என்பதால் சிங்கையின் சிறப்பான பெண்கள் குறித்தும் நிறைவாக அறிய முடிந்தது. அதுவும் தமிழ்க் கற்பிக்கும் ஆசிரியைகளின் அனுபவங்கள் கவனத்தைக் கவர்ந்தன. பக்க வடிவமைப்பும், அச்சு நேர்த்தியும், உயர்ரகக் காகிதமுமாய் மதிப்பானதொரு தமிழ் இதழைப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன்.

-அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை, தமிழ்நாடு