சிங்கைக்குத் ‘தங்கச் சிறுத்தை’ விருதுகள்!
சிங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலையின் முன்னாள் கலைத்துறை மாணவருமான நெல்சன் யோ, Dreaming & Dying என்ற தனது முதல் முழுநீளத் திரைப்படத்திற்கு லொகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் Golden Leopard, Swatch First Feature ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மூன்று நடுத்தர வயது நண்பர்களைப் பற்றிய இந்தத் திரைப்படம் பலரையும் மிகவும் கவர்ந்துள்ளது. ஒரு தெற்காசிய இயக்குநர் இவ்வாறு இரண்டு விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இவருடைய பல குறும்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளன.
படம் நன்றி: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
சிகரம் தொட்ட சிங்கைப் பெண்கள்
சிங்கையைச் சேர்ந்த இரு பெண்கள்- வின்ஸியர் ஸெங், சிம் பெய் சுன் – பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் உள்ள K2 மலையின் உச்சியை (உயரம் 8,611 மீ) அடைந்து சாதனை படைத்துள்ளனர். இருவரும் 70 நாட்களுக்கு முன்புதான் எவரெஸ்ட் (உயரம் 8848 மீ) உச்சியை அடைந்து திரும்பினர். கிளிமாஞ்சாரோ உட்பட 5,000 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பல மலைச் சிகரங்களைத் தொட்டுள்ள இருவரும் பல வருடங்களாகத் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்கின்றனர். எவரெஸ்டை விடவும் செங்குத்தான K2 மலையேற்றம் மிகுந்த சவாலாக அமைந்தது என்கின்றனர். 2012இல் K2 உச்சிக்குச் சென்றுவந்த சிங்கப்பூரரான க்கோ ஸ்வீ ச்சியோ, சிங்கைப் பெண்களின் சாதனையை மிகவும் பாராட்டினார்.
படம் நன்றி: facebook
கூடுதல் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டப்பணிகள்
ஆழ்சுரங்க வடிகால் திட்டத்திற்கான 35கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை (DTSS-Phase 2) அமைக்கும் பணி முடிவடைந்தது. 6 மீட்டர் விட்டமுள்ள இந்தப் பாதை பூமியின் மேற்பரப்பிலிருந்து 55மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28கிமீ பாதை பொதுக்கழிவு நீரையும், 7கிமீ பாதை தொழிற்சாலைக் கழிவுநீரையும் 2026இல் இயங்கவிருக்கும் ஜூரோங் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டுவரும். இந்தப் பாதையினுள் பெரும்பாலும் நீரேற்றிகளின் (pump) உதவியில்லாமல் புவியீர்ப்பு விசையிலேயே நீர் பாய்ந்தோடிவிடும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கட்டுமானப் பணிகள் 2019இல் தொடங்கப்பட்டுத் தற்போது முடிந்து, பாதையினுள் நீர் அரிப்பைத் தடுப்பதற்கான மேற்பூச்சு வேலைகள் நடந்துவருகின்றன. ஏற்கெனவே 2008இல் முடிவடைந்த DTSS-Phase 1 திட்டத்தின்படி கிராஞ்சி, சாங்கிப் பகுதிகளில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இவை இரண்டும் சேர்ந்து நாளொன்றுக்கு 1.2 மில்லியன் கனமீட்டர் நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்கு அளிக்கின்றன.
படம் நன்றி: tunnellingonline.com
பல்லுயிர் கணக்கீட்டுக்குப் புத்தாக்க அணுகுமுறை
சிங்கப்பூர் போன்ற நிலப்பற்றாக்குறை உள்ள நாட்டில் வளர்ச்சித் தேவைகளுக்காக இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புப் பேட்டைகள், தொழிற்பேட்டைகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. அதேசமயம் பல்லுயிர்ப் பாதுக்காப்பும் பேணப்படவேண்டும் என்ற நோக்கோடு AECOM-ஐச் சேர்ந்த பல்லுயிர் ஆலோசகர் ஆஷ்லி வெல்ச் ஒரு ‘பல்லுயிர் கணக்கீடு’ முறையை அறிமுகம் செய்துள்ளார். தேவைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலத்தின் தன்மை, தாவர வளர்ச்சி, அடர்த்தி, சுற்றுச்சூழல் போன்ற பல அம்சங்களைக் கொண்டு அதன் பல்லுயிர்த் தன்மையைக் கணக்கிட்டு, கட்டுமானத்திற்குப் பிந்தைய பல்லுயிர்த் தன்மையையும் உத்தேசித்து, அதற்கேற்ப முடிவுகளை எடுக்க இந்தக் கணக்கீட்டு முறை உதவும் என நம்பப்படுகிறது.
படம் நன்றி: headtopics.com