குழந்தைகளின் பெருங்கூடல்(கீதாஞ்சலி 60)

0
193
மஹேஷ்

எல்லைகளற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் ஒன்றுகூடுகிறார்கள்.
எல்லையற்ற வானம் தலைக்கு மேல் அசைவற்றிருக்கிறது.
அமைதியற்ற நீர்ப்பரப்பு கொந்தளிக்கிறது.
எல்லைகளற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் கூடிக் கும்மாளமிட்டு நடனமாடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் வீடுகளை மணலால் கட்டுகிறார்கள்,
அவர்கள் வெற்றுக் கிளிஞ்சல்களைக்கொண்டு விளையாடுகிறார்கள்.
வாடிய இலைகளால் படகுகளை நெய்து
புன்னகையுடன் அவற்றை பரந்த வெளியில் மிதக்க விடுகிறார்கள்.
எல்லையற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் தங்கள் நாடகங்களை மேடையேற்றுகிறார்கள்.
அவர்களுக்கு நீச்சல் தெரியாது. வலை வீசத் தெரியாது.
முத்துக் குளிப்பவர்கள் கடலுக்குள் குதிக்கிறார்கள்.
வணிகர்கள் கப்பல் பயணம் மேற்கொள்கிறார்கள்.
குழந்தைகள் கூழாங்கற்களை சேகரித்து இரைக்கிறார்கள்.
அவர்கள் மறைந்துள்ள திரவியங்களைத் தேடுவதில்லை.
அவர்களுக்கு வலைகளை வீசவும் தெரிவதில்லை.
கடல் சிரிப்புடன் உயர்ந்தெழுகிறது. கடற்கரையோ முறுவலுடன் நாணுகிறது.
அச்சமூட்டும் அலைகளோ ஒரு தாயைப் போல
குழந்தைகளுக்கு அர்த்தமற்ற தாலாட்டுப் பாடல்களைப் பாடுகின்றன.
கடல் குழந்தைகளுடன் விளையாடுகிறது.
கடற்கரையோ முறுவலுடன் நாணுகிறது.
எல்லைகளற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் ஒன்றுகூடுகிறார்கள்.
கடும் புயலொன்று பாதையற்ற வானத்தில் அலைகிறது.
தடமில்லாத நீரில் கப்பல்கள் மூழ்கி மரணங்கள் நிகழ்கின்றன.
குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
எல்லைகளற்ற உலகங்களின் கடற்கரையில்
எண்ணற்ற குழந்தைகளின் பெருங்கூடல்.

கவிஞர் பற்றிய குறிப்பு

இந்தியாவின் தேசியக் கவி என்று அறியப்படும் ரவீந்திரநாத் தாகூர், 1861இல் கொல்கத்தாவில் பிறந்தவர். ஓவியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், சீர்திருத்தவாதி, தத்துவஞானி என்று பன்முகங்கள் கொண்டவர். ‘கீதாஞ்சலி’ நூலுக்காக 1913இல் இலக்கிய நொபெல் பரிசு பெற்ற முதல் ஐரோப்பியரல்லாத கவிஞர். இந்தியாவிலும் மேற்கு வங்கத்திலும் இவருக்கு எட்டு நினைவில்லங்கள் உள்ளன.