இமோஜி: சொல்வாக்கை விஞ்சிய செல்வாக்கு

நித்திஷ் செந்தூர்

வார்த்தைகளின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் சொற்களின் பயன்பாடு சொற்பமாகி வருகிறது. அவ்விடத்தை இமோஜிகள் எனப்படும் கேலிச்சித்திரச் சின்னங்கள் நிரப்பி வருகின்றன. வார்த்தைகளை விழுங்கிவிட்ட இமோஜிகள் உணர்ச்சிகளுக்கு உயிரூட்டுகின்றன. உணர்வுகளை வருணிக்க வார்த்தைகளைத் தேடுவோருக்கு இமோஜிகள் கைகொடுக்கின்றன.

நேரடி உரையாடலில் உடல்மொழி, குரலின் தொனி, முகபாவனை ஆகியவற்றைக் கண்டுணர இயலும். ஆனால் இணைய உரையாடல்களில் இணையவாசியின் எண்ண அலைகளைக் கணிப்பது கடினம். ஒருவர் கூறவரும் கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளவதற்கான சாத்தியமும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களைக் களைய உதவுகின்றன இமோஜி சின்னங்கள்.
‘இடம், பொருள், ஏவல்’ என்பதைப் போலப் பொருத்தமான இடங்களில் சரியான இமோஜி சின்னங்களைப் பயன்படுத்தப்படும்போது தோழமை உறவு பிறக்கிறது. இமோஜியின் துணையுடன் இறுக்கமான உரையாடலைக்கூட இளக்கலாம். அதோடு, இமோஜிகள் பன்மொழி பேசும் உலக மக்களிடையே உணர்வுகளை எளிதாகப் பதிவுசெய்ய பெரிதும் உதவுகின்றன. உலகப் பொதுமொழியாகவும் இமோஜிகள் கருதப்படுகின்றன.

இமோஜியின் பிறப்பிடம்

ஜப்பானில் இமோஜி சின்னங்கள் முதன்முதலாகத் தோன்றின. ஜப்பானிய மொழியில் ‘இ’ என்றால் படம், ‘மோஜி’ என்றால் பாத்திரம். இவ்விரு சொற்களின் புணர்ச்சியே இமோஜி.

இடைமுக வடிவமைப்பாளரான (interface designer) ஷிகேடகா குரிதா என்பவரின் கைவண்ணத்தில் இமோஜிகள் 1999இல் உதயமாகின. குறுஞ்செய்திப் பரிமாற்றம் கோலோச்சியிருந்த காலம் அது. அதில் புத்தாக்கத்தைப் புகுத்தவேண்டும் என டொகோமோ நிறுவனம் எண்ணியது.

‘மேகமூட்டம்’ எனத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக அதற்கு இணையான படத்தை உருவாக்கி, அதனைக் குறுஞ்செய்தியாக அனுப்பினால் பயனர்களை வெகுவாகக் கவரமுடியும் என அந்நிறுவனம் கருதியது. வானிலை, போக்குவரத்து, தொழில்நுட்பம் முதலியவற்றைச் சித்திரிக்கும் 176 இமோஜிகள் கொண்ட தொகுப்பை ஷிகேடகா குரிதா உருவாக்கினார். ‘பிக்டோகிராம்’ சித்திரங்களாக உருவாக்கப்பட்ட அவை, நவீன ஓவியத்திற்கு இணையாகப் போற்றப்பட்டன. நியூயார்க் அரும்பொருளகத்தில் அந்தத் தொகுப்பின் அசல் வடிவம் வைக்கப்பட்டிருப்பதே அதற்கு அத்தாட்சி.

இமோஜிகளின் வளர்ச்சி

ஜப்பானில் இமோஜிகள் பிரபலம் அடைந்ததைத் தொடர்ந்து இதர கைபேசி நிறுவனங்களும் டொகோமோவைப் பின்பற்றத் தொடங்கின. ஜப்பானுக்கு அப்பால் 2000களின் நடுப்பகுதியில் கைபேசிகள் உலகமெங்கும் மக்களைக் கட்டிப்போட ஆரம்பித்தன. ஆப்பிள் நிறுவனம் கைபேசிச் சந்தையில் இருக்கும் பெரும் வாய்ப்பை உணர்ந்து இமோஜி சின்னங்களை அதன் தளங்களில் சேர்க்கத் தொடங்கியது.

கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த குழு, 2007இல், ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium) இமோஜிக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் எனக் கருதியது. அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது. ஒருங்குறிக் கூட்டமைப்பு கணினிகளிடையே எழுத்துகளின் தரநிலையை நிர்வகிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு.
திறன்பேசிகளுக்கான மோகம் 2010இல் மக்களிடையே தொற்றிக்கொண்டது. அதே ஆண்டில் ஒருங்குறிக் கூட்டமைப்பு இமோஜிகளைத் தரநிலைப்படுத்த முடிவுசெய்தது. ஆண்டுதோறும் ஒருங்குறிக் கூட்டமைப்பால் இமோஜிகள் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

உலக இமோஜி தினம்

ஆண்டுதோறும் ஜூலை 17 அன்று உலக இமோஜி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாள்காட்டி இமோஜி சின்னத்தில் ஜூலை 17 இடம்பெற்றிருப்பதே அதற்கு காரணம். இத்தினம் 2014ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘இமோஜிபிடியா’ என்னும் இணைய இமோஜி கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய ஜெரமி பேர்ஜ் என்பவரால் இந்த நூதனக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.

இமோஜி ஆர்வலரான பேர்ஜ், நவீன தகவல்தொடர்பில் இமோஜிகள் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பெற்றிருப்பதை உணர்ந்தார். அதன் காரணமாக அந்த மின்னிலக்கச் சின்னங்களைக் கௌரவிக்க ஒரு தினத்தை ஒதுக்க முடிவுசெய்தார். பத்தாவது முறையாக இவ்வாண்டு உலக இமோஜி தினம் கொண்டாடப்பட்டது. உலக இமோஜி தினத்தன்று இமோஜி விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆகப் பிரபலமான புது இமோஜி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இமோஜி, உலக இமோஜி வாழ்நாள் சாதனையாளர் முதலிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாகன உரிமப் பட்டையில் இமோஜி

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தைச் சேர்ந்த வாகனமோட்டிகள் 1 மார்ச் 2019இலிருந்து தங்களின் வாகன உரிமப் பட்டையில் பிடித்தமான இமோஜிகளைச் சேர்த்துக்கொள்ள முடிந்தது. அனுமதிக்கப்பட்டுள்ள 5 இமோஜிகளை மட்டுமே வாகனமோட்டிகள் தெரிவுசெய்ய முடியும். இமோஜி சின்னங்கள் வெறும் பட்டையின் அலங்காரத்திற்கு மட்டுமே. வாகனப் பதிவு எண்ணில் இமோஜிகள் சேர்த்துகொள்ளப்படமாட்டா.

இமோஜிகளின் செல்வாக்கு

செப்டம்பர் 2022 நிலவரப்படி, மொத்தம் 3,664 இமோஜிகள் உள்ளன. முகபாவனைகள், உணவுவகைகள், விலங்குகள், சைகைகள், வானிலை, காய்கறிகள், விளையாட்டுகள், நாட்டுக் கொடிகள், சமய அடையாளங்கள் முதலிய இமோஜிகளைப் பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம். அன்றாடம் 10 பில்லியனுக்கும் அதிகமான இமோஜிகள் பகிரப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு அவ்வெண்ணிக்கை ஏறத்தாழ 7 மில்லியன்.

ஆனந்தக் கண்ணீரைச் சிந்தும் முக இமோஜி 2015இல் ஆக்ஸ்போர்டு அகராதியால் ‘இவ்வாண்டுக்கான சொல்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. ‘இமோஜி’ சொல்லின் பயன்பாடு 2015இல் மும்மடங்கைத் தாண்டியது. அன்றாட மின்னிலக்கத் தகவல்தொடர்பில் இமோஜிகளின் தாக்கத்தையும் செல்வாக்கையும் அவ்வங்கீகாரம் பிரதிபலித்தது.

ஆனந்தக் கண்ணீரைச் சிந்தும் முகம், தரையில் உருண்டு புரண்டு புன்னகைக்கும் முகம், சிவப்பு இதயம் ஆகிய இமோஜிகள் இவ்வாண்டு ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இணையவாசிகளில் 92 விழுக்காட்டினர் இமோஜிகளைப் பயன்படுத்துவதாக ஒருங்குறிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதில் 18 முதல் 24 வயதுடையோர் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களில் ஊறி இருப்பதே அதற்கு காரணம். சமூக ஊடகங்களிலும் வலைதளங்களிலும் சொல்வாக்கை காட்டிலும் இமோஜி சின்னங்களின் செல்வாக்கே ஓங்கியுள்ளது.