சிங்கப்பூரில் சிப்பாய்க் கிளர்ச்சி

0
249
உமேஜ் பாட்டியா

சிங்கப்பூரிலிருந்த சிப்பாய்கள் 1915இல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நடத்திய கிளர்ச்சி குருதியில் தோய்ந்தது. அதற்காக ஒரு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருந்த கிளர்ச்சிக்காரர்களின் இறுதிக் கணங்கள் பற்றிய கட்டுரை.

மஹேஷ் குமார்

சிங்கப்பூரில், 1915 பிப்ரவரி 15 அன்று, உள்ள 5ஆவது லைட் காலாட்படைப்பிரிவின் சிப்பாய்கள் (இந்திய வீரர்கள்) இடையே ஒரு கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்து, பிரிட்டிஷ் வீரர்கள் உள்பட சீன, மலாய், பிரிட்டிஷ் பொதுமக்கள் என்று 44 பேர் மாண்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு பல்வேறு தண்டனைகள் அளிக்கப்பட்டன. அதே நேரத்தில் 47க்கும் மேற்பட்டவர்கள் ஊட்ரம் சிறையில் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். சிங்கப்பூருக்குள் நிகழ்ந்த ஒரு சிறிய நிகழ்வாகச் சித்திரிக்கப்பட்ட இந்நிகழ்வு, உமேஜ் பாட்டியா (Umej Bhatia) வெளியிட்ட Our Name is Mutiny நூலில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் ஒரு பெரிய இயக்கத்தின் பகுதி என்று வாதிடப்பட்டுள்ளது. நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து தொகுக்கப்பட்ட இக்கட்டுரை, நிகழ்வுகளைப் புனைவு நடையில் விவரிக்கிறது.

முடியும் இடத்திலிருந்து கதையைத் தொடங்குவது எப்போதுமே நல்லது. தன்னுடைய முடிவு கண்முன் தெரிந்தாலும்கூட மனம் தான் தொடர்ந்து ஜீவித்திருப்போம் என்றே நம்புகிறது.

அன்றைய இளமாலைச் சூரியனின் ஒளியில், ஊட்ரம் ரோட்டில் உள்ள சிறையிலிருந்து 16 பேர் வெளியே அழைத்துவரப்படுகிறார்கள். நடக்கவிருக்கும் காட்சியைக் காண பேர்ல் மலைக்கு எதிரில் உள்ள கோல்ஃப் மலைமீது சுமார் 6,000 மக்கள் கூடியிருக்கிறார்கள். ஒரு பண்டைய சடங்கான பொதுவில் நீதி வழங்கும் நிகழ்வைக் காண இன, சமய, பேதமின்றி மலாய், இந்தியர், ஐரோப்பியர், சீனர் என்று ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகத் திரண்டிருக்கின்றனர். அந்த மலைச் சரிவு பார்வையாளர் அரங்கைப்போல உள்ளது. தங்கள் எதிரில் உள்ள – பின்னாளில் சமன் செய்யப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையாகப் போகும் – ஊட்ரம் பூங்காவைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவச் சிப்பாய்கள், 1915

அந்தப் பார்வையாளர்களில் சான் சோன் ஹோ (Chan Chon Hoe) என்ற ஆறு வயதுச் சிறுவனும் பகோடா ஸ்திரீட்டில் இருந்த தனது வீட்டிலிருந்து நியூ பிரிட்ஜ் ரோடு வழியாக ஊட்ரம் ரோட்டுக்கு வந்த இராணுவ இசைக்குழுவுடன் சேர்ந்து நடந்து வந்திருக்கிறான். கூடியிருந்த கூட்டத்தின் கால்கள், தோள்களுக்கு இடையில் கைதிகளை எட்டிப்பார்க்கிறான். கைதிகள் அனைவரும் முன்னாள் சிப்பாய்கள், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 5ஆவது நேட்டிவ் லைட் காலாட்படையின் வீரர்கள். சிங்கப்பூரைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்ட அவர்கள் இப்போது, முதல் உலகப் போரின் நடந்துகொண்டிருக்கும்போது, கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆயுதமேந்திக் கைதிகளைச் சூழ்ந்திருப்பது சீக்கிய போலீஸ் கன்டிஜென்ட் காவலர்களின் ஒரு சிறப்புக் குழு. உயரமான, திண்மையான சீக்கியர்களின் பரந்த கைகளில் அந்த லீ என்ஃபீல்டு 303 வகைத் துப்பாக்கிகள் பொம்மைகளைப் போலத் தெரிகின்றன. தலையைக் கவிழ்த்தபடி நிற்கும் அந்த 16 கிளர்ச்சிக்காரர்களையும் நிமிர்ந்து நிற்கும்படி ஆணையிடுகிறார் 4ஆவது ஷ்ரொப்ஷயர் லைட் காலாட்படையைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஈ.ஹெச்.ஹவ்கின்ஸ். ஷ்ரொப்ஷயரின் இரண்டு கம்பெனி வீரர்களும் சிங்கப்பூர் காரிசனைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் சூழ்ந்து நிற்க, அந்தக் கிளர்ச்சிக்காரர்கள் உடனடியாக உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

நேரடி இராணுவச் சேவையிலல்லாத அதிகாரிகளும், இதர அதிகாரிகளும் சிறைச்சாலைச் சுவரை ஒரு பக்கமாகக்கொண்டு மற்ற மூன்று பக்கங்களிலும் சூழ்ந்து ஒரு சதுரமாக நிற்கிறார்கள். காலனித்துவ அதிகாரிகள் ஆங்கிலப் பேரரசின்மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். நன்றியுடைமைக்கும் தேசத்துரோகத்துக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுறச் செய்யவேண்டும். காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதைக்கூட பேரரசு ஒரு சடங்கைப்போல நடத்தி நாகரீகமாகக் கையாளுவதைக் கவனமாகக் காட்சிப்படுத்தவேண்டும்.

உயரமான, திண்மையான சீக்கியர்களின் பரந்த கைகளில் அந்த லீ என்ஃபீல்டு 303 வகைத் துப்பாக்கிகள் பொம்மைகளைப் போலத் தெரிகின்றன.

துரிதமாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளோ, இப்போது நிகழவிருக்கும் கொடூரமோ ஒரு பொருட்டல்ல. பேரரசு இந்த உலகிற்கு ஒரு மிகப்பெரிய சுதந்திரப் பிரகடனத்தை வழங்கியுள்ளது. அவர்களின் உப்பைத் தின்று அவர்கள் முகத்திலேயே உமிழ்ந்தவர்களுக்கான உகந்த பாடத்தை பேரரசின் பிரதிநிதிகளாக நிற்கும் சலனமற்ற முகங்களைக் கொண்ட அதிகாரிகள் இப்போது கற்பிப்பார்கள்.

காலனித்துவ சமூகப் பொறியாளர்கள், தொன்மையான சாதி, வர்க்க அமைப்புகளைத் தமக்கேற்ப வடிவமைத்துப் பயன்படுத்திக்கொண்டனர்.

சிறைக்கதிகளின் உடைகளுக்கும் அவர்களை அழைத்துவந்த சீக்கியக் காவலர்களின் உடைகளுக்கும் இடையேயான பேதம் குறிப்பிடத்தக்கது. கைவிலங்கிடப்பட்ட கைதிகள் அவர்களுக்குப் பொருத்தமற்ற நீண்ட குர்தாவும் இந்திய வேட்டியோ மலாய் சாரோங்கோ அணிந்திருந்தனர். பேர்ல் மலைக்கு அருகில் தமது தலைமை அலுவலகத்தைக் கொண்ட சீக்கியக் காவலர்கள் அந்தப் பகுதியின் சட்டம் ஒழுங்கைப் பேணும் அதிகாரத்தின் பிரதிநிதிகள். கோடுபோட்ட நீலச்சட்டையும் வெள்ளைத் தலைப்பாகையும் அணிந்த அந்தக் காவலர்களின் கருந்தாடி முகங்களில் உணர்ச்சியில்லை. பெட்டிபோடப்பட்டச் சீருடைகளும் பளபளக்கும் இடைவார்களும் மாலைச் சூரியன் மினுக்கும் மெருகூட்டிய சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக இருந்தனர்.

காலனித்துவ எஜமானர்களால் சேர்க்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட காவலர்களும் சரி கைதிகளும் சரி, இந்தியாவின் போர்க்குணமிக்க இனத்தவர்கள் என அறியப்படுவோர். இரு பிரிவினருமே பஞ்சாப், ராஜபுதனம், வடமேற்கு எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இராணுவ வாழ்க்கை வாழ்வதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரச விசுவாசத்திற்கு அடுத்தபடிதான் சமயம் என்று பயிற்சியளிக்கப்பட்டவர்கள். சீக்கியர்கள் பஞ்சாபின் வளமான மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கிளர்ச்சிக்காரர்கள் முஸ்லீம் ராஜபுத்திரர்கள். ரங்கார்கள் என்று அழைக்கப்படுபவர்கள். பஞ்சாபின் மிகவும் பின்தங்கிய கிழக்குப் பகுதிகளில் (இன்று ஹரியானா) உள்ள சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவை சீக்கிய, பஞ்சாபி மொழி பேசுபவர்களைக் கொண்ட, ஒட்டகங்களும் கருப்பு முர்ரா எருமைகளும் சுற்றித் திரிந்த பகுதிகள்.

பிரிட்டிஷ் கீழைத்தேயவியலாளர்களும் மொழியியலாளர்களும் இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டனர். ரங்கார்களைப் போலல்லாமல், சீக்கியர்கள் தங்கள் உயரமான ‘பக்ரி’ தலைப்பாகையின் கீழ் கூம்பு வடிவ குல்லா தொப்பியை அணியவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். திறமையான அதிகார பராமரிப்பின் காலனித்துவ சமூகப் பொறியாளர்கள், தொன்மையான சாதி, வர்க்க அமைப்புகளைத் தமக்கேற்ப வடிவமைத்துப் பயன்படுத்திக்கொண்டனர்.

சிங்கப்பூரின் சீனர்களோ மலாய்க்காரர்களோ இந்தியத் துணைக் கண்டத்தைப் பற்றி அதிகம் அறியாதவர்கள். மாட்சிமை பொருந்திய மன்னரின் ஆளுகையின்கீழ் கடைநிலையிலுள்ள கருப்பான தென்னிந்தியர்கள் ‘க்ளிங்’ என்று கேலியாக அழைக்கப்படுகிறார்கள். பண்டைய இந்தியப் பகுதியான கலிங்கத்திலிருந்து வந்ததால் அப்பெயர் உண்டானது என்று கருதப்பட்டாலும் அவர்களுள் குற்றவாளித் தொழிலாளிகள் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலிகளின் ஓசையை அப்பெயர் நினைவூட்டியதால் இழிசொல்லாக ஆனது என்றும் கருதப்படுகிறது.

இங்கே கூடியிருக்கும் பெருங்கூட்டம் இதை மட்டும் பார்க்க வரவில்லை. தொடங்கவிருக்கும் முக்கிய நிகழ்வுக்கு அது கட்டியம் கூறியது.

வங்காளத்தில் உள்ள கல்கத்தா துறைமுகத்தில் இருந்து மலாயாவிற்குக் கப்பலில் சென்றதால், சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள், பட்டான்கள் யாவருமே பொதுவாக வங்காளிகள் என்றே அழைக்கப்பட்டனர். ரங்கார்கள் வெறுந்தலையுடனும் முண்டாசு கட்டிக்கொண்டும் சிலர் சீக்கியக் காவலரைப்போல பெரிய மீசையுடனும் இருப்பதைப் பார்த்துப் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். சில பார்வையாளர்கள், படைப்பிரிவு இந்தியர்களையும் கந்தல் உடையில் இருப்பவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க சிரமப்பட்டாலும் சீக்கியக் காவல் துறையினர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கும் நம்பிக்கை துரோகத்திற்கும் உள்ள எல்லா வித்தியாசத்தையும் அறிந்திருக்கிறார்கள்.

மத்திய காவல் நிலையத்தில் தம்மில் சிலரைக் கொல்ல முயற்சித்த கிளர்ச்சிக்காரர்கள் மீதான அன்பை இன்னமும் சீக்கியக் காவலர்கள் இழக்கவில்லை. ஊட்ரம் சிறையும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இப்போது சீக்கியக் காவல்துறைக்கும் கிளர்ச்சிக்காரச் சிப்பாய்களுக்கும் இடையே எஞ்சியிருக்கும் ஒரே இணைப்பு ‘இஸ்ஸத்’ (izzat – மாண்பு, பெருமை) நெறிமுறை மட்டுமே. கௌரவம், அவமானம் ஆகியவற்றைக் குறித்த பெருமிதம். இஸ்ஸத் நல்ல வீரர்களை உருவாக்கியது. ஆனால் இஸ்ஸத் புண்படுத்தப்பட்டால், எவ்விலை கொடுத்தேனும் பழியெடுக்கும் எண்ணத்தையும் விதைத்தது. மேலும் இஸ்ஸத் அவர்களை ஆண்மைப் பெருமிதத்துடன் இறக்கவும் பணித்தது.

மேஜர் ஹவ்கின்ஸ் கைதிகளின் இராணுவ நீதிமன்றத் தண்டனைகளைப் படிக்கிறார். கைதிகள் 16பேர் வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைக்கான தீர்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு தீர்ப்பும் அறிவிக்கப்படும்போது, ​​ஒரு கிளர்ச்சிக்காரர் முன்னே வர உத்தரவிடப்படுகிறது. நான்கு முன்னாள் சிப்பாய்கள் (Taiping-raised Malay States Guides பிரிவு) ஆகக்குறைவான தண்டனை பெறுகின்றனர்; கடின உடலுழைப்பு இல்லாமல் இரண்டு ஆண்டுச்சிறை. எஞ்சிய 14பேரும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 5ஆவது லைட் காலாட்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் பலரும் மிகக் கடுமையான தண்டனைகளைப் பெறுகின்றனர். சிலருக்கு 15 ஆண்டு நாடுகடத்தல் அல்லது கடின உடலுழைப்பு. எட்டுப் பேருக்கு அந்தமான் தீவுகளில் வாழ்நாள் தீவாந்தர தண்டனை.

அந்தமான் தீவுகளின் கடுங்காவல் சிறை இந்திய அல்காட்ராஸ் (Alcatraz) என அழைக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் நடுவே எளிதில் செல்லமுடியாத இடத்தில் அமைந்திருப்பதால், இந்தியர்கள் இதை ‘காலா பானி’ (கறுப்பு நீர்) என்பர். ஒரு மோசமான ஐரிஷ் வார்டனால் மேற்பார்வையிடப்பட்ட காலா பானிக்கு நல்ல உடல் தகுதி உடையவர்களும் 40 வயதிற்குட்பட்டவர்களுமே அனுப்பப்பட்டனர். ஒரு கழுதையைப் போலச் செக்கில் பிணைக்கப்பட்டு ஓய்வொழிச்சலின்றி எண்ணெய் ஆட்டவேண்டி இருக்கலாம். அல்லது உங்கள் குரலைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாத கும்மிருட்டில் ஆண்டுக்கணக்கில் அமர்ந்திருக்கவேண்டி வரலாம்.

விதி முடிவுசெய்யப்பட்ட 16 பேரும் சாம்பல் நிறச் சிறைச்சாலைச் சுவர்களுக்கு அந்தப்பக்கமாகக் காவலர்களால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் இங்கே கூடியிருக்கும் பெருங்கூட்டம் இதை மட்டும் பார்க்க வரவில்லை. தொடங்கவிருக்கும் முக்கிய நிகழ்வுக்கு அது கட்டியம் கூறியது.

கோல்ஃப் மலையின் மேலும் கீழுமாகக் கூடியிருக்கும் 6000 ஜோடிக் கண்கள் சிறைச்சாலையின் கதவுகளினின்று வெளிவரும் சிறு குழுவைத் தொடர்கின்றன. புதியதொரு காட்சி அரங்கேறுகிறது. மற்ற 16 பேரைப் போலல்லாமல் இந்த ஐவரின் கைகளில் விலங்குகள். இவர்களோடு வரும் காவலர்கள் சீக்கியர்கள் அல்ல; வெள்ளுடை தரித்த பிரிட்டிஷ் சிறை அதிகாரிகள். பிரிட்டிஷ் பெருமிதங்களுக்கு ஏற்ப, மேலினத்தவர் மட்டுமே உச்சகட்ட நீதியை வழங்கமுடியும். ஊட்ரம் சிறைக்கு வெளியே தங்களில் ஒருவரைக் கொலை செய்த கிளர்ச்சிக்காரர்களுக்கு எந்தச் சலுகையையும் அளிக்கும் மனநிலையில் அந்த அதிகாரிகள் இல்லை.

ஊட்ரம் சிறைக்கு வெளியே தங்களில் ஒருவரைக் கொலை செய்த கிளர்ச்சிக்காரர்களுக்கு எந்தச் சலுகையையும் அளிக்கும் மனநிலையில் அந்த அதிகாரிகள் இல்லை.

மரணதண்டனை பொதுமக்களின் பார்வையில் நிறைவேற்றப்படும். சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட அவ்வழக்கம் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இவ்வட்டாரத்தினருக்கு, சிறுவன் சோன் ஹோ உட்பட, எவ்வாறு நடந்துகொள்வது என்பது கற்பிக்கப்பட்டே ஆகவேண்டும். மரணதண்டனைக்கு உரியவர்கள் இராணுவத் துல்லியத்துடன் அவரவர் இடங்களுக்கு அணிவகுத்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஊட்ரம் ரோட்டின் மேற்குப் பகுதியில் மேற்பூச்சு உதிர்ந்த அந்தச் சுவரின் எதிரே உள்ள அந்த சமன்செய்யப்பட்ட மைதானம், மெதுவாக உயர்ந்து கோல்ஃப் மலையாக உருப்பெறுகிறது. அந்த ஐந்து கைதிகளும் அணிவகுத்துச் செல்லும்போது ஒரு சில்லிடும் அமைதி நிலவுகிறது. எப்போதும் சளசளவென சந்தை இரைச்சல் எழுப்பும் சிங்கப்பூர்க் கூட்டத்திற்கு இந்த அமைதி மிகவும் அசாதாரணமானது. அனைவரும் இப்போது தங்கள் முன் நடப்பதன்மேல் நிலைகுத்தி நின்றிருக்கிறார்கள்.

அந்த ஐவரில் இருவர் பிரிட்டிஷ் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கான சீருடையில் உள்ளனர். இருவரில் டுண்டே கான் (Dunde Khan) மூத்தவர். ஒரு காலத்தில் சீர் செய்யப்பட்ட தாடி மீசையுடன் மிடுக்காக இருந்தவர். ஒரு சுபேதாராகத் தோளில் இரண்டு நட்சத்திரப் பட்டை அணிந்திருக்கிறார். முன்னே செல்லும்படி ஆணையிடப்பட்டதும் அனிச்சையாக இராணுவ நடையில் நடக்கிறார். அவருடன், புரளும் தாடியுடன், அழுக்கடைந்த சாதாரண உடையில் ஜமேதார் ச்சிஸ்தே கான் (Chisthe Khan) செல்கிறார். இருவரும் தங்கள் போர்வீர மிடுக்கையும் கண்ணியத்தையும் தக்கவைக்கத் தத்தளிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு இரு கான்களும் இருந்த நிலைமையே வேறு. இருவருமே சிங்கப்பூரின் பாதுகாப்புக்காக 5ஆவது லைட் காலாட்படையில் அதிகாரிகளாக இருந்தவர்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இரு கான்களும் இருந்த நிலைமையே வேறு. இருவருமே சிங்கப்பூரின் பாதுகாப்புக்காக 5ஆவது லைட் காலாட்படையில் அதிகாரிகளாக இருந்தவர்கள். நீரிணைக் குடியிருப்புப் படைகளின் பொது ஆணைத்தலைவராக இருந்த தற்காலிக பிரிகேடியர் ஜெனரல் டுட்லி ரிடவுட் (Brig. Gen. Dudley Ridout) திங்கட்கிழமை அன்று பார்வையிட வந்தபோது, இருவரும் தத்தமது படைப்பிரிவுகளுடன் அணிவகுத்திருந்தனர்.

படைப்பிரிவுகள் ஹாங்காங்கிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பான பிரியாவிடை அளிக்க ரிடவுட் வந்திருந்தார். அப்போது சீனப் புத்தாண்டு விடுமுறையும் கூட. முந்தைய நாள் முதலே விழாக்கோலம் பூண்டிருந்தது. நள்ளிரவில் சீனர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடத் தொடங்கியிருந்தனர். நள்ளிரவு முதல் அதிகாலை ஒரு மணி வரையிலும், பின்பு அதிகாலை ஐந்து முதல் ஆறுமணி வரையிலும் சிறு பட்டாசுகள் வெடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாக்கோல மனநிலையில் இருந்த சீனச் சமூகத்தவர்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியவில்லை.

அந்தப் புழுக்கமான காலைப்பொழுதில் அணிவகுத்திருந்த சிப்பாய்கள் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. விதிகளை மீறுவதில் ஆர்வமாக இருந்தனர். படையில் பாதியாக இருந்த ரங்கார் இனத்தவர் சோகமாகவும் மந்தகதியிலும் இருந்தனர். அதில் சில தீவிரஸ்தர்கள் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு செயலை நிகழ்த்திவிடப் பரபரத்தனர். படையில் இருந்த பட்டான் இனத்தவர்கள் ஒப்பீட்டளவில் நல்ல மனநிலையில் இருந்தனர்.

குள்ளமான, தடித்த உடலமைப்பும் பிரஷ் போன்ற மீசையும் கொண்ட ரிடவுட், பார்வைக்கு பயத்தையோ மதிப்பையோ உண்டாக்கக்கூடியவராக இல்லை. ஆனால் தோற்றங்கள் ஏமாற்றிவிடக்கூடும். தோற்றத்தில் சாதுவாக இருந்த அவரது உணர்ச்சியற்ற நீலக் கண்கள் எதிரிலிருப்பவரை ஊடுருவின. ஓர் உணர்வெழுச்சிமிக்க உரையை நிகழ்த்த முயற்சித்தார். கான்களும் அவர்களது சிப்பாய்களும் அவரது வார்த்தைகளை அரைகுறையாகக் கேட்டனர், படை ஆணையர் லெப்டினண்ட் கர்னல் எட்வர்ட் விக்டர் மார்ட்டினின் (Col. Edward Victor Martin) ஹிந்துஸ்தானி மொழிபெயர்ப்பில். தூங்கிவழியும் முகம் கொண்ட விக்டர், சிப்பாய்களிடம் அனுதாபம் கொண்டவர் என்று சக பிரிட்டிஷ் அதிகாரிகளால் கருதப்பட்டதால் அவர் பிறருடன் ஒட்டாதவராக இருந்தார்.

வெப்பமும் புழுக்கமும் கூடிக்கொண்டேபோன அந்தக் காலைவேளையில் ரிடவுட்டின் உரை சோபிக்கவில்லை. சம்பிரதாயமான, “பேரரசு பரந்தது; அதனைக் காக்கும் கடமை சிறந்தது” போன்ற நைந்துபோன பிரச்சாரச் சொற்கள் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய்க்கு உகந்தவையாக இருந்தனவேயொழிய மற்ற சிப்பாய்களுக்கு அல்ல. நீரிணைக் குடியிருப்புப் படைகளின் ஆணைத்தலைவராக இருப்பதில் சிரமங்களை பற்றிப் பேசியது, ஏற்கெனவே தளர்ந்து, ஊக்கமற்று, குழம்பியிருந்த சிப்பாய்களுக்கு மேலும் எரிச்சலையே ஊட்டியது. அன்று மாலை லான்ஸ் நாயக் (லான்ஸ் கார்பொரல்) நஜஃப் கான் (Najaf Khan) தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு புலம்பியிருந்தார்:

“போருக்குச் சென்றவர்கள் யாருமே திரும்பி வரவில்லை. அனைவருமே இறந்துபட்டனர். செல்லவிருப்பவர்களும் உயிருடன் வாழப்போவதில்லை. நம்புங்கள். இந்த உலகம் மாண்டுவிட்டது. போருக்குச் சென்ற எவருமே தப்பிப் பிழைக்கவில்லை. அனைவருமே அழிந்துவிட்டனர். ஆட்சேர்ப்பு இன்னமும் நடக்கிறது. எவரையும் சேர அனுமதிக்காதீர்கள். அனைவரும் போருக்கு அனுப்பப்படுவார்கள். அனைவருமே கொல்லப்படுவார்கள்”