மொழிபெயர்ப்புக் கவிதை

0
401
மஹேஷ்

கவிஞர் பற்றிய குறிப்பு

கே.சச்சிதாந்தன்

கேரளத்தில் திருச்சூர் பகுதியிலுள்ள புல்லூட்டு கிராமத்தில் பிறந்த கே.சச்சிதாந்தன் 70களில் நிகழ்ந்த மலையாள சமூக-பண்பாட்டு மறுமலர்ச்சியின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது நவீன கவிதைகள் கால தேசங்கள் கடந்து ஒரு உலகளாவிய புரிதலை அளிக்கின்றன என்று புகழப்படுகிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். கேரள சாகித்ய அகாதெமி விருது, தேசிய விருது, போலந்து, இத்தாலி நாடுகளின் விருதுகளும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.

காந்தியும் கவிதையும்

மெலிந்துபோன கவிதையொன்று
ஒரு நாள் காந்தியைக் காண
அவர் குடிலுக்கு வந்தது.
இராட்டையில் நூல் நூற்றபடி
உட்கார்ந்திருந்தார் காந்தி.

தான் ஒரு பஜனைப் பாடலாக இல்லையே
என்றெண்ணி வெட்கியபடி
கதவருகே நின்றிருந்த கவிதையை
காந்தி கவனிக்கவில்லை.

ஒரு செருமலுடன் தன் இருப்பை உணர்த்திய கவிதையை
நரகத்தைக் கடந்து வந்துள்ள கண்ணாடி வழியே
உறுத்துப் பார்த்தபடி கேட்டார்:
“எப்போதாவது நூல் நூற்றதுண்டா?
தோட்டியின் வண்டியை இழுத்ததுண்டா?
விடிகாலையில் அடுக்களையில்
புகைக்கு நடுவே இருந்ததுண்டா?
எப்போதாவது பட்டினி கிடந்ததுண்டா?”

கவிதை சொன்னது:
“நான் பிறந்தது காட்டில்… ஒரு வேடனின் வாயில்.
வளர்ந்தது ஒரு மீனவனின் குடிசையில்.
பாடுவதைத் தவிர வேறொன்றும் அறியேன்.
பெரும் சபைகளில் பாடியபடியே
சில காலம் கழிந்தது.
அப்போதெல்லாம் வெளுத்தும் கொழுத்தும் இருந்தேன்.
இன்றோ தெருவில்… அரை வயிற்றுடன்.”

காந்தி முறுவலுடன் சொன்னார்:
“கடைசியாகச் சொன்னது நன்று.
ஆனால் சமஸ்கிருதத்தில் பாடுவதை
முழுவதுமாய் விட்டொழி.
வயல்களைத் தேடிப் போ.
பாட்டாளிகள் பேசுவதைக் கவனி.”

கவிதை ஒரு விதையாக மாறி,
வயலில் விழுந்து,
புதுமழை பொழிந்தபின்
நிலத்தைக் கிளறி உழப்போகும் விவசாயிக்காக
காத்திருந்தது.