இரண்டாம் உலகப்போரின்போது என் தாத்தா காணாமற் போய்விட்டார். அதுகுறித்த கதைகளை என் சிறுவயதில் கேட்டு வளர்ந்திருக்கிறேன். என் பாட்டி தம் கணவர் வருவார் வருவார் என்று அனுதினமும் எதிர்பார்த்துக் காத்திருந்த அனுபவங்களைக் குறித்து அவ்வப்போது பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.
போர்க்காலத்தில் காணாமற்போனவர் என்பதால் ராணுவத்தில் சேர்ந்து போர்புரியச் சென்றுவிட்ட ஒரு வீரராகவே என் தாத்தாவை நான் பலகாலம் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் ராணுவத்தில் சேரவில்லை என்பதையும் ஆயுதங்கள் தரித்து எந்தப் போர்க்களத்திற்கும் போகவில்லை என்பதையும் பின்னாளில் தெரிந்துகொண்டேன்.
என் பாட்டனாரும் அவரைப்போன்ற பலரும் ‘போர்புரிந்தது’ தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் (இன்றைய மியன்மார்) இடைப்பட்ட ஓர் அபாயகரமான நிலப்பகுதியில். அவர்கள் கைவசம் இருந்த ஆயுதங்கள் மண்வெட்டிகளும் குந்தாலிகளும்தாம்! அவர்கள் எதிர்கொண்டது ஜப்பானிய ராணுவத்தையும் ராணுவம் அவர்கள்மீது வல்லந்தமாகத் திணித்திருந்த கொடுமையான வேலைகளையும்.
ஜப்பானிய ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு, தாய்லாந்து-பர்மா ரயில்பாதை அமைக்கக் கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டப் பொதுமக்களே ‘ரொமுஷா’ என்றழைக்கப்பட்டனர். அவர்களில் என் அம்மாவழித் தாத்தா கொஸ்மான் ஹஸ்ஸானும் (Kosman Hassan) ஒருவர். சிங்கப்பூர், மலாயா, பர்மா, ஜாவா பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் ரொமுஷாக்களாக வேலைசெய்தனர். இன்று அந்த ரயில்பாதை ‘மரண ரயில்பாதை’ (Death Railway) என அறியப்படுகிறது.
ஜப்பானிய ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு, தாய்லாந்து-பர்மா ரயில்பாதை அமைக்கக் கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டப் பொதுமக்களே ‘ரொமுஷா’ என்றழைக்கப்பட்டனர்.
போர்க்கைதிகள் சுமார் 60,000 பேர், தென்கிழக்காசியாவைச் சேர்ந்த ரொமுஷாக்கள் 200,000 பேர் எனக் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கும் மேல் மரண ரயில்பாதை அமைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது 90,000க்கும் மேற்பட்ட ரொமுஷாக்கள், 16,000 போர்க்கைதிகள் எனச் சுமார் ஒரு லட்சம்பேர் செத்தொழிந்தனர்.
நேசநாடுகள் கூட்டணியின் பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்கப் போர்க்கைதிகளுடன் இணைந்து ஆசிய ரொமுஷாக்கள் கற்பனைக்கெட்டாத ஒரு காரியத்தைச் செய்துமுடித்திருக்கின்றனர். தாய்லாந்தின் பான் போங்கிலிருந்து (Ban Pong) பர்மாவின் தன்பியூஸயாட் வரை (Thanbyuzayat), காடும் கரம்பையுமாகக் கிடந்த ஆபத்துகள் நிறைந்த நிலத்தைச் சீரமைத்து, சுமார் 415கிமீ ரயில்பாதையை ஒரே ஆண்டில் அவர்கள் அமைத்தனர். சயாமின் (இன்றைய தாய்லாந்து) பேங்காக்கையும் பர்மாவின் ரங்கூனையும் இணைக்கும் ஜப்பானியரின் போர்க்காலத் திட்டத்தின் ஒருபகுதியாக மரண ரயில்பாதை அமைந்தது.
காடும் கரம்பையுமாகக் கிடந்த ஆபத்துகள் நிறைந்த நிலத்தைச் சீரமைத்து, சுமார் 415கிமீ ரயில்பாதையை ஒரே ஆண்டில் அவர்கள் அமைத்தனர்.
மறக்கப்பட்டோரை நினைவுகூர்தல்
ரொமுஷாக்கள் சுமார் ஒருலட்சம்பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆயினும், அவர்களைக் குறித்த அதிகாரபூர்வ ஆவணங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் பெயர்ப்பட்டியலையோ இறப்புப் பதிவுகளையோ என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. மரண ரயில்பாதையின் வரலாற்றுத் தடத்தில் ரொமுஷாக்கள் முகமும் குரலும் அற்றவர்களாக மயான அமைதிகாக்கின்றனர். என் தாத்தாவின் கதையை நினைவுகூர்வதன் வழியாக மறக்கப்பட்ட அந்த ஒருலட்சம் ரொமுஷாக்களுக்கு ஒரேயொரு பெயரையும் முகத்தையும் குரலையுமாவது அளிக்க நினைக்கிறேன்.
நேசநாடுகளைச் சேர்ந்த போர்க்கைதிகள் மரண ரயில்பாதை குறித்த பல சித்திரங்களை தம் சொந்த நாட்குறிப்புகளில் பதிவுசெய்தனர். அவர்களுள் தப்பிப்பிழைத்தவர்கள் வழியாக அப்பதிவுகள் நூலாக்கம் பெற்று வெளிவந்தன. ரொமுஷாக்களைக் குறித்து இன்று நாம் அறிந்துள்ள குறைவான தகவல்கள் அப்பதிவுகளின் வாயிலாகக் கிடைத்தவையே.
ராபர்ட் ஹார்டி (Robert Hardie) என்ற பிரிட்டிஷ் போர்க்கைதி, மலாயாவில் தோட்ட மேலாளராக இருந்தவர். ரொமுஷாக்கள் வசித்த இடங்களைப் பற்றி அவர், அங்கு “குலைநடுங்கச் செய்யும் காலராச் சாவுகளும் இதர வியாதிகளும்” இருந்தன என்கிறார். ஜப்பானியரின் கொடுமைகளையும் அவர் பதிவு செய்துள்ளார். “ரொமுஷா குடியிருப்புகளைப் பார்த்தவர்கள் எவருமே அவற்றைக்குறித்து பீதியும் திணறலும் நிறைந்த மொழியில்தான் பேசுகின்றனர். முறையாக அடக்கம் செய்யாமல் காட்டில் கிடந்து அழுகும் உடல்கள், கடும் வீச்சம், பெருங்கூட்டம், மொய்க்கும் ஈக்கள், சுகாதாரமின்மை. மருத்துவ கவனிப்பு அறவே இல்லாத நிலையில் அம்மக்களால் அடிப்படைத் தூய்மையைக்கூடப் பேணிக்கொள்ள இயலவில்லை” என்கிறார்.
ரொமுஷாக்களிடமிருந்து எழுத்துபூர்வப் பதிவுகள் ஏதுமில்லை. அவர்கள் எழுத்துவாசனை அற்றவர்களாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அவர்களின் கதைகளும் அவர்களுடனேயே மறைந்துவிட்டன. பாபாக் (Bapak) என நான் அழைத்த என் தாத்தா கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, பிழைத்துக்கொண்டார். அவர் எங்களுக்குச் சொல்லிய கதைகளில் இருந்துதான் அவருடைய அனுபவங்களை நான் அறிந்துகொண்டேன். அக்கதைகளை அவர் வருத்தமோ சாகசமோ தொனிக்காத ஒரு நிதானமான மொழியில்தான் சொன்னார். மரண ரயில்பாதை ஏதோ அவரது வாழ்வில் கடந்துசெல்ல வேண்டியிருந்த மற்றொரு பாதை என்பதாக அவரது விவரிப்பு அமைந்திருந்தது.
அக்கதைகளை அவர் வருத்தமோ சாகசமோ தொனிக்காத ஒரு நிதானமான மொழியில்தான் சொன்னார்.
மரண ரயில்பாதையில் என்ன நடந்தது என்பதை பாபாக் அவருடைய பேரப்பிள்ளைகளான எங்களிடம் துல்லியமாக விவரிக்கவில்லை என்றாலும் போரின்போது ஜப்பானியருக்கு வேலைசெய்ததைக் குறித்து அடிக்கடிச் சொல்லியிருக்கிறார். கொசுக்கள் நிறைந்த அடர் கானகம் கொணர்ந்த நோய்களையும் வயிற்றுப்பசியை ஆற்றிக்கொள்ளப் பட்ட பாடுகளையும் பேசியிருக்கிறார். தாய்லாந்தில் உள்ளூர்வாசிகள் அவரிடம் கனிவாக நடந்துகொண்டதையும் உணவளித்ததையும் சிகிச்சை செய்ததையும் குறித்து அவர் பேசியவை இன்றும் பசுமையாக என் நினைவில் பதிந்துள்ளன.
தாய்லாந்து மக்களுடன் பழகியதன் வழியாகத்தான் அவருக்குத் தாய் பாஷை தெரிந்திருக்கவேண்டும். அவர் உயிர்பிழைத்ததிற்கும் உள்ளூர்த்தொடர்பு கிட்டியதே காரணமாக இருந்திருக்கும். அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விவரங்களைப் பெற்றிருக்கலாமே என இப்போது ஏங்குகிறேன் ஆனால் வாய்ப்பிருந்தபோது எனக்கு வயதில்லை.
பாபாக்கின் இளமைக்காலம்
பாபாக் சிங்கப்பூரில் 1914இல் பிறந்தவர். அவருடைய தகப்பனார் ஹஸ்ஸானும் தகப்பனாரின் சகோதரர் மஜீதும் மத்திய ஜாவாவின் ஒரு கிராமத்திலிருந்து மலாயாவுக்கு வந்தவர்கள். என் கொள்ளுத்தாத்தா பிறகு சிங்கப்பூரில் குடியேறினார். மஜீது கோலாலம்பூர் சென்றுவிட்டார்.
ஹஸ்ஸான் சிங்கப்பூரின் கம்போங் ஜாவாவில் வசித்து அங்கே ஒரு ஜாவானியப் பெண்ணை மணந்துகொண்டார். பாபாக் சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தை மறைந்துவிட்டார். தாய் மறுமணம் செய்துகொண்டார். பாபாக்கும் கம்போங் ஜாவாவிலேயே வளர்ந்தார். மலாய், ஆங்கில மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தன. கார் பழுதுபார்ப்பவராக வேலை செய்திருக்கிறார்.
பாபாக் என் பாட்டி ரோகியா ரயீஸை (Rokia Rais) மணந்தார். போருக்குமுன் அவர்கள் திருமணம் நடந்தது. என் பாட்டியை நான் மாக் (Mak) என்றழைப்பேன். என் தாத்தாவுடன் திருமணம் ஆகும்போது பாட்டிக்கு அவரது முதல் கணவர் வழியாக ஏற்கெனவே ஐந்து பிள்ளைகள் இருந்தனர். அதனால் திருமணம் முடிந்தகையோடு தாத்தாவுக்கு ஒரு பெரிய குடும்பம் உடனடியாகக் கிடைத்துவிட்டது.
பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு தொண்டூழியராகவும் பாபாக் பணியாற்றியிருக்கிறார். அவர் பெற்றிருந்த பதக்கங்களைக்கொண்டு நீரிணைக் குடியிருப்புப் படையில் அவர் பணியாற்றியதையும் கண்டுபிடித்தேன். சிங்கப்பூர் பிப்ரவரி 15, 1942 அன்று ஜப்பானியர் வசம் சென்றபோது அவர் புலாவ் பிளாகாங் மாத்தியில் (இன்றைய செந்தோசா) பிரிட்டிஷ் பீரங்கிப் படையில் பணியாற்றினார் என்று எங்கள் குடும்பத்தில் ஒரு கதை இருக்கிறது. அது எவ்வளவுதூரம் உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில் நான் வராலாற்றைத் துருவியபோது 1945க்குமுன் ராயல் பீரங்கிப்படையில் ஐரோப்பியர் மட்டுமே இருந்ததாகத் தெரிந்தது.
மரண ரயில்பாதை வேலைக்காக அவர் தாய்லாந்து அனுப்பப்பட்டபோது அவருக்கு வயது 28. எங்கள் குடும்பமே அப்போது கார் பழுதுபார்ப்பவர்களால் நிறைந்திருந்தது. சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதி சென்னட் ரோட்டில் எங்கள் வீடு இருந்தது. என் தாத்தாவுக்கு முந்தைய தலைமுறையிலேயே எங்கள் குடும்பத்தில் கார் பழுதுபார்ப்பவர் இருந்தனர். ரிவர் வேலி பகுதியில் அவர்களின் பழுதுபார்க்கும் பட்டறை இருந்தது.
ரயில்பாதை அமைப்பில் அனுபவம் வாய்ந்த பழுதுபார்ப்பவர்களின் உதவி அவசியப்படும் என்பதால் என் தாத்தாவின் பெரியப்பாவுக்கு தாய்லாந்து செல்ல அழைப்பு வந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அவரைக்காட்டிலும் சுமார் 20 வயது இளையவராக இருந்த என் தாத்தா தாய்லாந்து செல்ல முன்வந்தார். கைநிறைய சம்பளம், வசதியான உறைவிடம், வாய்க்கு ருசியான உணவு என்றெல்லாம் ஜப்பானியர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி பாபாக் கனவுகளுடன் பயணத்திற்குத் தயாரானார்.
கைநிறைய சம்பளம், வசதியான உறைவிடம், வாய்க்கு ருசியான உணவு என்றெல்லாம் ஜப்பானியர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி பாபாக் கனவுகளுடன் பயணத்திற்குத் தயாரானார்.
தாய்லாந்து பயணம்
என் தாத்தா தாய்லாந்து கிளம்பிய தேதி தெரியவில்லை, ஆனால் ஜூலை 1942இல் ரயில்பாதை போடப்பட்டுக்கொண்டிருந்தது நமக்குத் தெரியும். அவர் சிங்கப்பூரைவிட்டுக் கிளம்பியபோது மாக் என் அம்மாவைக் கருத்தரித்திருந்தார். என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் முதல் குழந்தை. என் அம்மா பிறந்தபோது (ஏப்ரல் 1943) என் தாத்தா சிங்கப்பூரில் இல்லை.
சிங்கப்பூரிலிருந்து வடக்குமுகமாகக் கிளம்பி தாய்லாந்து சென்ற ரயிலில் என் தாத்தா அழைத்துச்செல்லப்பட்டார். வழியில் அவரது சகோதரர் மஜீதை கோலாலம்பூரில் பார்த்தார். என் தாத்தாவுக்கும் குடும்பத்துக்கும் இருந்த தொடர்பு அதோடு அற்றுப்போனது. பிறகு போர்முடிந்தபின்னரே அவர் திரும்பினார்.
என் தாத்தா தாய்லாந்தில் நீராவி இழுவிசைப்பொறிகள் தொடர்பான வேலை செய்ததாக என் பெரியப்பா கஸாலி கூறியிருக்கிறார். மேற்கு மாநிலமான ரட்சாபுரியின் பான் போங் நகரில் அவர் வேலைசெய்திருக்க வாய்ப்புண்டு. பாபாக் காஞ்சனாபுரி நகர் குறித்துப் பேசியது எனக்கு நினைவிலுள்ளது. அது பான் போங்கிலிருந்து 48கிமீ தொலைவிலுள்ளது.
பிரிட்டிஷ் போர்க்கைதி எரிக் லோமெக்ஸ் (Eric Lomax) எழுதிய தன்வரலாற்று நூலான The Railway Man-இல் பான் போங்குக்கு அருகே ஒரு பட்டறையில் பழுதுபார்ப்பவர்கள் பலர் வேலைசெய்ததைக் குறிப்பிட்டுள்ளார். லோமெக்ஸ் அனுபவித்த சித்திரவதைகள், பிறகு தன்னை வதைத்தவர்களை அவர் மன்னித்துவிட்டது போன்ற அனுபவங்களை ஒரு திரைப்படமாக எடுத்தனர். அவரது நூலின் பெயரிலேயே அப்படம் 2013இல் வெளிவந்தது.
என் தாத்தாவை ஒரு மொழித்திறனாளர் எனலாம். மலாய், ஜாவனீஸ் மொழிகள் மட்டுமின்றி ஹொக்கியனும் ஆங்கிலமும் பேசக்கற்றிருந்தார். ஜப்பானிய, தாய் பாஷைகளையும் ரயில்பாதை வேலையின்போது கற்றிருக்கிறார். அவரது மொழித்திறனும் இயந்திரப் பழுதுபார்ப்பு அனுபவமும் போர்க்கைதிகள், இதர ரொமுஷாக்கள் ஆகியோர் பட்ட கஷ்டத்திலிருந்து அவரைச் சற்றுக் காப்பாற்றியிருக்கலாம் என ஊகிக்கிறேன்.
முதுகு ஒடிய சுண்ணாம்பு மலைகளைக் குடைவதோ கல்லையும் மண்ணையும் கூடையில் அள்ளிச் சுமப்பதோ ஆபத்தான ஆறுகள், பள்ளத்தாக்குகளுக்குமேல் ரயில்பாதை அமைப்பதோ ஒரு பழுதுபார்ப்பவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். இதெல்லாம் என் ஊகம்தான். வேலையில் வேறுபாடு என்றாலும் மற்ற இன்னல்களை அவரும் அனுபவித்திருக்கவேண்டும். தங்குமிடம் மிகவும் மோசமாக இருந்ததைக் குறித்து அவர் எங்களிடம் பேசியிருக்கிறார். கைக்குக் கிடைத்த மூங்கில் குச்சிகளைக்கொண்டு ஒரு படுக்கையை அவரே தயாரித்துக்கொள்வாராம். தரையோடு தரையாக இருந்த அப்படுக்கையில் உறங்கும்போது தன்மேல் பாம்புகள் ஊர்ந்துசென்ற சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
சொற்பமான உணவைக்கொண்டே வாழ்ந்ததால் அவர் எப்போதும் பசியோடிருந்திருக்கிறார். எப்போதாவது அரிதாக அருகிலுள்ள கிராமத்திற்கு அனுமதிக்கப்படும்போது மேலும் கொஞ்சம் உணவு கிட்டியிருக்கிறது. சம்பளம் எதுவுமில்லாத வேலை என்பதால் எப்படி உணவு வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் என் தாத்தா எளிதில் எவரிடமும் நட்புகொள்ளக்கூடியவர். அப்படித்தான் உள்ளூர்க்காரர்களின் தோழமை அவருக்கு வாய்த்திருக்கவேண்டும்.
மலேரியா, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் போர்க்கைதிகளையும் ரொமுஷாக்களையும் வாட்டி வதைத்ததை அவர் சொல்லியிருக்கிறார். சாவு சர்வசாதாரணமான அன்றாட நிகழ்வாக இருந்திருக்கிறது. இறந்தோரைப் புதைக்கும் வேலையையும் அவர் செய்திருக்கிறார். அடக்கம் செய்யும் வேலைகள் அவசரகோலத்தில் நடந்ததைக்குறித்தும் அவர் கூறியது எனக்கு நினைவுண்டு. இறந்தவர்களில் முஸ்லிம்களுக்கான இறுதிக்கடனை முறையாக நடத்த அவர் விரும்பியபோதும் அதற்கான சூழலோ வாய்ப்போ அங்கு இருக்கவில்லை என்றார்.
தாய்லாந்து-பர்மா ரயில்பாதை அக்டோபர் 1943இல் ஒரு முடிவுக்கு வந்தது, ஆனால் அப்போதும் ரொமுஷாக்களின் துயரம் முடியவில்லை. மேலும் ஈராண்டுக்கு, ஜப்பானியர் 1945இல் சரணடையும்வரை, அவர்கள் கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நேசநாட்டுப் படைகள் ரயில்பாதையை குண்டுபோட்டுத் துண்டாடிக்கொண்டே இருந்ததால் தொடர்ந்து செப்பனிட்டுக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. ஒருபக்கம் போர்ச்சூழலில் உணவின் அளவு குறைந்துகொண்டே வந்தபோதும் மறுபக்கம் உழைப்பு அதிகரித்ததால் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் எலும்பும் தோலுமாக ஆயினர்.
நேசநாட்டுப் படைகள் ரயில்பாதையை குண்டுபோட்டுத் துண்டாடிக்கொண்டே இருந்ததால் தொடர்ந்து செப்பனிட்டுக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.
சிங்கப்பூர் திரும்புதல்
ஆகஸ்ட் 1945இல் ஜப்பானியர் சரணடைந்தபோது போர்க்கைதிகளும் ரொமுஷாக்களும் விடுதலை பெற்றனர். போர்க்கைதிகளுக்கு அவரவர் சார்ந்திருந்த படைப்பிரிவின் தொடர்பு இருந்ததால் அடுத்தடுத்து செய்யவேண்டியதைக் குறித்து எந்தக் குழப்பமும் இருக்கவில்லை. ஆனால் ரொமுஷாக்களிடம் எவ்வித ஒருங்கிணைவோ தலைமைத்துவமோ இல்லாததால் தடுமாறினர்.
ஒரு 1946 அறிக்கையின்படி, “உத்தேசமாக 26,000 மலாயாவாசிகள் ரயில்பாதை நெடுக உழைப்பாளிகளாகச் சிதறிக்கிடந்தனர். அவர்கள் தாமாகவே மலாயாவுக்குத் திரும்பலாம் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. போஷாக்கும் இன்றி நோய்வாய்ப்பட்டு மெலிந்து கண்ணில் உயிரை வைத்துக்கொண்டிருந்த அவர்களிடம் பேங்காக் செல்வதற்குக்கூடத் தெம்போ திராணியோ இல்லை”. மலாயா தோட்டத்தில் முன்பு வேலைசெய்த பிரிட்டிஷ் போர்க்கைதிகள் தன்னாவலர் குழு ஒன்றின் உதவியுடன் பலர் மலாயா திரும்பினர்.
கண்ணில் உயிரை வைத்துக்கொண்டிருந்த அவர்களிடம் பேங்காக் செல்வதற்குகூடத் தெம்போ திராணியோ இல்லை
தன்னார்வலர் குழுவில் ஒருவராக இருந்த ரிச்சர்ட் மிடில்டன் ஸ்மித் மறைந்தபோது வெளியான இரங்கல் செய்தியிலிருந்து சில தகவல்களை அறியமுடிகிறது. தன்னலம் பாராத அவர்களுடைய தொண்டு போற்றுதற்குரியது. அதை அவர்கள் தம் கடமையாகக் கருதினர். இரு குழுக்களாகப் பிரிந்து, பேங்காக் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி, ரொமுஷாக்கள் தங்குமிடங்களைத் தேடிச்சென்றனர். பல ‘கேம்ப்’களில் போர் முடிந்ததேகூடத் தெரியாமலிருந்தனராம். உடனடியாக ஊர்திரும்பி சொந்தபந்தங்களைப் பார்ப்பதே ரொமுஷாக்களின் கனவாக இருந்தது என்கிறார் ஸ்மித்.
பாபாக்குக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றாலும் சிங்கப்பூர் திரும்ப வழி தெரியவில்லை. “மேஜர் பிங்க்” என்ற ஒருவரை சிங்கப்பூரில் போருக்கு முன்பே பாபாக் அறிமுகம் கொண்டிருந்ததாகவும் அவரது உதவியுடன் பேங்காக் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பியதாகவும் பாபாக்கின் இன்னொரு மகன் அலி தெரிவிக்கிறார். மேஜர் பிங்க் குறித்த தகவல்களை என்னால் தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை. ஆயினும் ‘பிங்க்’ என அழைக்கப்பட்ட ஜோகூர் தோட்ட மேலாளர் ஒருவர் தாய்லாந்தில் போர்க்கைதியாக இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவராக இருக்கலாம் என்பது என் ஊகம்.
பாபாக் 1945இன் இறுதியிலோ 1946இன் தொடக்கத்திலோ சிங்கப்பூர் திரும்பினார். அவர் வந்துசேர்ந்த கோலத்தை என் பாட்டி நினைவுகூர்ந்ததுண்டு. சிங்கப்பூரிலிருந்து 1942இல் புறப்பட்டுச் சென்றவர், எந்தத் தகவலும் இல்லாத நிலையிலும், எப்படியும் உயிரோடிருப்பார் என்று என் பாட்டி தீர்க்கமாக நம்பியிருந்தார். தங்கள் முதல் குழந்தையும் என் தாயுமான அசியா கொஸ்மானை (Asiah Kosman) தாத்தா பார்க்கவேண்டும் என்று உள்ளூரப் பாட்டி ஏங்கிக்கொண்டிருந்தார்.
சிங்கப்பூர் திரும்பியதும் பிரிட்டிஷ் ராணுவத்தில் தொண்டூழியத்தை பாபாக் தொடர்ந்தார். அவரது நீண்டகாலப் பணியை மெச்சி அவருக்கு 1949இல் ‘வேலைத்திறன் பதக்கம்’ வழங்கப்பட்டது. போரில் பங்குபெற்றதற்காக ‘பசிபிக் ஸ்டார்’ உள்ளிட்ட இதர பல பதக்கங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் திரும்பிய பாபாக், பால் விநியோகம் செய்த டட்ச் லேடி (Dutch Lady) நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்தார். போர்ப்பதற்றம் தணிந்த புதிய வாழ்க்கைச் சூழலில் என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மேலும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். சிங்கப்பூர் தனி நாடாக ஆகும்வரை என் தாத்தா ஓட்டுநர் வேலையைத் தொடர்ந்தார். பிறகு 1969இல், எங்கள் சென்னட் ரோடு வீடருகே திறக்கப்பட்ட ச்சாய் சீ உயர்நிலைப் பள்ளியில் (Chai Chee Secondary School) பானக்கடை ஒன்றைத் திறந்தார்.
போரை நேரடியாக அனுபவித்த அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் போலவே என் தாத்தாவும் மரண ரயில்பாதை அனுபவங்களைக் குறித்துப் பேச விரும்பியதில்லை. ஏதேனும் நினைவு எப்போதாவது யதேச்சையாக மேலெழும்போது சில செய்திகளைப் பகிர்வதோடு சரி. தாய்லாந்துக்காரர்களைக் கண்டால் மகிழ்ச்சியாக உரையாடுவார் ஆனால் எங்களிடம் பகிர்ந்துகொண்டது குறைவு. மரண ரயில்பாதையில் தான் கற்ற வாழ்க்கைப்பாடங்கள் குறித்து அவர் அலட்டிக்கொண்டதில்லை, எங்களுக்குப் பாடமெடுத்ததில்லை. மேலும் ஜப்பானியரை அவர் வெறுத்தார் என்றும் சொல்வதற்கில்லை. அவர்களைக்குறித்த கடுஞ்சொல் ஏதும் அவர் சொல்ல நான் கேட்டதில்லை.
ஜப்பானியரை அவர் வெறுத்தார் என்றும் சொல்வதற்கில்லை. அவர்களைக்குறித்த கடுஞ்சொல் ஏதும் அவர் சொல்ல நான் கேட்டதில்லை.
அவர் அனுபவித்த அத்தனை இன்னல்களையும் தாண்டி – ஒருவேளை அவற்றின் விளைவாகவும் இருக்கலாம் – பாபாக் ஒரு நிதானமான ஆளாகவே இருந்தார். ஆத்திரப்பட்டதில்லை, இரைந்து கத்தியதில்லை. ஆழ்ந்த, நிலையான அமைதி அவரிடம் குடிகொண்டிருந்தது. குடும்பமோ நட்போ உடன் வேலை செய்பவர்களோ அல்லது அறியாத அன்னியர்களோ எவராயினும் அவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய எப்போதும் அவர் தயாராக இருந்தார்.
மனித அன்பு, மானுட கண்ணியம் ஆகியவற்றில் அசாத்தியப் பிடிமானம் அவருக்கிருந்தது. சிக்லாப் சமூக நிலையத்தில், சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1992இல் அவர் மறையும்வரை, அடித்தளச்சேவை உறுப்பினராகத் தொடர்ந்து துடிப்பாகச் செயல்பட்டார். சமூக சேவைக்கான சீரிய பதக்கத்தைப் பெற்றார்.
மரண ரயில்பாதையில் மானுடத்தின் ஆக மோசமான பக்கத்தையும் ஆகச்சிறந்த பக்கத்தையும் பாபாக் நேரில் பார்த்திருந்தார். ஆனால் வெறுப்புக்கு பதிலாக அவர் மன்னிப்பைக் கைக்கொண்டார். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், அவரைத் திரும்ப உயிரோடு பெற்றோம். மலாயா, ஜாவா, சுமத்திரா, பர்மாவின் பல ரொமுஷா குடும்பத்தினருக்கு அப்பேறு வாய்க்கவில்லை.
பாபாக்கும் மாக்கும் 1992இல் கோலாலம்பூர் சென்றிருந்தபோது பாபாக் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையிலும் சிங்கப்பூர் திரும்பவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது விருப்பப்படியே திரும்பினார். சிங்கப்பூர் திரும்பிய சில நாள்களிலேயே, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், நான் உடனிருக்க மறைந்துபோனார்.
அவர் இவ்வுலகை நீங்கி 30 ஆண்டு ஆனபின், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த என் பாட்டனாரைக் குறித்து எண்ணிப்பார்ப்பது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் எனக்கு ஒன்றாகக் கொணர்கிறது.