தீபாவளிப் பண்டிகை உருவானதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பொதுவான அடிப்படைக் கருத்தாக “வாழ்வின் இருளை நீக்கி, ஒளியை அளிக்கும்” பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.
அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து, புத்தாடை உடுத்தி, ஒருவருக்கொருவர் இனிப்புகளையும், பரிசுகளையும் பரிமாறிக் கொண்டு மகிழ்வர். ஒருகாலத்தில் விளக்கேற்றி கொண்டாடப்பட்டு வந்தது, தற்போது பட்டாசுகளும் வெடித்துக் கொண்டாடப்படுவது வழக்கமாகிவிட்டது. சென்ற தலைமுறையினர் வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். தற்போது வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தில் வாட்ஸாப், இதர, சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்துகளைப் பகிர்வது எளிதாகிவிட்டது.
தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடும் நாடுகளுள் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்கது. வீதிகளிலும் பொது இடங்களிலும் சமுதாயமாக ஒன்றினைந்து கொண்டாடும் விதத்தில் தீபாவளி ஏற்பாடுகள் செய்யப்படுவது சிங்கப்பூரின் சிறப்பம்சம்.
தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா, LISHA) பல்வேறு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்திருந்தது. உணவுச் சந்தை, ஒளியூட்டு விழா, பண்டிகை கிராமம், ரங்கோலி பயிலரங்கு, புதையல் வேட்டை, மேல்தள பேருந்து சுற்றுப்பயணம், மலர் தொடுத்தல் மற்றும் அலங்கரிப்புப் பயிற்சிகள், தெரு நிகழ்ச்சிகள், சமையல் செய்முறை விளக்கங்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 வரை நடந்தது.
“தீபாவளி ஒளியூட்டு விழா”வில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஒளியூட்டைத் தொடங்கி வைத்தார். சுற்றுப்பயணிகள் செல்ல விரும்பும் இடமாக லிட்டில் இந்தியா திகழ்வதாகவும், லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பங்காளித்துவ அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றும் புகழாரம் சூட்டினார். பிற இனத்தவரின் பண்டிகைகளையும் பாரம்பரியத்தையும் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதன் மூலம் பல்லினச் சமுதாயமான சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்ற முடியும் என்றும் அதுவே சிங்கப்பூரின் தனித்துவம் என்றும் கூறினார்.
நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘சிங்கா ரங்கோலி’ குழுவின் ஏற்பாட்டில் சிறப்புத் தேவையுடையோர், மனநலக் கழகத்தைச் சேர்ந்தோர், பொதுமக்கள் ஆகியோர் வண்ணம் தீட்டி மகிழ கோலப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. லிஷாவின் தலைவரான ரகுநாத் சிவா, இவ்வாண்டு 64 நாள்களுக்கு தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாண்டு ‘ராதா-கிருஷ்ணா’ கருப்பொருளுடைய ஒளிச்சட்டங்கள் சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு-களில் இரவு 7 மணி முதல் நள்ளிரவுவரை ஒளிவீசின. மேலும் ‘வெள்ளை குதிரைகள் பூட்டிய தங்க ரதம்’ வடிவமைப்பு பர்ச் ரோட்டில் அமைக்கப்பட்டது. பார்வையாளர்களை உற்சாகத்துடன் வரவேற்க, லிட்டில் இந்தியாவின் சின்னமாக “தேக்கா ராஜா” என்ற பெயரோடு ‘தடைகளை அகற்றுதல்’ எனும் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் யானை பொம்மையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தினர்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் “உணவு, நவநாகரிகம், கலைகள், புராணம்” ஆகிய கருப்பொருள்களில் தீபாவளிப்பண்டிகை களைகட்டியது. கிருஷ்ணாவுக்கும் ராதாவுக்கும் இடையிலான காதல் கதையை நாடகமாக்கப்பட்ட காட்சிக்கூடச் சுற்றுலா, கதை சொல்வது, கலை சார்ந்த பயிலரங்குகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தேறின.
லிஷாவுடன் நிலப் போக்குவரத்து ஆணையம் இணைந்து, ஆறு ரயில்களையும் ஐந்து பேருந்துகளையும் ஐந்து ரயில் நிலையங்களையும் அலங்கரித்தது. வண்ணமயமான பாரம்பரிய மலர்க்கோலங்களும், தீப வடிவங்களும், தீபாவளி வாழ்த்து வாசகங்களும், ஓவியங்களும், தீபாவளி கொண்டாடப்படுவதன் காரணத்தை விளக்கும் ஆங்கில விவரக் குறிப்புகளும் தீபாவளி உணர்வில் பயணிகளைத் திளைக்க வைத்தன.
தீபாவளிக்கொண்டாட்ட உணர்வுகள் லிட்டில் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தன. பல்வேறு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளும் இசைக் கச்சேரிகளும் நடந்தன.
மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்துகளைத் தவிர்க்க சிங்கப்பூரில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மத்தாப்பு மட்டும்தான். மத்தாப்புக்களைக் குடியிருப்புப் பகுதிகளிலும் கிழக்குக் கடற்கரைப் பூங்காவிலும் வெடித்து மகிழ்ந்தனர்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை, மக்கள் கழக மலாய் நற்பணி மன்றம் (மெஸ்ரா) இணைந்து அக்டோபர் 21 முதல் நவம்பர் 9 வரை சமூகத்தில் வசதி குறைந்த 3,500 குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசுப்பைகளை வழங்கின.
ஆண்டுதோறும் தீபாவளிக் கொண்டாட்டங்களையொட்டி சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ (Project Give) திட்டம் இடம்பெறும். இந்தத் திட்டத்திற்காக “ஃபேர் பிரைஸ்” குழுமம் நன்கொடை வழங்கி, வசதி குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்டியது. அத்துடன் காக்கி புக்கிட், உட்லண்ட்ஸ் வட்டாரங்களிலும் கொண்டாட்ட விழாக்களை அறிவித்தது.
சிங்கப்பூர் வாசிகளுக்கு மட்டுமின்றி, அண்மையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த சுற்றுப்பயணிகளுக்கும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளும் அலங்கரிப்புகளும் மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தன.