“எஞ்சும் சொற்கள்” / ஆசிரியர்: சுரேஷ் பிரதீப் / கிழக்கு பதிப்பகம்
நடந்து செல்லும்போது, சாலையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு வண்டியோ பேருந்தோ கடந்து செல்லுமுன் கடந்து விட்டால் நினைத்தது நடக்கும் என்று சிறுவயதில் எனக்கு ஒரு நம்பிக்கை. அப்பா வேலைவிட்டு வரும்போது திண்பண்டங்களை வாங்கிவருவார். புத்தாடை கிடைக்கும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். சிலருக்கு வளர்ந்தும் அப்பழக்கம் இருக்கலாம். சில நேரங்களில் நாம் நினைத்தது போலவே நடைபெறும்.
பாரம் என்ற கதையில் வரும் சிறுவனுக்குத் தனது இடது தோள்பட்டையில் தூக்கிச் செல்லும் ‘வயர்’ கூடையைக் கை மாற்றாமல் வீடு வரை சென்றுவிட்டால் அப்பா குடிக்காமல் வருவார். குடித்தாலும் அடிக்க மாட்டார். அடித்தாலும் இரத்தம் வராது. இரத்தமே வந்தாலும் அப்பா அம்மாவை அடிக்க மாட்டார். அம்மாவை அடித்தாலும் அம்மா அழமாட்டாள். அப்படி அழுதாலும் நான் உறங்கிவிட்டதாக நம்பி அம்மா நள்ளிரவில் தனதருகே வந்தமர்ந்து அழமாட்டாள் என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறான்.
அப்படி ஒருநாள் சுதந்திர தினவிழாவிற்கு பள்ளி சென்று திரும்பியவன் பாதி தூரத்திலே தனது பள்ளிச்சுமையை மறந்ததை எண்ணி வரும் வழியில் உள்ள கோவிலில் வேண்டுவது, அப்படி வந்து பார்த்தபோது அம்மாவும் அம்மாவின் காதலனும் அப்பாவால் வெட்டிக்கொல்லப்பட்டது என அங்கு அடித்த உதிர வாடை அவன் மனதிற்குள்ளும் அடிக்க, தான் சுமையைத் தூக்காததால் இவ்வாறாக நிகழ்ந்ததாக நம்பும் அவன் தன் வாழ்நாள் முழுதும் ஏதோ ஒரு சிறு சுமையைத் தூக்கிகொண்டே அலைகிறான். இறுதியில் சுமையைக் கழற்ற நினைத்தபோது வண்டி மோதி இறப்பது, இறந்துபின் தான் சுமையைக் கழற்ற நினைத்தால்தான் தான் இறந்தேன் என்று சொர்க்கத்தில் பேசுவது என பல எண்ணங்களை விவரித்து நீள்கிறது அக்கதை.
ஒரு வகையில் மனிதன் தன் எல்லாக் காலத்திலும் ஏதாவது சுமையைத் தூக்கிக்கொண்டே செல்கிறான் அல்லது தூக்கி வைத்துக்கொள்ளப் பழக்கப்படுகிறான். சுமையே இல்லாமல் வாழ்வே இல்லை என்ற அளவுக்கு மாறிப்போன ஒரு நடுத்தர இளைஞனின் வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதையும், சுமை ஒருவனை என்னவெல்லாம் செய்யத் தூண்டும் என்று கதையினூடே சொல்லிய விதம் சிறப்பு.
மனிதர்களில் இரண்டு வகை; சுமை பற்றிய எண்ணங்களுடன் இறப்பவர்கள் ஒரு வகையினர். சுமையின்மை என்பதே சுமையாகி இறப்பவர்கள் மற்றொரு வகை என்கிறார் நூலாசிரியர் பிரதீப். பாரம் சிறுகதை, நாம் காணாத சில இடங்களையும் காணத் தூண்டுகிறது. வாழ்வில் சுமைதான் நிரந்தரமானது. இன்பம் அவ்வப்போது வந்து போவது. நாம் ஏதோ ஒரு வகையில் சுமையுடனேயே வாழ்ந்து பழக வேண்டும். மொத்தத்தில் கதையைப் படித்ததும் நம் மீதும் ஒரு பாரம் ஏற்றிவைக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.
மிக இயல்பான, ஆனால் நாம் கவனிக்க மறந்த நிகழ்வுகளைக் கூட, மிக மெல்லிய உணர்வுகளையும் கோடிட்டுக் காட்டவே படைப்பாளர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் போலும். சமூகக் கட்டமைப்பில் பெண்களின் இடம், சாதிப் பின்புலம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் ஒரு சிறுகதை அக்கறை கொள்கிறது. உண்மையில் சாதி சாதித்ததென்ன என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது. புதிய தலைமுறைக்குச் சாதியத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பும்வகையில் ‘வரையறுத்தல்’ சிறுகதை அமைகிறது.
இத்தொகுப்பின் சிறப்பே பெண்கள் படும் இடர்களை ஒவ்வொரு கதையிலும் கோடிட்டுக் காட்டுவது. கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கைக்குச் சென்று மீண்டும் கிராமத்திற்கு வரும்போது நம்மை யாராவது கண்டுகொள்ளமாட்டார்களா நாம் மாறியிருக்கிறோம் என்று யாரும் சொல்லமாட்டார்களா என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் உருவாவதுண்டு. அப்படியான எண்ணங்கள் பிரதீப்பின் கதைகளுக்கு ஆதாரமாக வந்து நிற்கின்றன.
மனிதன் தன் எல்லாக் காலத்திலும் ஏதாவது சுமையைத் தூக்கிக்கொண்டே செல்கிறான் அல்லது தூக்கி வைத்துக்கொள்ளப் பழக்கப்படுகிறான்.
‘பதினோரு அறைகள்’ கதை தாய்மை குறித்த பொதுப் பிம்பத்தை நொறுக்கிவிடுகிறது. சமூகத்தில் இப்படியான செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அத்தகைய குடும்பப் பின்னணியில் வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கை எவ்வாறு முற்றிலும் வேறான ஒன்றாக ஆகிவிடுகிறது என்று காட்டியுள்ளார். தனக்குப் பிடிக்காத ஆணுக்குப் பிறந்த பிள்ளையைவிட்டுக் காதலனைக் கரம்பிடித்து வாழ்வது போன்ற எதார்த்தங்கள் சிந்திக்க வைக்கின்றன. வேலியின் மீது ஒரு கொடி படர்வதைப்போல சில கேள்விகள் கெட்டியாகப் படர்கின்றன. சில நேரம் அவை நெஞ்சைப் பதபதைக்கவும் வைக்கின்றன.
‘பரிசுப்பொருள்’ சிறுகதையில் காதலனால் ஏற்பட்ட கருப்பைத் தொற்று இறுதியில் கருப்பையை அகற்றவேண்டிய நிலைக்கு இட்டுச்செல்கிறது. அகற்றப்பட்ட கருப்பையைப் கைவிட்ட காதலனுக்கே பரிசுப்பொருளாக்குகிறாள். உறவுச் சிக்கல்களைப் பேசும் பல கதைகள் இத்தொகுப்பில் அமைந்துள்ளன..
பழம்பெரும் இனக்கூட்டம் எப்போதும் பல கதைகளைத் தனக்குள் கொண்டிருக்கும். கதை என்பது வாழ்க்கை. சில கதைகளில் பல செய்திகளை மறைத்துச் சொல்வது போலத் தோன்றினாலும் நாம் கவனிக்க மறந்த வாழ்க்கைத் தருணங்களைக் கதைகளின் வழியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் பிரதீப்.
“ஒரு புத்த மதியம்” / ஆசிரியர்: மஹேஷ் குமார் / யாவரும் பதிப்பகம்
“நான் எங்கு சென்றாலும் எனக்கு முன் கவிதை அங்கு சென்றுவிடுகிறது” என்கிறார் உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட். “இதயத்தில் இதுதான் என இட்டு இட்டு நிரப்ப முடியாதது கவிதை. காண்பதெல்லாம் கவிதை, உணர்வதெல்லாம் கவிதை” என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
எந்தக் கேள்வி அல்லது தொந்தரவில் கவிஞரின் மனவெளி இயங்கிக் கவிதைகள் பிறக்கின்றன என்பதை ஒரு கவிதை நூலை முழுதும் படிப்பதன் வழியே தெரிந்து கொள்ளலாம். கவிஞர்களை மேலும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.
மஹேஷ்குமாரின் கவிதை உலகம், பரபரப்பான சிங்கப்பூர் வாழ்வில் இக்கணத்தில் வாழாது நாம் காணத்தவறிய காட்சிகளைக் கவிதைகளுக்குள் கொண்டுவருகிறது. எதையும் நிதானித்துக் காண அவகாசமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நம்மை, ஒரு பலகணியில் சாய்வு நாற்காலியில் உட்கார வைத்து, அந்தி வானத்தை ரசிக்கும் ஒரு மௌனத்தை, மனம் தேடும் அமைதியை ‘ஒரு புத்த மதியம்’ என்னும் இக்கவிதைத்தொகுப்பில் உணர வைக்கிறார்.
கவிதைகளின் பாடுபொருள்களைப் பொறுத்து இரு வகைகளில் அவற்றை அடக்க முற்படுகிறேன்.
அகம்: தனிமனிதன் சந்திக்கும் மனச் சிக்கல்கள், கோபம், ஆற்றாமை, தன்னைச் சுற்றி இருக்கும் உயிர்களின் வழியே தன்னை அறிதல், புத்தனின் மனநிலையை அடைய முயல்வது.
புறம்: சிங்கப்பூர்ச் சூழல், கலாச்சாரம், இடங்கள், கட்டடங்கள், அன்றாட இயற்கை சூழல் காட்சிகள்.
தனிமனிதனின் உளக்குமுறல்கள், ஆற்றாமைகள், துயர்களை அகவயமான கவிமொழியில் கவிஞர் பகிர்கிறார். தன்னைச் சுற்றி இருக்கும் உயிரிச் செயல்பாடுகள் மூலம் தன்னைக் கண்டுகொள்ள எத்தனிக்கும் கவிதைகளும் இதில் அடக்கம். உதாரணமாக, வீவக புளோக்கின் கீழே வசிக்கும் பூனைக்கு அன்றாடம் உணவிடும் மூதாட்டியை சில நாட்கள் காணவில்லையெனில் பதறும் மனதைக் காட்டும் கவிதையைச் சொல்லலாம். தத்துவார்த்த பார்வைகளைச் சுற்றியிருக்கும் புற இயற்கைச் சூழல்களின் வழியே ஓர் அமைதியைத் தன்னுள்ளும் நிறுவ முயல்கிறார்.
புறம் சார்ந்த கவிதைகளாக சிங்கப்பூரின் அன்றாட சித்திரங்களை, உதாரணமாக, கோப்பி கடை மேசையில் அமரும் மைனாக்கள், சீனக்கோயிலின் புறத்தோற்றம், சூதாட்ட மாளிகை தனது கவிமொழியில் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், மகாபாரத்தில் வரும் கிருஷ்ணர், பாரி போன்ற தொன்மப் படிமங்களையும் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
ஒரு தனிமனிதன் இச்சமூகத்திடம் கொண்டிருக்கும் பிடிமானங்களையும் அனுபவங்களையும் ஆற்றாமைகளையும் தன் அகவெளிக்குள் உள்வாங்கி அவற்றை நமக்கும் கடத்தும் வித்தையை நிகழ்த்திக்காட்டுகிறார் கவிஞர். மிக லாவகமான கவிதைத் தெறிப்புகளாகக் கச்சிதமாகக் கையாளவும் செய்திருக்கிறார்.
சொல்முறையில், வடிவத்தில் புதிய உத்திகளைக் கையாண்டிருக்கிறார். எழுத்தாளர் இந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல, தொகுப்பின் முதல் கவிதையான “எச்சரிக்கை” என்ற கவிதையில் வரும்,
அரவம் சென்ற இடத்திலெல்லாம் சட்டை உரித்தது.
அடிக்கடி உரித்தல் மரித்தலில் முடியுமாமே?
என்ற வரிகளைச் சுட்டலாம். ஒரு சொல்லை ஒளித்து வைத்து, வாசகரை ஊகிக்க வைக்கும் விளையாட்டையும் ஒரு கவிதையில் அழகாக விளையாடியிருக்கிறார் கவிஞர்.
தொகுப்பினைப் படிக்க ஆரம்பித்ததும் மிகப் பிடித்த வரிகளாக மாறிப்போனவை, “நினைவு வலைகள்” என்ற கவிதையில் வரும் முதல் மூன்று வரிகள். அவ்வரிகள் தரும் காட்சிப்படிமத்திலேயே லயித்திருந்தேன்.
அறை முழுவதும் நிறைந்திருக்கிறது
மழைபெய்து ஓய்ந்த மேகக்கூட்டம்.
மூலையில் சாய்ந்திருக்கிறது ஒரு வானவில்.
ஓர் அறைக்குள் மழைபெய்து ஓய்ந்த மேகம், எவ்வளவு லேசாக, எடையற்றதாக இருக்குமோ, அது நிறைந்திருக்க, சுவர் ஓரமாய் ஒரு வானவில் சாய்ந்து அமர்ந்திருப்பதைக் கற்பனை செய்துபார்க்கவே எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது! அக்கவிதை துயர் மிகுந்த கவிதையாக இருந்தாலும், இந்த மூன்று வரிகளே நமக்குள் இறக்கைகள் முளைக்கப் போதுமானதாய் இருக்கிறது. ஆயினும், கவிதையின் பிற்பாதியில் சுவர்களுக்கு இறக்கைகள் முளைத்து, பறப்பதாகக் குறிப்பிட்டவிதம் ஒரு ஹாலிவுட் திரைக்காட்சியைப் போல மனதுள் விரிவதைத் தடுக்க இயலவில்லை.
“ஒரு புத்த மதியம்” தலைப்பில் அமைந்த ஒரு கவிதை, முன்பு வந்த ‘மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒரு சின்ன சமிக்ஞை கொடுத்ததும் அங்கிருக்கும் அனைத்து மனிதர்களும் அவனாகவே ஆகிப்போவார்கள். அப்படியான ஒரு கனவுக்காட்சியைப் போலக் காண்பவர்கள் அனைவரும் புத்தர் என உணரச் செய்தது.
ஒரு புத்த மதியம் என்ற தலைப்பிற்கு மிகப் பொருத்தமான மற்றுமொரு கவிதையாக நான் காண்பது “கோடைமழை”யை. ஒரு காற்றில்லாத மதியவேளையில், புழுக்கமான சூழ்நிலையில், ஒரு காக்கை உட்கார, கிளைவிடுத்து ஒற்றை இலை விழும் தருணத்தில் நித்தியத்தில் பூத்திருக்கும் மௌனத்தில் கவிதை நம்மை ஆக்கிரமிக்கிறது. இதில் நிறைந்திருக்கும் அமைதியின் பொருண்மை நம்மை இக்கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு வெகு அருகாமையில் அழைத்துச் செல்கிறது.
கோடைமழை
அகாலமாக வெயிலில் மழைத்தூறல்.
மின்சாரமில்லாத புழுக்கம்.
வாயால் ஊதினால்தான் காற்று.
வரைந்த சித்திரங்களாய்
பால்கனிக்கு வெளியே மரங்கள்.
எங்கிருந்தோ ஒரு காகம் வந்து
சொற்ப இலைகளுடன் சவலையாய் நிற்கும்
கொய்யா மரத்தின் கிளையில் உட்கார,
அதிர்வில் ஒரு இலை உதிர்கிறது.
நிதானமாக அசைந்தபடியே விழுகிறது.
அந்த இலையென்ன நினைத்திருக்கும்
அந்த மரமென்ன நினைத்திருக்கும்
காக்கையென்ன நினைத்திருக்கும்
என்றெல்லாம் நினைத்தபடி
நானிருக்கிறேன்.
“தேவன் வருகை” என்ற கவிதையோ, பெரும்பாலும் காற்றே இல்லாத புழுக்கமான வானிலையால் சூழப்பட்ட இந்த நிலத்தில், வீட்டிற்கு ஒரு கடன்காரனைப்போல எப்போதாவதுதான் காற்று வருகிறது என்றும் திரும்பத் தராத கடன்களை அது நம்மிடம் பெற்றுச் சென்றாலும் நாம் அதற்கு நிறையவே கடன்பட்டிருக்கிறோம் என்றும் கூறிய விதமும் காற்றின் வருகையை கடவுளின் வருகையாகக் கண்ட விதமும் நன்றாக இருந்தன.
“இணையச் சுவர்கள்” கவிதையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறு விதமான மனிதர்களின் செயல்பாடுகளை விவரிப்பதாக இருக்கிறது. “பட்டினத்துக் காற்று” என்ற கவிதையோ, மிக நுணுக்கமாக அதே சமயம், கவனமாக அணுக வேண்டிய ஒரு முக்கியமான சமூக மனநிலையை தக்க வகையில் அணுகியிருக்கிறது. இன்றைய சிங்கப்பூர் மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாலேயே இது நல்ல கவிதையாக எனக்குப்படுகிறது.
தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைக் கூர்ந்து அவதானிக்கும் மனம் கவிஞர்களுக்கு இன்றியமையாதது. ஆயினும், “கவனச்சிதறல்” என்ற கவிதையில், தன்னைச் சுற்றி நிகழ்பவைகளைப் பட்டியலிட்டு, கடைசியில் அவையெல்லாம் அந்தக் கவிதையை எழுத விடாமல் செய்வதாகச் சுட்டுகிறார். ஆயினும், தன்னைச் சுற்றி நல்லதொரு அவதானிப்பைச் சாத்தியப்படுத்தி ஒரு நல்ல கவிதையை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
“நாங்கள்” என்ற கவிதையில், நூலாசிரியரும் ஜெயகாந்தனும் ஒரு நண்பரைச் சந்திக்கச் செல்வது போலவும் அங்கே நண்பர் இல்லையென்று மனைவி கூற, வேறு எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்றதாக உரைக்கிறார். கவிஞர் இசையின், “போலீஸ் எங்களை வீட்டுக்கு அனுப்புகிறது” என்ற கவிதையை நினைவூட்டியது. அதில், கவிஞர் இசை, இளங்கோவுடன் சுரேஷ் பேக்கரி முன்பாக இரவில் பேசிக்கொண்டிருப்பார். அங்கே, கலாப்ரியா, ஜெயராமன், சுகுமாரன், தொ.பரமசிவம் போன்ற ஆளுமைகள் வருவதால் கூட்ட நெரிசல் ஆகிவிடுவது போன்று அமைந்திருக்கும்.
ஞானம்
குப்பைத்தொட்டிக்கு அருகில் அமர்ந்திருந்த
என்னைத் தேடி
புத்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
ஞானம் தற்போது கையிருப்பில் இல்லை என்றேன்.
விரித்த உள்ளங்கைகளை உற்றுப்பார்த்தனர்.
உரக்கச் சிரித்துவிட்டேன்.
எதையும் மறைப்பதில் அர்த்தமில்லை என்றனர்.
அர்த்தத்தில் மறைந்த எதுவும் நிலைப்பதில்லை என்றேன்.
உரக்கச் சிரித்தனர்.
அருகில் போதிமரம் இருக்குமா என்று கேட்டனர்.
இருந்த ஒரே மரத்தையும்
நேற்றுதான் வெட்டி விறகாக்கி
நாங்கள் குளிர் காய்ந்தோம் என்றேன்.
நாங்கள் என்றதில்
ஒரு குருட்டுப் பூனையும்
ஒரு சொறி நாயும் அடக்கம்.
ஞானத்தைத் தேடி புத்தர்கள் மனிதனிடம் கேட்பதாக இருப்பது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இருப்பின் நிலையாமைச் சிந்திக்கும் மனிதனிடம் ஞானத்தைத் தேடி வரும் புத்தர்களின் உரையாடல் இன்னும் ஆழமாக யோசிக்க வைக்கிறது.
சிங்கப்பூரில் காத்திரமான கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல தொகுப்பாக “ஒரு புத்த மதியம்” அமைந்திருக்கிறது. கவிஞர் மஹேஷ்குமாரின் வாசிப்பனுபவ வீச்சும் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதன் அனுபவமும் அவரது கவிதைகளில் மிளிர்வதைக் காணமுடிகிறது.
அக்டோபர் 28, 2023 அன்று கவிமாலை நிகழ்வில் ஆற்றப்பட்ட நூலறிமுக உரையின் கட்டுரை வடிவம்.