வாழ்க்கைப் பொருள் இகிகாய்

0
250
ஜமால் சேக்

இன்றைய வாழ்க்கைச் சூழல் இயந்திரமயமானதாக மாறிக்கொண்டு வருகிறது. சம்பாதிப்பதற்காக வாழுகிறோமா, வாழுவதற்காகச் சம்பாதிக்கிறோமா என்பது சில சமயம் புரிவதில்லை. திருமணத்தில் ஆரம்பித்துக் குழந்தை வளர்ப்பில் தொடர்ந்து, சமூக அந்தஸ்து ஏற்படுத்திக்கொள்வதைக் கடந்து, மத்திய வயதை எட்டும்போது ஓர் ஆயாசம் வரும். எதற்காக ஓடுகிறோம், எங்கு ஓடுகிறோம், ஒட்டத்தின் முடிவில் என்ன கிடைக்கப்போகிறது, என்றெல்லாம் பல கேள்விகள் உங்களைத் துரத்தும். நின்று யோசித்தீர்களானால் உங்களுக்குப் பின்னால் ஓடி வந்துகொண்டிருந்தவர்கள் உங்களை முந்திக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள். நீங்களும் யோசிப்பதை நிறுத்திவிட்டு ஓட ஆரம்பிப்பீர்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு தீவிற்கு உல்லாசப் பயணம் செய்த, ஒரு மேலைநாட்டவர், அந்தத் தீவில் அபரிதமான மீன் வளம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மீனவர் ஒருவரிடம் ஏன் கூடுதலாக நீங்கள் மீன் பிடிப்பதில்லை என்று கேட்டார். கூடுதலாக மீன் பிடித்தால் வருமானம் உயரும், அதனால் வாழ்க்கைத் தரம் உயரும், பெரிய வீடு, கார் என்று ஆடம்பரமாக வாழலாமே என்பது தான் அவரின் கரிசனம். கதையின் முடிவில், ஆடம்பரத்தின் விளைவு மகிழ்ச்சியாக வாழுவதுதான் என்பதாக அந்த மேலை நாட்டவர் கூற, உள்ளூர் மீனவர் நான் இப்போதே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன் என்று பதிலளிப்பார். அப்போதுதான் அவருக்கு முன்பு புத்தகத்தில் படித்திருந்த ‘இகிகாய்’ என்றால் என்ன என்று புரியவரும்.

சரி, இகிகாய் என்றால் என்ன…

வாழ்வின் பொருள் என்று இகிகாய் என்கிற ஜப்பானிய வார்த்தையைத் தமிழில் கூறலாம். ‘இகி’ என்றால் வாழ்க்கை, ‘காய்’ என்றால் பொருள் என்று அர்த்தம்.

தினமும் காலையில் எழும்போது எது உங்களை உற்சாகமாகவும் ஊக்கத்துடனும் செயல்பட வைக்கிறதோ, அதுவே உங்கள் வாழ்வின் அப்போதைய நோக்கம். வாழ்க்கை நோக்கம் என்பது உங்களின் ஒவ்வொரு வாழ்க்கைக் கட்டங்களிலும் வேறுபட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். உங்களுடைய தனித்திறன், இயல்பு, விருப்பம், தொழில், விரும்பிச் செய்யும் செயல்கள் என இவை யாவும் வாழ்க்கையின் பொருளுக்குத் தொடர்புடையவை. ஆனால் அவற்றை நாம் ஊன்றிக்கவனிப்பதில்லை.

தினமும் காலையில் எழும்போது எது உங்களை உற்சாகமாகவும் ஊக்கத்துடனும் செயல்பட வைக்கிறதோ, அதுவே உங்கள் வாழ்வின் அப்போதைய நோக்கம்.

நம் வாழ்க்கையின் பொருள் அல்லது அர்த்தம் என்ன என்று நம்மை உட்கடந்து யோசித்தோமானால், நான்கு வகையான அடிப்படைகள் விளங்கும். நாம் எதை விரும்புகிறோம், நாம் எதைச் சிறப்பாகச் செய்கிறோம், நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு என்ன தேவை, நாம் எதைச் செய்தால் நமக்குப் பணம் கிடைக்கும் ஆகிய நான்கு வகை அடிப்படைச் சுய புரிதல்கள் தேவைப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உலகிற்குத் தேவையான, நமக்குப் பிடித்த, நம்மால் சுலபமாகவும் திறமையாகச் செய்ய முடிந்த, அதே சமயம் பணமும் ஈட்டக்கூடிய ஒரு செயலே நமது வாழ்க்கையின் பொருள் அல்லது அர்த்தம் எனலாம்.

தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு, மேற்சொன்னதைத் திரும்பப் படியுங்கள். அப்படி ஒரு வேலையை நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் மிகச் சொற்பமான அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர். இல்லையென்றால் வருத்தம் வேண்டாம், மிகப் பெரும்பான்மையினரில் நீங்களும் ஒருவர். பத்து வருடங்களுக்கு முன்பிருந்த உங்கள் வாழ்க்கையின் பொருள் அதேநிலையில் இப்போதும் இருக்க வேண்டியதில்லை. அது ஒருவரின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

இந்த அடிப்படையான நான்கு சுய புரிதல்களைப் பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

முதலில், விரும்பிச் செய்யும் செயல். எந்த ஒரு செயலைச் செய்யும்போது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கிறதோ அது. புத்தகம் படிப்பது, படங்கள் பார்ப்பது, விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அடுத்தவருடன் தர்க்கம் செய்வது, ஒரு விசயத்தைப் புரியாதவருக்கும் புரியும்படியாக எளிமையாகச் சொல்வது, என நீங்கள் யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புலப்படலாம்.

உங்களுக்குப் பிடித்த செயல்களை இதுவரை அறியவில்லையென்றால், அறிந்து கொள்ள இதைச் செய்யுங்கள். நேரம் காலம் தெரியாமல் தம்மை மறந்து நீங்கள் ஈடுபடும் செயல் என்ன என்று கவனியுங்கள். சிலருக்குச் சமூக ஊடகங்களில் ஈடுபடுவதாக இருக்கலாம், சிலருக்குப் படங்கள் பார்ப்பதாக இருக்கலாம். புத்தகங்கள் படிப்பது, ஊர் சுற்றுவது என ஏதோ ஒன்று இருக்கும். சில சமயம் நமக்குப் பிடித்த செயல்கள் எல்லாமே தேவையில்லாத ஆணிகளாகவே இருக்கும். அப்படி ஒரு நிலையில், உலகிற்குத் தேவையான பணமீட்டுகிற ஒரு செயலை பிடித்தமானதாக்கிக் கொள்வது நலம்.

அடுத்ததாக செய்வன திருந்தச் செய் எனப்படும் வினைத்திறம். எந்தச் செயலை உங்களால் மற்றவர்களை விடத் திறம்படச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது. பொதுவாக சில செயல்களின் முடிவில் உங்களைப் பற்றிப் புகழ்ந்திருப்பார்கள். பொய்யான முகஸ்துதிகளைத் தவிர்த்து உண்மையிலேயே பாராட்டுப் பெற்ற அந்தத் தருணங்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களைப் பற்றிப் பிறர் வியந்து நயங்கூறிய செயல்கள் உங்களுக்கு மிக இயல்பாக, சிரமமின்றி, இலகுவாகச் செய்ய முடிந்திருக்கும். தண்ணீர் பட்ட பாடு என்று சொல்வார்களே அப்படிப்பட்ட செயல் எது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அப்படிப்பட்ட செயல் எதுவும் இல்லையென்றால், குறைந்தபட்சம் விருப்பமுள்ள ஒரு செயலைத் திறம்படச் செய்யக் கூடுதல் பயிற்சி எடுத்துக் கொண்டு அப்படி ஒரு “தண்ணி பட்டபாடு” வினைத்திறத்தை உருவாக்கிக் கொள்தல் நலம்.

மூன்றாவதாக, உலகிற்கு, அதாவது, மற்றோருக்குத் தேவையானவைகளை அறிந்து கொள்வது. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் மற்றவர்களுக்குத் தேவையான எந்தச் செயலை உங்களால் திறம்படச் செய்ய முடியும் என்று அறிவது மிக முக்கியம். இல்லையென்றால் அது வெட்டிவேலையாகிப் போய்விடும். முடிவெட்டுவது, சமைப்பது, விவசாயம் செய்வது, தோட்டவேலை, பேச்சாளர், விரிவுரையாளர், கட்டுரையாளர் என ஏதோ ஒரு செயலுக்கான தேவை எப்போதும் மற்றவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. எல்லாவற்றையும் ஒருவரே செய்ய முடியாது. சமூக அமைப்பு என்று ஒன்று தோன்றியதற்கு அடிப்படையே இந்த ஒருவொருக்கொருவர் உதவிக்கொள்ளும் முறைதான்.

உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்குத் தேவைப்படக்கூடிய, உங்களால் பங்களிக்க முடிந்த, ஒரு தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.. அதைக் கண்டறிவதுதான் முக்கியம். அது உங்களுக்குச் சிறிய செயலாக இருந்தாலும் மற்றவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கலாம். பிறரின் தேவைக்கேற்ற செயலைக் கண்டறிந்து அதைத் திறம்படச் செய்யப் பழகுவது ஒரு முறையென்றால், தனக்கு நன்றாகத் திறம்படத் தெரிந்த ஒரு செயலை எப்படி மற்றவர்களுக்கான ஏதோ ஒரு தேவையை நிறைவேற்றுகின்ற வகையில் மாற்றலாம் என்று அறிந்துகொள்வது மிக முக்கியமான மற்றொரு வகை.

நான்காவதுதான் மிக முக்கியம்.

பொருளீட்டல். பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என வள்ளுவரால் அறிவுறுத்தப்பட்ட அதே பொருள் அல்லது பணம். உங்களுக்குப் பிடித்த செயலைச் செய்யும்போது அதன் மூலம் பொருளீட்ட முடியுமா அல்லது பொருள்சார்ந்த பலன்கள் கிடைக்குமா என்பது. எல்லாச் செயல்களும் பொருளீட்டாது. சில செயல்கள் குறைந்த பொருளீட்டலாம், சில செயல்கள் பெரும்பொருளீட்டலாம். மொத்தத்தில் பொருளீட்டும் செயலாக இருத்தல் வேண்டும்.

செயப்படும் செயல்களுக்கு ஊதியம் அல்லேல் அதனால் என்ன பயன்? விழலுக்கிறைத்த நீராகி வீணாகப் போய்விடாதா இந்த வாழ்க்கை? தன்னார்வம் சார்ந்து பணப் பலன் எதிர்பாராமல் செய்வது என்பது வேறு, ஆனால் உதவி செய்கிறேன் என்கிற பெயரில் பணம் ஈட்டமுடியாமல் வேலை செய்யும் பலரைப் பார்த்திருக்கிறோம். ஏன், நாமே அப்படி ஒரு சூழலில் இருந்திருப்போம். தன்னை வைத்து இலவசமாக பலனடைகிறார்கள் என்பதை நாம் உணரவே பல வருடங்களாகியிருக்கும். எனவே ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே எனப் பாடிக்கொண்டே பணம் வரக்கூடிய செயல்களில் ஈடுபடுதல் அல்லது செய்யும் செயல்களைக் காசாக்கும் வழிமுறையை அடையாளம் காணுதல் என அணுகலாம்.

இந்த நான்கு அடிப்படைகளும் ஒன்றுக்கொன்று சேர்ந்து ஒரு செயலாக உருவகம் பெறும்போது, உங்கள் வாழ்க்கையின் பொருள் உங்களுக்கு விளங்கும். உலகிற்குத் தேவையான உங்களுக்குப் பிடித்த செயலைத் திறம்படச் செய்துகொண்டு, அதற்குப் பிரதிபலனும் பெறும்போது உங்களுக்கு மகிழ்ச்சியே எஞ்சும். இதைத் தேடிக்கண்டுபிடித்து அதற்கேற்றபடி உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்வது பற்றித்தான் இகிகாய் பேசுகிறது.

இந்த நான்கு அடிப்படைப் புரிதல்களும் கூட்டுச் செயலாக ஒவ்வொன்றுடன் இணையும் போது அதன் விளைவுகள் ஐந்து வகையான பலன்களாக உருவெடுக்கிறது.

திறமையாகவும், விரும்பியும் செய்கிற ஒரு செயல் ஒரு மனிதனது வேட்கையை (Passion) அடையாளம் காட்டும். இதைச் செய்வதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் என நீங்கள் நினைக்கும் அச்செயலின் முடிவில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் உங்களுக்குக் கிடைக்கும். இச்செயல் செய்தால் எனக்கு மிக மகிழ்ச்சி என நீங்கள் நினைக்கும் உங்களின் வேட்கையை அடையாளம் காணுவது மிக முக்கியம். இதில் விருப்புச் செயலும் (1), வினைத்திறமும் (2) இணைகிறது. மனத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இது உதவும்.

ஒரு சில செயலைச் செய்யும்போது நமக்கு மிகுந்த மன திருப்தி கிடைக்கும். பிறருக்குப் பயன்படும்படியான நம்மால் முடிந்த ஒரு செயலைச் செய்யும்போது நாம் வாழ்வதற்கான அர்த்தம் கிடைப்பதாகத் தோன்றும். பிச்சையிடுவது, தன்னார்வலராகச் செயல்படுவது, கோயில் காரியங்களில் ஈடுபடுவது என்று அதில் வெளிப்படையாக பிரதிபலன் என்று ஒன்றுமே இருக்காது, ஆனால் செயலின் முடிவில் ஒரு திருப்தி மனத்தில் எஞ்சியிருக்கும். இதை வாழ்க்கையின் நோக்கம் (Mission) எனலாம். இதில் விருப்புச் செயலும் (1), பிறரின் தேவை (3) என்கிற இரண்டும் இணைகிறது. இதில் ஆன்ம ரீதியான ஒரு மனத்திருப்தி கிடைக்கும்.

உலகிற்குத் தேவையான ஆனால் அதே சமயம் பொருளீட்டுகிற ஒரு செயல் தொழில் (Vocation) எனலாம். இதனால் உலகின் தேவையை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள். அதன் விளைவாக பணமும் வருகிறது. பணம் வருகிறது என்பதற்காக நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ ஆனால் ஒரு தொழிலைச் செய்வீர்கள். உள்ளூரப் பிடிக்காமல்கூட இருக்கலாம், ஆனால் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கிடைக்கிறதே என்பதற்காக அப்படி ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்கள். உலகின் தேவையும் (3), பொருளீட்டலும் (4) ஒன்றுசேரும்போது விளைவது தொழில். இயந்திரமாக ஓடி ஒடி ஓய்வில்லாமல் உழைத்துச் சேர்த்ததை அனுபவிக்க நேரமின்றி உழைக்கும் பெரும்பான்மை மக்களில் இதைக் காணலாம்.

மற்றவரைவிடச் சிறப்பான தனித்திறனுடனும் வினைத்திறத்துடனும் ஒரு வேலையைச் செய்யும்பொழுது அதற்குத் தக்க பொருளீட்ட முடியும்போது அது உத்தியோகமெனப்படும். படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவர்களை இந்தக் வகைக்குள் கொண்டு வரலாம். அவர்களுக்கு நன்றாகக் கைவரும் ஒரு செயலைச் செய்யும்போது அதற்காக நல்ல ஊதியம் கிடைக்கிறது எனும்போது ஒரு சொகுசான வாழ்க்கை நிலையை அடைவார்கள். சிலருக்கு அந்த உத்தியோகம் பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக, காலையில் எழுந்து கட்டாயமாகத் தம்மை அலுவலகத்திற்கு உந்திச் செலுத்துவார்கள். வினைத்திறமும் (2), பொருளீட்டலும் (4) சேரும்போது விளைவது உத்தியோகம். ஒரு கட்டத்தில் இயந்திரத்தனமான, எந்த மாற்றங்களுமற்ற ஒரு செயற்கையான வாழ்க்கையை தினமும் திரும்பத் திரும்ப வாழ்வது போல உங்களுக்குத் தோணும்.

இருவகையான செயல்பாடுகள் இணையும்போது உருவாகும் பலன்களைக் கண்டோம். மூன்று செயல்பாடுகள் இணையும் போது என்ன விளையும்?

வேட்கையும் (Passion), நோக்கமும் (Mission) இணையும் வகையில் ஒரு செயல் செய்யும்போது, மிகுந்த மனத்திருப்தி கிடைக்கும். அதாவது பண நோக்கமற்ற ஒரு செயல். உங்களின் தனித்திறனோடு, நீங்கள் விரும்பிச் செய்கிற, அதேசமயம் உலகிற்குத் தேவையான செயல்களைச் செய்யும்போது செயலின் முடிவில் உங்களுக்கு மிகுந்த மனத்திருப்தி கிடைக்கும். மனத்திருப்தி மட்டுமே எஞ்சுகிற, அச் செயலால் பொருள் ஈட்ட முடியாது போகும்போது, உங்களின் உழைப்பை, நேரத்தை, பிறர் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற ஒரு ஏமாற்றமான ஒரு ஐய உணர்வு மிகும். உதாரணத்திற்கு சமூக மற்றும் சமயம் சார்ந்த சில தொண்டு நிறுவனங்களை இந்த வகைக்குள் உட்படுத்த முடியும். பிறரின் உழைப்பை வாங்கிக்கொள்வார்கள், ஆனால் அதை நிர்வாகிப்பவர்கள் சம்பளம் எடுத்துக் கொள்வார்கள், வசதிகள் பெற்றுக் கொள்வார்கள்.

வேட்கையும் (Passion), நோக்கமும் (Mission) இணையும் வகையில் ஒரு செயல் செய்யும்போது, மிகுந்த மனத்திருப்தி கிடைக்கும்.

தனித்திறன் இல்லாவிடினும், ஒரு நோக்கத்துடன் (Mission) நடத்தப்படும் தொழில் (Vocation), உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது ஒரு நிறைவு ஏற்படும். நீங்கள் விரும்பிச் செய்கிற, ஆனால் பிறருக்குத் தேவையான ஒரு செயலைச் செய்யும்போது அதற்கென சொற்ப சம்பாத்தியமும் கிடைக்கும்போது, ஒரு மகிழ்ச்சியும் பரிபூரணமும் கிடைக்கும். நாம் பிறருக்காக உதவுகிறோம், அதனால் சிறிது வருமானமும் நமக்குக் கிடைக்கிறது. ஆயினும் தனித்திறன் பெற்று பெரும்பொருள் ஈட்டும் வாய்ப்பு இல்லாமல் போவதால் பொருளாதார நிலை உயரப்போவதில்லை. கைக்கும் வாய்க்கும் எட்டும் பொருளாதாரச் சூழலில் வாழும் அவர்களுக்கு அன்றாடம் மகிழ்ச்சியும் பரிபூரணமும் மட்டுமே மிஞ்சும். தமக்கு அருகாமையில், பின்னால் ஓடி வந்தவர்கள் எல்லாம் எங்கேயோ முன்னால் முந்திச் சென்று கொண்டிருப்பார்கள், தேங்கிய தண்ணீராய் நின்று போகும் வாழ்க்கை. சொற்ப சம்பளத்தில் பொதுத் தொண்டு நிறுவனங்களில், சமயக் கூடங்களில், ஆசிரமங்களில் பணிபுரிவோர் இந்த வகைக்குள் வருவார்கள்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, பணம் கொட்டுகிறது என்பதற்காக, தன்னால் திறம்படச் செய்ய முடிந்த (Profession), பொருளீட்டக்கூடிய, உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயல்களைச் (Vocation) செய்யும்போது, மிகுந்த உற்சாகம் கிடைக்கும், தன்னால் முடிகிறது என்கிற பெருமாப்பு ஏற்படும், ஆனால் எத்தனை நாளைக்கு இது நீடிக்கும் என்கிற நிச்சயமற்ற தன்மை நிலவும். எப்போதுமே, இது முடிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையுடனேயே வாழ்க்கை ஓடும். லாபகரமான தொழில் செய்வோரும்கூட இப்படி ஒரு நிச்சயமற்ற சூழலில் தூக்கமிழந்து, இருக்கும் செல்வத்தையும் அனுபவிக்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருப்பர்.

எல்லாமே கிட்டும் உயரிய உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு (Profession), ஒரு வெறுமை எப்போதுமே மனத்தில் சூழ்ந்திருக்கும். அவர்கள் தன்னால் திறம்படச் செய்யமுடிந்த, தான் மிக விரும்பிய (Passion) அந்தச் செயல்களைச் செய்யும்போது அதற்கு நல்ல ஊதியமும் கிடைக்கும். இதன் விளைவாக நல்ல சொகுசான கவலையற்ற உத்தரவாதமான வாழ்க்கையும் அமையும். ஆனாலும், அலுவலகம், வீடு, குறிப்பிட்ட நண்பர்கள், குறிப்பிட்ட வட்டம் என எல்லாமே இருந்தாலும் மனத்தில் ஒரு வெறுமையுடனேயே வாழ்வர். நோக்கமே இல்லாமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்கிற வெறுமை.

ஏறக்குறைய அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். தனக்குப்பிடித்த, திறம்படச் செய்ய முடிந்த, ஒரு செயலை எப்படிப் பொருளீட்டும் செயலாக மாற்றுவது என்பது பலருக்கும் இன்னமும் ஒரு புரியாத புதிராக இருக்கும். ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் வேறுபட்டது என்கிற நிலையில், எப்படி வழங்கப்பட்டாலும் ஒரே ஆலோசனை அனைவருக்கும் பொருந்தாது.

இங்கு பொருளீட்டலே அனைவருக்கும் புரியாத பொருளாக இருக்கிறது. இப்படித்தான் பொருளீட்ட வேண்டும் என்று புரியாமலேயே வாழ்க்கை வாழ்ந்து பலருக்கும் முடிந்து விடுகிறது.

பொருளீட்டலை எளிதாகப் புரியவைக்க ஓர் அதிகாரியின் கதையைச் சொல்கிறேன். ஓர் அரசு அதிகாரி லஞ்சப் பிசாசாக இருந்தார். அவரைத் துறைகள் தோறும் மாற்றித் தோற்றுப் போயினர் மேலதிகாரிகள். எங்கு போனாலும் அங்கு லஞ்சம் பெறுவதற்கான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அசத்திக்கொண்டிருந்தார் அந்த அதிகாரி. தலைமை நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு இது போனது. அவர் இவரைப் போய்க் கடற்கரையில் உட்கார்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எத்தனை அலைகள் கரைக்கு வந்தன என்று கணக்கெடுக்கப் பணித்தார்.

அதிகாரியும் கடற்கரையில் ஒரு நாற்காலி மேசை, குடை, தண்ணீர் சகிதம் வசதியாக அமர்ந்து கொண்டார். ஒரு வாரம் எந்த நிகழ்வுகளும் இல்லாமல் போயிற்று. மறுவாரத்திலிருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களைத் தடுத்து நிறுத்தினார். மீனவர்கள் கடலுக்குள் படகுகளை எடுத்துச் செல்வதால் அலைகள் தடைப்படுகின்றன, அதனால் அலைகளை எண்ண முடியவில்லை, எனவே யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குள் போகக்கூடாது என்று உத்தரவு போட்டார். மீறிப்போனவர்களை அரசு அதிகாரியின் கடல் அலைகளை எண்ணும் வேலையில் தலையீடு செய்வதாக காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார். அதிர்ந்துபோன மீனவர்கள் கெஞ்சிக்கேட்க அங்கும் லஞ்சம் ஆரம்பமாகியது. லஞ்சம் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக அல்ல, ஒருவர் பொருளீட்ட நினைத்தால் எப்படியெல்லாம் யோசிப்பார் என்பதற்கு ஓர் உதாரணமாகச் சொன்னேன்.

வாழ்க்கைப் பொருள் அல்லது இகிகாய் என்பது மேற்சொன்ன நான்கும் (விருப்புச் செயல், வினைத்திறம், உலகின் தேவை, பொருளீட்டல்) ஒருங்கே ஒரு செயலில் அமையும்போது அதுதான் உங்கள் வாழ்க்கையின் பொருளாகிறது, வாழ்க்கை வாழ்வதின் அர்த்தமாகிறது. அதாவது, உலகிற்குத் தேவைப்படுகிற, நமக்கு மிகவும் பிடித்த, நம்மால் திறமையாகச் செய்ய முடிகிற, அதே சமயம் பணமும் ஈட்டுகிற ஒரு செயலே இகிகாய் எனப்படுகிறது.

நன்றாக யோசித்துப் பார்த்தால் இவை அனைத்தும் ஒருசேர தானாகவே அமைவது வெகு சிரமம். ஆனால் அதை அறிந்து இனியாவது நம்முடைய இகிகாய் என்ன என்று ஆராய்ந்து பார்த்து அதன்படி மீதமுள்ள வாழ்க்கையைச் செலுத்தினாலென்ன? வாழ்க்கையின் பொருளறிவது என்கிற இகிகாயை உணர்ந்து கொண்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

சிறுசிறு செயல்களெல்லாம் கவனித்து ரசித்து ருசித்துச் செய்வீர்கள். நடக்கும்போது, சாப்பிடும்போது என எந்தவொரு சிறு செயலையும் மனத்தின் உள்வாங்கி அத்தருணத்தில் பூரணமாக உணர்வீர்கள். பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா என்று பாடியமாதிரி எங்கும் பூரணமாக, முழுமையாக, அழகாக கண்ணில் படும். அனைவரின் சிறு சிறு செயல்களுக்கும் மிக நன்றியுணர்வுடன் ஆழ்மனத்திலிருந்து நன்றி கூறுவீர்கள். மிகச் சாதாரணமான வேலைகளைக்கூட மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் திறம்படச் செய்வீர்கள். எந்தவொரு வேலையையும் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாகப் புன்முறுவலுடன் செய்வீர்கள். இயற்கையுடன் ஒன்றிப்போவீர்கள். புயலடித்தாலும் வெள்ளம் வந்தாலும் கடுங்கோடை வந்தாலும் எதையும் ரசிக்கும் மனத்துடன் இருப்பீர்கள்.

இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் நூறு வயதைத் தாண்டி வாழும் மக்களைக்கொண்ட ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் இருக்கும் ஒகிமிக் கிராம மக்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு ஒரு நடை போய் வாருங்கள்.