உதிரிப்பூக்கள்

0
173

பக்கவாத நோய்க்கு சிகிச்சை

சிங்கை தேசியப் பல்கலை (Duke-NUS) GK கோ மையத்தில் நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் உழைப்பில் பக்காவாத நோயின் மூல காரணமான மூளை செல் பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட ந்யூரான் செல்களை பழுது நீக்கி வளரச் செய்யும் ஒரு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளனர். ஸ்டெம் செல்களிலிருந்து ஃபிப்ரினோஜென்-மராவிரோச் கலவையில் குறிப்பிட்ட ந்யூரான் செல்களை வெற்றிகரமாக வளர்தெடுத்து அவற்றை மூளைக்குள் வைப்பதன் மூலம் பக்கவாத நோய் குணமடைவது சாத்தியமாகிறது. 3-4 வாரங்களுக்குள் மூளையில் ஆரோக்கியமான ந்யூரான் செல்கள் மேலும் வளர்ந்து நோயின் தாக்கத்திலிருந்து நோயாளியைக் காக்கிறது. நரம்பியல் துறையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

நீண்ட தீவு

பருவநிலை மாற்றத்தின் ஒரு விளைவாகஉயர்ந்து வரும் கடல் மட்டம் உலகெங்கிலும் உள்ளா தீவு நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. சிங்கையில் நீண்டகாலப் பாதுகாப்பு நோக்குடன் கிழக்குக் கடற்கரையை ஒட்டி கடலுக்குள் சுமார் 800 ஹெக்டேர் பரப்புள்ள நிலத்தை மீட்டு அதனை பல்நோக்குப் பயன்பாடுகளுக்கு மேம்படுத்துவதோடு கடல் நீர் நிலத்தில் புகுவதையும் கட்டுப்படுத்தமுடியும் என்று தீடமிடப்பட்டுள்ளது. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் பணியும் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் 1991லேயே முன்மொழியப்பட்டாலும் தற்போதுதான் முன்னெடுக்கப்படுள்ளது. இது குறித்து சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைகளும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நிலப்பற்றாக்குறை உள்ள சிங்கையின் வளர்ந்துவரும் எதிர்காலத் தேவைகளுக்கு நிலம் அத்தியாவசியமாகத் தேவைப்படுவதால் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

சிங்கை – பப்புவா கினியா ஒப்பந்தம்

அண்மையில் துபாயில் நடந்து முடிந்த COP28 மாநாடுகளின்போது சிங்கையும் பப்புவா கினியாவும் கரிமப் பற்று (carbon credit) பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன. சிறு தீவு நாடுகளின் கூட்டமைப்பில் (AOSIS) உள்ள இந்த இரு நாடுகளுக்கிடையே சென்ற ஆண்டு COP27ஐ ஒட்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு செய்துகொள்ளப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து பல்வேறு நாடுகளுக்கு குறிப்பிட்ட ஒரு இலக்குடன் செயல்பட்டுவரும் நிலையில் இதுவும் ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

விரிவாகும் விளம்பரங்கள்

சிங்கையில் தற்போது பேருந்து நிறுத்தங்கள், வாடகைக் கார் நிறுத்தங்கள் போன்றவற்றில் மட்டுமே விளம்பரங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. விளம்பரங்களுக்கான தேவைகள் அதிகமாக இருப்பதாலும் கூடுதல் வருவாய்க்கு வழி இருப்பதாலும் நிலப் போக்குவரத்து வாரியம் (LTA) மேம்பால நடைபாதைகள், கூரையிடப்பட்ட நடைபாதைகள், நிலத்தடி நடைபாதைகள் போன்றவற்றிலும் விளம்பரங்கள் செய்ய இடம் ஒதுக்கவிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் குத்தகை ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் மேலும் பல விளம்பரப் பதாகைகள், மின்னிலக்கக் காணொளிகல் என பல்வேறு வகைகளில் புதிய விளம்பரங்கள் நாம் போகும் வழிகளில் தென்படும்.