தண்டவாளத் துண்டு
மூன்றாம் வகுப்பு முழுக்க ராஜலட்சுமி பேசுபொருளாகியிருந்தாள். எந்த விறுவிறுப்புமின்றி ஒரே நேர்க்கோட்டில் அலுப்பூட்டியபடி நகரும் பள்ளி வாழ்வில் இப்படித்தான் சில மாணவர்கள் சட்டென உச்ச நட்சத்திரமாகிவிடுவார்கள். அடுத்துவரும் சில நாட்கள் அவர்களைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருப்போம். பிறகு, வேறொருவர் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து விடுவார். தொடரோட்டத்தில் ஒருவர் கையில் உள்ள தடியை மற்றொருவர் வாங்கிக் கொண்டு ஓடுவது போல, பள்ளியின் கவனத்தை இப்படித் தங்களின் பின்னால் வரவழைத்து ஓடும் மாணவர்களின் வரிசையில் இம்முறை ஒரு மாணவி. ஆனால், ராஜலட்சுமியின் கதை சற்று வித்தியாசமானது.
அன்று ஆங்கில வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேனகா டீச்சர் மிகுந்த கண்டிப்பானவர். அவரது வகுப்பில் எவருக்காவது அடியும் வசையும் விழுந்தபடியே இருக்கும். அந்த ஒருவர் நாமாக இருக்கக் கூடாது என்று அனைவரும் முயற்சி செய்து தப்பிக்க முயல்வோம். அந்த நாளின் கடைசி பீரியட் அது. வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மூன்றாம் பெஞ்சு மாணவியான ராஜலட்சுமி மெல்ல எழுந்து டீச்சருக்கருகில் சென்று, “மிஸ். ரீசஸ்” என்றாள். மேனகா டீச்சர் வகுப்பு மும்முரத்தில், “இப்ப என்ன அவசரம், கடைசி பெல்லடிச்ச பிறகு போ” என்றார். ராஜலட்சுமி, டீச்சரையும் எங்களையும் மாறி மாறிப் பார்த்த பிறகு, தன் இடத்துக்குச் சென்று அமர்ந்தாள். மீண்டும் மேனகா டீச்சர் வகுப்பைத் தொடர்ந்தார். ஒரு சூனியக்காரியின் வீட்டில் மாட்டிக்கொண்ட சிறுவன் அவளிடமிருந்து சாதுர்யமாகத் தப்பித்து வெளியேறுவதுதான் கதை. அந்தப் பாடத்தைத்தான் மேனகா டீச்சர் நடத்திக் கொண்டிருந்தார். சூனியக்காரி சிறுவனைத் தனது வீட்டில் வைத்துப் பூட்டி விடுகிறாள். அவன் அந்த வீடு முழுக்க சுற்றிப் பார்த்து தான் தப்பிப்பதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருக்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்று அனைவரும் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தோம். இம்முறை சற்று அவசரமாக ராஜலட்சுமி எழுந்து கொண்டு மீண்டும் டீச்சரிடம், “மிஸ், ரீசஸ்” என்றாள். வகுப்பு மும்முரத்தில் இருந்த மேனகா டீச்சர் “ஸிட் டவுன்” என்று அவளிடம் எரிந்து விழுந்தார். எங்களில் ஒரு சிலர் ராஜலட்சுமியைப் பார்த்துச் சிரிக்கத் துவங்கினோம்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் பாடம் முடிந்து விட்டது. சூனியக்காரியின் வீட்டில் இருந்த எலியின் நட்பைச் சம்பாதித்த சிறுவன், சூனியக்காரி தூங்கிக்கொண்டிருந்த போது அவளது காதைக் கடிக்கச் சொல்கிறான். எலியும் அப்படியே செய்து விடுகிறது. எலி கடித்த வலி தாங்க முடியாமல், சூனியக்காரி எலியைக் கொல்ல விரட்டுகிறாள். எலி வாசல் கதவுக்கடியில் புகுந்து செல்கிறது. வலியின் வேதனையில், சூனியக்காரி, சிறுவன் தன்னிடம் கைதியாய் இருப்பதை மறந்து வாயில் கதவைத் திறந்து எலியைத் துரத்திச் செல்கிறாள். அந்த சமயத்தைப் பயன்படுத்தி சிறுவன் தப்பித்து விடுகிறான். பாடம் முடிந்ததும் எல்லோரையும் அந்த பாடத்தை வாய்விட்டு மீண்டும் படிக்குமாறு மேனகா டீச்சர் கட்டளையிட்டார்.
இம்முறை ராஜலட்சுமி மிகவும் வேகமாக எழுந்து, “மிஸ், ரீசஸ் நெருக்குது” என்றாள். இப்போதும், மேனகா டீச்சர் அவளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. “சும்மா பொய் சொல்லாம, லெஸனப் படி, பீரியட் முடிஞ்சப்புறம் வெளியே போ” என்றார். மீண்டும் தன் இடத்துக்குச் சென்ற ராஜலட்சுமியின் முகம் அழத் தயாராக இருந்தது. அவள் மூக்கு சிவப்பதை வைத்து அவள் அழப்போகிறாள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். அடுத்த சில நிமிடங்களில் மூன்றாம் பெஞ்சில் இருந்த மாணவிகள் எல்லாம் சட்டென எழுந்து கொண்டனர். ஏதாவது பூச்சி கடித்து விட்டதா என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது, பெருங்குரலெடுத்து அழுதபடியே நின்றாள் ராஜலட்சுமி. அவளுக்கருகில் சென்ற மேனகா டீச்சர் நிலைமையை உணர்ந்து கொண்டு, ”சீக்கிரம் வெளிய போ” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் ராஜலட்சுமி வெளியே ஓடிவிட்டாள்.
மூத்திரத்தை அடக்க மாட்டாமல் வெளியேற்றிவிட்டிருந்தாள் ராஜலட்சுமி. இந்த விஷயம் அடுத்த சில நொடிகளில் வகுப்பு முழுதும் பரவிவிட ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது. அடுத்த ஓரிரு நிமிடங்களில் மணியடித்து விட்டதால் அனைவரும் வெளியேறிவிட்டோம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் ராஜலட்சுமியைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த சில நாட்கள் அவள் பள்ளிக்கும் வரவில்லை. தலைமை ஆசிரியர் அவளது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்திருந்தார். வகுப்பு நடைபெறும் போதே இருக்கையில் சிறுநீர் கழிப்பது ஒழுங்கீனமான செயல் என்றும், ராஜலட்சுமியை ஒழுங்காக வளர்ப்பதில் பெற்றோர் கவனக்குறைவாக இருந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ராஜலட்சுமியின் பெற்றோரும் அதற்காக தலைமை ஆசிரியரிடம் மன்னிப்புக் கோரியிருக்கின்றனர் என்று பின்பு தெரியவந்தது. ஒரு வாரம் கழித்து மீண்டும் ராஜலட்சுமி பள்ளிக்கு வரத் துவங்கியிருந்தாள். அதன் பின் ராஜலட்சுமி விஷயத்தை மறக்கடிக்கும் விதத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்ததால், ராஜலட்சுமி பொதுக்கவனத்தில் இருந்து மெல்ல மறைந்தாள்.
இப்போது யோசிக்கையில், ஒரு மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவளும் அவளது பெற்றோரும் குற்றவாளியாக்கப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே நகைமுரணாக இருக்கிறது. சிறுநீர் சுரப்பது இயற்கையானதொரு உபாதை, அதைக் கழிப்பதற்காக ஒரு சிறுமி பள்ளிக்கூட மணியடிப்பது வரை காத்திருக்க வேண்டும் என்பது பெரியதொரு கொடுமை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஒரு சிறுமி பலமுறை அனுமதி கோரியும் அதை மறுத்த ஆசிரியையை அல்லவா பள்ளி நிர்வாகம் தண்டித்திருக்க வேண்டும்? படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற தலைமை ஆசிரியரும் அவரது குழுவும் ஒரு சிறுநகரில் வாழும் கல்வியறிவு குறைந்த பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கண்டித்தது எவ்வளவு ஈனத்தனமான செயல்? அந்தச் சிறுமியின் ஆழ்மனதில் இந்தச் சம்பவம் எத்தனைப் பாதிப்பைச் செலுத்தியிருக்கும்? இன்றளவும் அதை நினைத்துப் பார்க்கையில் அவள் மனம் வருந்தத்தானே செய்யும்? அதிகாரமும் வறட்டு விதிமுறைகளும் ஒரு சிறுமியின் சிறுநீர்ப் பையையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு நம் சமூகத்தில் புரையோடிப் போய்விட்டிருக்கிறதா?
லிபி ஆரண்யாவின் இக்கவிதையை வாசித்தபோதுதான் என் ஆழ்மனதில் புதைந்திருந்த இச்சம்பவம் நினைவில் மேலெழுந்தது.
மெக்காலேயுடன் தொங்கும் டல்ஹெளசிபிரபு
இப்பவும்
ரயில் பார்த்திராத சனங்களின்
கிராமத்திற்கு
எப்பவோ எப்படியோ வந்து
குழந்தைகளின் மூத்திரப்பைமீதும்
தனது அதிகாரத்தின் நாவை
அசைத்தபடி
தொங்கிக் கொண்டிருக்கிறது
தண்டவாளத் துண்டொன்று
துருவேறாத அதன் பெருமிதத்தைப்
பாடித்திரிகிறோம் நாம்.
இந்தியா முழுக்க ரயில் பாதையைக் கொண்டு வந்தவர் டல்ஹௌசி. இவர்கள் பெயருக்குப் பின்னால் “பிரபு” என்ற வார்த்தையை உபயோக்கிப்பதை பிரபஞ்சன் வன்மையாகக் கண்டிப்பார். நம் நாட்டைக் கொள்ளையடிக்க வந்தவனை எதற்குப் “பிரபு” என்று இன்றும் அழைக்கிறோம் என்று. அதே போல இந்தியக் கல்வி முறையை வடிவமைத்தவர் மெல்லாலே. இந்தியாவில் ‘மெக்காலே’ என்ற இந்த நபர் ஒருவரே கல்வியையும், தண்டனைச் சட்டத்தையும் வடிவமைத்தவராக அறியப்படுகிறார். ரயிலையும், ஆங்கிலக் கல்வியையும் இந்திய நிலத்துக்குள் கொண்டுவந்த இவர்களின் பிரதான நோக்கம் காலனிய ஆட்சியை பலப்படுத்துவதுதான். ஆனால், அவர்கள் சென்ற பின்னரும் அவர்கள் அறிமுகப்படுத்திய விஷயங்கள் சில பாதகமான விளைவுகளையும் விட்டுச் சென்றுள்ளது. அத்தகைய ஒரு பின்விளைவைப் பற்றியதுதான் இக்கவிதை.
இக்கவிதையில் இடம்பெறும் “தண்டவாளத் துண்டு” என்பது பள்ளிக்கூட மணியைக் குறிக்கிறது. அது எப்படி எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் தண்டவாளத் துண்டையே மணியாகப் பயன்படுத்தினார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இன்றளவும் பெரும்புதிராக இருக்கிறது. ஒன்றுக்கும் பயன்படாதது தண்டவாளத்தின் சிறுதுண்டு என்று நாம் நினைத்தால் அது தவறு. அதற்கும் ஈடு இணையற்ற அதிகாரம் இருக்கிறது, அது பிஞ்சுக் குழந்தைகளின் மூத்திரப்பையைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு பெரும் அதிகாரத்துடன்தான் இன்றும் இருக்கிறது என்று இக்கவிதை எச்சரிக்கை விடுக்கிறது. ஒருவேளை பள்ளி மணி சீக்கிரம் அடிக்கப்பட்டிருந்தால் ராஜலட்சுமி வகுப்பிலேயே சிறுநீர் கழித்திருக்கமாட்டாளே.
இப்படியெல்லாம் தர்க்கபூர்வமாக யோசித்தாலும் கூட, மனதின் ஒரு மூலையில் இப்போதும், மேனகா டீச்சரின் காதில் ஒரு எலி கடித்திருந்தால் கூட ராஜலட்சுமி உடனடியாக வகுப்பை விட்டு வெளியேறியிருப்பாளே என்ற ஓர் மீயதார்த்தக் குரல் ஒலிக்கத்தான் செய்கிறது.