மொழிபெயர்ப்புக் கவிதை

0
68
மஹேஷ்

ஃபிராக்கின் இதயம்

உள்ளத்தில் வேட்கையும் இல்லை; இதயத்தில் ஆசையும் இல்லை
எனினும் காதலைத் துறப்பதில் நம்பிக்கையும் இல்லை

இதயத்தை உற்ற தோழனாகவும் கொள்ள முடியவில்லை; வழிப்போக்கனாகவும் வைக்க முடியவில்லை
எனினும் கிளர்ச்சியூட்டும் எண்ணங்களிலிருந்து விடுபடவும் முடியவில்லை

பரிவை காதலென்று கொள்ளமுடியாது நண்பனே
என் மீது நீ சினங்கொள்ளவும் நியாயமில்லை

சில காலமாகவே உன் நினைவுகள் கிளர்ந்தெழவும் இல்லை
எனினும் உன்னை நான் மறக்கவுமில்லை

இன்று அந்தக் கண்களில் புறக்கணிப்பு முன்னை விடவும் மிகுதி
காதலில் தோய்ந்த இந்த ஆன்மா மீது துளியும் பரிவு இல்லை

அடங்காத இந்த இதயத்தில் அமைதியுமில்லை
குறுகிய கூண்டிலும் இல்லை; பரந்த பாலைவனத்திலும் இல்லை

இன்று இந்த நண்பர் குழாமிலும் மலர்ச்சி இல்லை
ஓ.. ஃபிராக் ! இந்த மேடை இன்று உன் வசத்திலும் இல்லை

காதலில் மூழ்கிய எவரும் கலகம் செய்வதில்லை நண்பனே
எனினும் அவர்கள் ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருப்பதுமில்லை

காதலின் தன்மையைப் பற்றித் தெரியாதவர் யார் நண்பனே
தவிப்பாய் இருந்தாலும் பொறுப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன?

ஃபிராக்கைப் பற்றிப் புறம் பேசப்போவதில்லை
அவன் உன் நண்பனே, எனினும் நற்குணத்தில் சிறிது குறைந்தவனே.

ரகுபதி சஹாய்

கவிஞர் பற்றிய குறிப்பு

ரகுபதி சஹாய் எனும் ‘ஃபிராக் கோரக்புரி’ முதல் நிலை உருதுக் கவிஞர்களில் ஒருவர். காதலும் அன்பும் பொங்கி வழியும் இவர் கவிதைகளில் மனித உணர்வுகள் மேற்பூச்சுக்கள் இல்லாமல் உள்ளது உள்ளபடியே வெளிப்படுவதாலேயே தீவிரமாக விமர்சிக்கப்பட்டவர். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவானது, உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தெய்வீக உறவு என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்.