சுதந்திரத்திற்கு முன் புழங்கப்பட்ட நாணயங்கள்

நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முன்னர், வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நாணயங்களும் பணத்தாள்களும் புழங்கப்பட்டன. 1819ஆம் ஆண்டிலிருந்து 1967ஆம் ஆண்டு வரை புழங்கப்பட்ட நாணயங்களையும் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள்களையும் பார்ப்போம்.

பிரிட்டிஷ் கலானித்துவக் காலம்

1819 – 1826: ஸ்பானிய டாலர்

கட்டையன் தாள் என அழைக்கப்பட்ட வாழைமர நோட்டுகள்

1819ஆம் ஆண்டு, பிரிட்டிஷியர் சிங்கப்பூரை வர்த்தகக் குடியிருப்புப் பகுதியாக நிறுவியபோது, பல்வேறு வகையான நாயணங்கள் புழங்கப்பட்டன. இந்திய ரூபாய், ஜவீய ரூபாய், டச்சு கில்டர், ஸ்பானிய வெள்ளி டாலர் (Silver Dollar) ஆகியவைப் புழங்கப்பட்டன. அதில் ஸ்பானிய வெள்ளி டாலர் தான் பரவலாகப் புழங்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் வெள்ளி டாலர் தென்கிழக்கு ஆசியாவில் அறிமுகமானது. போர்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் அதனை அறிமுகப்படுத்தினர். நாணயத்தில் உள்ள வெள்ளியின் அளவைக் (Silver Content) கொண்டு அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்பானிய வெள்ளி நாணயங்கள் கரடுமுரடான விளிம்புகளைக் கொண்டிருந்தன. பல்வேறு நாணயங்கள் புழங்கத்தில் இருந்ததால் மக்களிடையே குழப்பம் நிலவியது. 1823ஆம் ஸ்பானிய டாலர் அதிகாரபூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது.

இன்றுவரையிலும் நம்மவர்கள் ‘சிங்கப்பூர் டாலரை’ வெள்ளி என்று தமிழில் வழங்குவர். மலேசியாவிலும் ரிங்கிட்டைத் தமிழில் வெள்ளி எனக் கூறுவர். அதற்கு அக்காலத்தில் வெள்ளிக்கு நிகராகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பானிய வெள்ளி டாலர்களாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதனை வெள்ளி என அழைத்து பழகிய நம்மவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் டாலராக மாறியபோது கூட வெள்ளிக்கு விடைகொடுக்கவில்லை. வாழையடி வாழையாக ‘வெள்ளி’ நாவில் நயமாகப் பயில்கிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் டாலராக மாறியபோது கூட வெள்ளிக்கு விடைகொடுக்கவில்லை.

1826 – 1867: இந்திய ரூபாய், மெக்சிகன் டாலர்

நீரிணைக் குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்

1826ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலாக்காவுடனும் பினாங்குவுடனும் சேர்ந்து நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளாயின. நீரிணைக் குடியிருப்புப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் செயல்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி இந்திய ரூபாயையும் அதன் துணை நாணயத்தையும் செலவாணிச் சட்டத்தின்மூலம் நீரிணை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாரபூர்வ நாணயமாக மாற்ற விரும்பியது. பல்வேறு முயற்சிகளைக் கிழக்கிந்திய கம்பெனி எடுத்திருந்தபோதிலும், சிங்கப்பூரில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் மெக்சிகன் டாலரில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஸ்பானிய டாலரைத் தொடர்ந்து மெக்சிகன் டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாகப் பொதுக் கணக்குகள் ஒரு மதிப்பில் (ரூபாய்) வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்கம், பொதுமக்கள் இடையே நடைபெற்ற பரிவர்த்தனைகள் மற்றொன்றில் (மெக்சிகன் டாலர்) நடத்தப்பட்டன.

1867 – 1903: வெள்ளி உட்பட இதர வர்த்தக டாலர்கள்

பிரிட்டிஷ் போர்னியோ பணத்தாள்

1867ஆம் ஆண்டில், நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளுக்கான அரசாங்க நிர்வாகம் இந்தியாவிலிருந்து லண்டனில் இருக்கும் கலானித்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளுக்கான சட்ட மன்றம் (Straits Settlements Legislative Council), சட்டப்படிச் செல்லுபடியாகிக்கொண்டிருந்த இந்திய ரூபாயின் நிலையை நீக்கியது. மாறாக மெக்சிகன், ஹாங்காங், ஸ்பானிய, பெருவியன், பொலிவிய வெள்ளி டாலர்கள் நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளின் சட்டப்படிச் செல்லுபடியாகும் நாணயங்களாக அங்கீகரிக்கப்பட்டன. 1874ஆம் ஆண்டில், ஜப்பானிய யென், அமெரிக்க வர்த்தக டாலர் ஆகியவையும் சட்டப்படிச் செல்லுபடியாகும் நாணயங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1903 – 1939: நீரிணை வெள்ளி (Straits Dollar)

1903ஆம் ஆண்டில், நாணய ஆணையம் நீரிணை வெள்ளியை அறிமுகம் செய்தது. அப்போது புழக்கத்தில் இருந்த பிரிட்டிஷ் டாலரின் எடையையும் நேர்த்தியையும் நீரிணை வெள்ளி கொண்டிருந்தது. பிரிட்டிஷ், மெக்சிகன், இதர வெள்ளி டாலர்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன.

Malaya BritishBorneo-100 Dollars

1940 – 1942, 1945 – 1953: மலாயன் வெள்ளி

1938ஆம் ஆண்டில், நாணயச் சட்டம் நிறைவேற்றப்பட்டன. மலாயாவையும் நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளையும் ஒன்றிணைப்பது சட்டத்தின் நோக்கம். 1939ஆம் ஆண்டில் ‘மலாயா’ என்ற பெயரைத் தாங்கிய நாணயங்கள் அச்சிடப்பட்டன. ஆனால் புதிய மலாயன் நாணயம் 1940ஆம் ஆண்டு ஜனவரியில் தான் சட்டப்படிச் செல்லுபடியாகும் நாணயமாக அறிவிக்கப்பட்டது.

ஜப்பானியர் ஆட்சி

1942-1945: இராணுவ யென் (வாழைமர நோட்டு)

ஜப்பானியர் சிங்கப்பூரை 1942ஆம் ஆண்டில் ஆக்கிரமித்தபோது, இராணுவ யெனை (Military Yen) அறிமுகப்படுத்தினர். சிங்கப்பூரைத் தவிர்ந்து ஜப்பானியரின் ஆட்சியில் இருந்த மலாயா, சபா, சரவாக், புரூணை ஆகிய பகுதிகளிலும் இராணுவ யென் பரவலாகப் பயன்படுத்தது.

புதிதாய் அறிமுகமான பணத்தாளை மக்கள் பொதுவாக ‘வாழைமர நோட்டு’ என வழங்கினர். 10 வெள்ளி பணத்தாளில் வாழைப்பழ வடிவங்கள் இடம்பெற்றிருந்ததே அதற்குக் காரணம். பணமாற்றுத் தொழிலில் ஈடுபட்ட நம்மவர்கள் தமிழில் அதனை மறைமுகமாக ‘கட்டையன் தாள்’ எனக் கூறுவர். ஜப்பானியர் பொதுவாகக் கட்டையாக இருப்பதால், அவர்கள் அறிமுகம் செய்த பணத்தாள்களைச் சங்கேத மொழியில் நம்மவர்கள் ‘கட்டையன் தாள்’ என வழங்கியிருக்கக்கூடும். போருக்கு முன்னர்ப் புழங்கப்பட்ட பிரிட்டிஷ் நாணயங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவை வாழைமரப் பணத்தாள்களுக்குச் சீக்கிரமாக மாற்றப்பட்டன.

பணமாற்றுத் தொழிலில் ஈடுபட்ட நம்மவர்கள் தமிழில் அதனை மறைமுகமாக ‘கட்டையன் தாள்’ எனக் கூறுவர்.

முதல் ஈராண்டுகளுக்கு, ஜப்பானியர் பண ஒழுக்கத்தை முறையாகக் கடைபிடித்தனர். பணச் சுழற்சி கட்டுக்குள் இருப்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர். ஆனால் அப்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்திருந்தது. எனவே பெரிய அளவிலான வரியை ஜப்பானியரால் வசூலிக்க முடியவில்லை. நிர்வாகத்திற்கு நிதியளிப்பதற்காகவும் இராணுவத்திற்கான பொருள்களை வாங்குவதற்காகவும் அவர்கள் அதிகமான பணத்தை அச்சிடத் தொடங்கினர்.

1945ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஜப்பானியர் 4,000 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வாழைமரப் பணத்தாள்களை வெளியிட்டனர். போருக்கு முன்னர் இருந்த பணப் புழக்கத்தைவிட அது 30 மடங்கு அதிகம். அது அதீத பணவீக்கத்திற்கு (Hyperinflation) வித்திட்டது.

1,000 பத்து வெள்ளி வாழைமரப் பணத்தாள்கள் ஒரு கட்டாகப் பழுப்பு நிற தாளில் கட்டப்பட்டன. 600 கிராம் அரிசியின் விலை 5,000 வாழைமர வெள்ளியாக இருந்தது. போருக்கு முன், அதே அளவிலான அரிசியின் விலை வெறும் 5 நீரிணை வெள்ளியாக இருந்தது. 41 காசுகளுக்கு விலைபோய்க் கொண்டிருந்த மின்சார விளக்கின் விலை கிடுகிடுவென 210 வாழைமர வெள்ளிக்கு உயர்ந்தது. ஒரு நீரிணை வெள்ளிக்கு 950 வாழைமர வெள்ளி பரிவர்த்தனை ஆனது. வாழைமரப் பணத்தாள்கள் அதன் மதிப்பை இழந்தன. மருத்துவர்கள், ஆசிரியர்கள், இதர தொழில் வல்லுநர்கள் அரிசி, முட்டை ஆகியவற்றைக் கட்டணங்களாக ஏற்றுக்கொண்டனர். பிரிட்டிஷ் நிர்வாகத்தின்கீழ் சிங்கப்பூர் வந்தபோது ‘கட்டையன் தாள்கள்’ கைவிடப்பட்டன.

போருக்குப் பிந்தைய காலம்

1953 – 1967: மலாயா, பிரிட்டிஷ் போர்னியோ வெள்ளி

சிங்கப்பூர், மலாயா, வடபோர்னியோ (தற்போது சபா), சரவாக், புரூணை ஆகியவற்றை உள்ளடக்கும் புதிய நாணய ஒப்பந்தம் போடப்பட்டது. போருக்குப் பின் மலாயன் வெள்ளி பரவலாகப் புழங்கப்பட்டது. 1953ஆம் ஆண்டில் முதல்முறையாக ‘மலாயா, பிரிட்டிஷ் போர்னியோ’ என்ற பெயரைத் தாங்கிய நாணயங்கள் அச்சிடப்பட்டன. 1967ஆம் ஆண்டு வரை அவை புழங்கப்பட்டன.

உசாத்துணை

  1. Stephanie Ho. History of Singapore Currency. Singapore Infopedia. Retrieved from https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=ac36a2e4-5620-4812-9405-e5bd24023213
  2. Paul Kratoska. Banana Money: Malaya’s Wartime Currency. Retrieved from http://www.endofempire.asia/0907-2-banana-money-malayas-wartime-currency-3/
  3. Investigating History: Singapore Under the Japanese Occupation 1942-1945. Retrieved from https://www.nhb.gov.sg/nationalmuseum/-/media/nms2017/documents/school-programmes/teachers-hi-resource-unit-3-japanese-occupation.pdf