சுராங்குத் தீவின் வெம்மையையே
சுடராய் மாற்றி எங்கள்
வறுமை இருள்விரட்டும் பொருட்டு
வைகறையில் எழுந்தோடுவோம்
வேதிப்பொருளாக்க நிலையங்களும்
எரிநெய்ப்பிரிப்பு ஆலைகளும்
எந்திர இரைச்சல்களால்
எம்மை வரவேற்கும்.
கட்டுமானப் பணியிடமோ
இரும்புத் தொழிலகமோ
எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட
ஓரிடத்தில் வினைமுடித்து
உறைவிடம் திரும்புகையில்
பேருருக் காட்டி நிற்கும்
ஆலைப் புகைப்போக்கியொன்றின்
தணல் தகிக்கும் பின்னணியில்
தண்நிலவு தோன்றி வரும்.
அவ்வெழிற் காட்சியைக்
கண்ணுற்றுக் களிகூரும்
உள்ளத்துணர்வு ஒன்றுதான்
உயிர்ப்புடன் வைத்திருக்கிறது
இன்னுமிந்த நொந்துபட்ட வாழ்வை.