கணித்தமிழ் 24

0
216
மஹேஷ்

கணித்தமிழ் 24 மாநாடு இம்மாதம் 8,9,10 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசும் தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தொழில்நுட்பர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் எனப் பலரும் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல், உரைகள், கருத்தரங்குகள், உரையாடல்கள் என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின. கல்லுரி மாணவர்களுக்கான கட்டுரை சமர்ப்பித்தல், நிரலாக்கப் போட்டிகள் முதலியவையும் நடத்தப்பட்டன.

இப்படி ஒரு பிரம்மாண்டமான அனைத்துலக மாநாடு பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டைத் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் துவங்கி வைத்தார்.

மாநாட்டில் நான்கு பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு வி.சி.குழந்தைசாமி, நா.கோவிந்தசாமி, மு.அனந்தகிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் எனத் தமிழுக்காகவும், கணித்தமிழுக்காகவும் சேவை செய்த அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.

நேரடியாகக் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் மாநாடு நிகழ்வுகள் உடனுக்குடன் யூட்யூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால் வசதியாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டு பயன்பெற முடிந்தது. மாநாட்டில் சில நிகழ்வுகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை இங்கே.

மாநாட்டின் துவக்க விழாவில் பேசிய AI சிங்கப்பூரின் பங்காளித்துவத் துறை தலைவரான திரு.டேரியஸ் ல்யூ தமிழகத்துக்கும் சிங்கைக்கும் உள்ள அணுக்கமான உறவு பற்றியும், செய்யறிவுத் துறையில் தமிழ் மொழி தொடர்பாக கூட்டாகப் பணியாற்றும் வாய்ப்புகள் குறித்தும் பேசினார். தமிழக அரசுக்கும் AI சிங்கப்பூருக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

மாநாட்டில் முதல் நிகழ்வாக சிங்கப்பூர் தேசிய கணினி மையத்தைச் சேர்ந்த திரு.டான் டின் வீ அவர்கள் இணையவழியே உரையாற்றினார். மின்னிலக்க மயமாக்கல், மின்னிலக்கச் சேவைகள் என்று சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அம்சங்களைத் தொட்டுப் பேசினார்.

சிங்கப்பூர் தமிழ்க் கலாச்சார மையத்தைச் சார்ந்த திரு.அருண் மகிழ்நன், நாரா ஆண்டியப்பன் அவர்களும் இணைந்து சிங்கையில் தமிழ் மொழி பேணப்படும் முறைகள், அரசின் ஆதரவு, ஊடகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று விரிவானதொரு உரை நிகழ்த்தினர்.

திரு.ஆழி.செந்தில்நாதன், திரு.முத்து நெடுமாறன், திரு.கல்யாணசுந்தரம், திரு.மணி மணிவண்ணன், திரு.வெங்கடரங்கன் ஆகியோர் இணையம் தொடங்கிய 90களின் மத்தியிலிருந்து இன்று வரை இணையத்தில் தமிழ் கடந்து வந்துள்ள நெடிய பயணத்தை நினைவு கூர்ந்து அவர்கள் உட்பட பல்வேறு தமிழார்வலர்களின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். வருங்காலத்தில் இதில் நம் பங்களிப்பாக இருக்கவேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர்.

பார்வைத்திறனற்றோருக்கான பிரத்தியேக K4 விசைப்பலகையின் சிறப்புகள், அதன் பயன்கள், அதில் வரவிருக்கும் புதிய அம்சங்கள் குறித்து திரு.கிருஷ்ணமூர்த்தி வெங்கடேசன் பேசினார்.

தொழில் முனைவர் திரு.சோமசுந்தரம் தனது உரையில் தற்போதைய பயன்பாட்டுக்கு ஏற்ப பேச்சுத்தமிழும் ஆங்கிலம் கலந்து பேச்ப்படும் தங்கிலீஷும் (Tanglish) திறன்பேசிகளில் புகுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். மொழித்தூய்மை என்பது கட்டாயமாகப் பேணப்படவேண்டும் என்றாலும் தற்போதைய வணிகச் சந்தையில் பொதுப் பயனாளர்களிடம் சென்று சேரவும் எளிமையாக உரையாடவும் தொழில்நுட்பத்தின் பல்வேறு சாத்தியங்களை ஆராயலாம் என்றார். மேலும் தற்போது பல்வேறு தமிழ் விசைப்பலகைகள் இருப்பதால் ஒரு பொதுவான சொற்குவை அமைவதில் உள்ளா சிக்கல்களை விளக்கி அனைவருக்கும் பொதுவான ஒரு ஒற்றை தமிழ் விசைப்பலகையின் தேவையை வலியுறுத்தினார். அது புழக்கத்தில் உள்ள தமிழ்99 அல்லது முற்றிலும் புதிய நுட்பமாகக் கூட இருக்கலாம் என்றார்.

எழுத்தாளர் பா.ராகவன் பேசுகையில் இணையத்தில் தமிழ் வந்த பிறகு வாசிப்பு அதிகமாகி இருந்தாலும், மற்ற மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ் வாசிப்பு குறைவு என்றார். இணையத்தில் தமிழ் புகுந்தபோது இருந்த எழுத்துருச் சிரமங்கள் ஒருங்குறி வந்தபின் அறவே களையப்பட்டு தற்போது உள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பேசினார்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் பேசிய திரு.ஆழி.செந்தில்நாதன் AI புரட்சியில் தற்போது மொழி சார்ந்த தொழில்நுட்பம் முற்றிலும் வேறு தளத்தில் செயல்படுவதையும் அதன் எதிர்காலப் போக்கு பற்றியும் அதிலுள்ள அளவற்ற வாய்ப்புகள் பற்றியும் மிக விரிவாகப் பேசினார். ஆனால் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மிகை வள மொழிகளுடன் (high resource languages) ஒப்பிடுகையில் தமிழ் ஒரு குறை வள மொழியாக (low resource language) இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு பயன்பாடுகளை செயலாக்க முடியும் என்றார். இன்றைய உடனடி தேவையாக தமிழில் சார்பற்ற தரவுகள் (datasets without bias) ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Nimdzi நிறுவனர் திரு.ரெனாடோ பெரினாடோ பேசுகையில் மொழிபெயர்ப்புத் துறையில் செய்யறிவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக உரையாற்றினார். உலகில் நாம் ஒவ்வொருவரும் இணையம் வழி மிகவும் நெருக்கமாகத் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை பற்றியும் மனித ஆற்றலுக்கு மேல் பன்மடங்கு வேகத்தில் கையாளக்கூடிய செய்யறிவுத் திறன் மூலமாக உலகம் முழுதும் பயனடைய முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். இந்திய அரசியல் சட்டதில் 22 அரசு மொழிகள் பட்டியலிடப்படிருக்கின்றன. ஆனால் அமெரிக்க அரசியல் சட்டத்தில் அரசு மொழி என்ற ஒன்று இல்லையானாலும் அமெரிக்காதான் மிகப் பெரிய மொழிச் சந்தை என்பதையும் குறிப்பிட்டார்.

ஒருங்குறிக் கூட்டமைப்பில் தொடக்க காலம் முதல் தமிழுக்காகத் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர் முனைவர். ரமண சர்மா ஒருங்குறியின் அவசியத்தை விளக்கினார். ஒருங்குறியில் அமைந்த பிரதிகளை மிக எளிதாக தரவுகளாக ஆராய முடியும் என்பதை விளக்க பைதான் நிரலியில் தாமே உருவாக்கிய ‘யாப்பு/பாவை’ எனும் செயலியின் மூலம் வெண்பாக்களை அசைபிரித்து சீர்களை ஆராய்ந்து செயல்விளக்கம் அளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் தாங்களே உருவாக்கிய பல செயலிகளை இயக்கி செயல்விளக்கங்கள் அளித்தனர். ஓலைச்சுவடி, கல்வெட்டு எழுத்துக்களை படம் பிடித்து அவற்றை ஆராய்ந்து அதிலுள்ள எழுத்துகளை எடுப்பது, அச்சிடப்பட்ட பிரதிகள், படங்களிலிருக்கும் தமிழ் எழுத்துக்களை வருடி பிரதிகளாக மாற்றுவது, அவற்றை ஒலிவடிவில் மாற்றுவது, விரல் கொண்டு காற்றில் எழுதுவதை திரையில் எழுத்தாக மாற்றுவது என்று பல சுவாரசியமான செயலிகள் அரங்கில் இயக்கிக் காட்டப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு https://www.kanitamil.in/ என்ற இணையதளத்தை நாடலாம். மாநாடு நிகழ்வுகளின் காணொளிகளைக் காண https://www.youtube.com/playlist?list=PL47kBp0-hhosQzuMHjB3OREs87R__yAOv உரலியைச் சுட்டலாம்.