காலத்தினாற் செய்த நன்றி

0
211
ஜமால் சேக்

அது ஒரு மார்ச் மாத வாரவிடுமுறை நாள் காலை. வழமையாகக் கதறும் அலாரத்தை அணைத்துவிட்டு கதகதப்பான போர்வைக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்கிப்போனேன். சில வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்துவிட்ட எனதுயிர் நண்பன் முரளி என் கனவில் வந்து மிர்தாதின் புத்தகம் கொடுடா என்று என்னிடம் கேட்டான். புத்தகம் படிப்பதே அவனுக்கு ஆகாதே, அவன் போய் புத்தகம் படிக்கிறானா என்று ஆச்சரியப்பட்டபோது புத்தகம் கீழே சத்தத்துடன் விழ விழிப்பு வந்து விட்டது. எனது மனைவி கதவை வேகமாகத் திறந்த வாக்கில் கோபமாக டீக் கோப்பையுடன் நின்றிருந்தாள்.

ஆஸ்திரேலிய இளவேனில் காலை வெயில் மெல்லிதாக குளிருடன் சுகமான சோம்பேறித்தனமாக இருந்தது. சூடான டீயுடன் சிட்னி மார்னிங் ஹெரால்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நாட்டு விவகாரங்களிலெல்லாம் நமக்கு அப்படியெல்லாம் அக்கறையொன்றும் கிடையாது. 10 வயதில் ஆரம்பித்த தினமும் காலையில் தினத்தந்தியை டீ குடித்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை நிறுத்தவே முடியவில்லை. தினத்தந்திக்குப் பதில் இப்போது சிட்னி மார்னிங் ஹெரால்ட். கண்கள் பத்திரிகையின் பக்கங்களை மேய்ந்தாலும் மனம் என்னவோ மிர்தாதின் புத்தகத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. மிர்தாதின் புத்தகம் மிக்கெய்ல் நய்மி என்கிற லெபனீய எழுத்தாளரால் லண்டனில் வெளியிடப்படுவதற்காக வேண்டியே 1948இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆனால் லண்டனில் மத நம்பிக்கையைக் கேலி செய்கிறது என்று காரணம் சொல்லி நிராகரித்து விட்டார்கள். இந்தப் புத்தகம் தத்துவார்த்தம் சார்ந்தது. லியோ டால்ஸ்டாயும் சூஃபி இஸ்லாத்தின் தத்துவங்களையும் கொண்டு, ஒரு ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்களாகச் சித்தரிக்கப் படுகிறது. ஒஷோ இப்புத்தகத்தைப் பிரதாபித்துப் பேச ஆரம்பித்தவுடன், புத்தகம் பிரபலமானது. மத்திய நாற்பதில் வாழ்க்கையின் போக்கைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருப்பவர்களுக்கு இப்புத்தகம் சரியான விளக்கம் தரக்கூடும்.

மீண்டும் ஒரு முறை அப்புத்தகத்தைப் படிக்க ஆர்வம் வந்துவிட்டது. பிரச்சனை என்னவென்றால், அந்தப் புத்தகம் இப்போது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. காலை உணவிற்குப் பிறகு முதல் வேலையாக அந்தப் புத்தகத்தை தேடவேண்டும்.

பழைய பெட்டிகள், புத்தக அலமாரி, டேபிள், கட்டிலின் சுவர்ப்பக்க இடைவெளி எனப் பொறுமையாக, நான் படித்துவிட்டு பிறகு படிக்கலாம் என புத்தகங்களை ஒளிக்கும் அனைத்து இடங்களையும் தேடிக்கொண்டிருந்தபோது, மின் விசிறியின் இரைச்சலும், பழைய கணிணியின் ஹார்ட் டிஸ்க் சுற்றும் சத்தமுமாக இரைச்சல்களுக்கிடையில் சன்னமாக தொடர் இடைவெளியாக ஒரு பறவையின் குரல் ஈனஸ்வரத்தில் தொடர்ந்து கேட்டது. கூர்ந்து கவனித்தபோது பறவை ஒன்று வெகு அருகாமையில் இருந்து கூப்பிடுகிறது என்பது புரிந்தது. கண்ணாடிக்கதவின் ஓரத்தில் எட்டிப் பார்த்தால், சுவற்றின் விளிம்பில் ஒற்றைக் காலைத் தூக்கியவாறு, மற்றொரு காலில் மட்டும் தவம் செய்வது போல் நின்றுகொண்டு ஒரு சிறு பறவை பலவீனமாக தனது அலகால் கண்ணாடியைக் கொத்திக்கொத்திக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அதன் வலது கால் மற்றும் வலது இறக்கையின் மையத்தில் நைலான் வலையொன்று தாறுமாறாகச் சிக்கி இருந்தது. நான் பறவையின் கண்களைப் பார்த்தேன், அது என்னைப் பார்த்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். பூர்வ ஜென்ம நினைவுகள் வருவதற்கு முன்பே அதன் பார்வையைப் புரிந்து கொண்டேன். ஜன்னல் கதவை மெதுவாகத் திறந்தபடி, பிறகு என் கையை வெளியே நீட்டினேன். சிறிது நேரம் கையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு மெதுவாக எனது உள்ளங்கையில் ஏறியது. ஜன்னலைச் சாத்தி விட்டு, டேபிள் மேல் பறவையை இறக்கிவிட்டு, மீசை நறுக்கும் கத்தரியைத் தேடலானேன். சந்தேகத்தில் திரும்பிப் பார்த்தேன், இடத்தை விட்டு நகராமல், கழுத்தை மற்றும் சுற்றி இந்த மனுசப்பயல்கள் என்னென்ன குப்பையெல்லாம் வீட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது போல ஆச்சரியத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.

பறவையின் அருகில் உட்கார்ந்தேன். சிறிது நேரம் அதைப் பார்த்தேன். என்னை இரு வினாடிகள் பார்த்துவிட்டு, இடம் நகராமல் கழுத்தை மட்டும் ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. வேலையைப் பார்றா வெண்ணை என்று அது எனக்குச் சொல்வது போல இருந்தது. ஒரு கையால் உறுத்தாமல் அழுத்தமின்றி பொத்திக்கொண்டு மறு கையால் கத்தரி கொண்டு அந்த நைலான் நூலை சிறிதுசிறிதாகக் கத்தரிக்க ஆரம்பித்தேன். அந்தப் பறவை நான் செய்வதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முழு உடன்பாட்டில் இருந்தது. அனைத்து நைலான் வலைகளையும் கத்தரித்து வெளியில் எடுக்க குறைந்தது பத்து நிமிடங்களாகின. வெளியில் விடலாம் என ஜன்னலைத் திறந்தால் அங்கு இன்னொரு பறவை நின்றிருந்தது.

என் கையிலிருந்து குதித்து இறங்கிய அப்பறவை, அதன் அருகில் போய் நெருங்கி நின்று கொண்டது. இதன் ஜோடியாக இருக்க வேண்டும். இரண்டு பறவைகளும் சிறிது நேரம் பறக்காமல் நின்றுகொண்டிருந்தன. நானும் அவை இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். பொதுவாக இவ்வளவு அருகாமையில் பறவைகள் மனிதர்களை நம்பி நின்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் இவை இரண்டும் நின்றன. நானும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஒரு நிமிடத்திற்குப் பிறகு அவை பறந்து சென்றன. அப்போதுதான் புரிந்தது அப்பறவைகள் நன்றி தெரிவிக்கும்விதமாக நின்றிருக்கின்றன என்பது.

நன்றியைத் திருப்பிச் செலுத்த அந்தப் பறவைகள் என்ன செய்து விடமுடியும்? அந்தப் பறவைகள் எனக்குப் பதில் உதவி செய்யும் என்றெண்ணியா நான் பொறுமையாக கவனமாக வலைகளைக் கத்தரித்தேன்? கஷ்டத்தில் இருக்கும் ஒரு ஜீவன், அதனால் அதைச் சரிசெய்ய முடியாது. போகிற போக்கில் நான் செய்யும் ஒரு சிறிய செயலால் அந்தக் கஷ்டம் அந்த ஜீவனுக்குக் கழியும் என்றால் செய்து விட்டுப் போவோம்.

பறவைகள் சென்ற பின்னர் மனம் கனம் குறைந்து லேசாகி மகிழ்ச்சி ததும்பும் ஒரு வினோத மன உணர்வு வந்தது. குறிப்பாக ஏதோ ஒரு கடன் கழிந்தது போல நிம்மதி உணர்வு வந்தது. நாம் அப்படி என்ன கடன் பட்டிருந்தோம்? இப்போது அது கழிந்த உணர்வு தோன்றவேண்டும்? என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். எனக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் அந்த மனமகிழ்ச்சி நாக்கின் அடியில் ஒட்டிக்கொண்ட நாட்டுச் சர்க்கரை மாதிரி நாள்முழுவதும் இனித்துக்கொண்டிருந்தது. பறவைக்கு உதவிய சம்பவத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பது புரிகிறது ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.

வாரத்தில் கிடைக்கும் இரு நாள் விடுமுறைகள் மீண்டும் அலுவலக வேலைப் பந்தயத்திற்குத் தயராகும்முன் ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஓய்வெடுக்கும் தருணங்கள். வார விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியான மனைவியின் சாப்பாடு, பிறகு மதியத் தூக்கம் என்று வழக்கமாகி விட்டது. மாலை 4 மணிக்கு எழுந்து தோட்டப்பக்கம் போய் காய்கறிச் செடிகள், புதிதாக நட்டு வைத்த மா, கொய்யா மரங்களை சூடான டீயுடன் குடித்துக்கொண்டே பார்த்து ரசிப்பது ஒருவகை ஆனந்தம்.

அப்போதுதான் வெளியிலிருந்து திரும்பிய என் ஒரே மகன் கார்த்திக் அப்பா அப்பா என்று இரைந்து கொண்டே தோட்டத்திற்கு வந்து மிர்தாதின் புத்தகம் நூலைக் கையில் தந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜி வீட்டிற்குப் போயிருந்தேன். அவன் அப்பாதான் இந்தப் புத்தகத்தை உங்களிடம் கொடுக்குமாறு கொடுத்தார். தாமதமாகத் திருப்பித் தந்ததற்கு மன்னிப்பும் கேட்டு நன்றி சொல்லச் சொன்னார் என்றான். அவர் பென்சிலில் புத்தகம் முழுக்க கோடுபோட்டு வைத்திருக்கிறார். நான் அதை அழித்துத் தருகிறேன் என்று திரும்பப் பெற்றுப் போனான்.

கார்த்தியைப் பார்த்தபின் தான் ஏறக்குறைய 17 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் மின்னல் வெட்டியது போல் நினைவுக்கு வந்தது. இதுவரை அந்தச் சம்பவம் என் வாழ்வின் தீர்க்கவே முடியாத கடன் என்றே எண்ணியிருந்தேன். அந்தச் சம்பவத்தை பறவைக்கு உதவிய நிகழ்வுடன் ஒப்பிட்டபோது ஏன் கடன் கழித்த உணர்வு தோன்றியது என்பது புரிந்தது.

அப்போது கஸ்தூரி, கார்த்திக் என என் மணவாழ்க்கை சென்னையில் சந்தோசமாக ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழ்ப் பரம்பரையில் வந்த நானும் திரவியம் தேட கடலோடலாம் என்று முயற்சிகளை ஆரம்பித்திருந்தேன். ஒரு வழியாக ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஒரு வேலை தேடிச் சேர்ந்தேன். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டை விலைக்கு வாங்கி ஒரு காரும் வாங்கிக் குடியிருந்தேன். புதுவீட்டையும் காரையும் பார்த்தபின்னர் கஸ்தூரிக்கும் கார்த்திக்குக்கும் சென்னை கசக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் போனில் எப்போது நாங்கள் வருவது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மூன்று வருடங்களில் ஒரு வழியாக குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமையும் வாங்கி விட்டேன். மனைவி கஸ்தூரி சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்தி அப்போது சென்னையில் மூன்றாம் வகுப்பின் ஆண்டிறுதிப் பரிட்சைக்காக தயார் செய்துகொண்டிருந்தான். கார்த்திக்கை ஆஸ்திரேலியாவில் பள்ளியில் சேர்க்க அனுமதி பெற்று, முதலில் அவனைக் கொண்டு வந்து சேர்ப்பது; பிறகு கஸ்தூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இருக்கும் வீட்டை ஒழித்து சாமான்களையெல்லாம் அவள் அம்மா வீட்டில் போட்டுவிட்டு, அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுப் பிறகு அங்கிருந்து கிளம்புவதாகத் திட்டம்.

கார்த்தியைத் தனியாக அனுப்பக் கஸ்தூரிக்கு உடன்பாடில்லை. ஆனால் விமானக் கட்டணம் ஒன்றும் சல்லிசாக இல்லை. எனவே அவளைச் சமாதானப்படுத்தி கார்த்தி தனியாக பயணிக்கும் வகையில் பயணத்திட்டம் தீட்டினோம். சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியாவில் பயணம். ஒரு மணி நேர இடைவெளியில் சிங்கப்பூரிலிருந்து கண்டாஸ் விமானத்தில் சிட்னிக்குப் பயணம். மதியம் சென்னையில் கிளம்பும் கார்த்திக் அடுத்த நாள் காலை ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்து விடுவான். உடைமைகள் எல்லாம் நேரடியாக ஆஸ்திரேலியாவில் எடுத்துக்கொண்டால் போதும். எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. கார்த்தியை விமானத்தில் ஏற்றிவிட்டு கூப்பிட இருக்கும் கஸ்தூரியின் செல்பேசி அழைப்பிற்காக நகம் கடித்துக் கொண்டிருந்தேன்.

பையன் தனியாகப் பயணம் செய்கிறான் என்று எனக்கும் உள்ளூர உதறல்கள் இருந்தன. ஆனாலும் தனியாக விமானத்தில் பயணிக்கும் சிறார்களுக்கென பாதுகாப்பாளர் வசதி உண்டு. அதற்குத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். ஒரு விமானப் பணியாளர் அச்சிறுவனைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு சேரும் இடத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பது வரை அவரது பொறுப்பு. விமானத்தில் பயணித்திராத அவனுக்குத் தொலைபேசியிலேயே தைரியம் சொல்லி தனியாகப் பயணிக்கும் அளவுக்கு அவனைத் தயார் படுத்தியிருந்தேன்.

கஸ்தூரி சென்னை விமான நிலையத்திலிருந்து பேசினாள். பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானமேறும் நுழைவாயிலில் கார்த்தி இப்போது காத்திருக்கிறான் என்றாள். விமானம் புறப்படுவதை இணையவழி உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் அவளை நீ வீட்டுக்குப் போய்விடு என்று சொல்லிவிட்டேன். விமானம் கிளம்பிவிட்டது என்று உறுதிப்படுத்திய பின் சின்னத்திரையில் படம் ஒன்றை ஓடவிட்டு நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரில் வந்து இறங்கும் நேரம் கணக்கிட்டு, கண்டாஸ் விமான நிறுவத்தின் சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு நிலைமை விசாரித்தேன். அந்தப் பெண்மணி இன்னும் ஏர் இந்தியா விமானம் வரவில்லை என்று அதிர்ச்சியைக் கொடுத்தாள். ஏனென்றால் அடுத்தடுத்த விமானங்கள் குறைவான நேர இடைவெளியில் புக் பண்ணியிருந்தேன். ஒரு விமானம் தாமதமானால், தொடர் விமானப்பயணம் தடைப்படுமே. கார்த்திக் எப்படிச் சமாளிப்பான் என்று நினைக்கும்போதே அடிவயிற்றில் ஒரு பந்து உழன்றது. அட்ரினலின் அதிகமாயிற்று. பின்னிரவின் அரைகுறைத் தூக்கமெல்லாம் போய் பதற்றம் தொற்றிக்கொண்டது.கண்டாஸ் விமானம் கிளம்பும் நேரத்தில் குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னதாக வந்துவிட்டால், கண்டாஸ் விமானத்தில் எப்படியும் கார்த்திக்கை ஏற்றிவிடுவதாக அவள் உறுதியளித்தாள். இப்பொழுது பரபரப்பு பற்றிக் கொண்டது. தொடர்ந்து கவனித்ததில் ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தது. கண்டாஸ் விமானத்தை கார்த்திக் தவற விட்ட மாதிரி பலரும் பல நாடுகளுக்குப் போக வேண்டியவர்கள் ஏர் இந்தியாவின் புண்ணியத்தால் தங்கள் விமானங்களைத் தவற விட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அடுத்த கண்டாஸ் விமானம் அடுத்த நாள் மதியம் தான். 8 வயதுப் பையன் தனியாக வருகிறான், அவனை வேறு ஏதாவது ஒரு விமானத்தில் இன்றிரவே எப்படியாவது ஏற்றிவிடுங்கள் என்று அன்புக் கோரிக்கை வைத்தேன். அந்தப் பிலிப்பைன்ஸ் தேசத்துப் பணிப்பெண் ரொம்பக் கனிவான மனம் படைத்தவள் போலிருக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்து இருக்கிறது, அதில் ஏற்றிவிடுகிறேன். பயணச்சீட்டு வாங்கிவிட்டு அதன் எண் மட்டும் சொல்லுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தாள்.

அப்போதெல்லாம் இப்பொது மாதிரி 24 மணி நேரமும் இணையத்தில் டிக்கட் வாங்கும் வசதி வரவில்லை. நேரடியாக ஏர்லைன்ஸ் அலுவலகத்திலோ அல்லது முகவர்கள் மூலமாக வாங்கவேண்டும். சிட்னியில் அப்போது பின்னிரவு. சிங்கப்பூரில் இரவு ஒன்பது மணி. ட்ராவல்ஸ் ஏஜன்சிகள் மூடும் நேரம். சிங்கப்பூரில் இப்போது ஒரு முகவரிடம் அவசரமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணச்சீட்டு வாங்க வேண்டுமானால் முதலில் உள்ளூர்வாசி யாராவது இதைச் செய்தால்தான் சாத்தியம். எனக்கு சிங்கப்பூரில் பரிச்சயமான யாரும் இல்லை. மூளையைக் கசக்கி யோசித்ததில், எனது கல்லூரித்தோழன் அமீரின் தங்கை சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறாள். தோஹாவிலிருந்த அமீரிடம் தொலைபேசியில், விவரத்தை எடுத்துச் சொல்லி, டிக்கெட் வாங்கித்தர வேண்டிய உதவியைச் சொன்னேன். இதில் டிக்கட் பணம் வேறு குறுக்கே இருக்கிறது. இப்போது மாதிரியெல்லாம் அப்போது உடனுக்குடன் பணம் அனுப்ப முடியாது. அமீருக்கு அவன் மச்சான் பேரில் அதீதப் பெருமை. அதெல்லாம் சாதாரண விசயம். இப்போதே போன் போட்டு டிக்கட் வாங்கச் சொல்கிறேன் என்றான். எனக்கு நம்பிக்கையில்லை, ஆனால் அமீர் அவன் மச்சானின் மேல் வைத்திருந்த அசாத்திய நம்பிக்கை எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அமீர் அவன் மச்சானிடம் பேசினான். என்னிடமும் அவரின் செல்பேசி எண்ணைக் கொடுத்து மேல் விபரங்கள் சொல்லச் சொன்னான். நான் தொடர்பு கொண்டு விபரங்கள் சொன்னேன். 8 வயதுப் பையன் தனியாக பயணிக்கின்றான். அவனுக்கு இந்த நேரத்தில் எப்படியாவது ஒரு விமானப் பயணச்சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டால் விமான நிலையத்தில் உள்ள பணிப்பெண் பத்திரமாக ஏற்றி விட்டுவிடுவாள், எனவே எப்படியாவது பயணச்சீட்டு வாங்கிக் கொடுங்கள் என்றேன். அவர் “கவலைப்படாதீர்கள், நான் இப்போது ஒரு டாக்ஸியில் சிராங்கூன் டிராவல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். ஓனரிடம் போனில் பேசிவிட்டேன். அலுவலகத்தை மூடிக்கொண்டிருந்த வேளையில் எனக்காக அவர் மட்டும் அலுவலகத்தில் காத்திருக்கிறார். உங்கள் பையனின் முழுப்பெயர், பாஸ்போர்ட்டின் எண் மற்றும் மேல் விபரங்கள், சென்னையிலிருந்து வந்த விமானத்தின் விபரங்கள் ஆகியவற்றை எனக்கு உடனே ஈமெயிலில் அனுப்புங்கள்” என்றார். எனக்கு உண்மையில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது. யாரோ முகந்தெரியாத ஒருவர் இரவு 9 மணிக்கு மேல் தனக்கு உதவி செய்வதற்காகப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் முதலில் நம்ப முடியவே இல்லை. அதிர்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு அவர் கேட்ட விவரங்களை அவரின் மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பி வைத்தேன்.

பயணச்சீட்டு அலுவலகத்தில் இருந்தவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புறப்பட இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிலேயே டிக்கட் உறுதி செய்துவிட்டார். பணம் கட்டியாக வேண்டும். அப்போது அமீரின் மச்சான் எனக்கு அழைத்து, இது மாதிரி பயணச்சீட்டு தயாராக உள்ளது, அதன் விபரம் மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். விபரங்கள் சரிபார்த்து சரியென்று சொன்னால் அவர் பணம் கட்டிவிடுவதாகச் சொன்னார். அப்போது அந்த பயணச்சீட்டின் விலை சிங்கப்பூர் டாலரில் 2,650/-. அவருக்கு செல்பேசியில் அனைத்தும் சரியாய் உள்ளது, பயணச்சீட்டைப் பெற்று எண் சொல்லுங்கள் என்றேன். முன்பின் தெரியாத ஒருவர் தனக்காக பெருந்தொகையைக் கட்டி டிக்கட் வாங்குகிறார் என்பதால் பணத்தை உடனடியாக மறக்காமல் அனுப்பிவிடுகிறேன் என்பதை மறுபடி மறுபடி அவருக்கு உறுதிப்படுத்தினேன். செல்பேசியிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஒரு நிமிடத்தில் பயணச்சீட்டின் எண் சொன்னார்.

நான் உடனே கண்டாஸ் விமான நிலையப் பணிப்பெண்ணிடம் அழைத்து எண்ணைச் சொன்னேன். அந்தப் பெண் விவரங்களை உறுதி செய்துவிட்டு அனுமதிச் சீட்டு வாங்கி பையனை உள்ளே அனுப்புமுன் உங்களிடம் பேச வைக்கின்றேன். சரியாக அரைமணி நேரத்தில் பேசுங்கள் என்றாள். அரை மணி நேரத்தில் விமானப் பணிப்பெண் அழைப்பில் வந்தாள். விமானம் தவறவிட்ட பயத்தில் இருந்த கார்த்திக்கிடம் பேசி அவனுக்குத் தைரியம் சொன்னேன்.

கடவுள் இருக்கிறார், ஆபத்தில் கை கொடுப்பார் என்று அன்றுதான் நிச்சயமாகக் கண்டேன். முகந்தெரியாத யாரோ ஒருவர் இரவில் போய் தன் மகனுக்காக 2,650 டாலர் கொடுத்து பயணச்சீட்டு வாங்கித்தருகிறார். முகந்தெரியாத ஒரு பணிப்பெண் தன் மகனை மீட்டு சரியான விமானத்தில் ஏற்றி அனுப்புகிறார். யார் இவர்கள்? எது இவர்களை இவ்வளவு பெரிய உதவிகளை முன் பின் தெரியாத எனக்காகச் செய்யத் தூண்டியது. அவர்கள் இருவருக்கும் என்னால் அந்த உதவிக்குப் பிரதியுபகாரம் கூடச் செய்ய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

எனக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்’ என்று கம்பர் சொன்னதை அன்றுதான் உணர முடிந்தது. நன்றிக்கடன் பெரும் பாரமாக இருந்தது. பெரிய கடனாளியாக உணர்ந்தேன்.

விடிந்த பின் விமான நிலையத்திற்குப் போய் கார்த்திக்கை வரவேற்று இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். கஸ்தூரிக்கு இந்த விமானம் தவறவிட்ட கதையெல்லாம் இன்று வரை தெரியாது. அவளிடம் சொல்லக்கூடாது என கார்த்திக்கிடம் சத்தியம் வாங்கியிருந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் ஒன்றுமே நடவாதது போல் நாங்கள் இருவரும் கஸ்தூரியிடம் பேசினோம்.

அன்று காலையே அமீரின் மச்சானின் வங்கிக் கணக்கை வாங்கி அதில் பணம் அனுப்பி விட்டேன். மாலையில் அவரை அழைத்து பணம் வந்துவிட்டதா என உறுதிப் படுத்திக்கொண்டு என் மனமார்ந்த நன்றிகளை அவருக்குச் சொன்னேன். ஒருவாரத்தில் கார்த்திக்கை பள்ளியில் சேர்த்தாகி விட்டது.

ஒருவாரம் கழித்து ஒரு நாள் பள்ளியில் கார்த்திக்கை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த போது அமீரின் மச்சான் திடீரென நினைவுக்கு வந்தார். மறுபடியும் கூப்பிட்டு மிக்க நன்றி, இதை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று சொன்னேன். உங்களுக்கு எப்படி கைம்மாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை எனச் சொன்னேன்.

பிறகு ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் அவரிடம் கூப்பிட்டு நன்றி தெரிவித்தேன். என்னால் அந்த உதவியை சகஜமாக ஏற்றுக்கொண்டு சாதரணமாகக் கடந்து போக முடியவில்லை. மூன்றாவது முறையாக நான் அழைப்பதைக் கண்டு அவர் விசனமாகியிருக்க வேண்டும். இம்முறை அவர் “நான் உங்களுக்கு பிரதியுபகாரம் எதிர்பார்த்து அந்த உதவியைச் செய்யவில்லை. ஒரு குழந்தையின் தகப்பனாக உங்களின் சூழல் புரிந்தது. அந்தக் கையாலாகாத சூழ்நிலையில் யாராவது உங்களுக்கு உதவியே ஆக வேண்டும். உங்களுக்கு உதவும் சூழலில் நான் இருந்தேன். உங்கள் பையன் உங்களிடம் வந்து விட்டான். நீங்களும் தயங்காமல் எனக்கு பணம் அனுப்பி விட்டீர்கள். நீங்கள் நன்றி சொல்லத் துடிப்பதன் பின்புலம் என்னால் உணர முடிகிறது. உண்மையில் நீங்கள் எனக்கு பிரதியுபகாரம் செய்வதானால், இதே போல சிக்கலான சூழலில் இருக்கும் ஒருவருக்கு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி செய்யுங்கள். ஒரு பிரதிபலன் பாராத செயல் தொடரை நான் ஆரம்பித்ததாக இருக்கட்டுமே” என்றார். இனிமேல் நன்றி தெரிவிக்கிறேன் பேர்வழி என்று தொல்லைப்படுத்தாதீர்கள் என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். அதுதான் நான் அவரிடம் கடைசியாகப் பேசியது.

இன்றைக்குக் காலையில், அந்தப் பறவையை வலையின் பிடியிலிருந்து விடுவித்து அதன் ஜோடியுடன் திரும்பப் பறக்க விட்டதை நினைத்த போது, சிக்கலான சூழலில் இருக்கும் ஒரு உயிருக்கு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி செய்யச்சொன்ன நன்றிக்கடனைக் கழித்து விட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

நீங்கள் மேகம். தன்னிடமுள்ளதை வழங்காத மேகம், ஒரு மேகம் தானா? தன்னுடைய வடிவையும் அடையாளத்தையும் இழந்துவிடாதபடி என்றும் அலையும் மேகம் முட்டாள்தனமானது. ஏமாற்றமும், தற்பெருமையும் அன்றி அது வேறெதைப் பெற்றுவிட முடியும்?

அது தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போவதுதான் அதன் வாழ்க்கையாக இருக்க முடியும்.

அது மேக வடிவை இழந்து, செத்துப்போய்க் கடலில் கரைந்து, கடலையே தனது அடையாளமாகக் காணாதவரை, அது மேகமே அன்று.

கடவுளைச் சுமக்கும் மேகமே மனிதன் !. தான் கரைந்து காணாமற் போகாமல், அவன் தன்னைக் கண்டு கொள்ள முடியாது. அப்படிக் காணாமற் போவதில்தான் என்ன பரவசம்!

[மிர்தாதின் புத்தகம் – அத்தியாம் 5 – கடவுள் சொல்லும் மனிதன் சொல்லும்]