மொழிபெயர்ப்புக் கவிதை

0
277
மஹேஷ்

கவிஞர் பற்றிய குறிப்பு

கேரளத்தில் வயநாடு பகுதியில் 1969ல் பிறந்த நந்திதா, தனது 29ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் மலையாள இலக்கிய விமர்சகர் பஷீரின் முன்னெடுப்பில் அவரது கவிதைகள் பதிப்பிக்கப்பட்டு வெளியுலகிற்கு வந்தன. காதலும் மரணமும் கருப்பொருட்களாகத் தொடரும் அவரது செறிவான கவிதைகள் மலையாளக் கவிதை உலகில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளன.

நிதர்சனம்

அது என்ன முகத்தில் ஒரு வெடிப்பு?
எலி வளையா?
அது ஒரு மோசமான பதுங்கு குழி.
அதை நீ புன்னைகை என்கிறாயா?
என்னை மகிழ்விக்க நீ அப்படிக் கூறலாம்.
எனக்குத் தெரியாதா?
ஆனால் உன் கண்கள் ஏன் அமைதியற்று அலைகின்றன?
கட்டுக்கடங்காமல் போகு முன்
அவற்றை நெறிப்படுத்து.
அவற்றை ஏன் பிடுங்கி விடக்கூடாது?
பிடுங்கிப் பாறைகளின் மீது வீசியெறி.
அவை துளிர் விட்டு முளைக்காதிருக்கட்டும்.
இந்த நூற்றாண்டோடு அவை மடிந்து போகட்டும்.