கவிஞர் தாயுமானவன் மதிக்குமாரின் முதல் கவிதை நூலான யாமக்கோடங்கி அன்றாடம் நம் கண்முன் நிகழும் காட்சிகளிலிருந்து விரிந்தக் கவிதைகளைத் தாங்கி வருகிறது. சில வழக்கமுறைகளை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் யாமக்கோடங்கிக்கு வாழ்வின் யதார்த்தங்களை ரசிக்கவும் தெரிந்திருக்கிறது. சமூகம், புறவாழ்க்கை, அகம், அகம் சார்ந்த உணர்வுகள், மனப் போராட்டங்களென வாசிப்போர் மனதில் ஒரு கொடியெனப் படர ஆரம்பிக்கிறது யாமக்கோடங்கியின் கவிதைகள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழும் மனப்போராட்டத்தைப் பேசுகிற ஒரு கவிதையில் எதை எடுப்பது? எதை விடுப்பது? என்ற கேள்வி. அநேகமாக எல்லோருக்குள்ளும் எழும் கேள்விதான். அதற்கான பதிலை மனிதர்கள் முன் சோழிகளை உருட்டி வேடிக்கைப் பார்க்கிறது காலம். சிலருக்கு முதல்முறையே கிடைக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்காமலும் போகலாம். அந்த வகையில் நினைவுகளையும் பொறுப்புகளையும் அவற்றின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு களத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் கவிஞர். எஞ்சுவது எதுவாயினும் இறுகப்போவதென்னவோ மனிதனின் கழுத்துதான். இடைப்பட்ட கொஞ்ச நேரமாவது இளைப்பாறிக் கொள்ளலாமே என்ற மனிதனின் சிறு ஆசையைப் பேசுகிறக் கவிதை “வாழ்வெனும் வரம்”.
சில நேரங்களில் புறக்கணிப்புகள்தான் வாழ்வில் இலக்குகளை உருவாக்குகின்றன. அந்த இலக்குகளை அடைய சிறகு போல உதவவும் செய்கின்றன. மனிதர்களின் இயங்குதலுக்கு உந்துசக்தியாகும் புறக்கணிப்பைப் பற்றிய இந்தக் கவிதை அவரவர் தம் வாழ்வோடு ஒருமுறையாவது பொருத்திப் பார்க்கின்ற மாதிரியானது.
புறக்கணிப்புச் சிறகு
ஒருபுறம்
அன்பின் சிறகு
மறுபுறம்
பறப்பதை நிறுத்துவதில்லை
நாம்.
வானம்தான்
நீளமாகிக் கொண்டே இருக்கிறது.
மானுட வாழ்வில் பிறப்பு மற்றும் இறப்பு அவரவர்களால் தீர்மானிக்க முடியாத ஒன்று. உறவுகளும் கூட. ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சருகாகதான் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு மனிதனின் மனோநிலையைக் கூட மற்றவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் எனும்போது எந்தவொரு மனிதனுக்கும் வாழ்வில் சலிப்பு ஏற்படாதா என “உங்களுக்கும் அப்படித்தானே?” என்ற கவிதை மூலம் வாசகனை நோக்கிக் கேள்வியை முன்வைக்கிறார். அந்தக் கவிதையில் வரும் இந்த வரிகள் விரிக்கும் காட்சி ஆகப் பெரியது.
சலிப்பு யாதெனில்
என் மௌனத்தைக் கூட
இன்னொருவரே சிலையாக்குகிறார்
இன்னொருவரே தழும்பாக்குகிறார்
கடற்கரையில் நின்று பார்க்கும் போது பூமியின் எல்லையாகத் தெரியும் கடலையும் தாண்டி ஒரு நிலப்பரப்பு வரும் புது வெளிச்சம் வரும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தால் வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் ஒரு சிறு புள்ளியாய் மறைந்து போகும் என்பதை உணர்த்துவதாக வரும் கவிதை “அகத்தின் புறவெளி”. அதில் வரும் இந்த வரிகள் தத்துவார்த்தமானவை. மானுட வாழ்வைப் பற்றிய பார்வைகளை விரியச் செய்யக்கூடியவை.
இருத்தலுக்கும் இன்மைக்கும்
இடையே விரிகின்றன
வாழ்தலின் மடிப்புகள்
அயர்ச்சிகள் நிறைந்த ஒரு நாளைக் கடப்பதற்கு அன்பென்ற படகு அவசியம். அதைப் பற்றி ஏறிவிட்டால் போதுமானது. பிறகு வாழ்க்கை என்ன மாதிரியான புறக்கணிப்பை நம் மேல் வீசினாலும் அது செல்லும் திசையில் கண்களை மூடிக்கொண்டு பயணிக்கலாம். தூரங்கள் எல்லையற்றுப் போகும். சொல்லப்போனால் இவ்வுலகமே அன்பில்தான் பூக்கிறது எனலாம். அத்தகைய அன்பைப் பற்றிப் பேசக்கூடிய கவிதையாக “அமர் நீதி” இருக்கிறது. அதிகமாக பேச வைக்கவும், அநேகமாக மௌனத்தில் ஆழ வைக்கவும் அன்பு ஒன்றல்தான் இயலும். அன்பில் காரண காரியங்கள் கிடையாது. அதையும் மீறி ஆராயத் தொடங்கினால் அன்பென்ற ஒன்றே அங்கே இராது என அன்பின் மதிப்பைப் பேசுபவை கீழ்வரும் வரிகள்:
இறுதியாய்த் தனித்தனியே
அக்குவியல்களில் ஏறிக் கொண்டோம்.
அன்பின் மலைகள்
நம்மைச் சுமந்து கொண்டிருக்கின்றன.
தான் என்ற அரவங்கள்
தலை மேல் ஆடிக் கொண்டிருக்கின்றன.
ஆசைகளைத் துறக்கச் சொல்கிறான் புத்தன். புத்தன் சிலைகளை ஆசை ஆசையாய் வாங்கிச் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். அவ்வளவே மனிதமனம். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழவேண்டும் என்று மனிதர்கள் போடும் மனக்கணக்குகளை எல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு “இருப்பின் மேன்மை” கவிதையைப் படிக்கச் சொல்கிறார் யாமக்கோடங்கி. இந்த உலகில் இருப்பதே மேன்மையென வாழ்வின் நிதர்சனத்தை, தத்துவத்தைப் போகிற போக்கில் சொல்கிற கவிதையாகப் பார்க்கலாம். மணல்பரப்பைத் தொட்டுச்செல்லும் நதியைப் போலத்தான் மனிதர்களின் இருப்பும் இந்த உலகில் என்று சொல்லப்பட்டிருக்கும் உவமை படிப்பவர் கண்முன் காட்சியாய் ஒருகணம் தோன்றி மறையும்.
ஒரு மலரைப் போலக் கிடக்கிறது
நதியின் வழியில் சிறு மணற்பரப்பு
உரசிச் செல்லும் நதியால்
எப்பொழுதும் அரிக்கப்படுகின்றன
அதன் இதழ்கள்.
மலர்ந்திருக்கிறதா உதிர்ந்திருக்கிறதா
தெரியவில்லை.
அலைகளால்
நனைந்து கொண்டிருக்கிறது
அது போதும்.
இடர்பாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் பறவையின் சிறகுகளுக்குக் கிடைத்த விடுதலையைப் போல ஊழின் வழிச்செல்லும் மனிதனின் இளைப்பாறுதல் தன் மகன்களின் அல்லது மகள்களின் மடியாகத்தான் இருக்கும். குறிப்பாக மகள்கள் வரையும் கோட்டுச்சித்திரத்திற்குள் அடங்காத அப்பாக்களே இருக்க முடியாது. அத்தகைய அன்பைப் பேசும் கவிதையாக வருகிறது “வடிவியலின் தந்தை”.
ஒரு வட்டம்
இரு கோடுகள்
ஒரு நீள்செவ்வகம்
இரு குறுஞ்செவ்வகங்களென
அவ்வளவு எளிதாக
உருவாக்கிவிடுகிறாள்
என்னை.
இனி நான்தான்
இப்பூத யாக்கையிலிருந்து
விடுவித்துக் கொண்டு
மகளின் கோடுகளுக்குள்
வாழவேண்டும்
ஒவியமாக.
ஐவிரல்களைப் போல வெவ்வேறு கோணங்களில் விரியும் கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இன்னும் பல சிறந்த வரிகளையும், காட்சிகளையும் காணமுடியும். உதாரணமாக புனித யாத்திரை, பாவ மன்னிப்பு, தேரழகு, குறையின் வெகுமதி என நீள்கிறது பட்டியல்.
சிறந்த வாசிப்பினைத் தருவதில் கவிதைகளின் சொற்சிக்கனத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் சொற்சிக்கனத்தைக் கவனத்தில் கொண்டு படைக்கப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே ஒருசில கவிதைகள் அதற்கு விதிவிலக்கு. உதாரணமாக காலமாதல் என்னும் கலை, நடமாடும் போதி, ஆறுதலின் கரங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம்.
பூவின் இதழ்களாகவும் வேல்கம்பின் கூர்களாகவும் வாழ்க்கைத் தன்மேல் எறிந்த கற்களைக் கொண்டு கவிஞர் வடித்திருக்கும் சிலை யாமக்கோடங்கி. அதில் சிறு சிறு பிசிறல்கள் அங்கும் இங்கும் இருந்தாலும் லாவகமாக பூமித்தாயின் மடியில் நிறுவிய அவரது இலக்கியப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்!