கவிதை காண் காதை|20

0
118

சித்திரச் சுவர்

கணேஷ் பாபு

பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாலகுரு செத்துப் போய்விட்டிருந்தான். சிறுவயதில் கண்ணெதிரே பார்த்த முதல் மரணம் அது. எங்கள் ஊரின் தெற்கு ரத வீதியின் சாலை எசகு பிசகானது. நீரற்ற கிணற்றின் அடியாழத்து இருளில் தேங்கியிருக்கும் உள்ளங்கையளவு தண்ணீரைப் போல, தெற்கு ரத வீதியின் சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தால் தார் போல கருமையான ஒன்று தென்படும். அதை வைத்துத்தான் அது தார்ச்சாலை என்று நம்ப முயன்று கொண்டிருந்தோம். மற்றபடி அது தாறுமாறான பள்ளங்கள் நிறைந்த மண்சாலைதான்.

கேரளாவுக்குச் சரக்கேற்றிச் செல்லும் லாரிகள் அதிகம் செல்லும் சாலை அது. அந்த சாலையின் ஓரங்களில் வரிசையாக கடைகள் முளைத்துப் பெருகியிருந்தன. அந்தக் கடைத்தொகுதிகளில் பச்சை நிற டியூப் லைட் பளிச்சென்று எரியும் கந்த பிள்ளை இட்லிக் கடை மிகப் பிரசித்தமானது. கடை முதலாளி கந்த பிள்ளை பாதி உடைந்து உலுத்துப் போயிருந்த டேபிளின் பின்னே ஒரு ஸ்டூலைப் போட்டு தினமலர் வாசித்துக் கொண்டிருப்பார். ஓட்டலையும் நடத்திக்கொண்டு எங்கள் ஊரின் தினமலர் ஏஜெண்டாகவும் இருந்தார். அவரைத் தவிர அந்தக் கடையில் ஏகாம்பரம் என்ற ஒருவர் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தார். ஒல்லியாக, அளவான உயரத்தில், சரிபாதி நரைத்திருந்த சுருள்முடியும், தாடியுமாக இருப்பார். மண் நிறத்தில் ஆங்காங்கே கிழிந்த ஒரு முண்டா பனியனும், முழங்கால் வரை நீண்ட துண்டையும் கட்டியிருப்பார். வருடத்தின் எல்லா நாட்களும் அவர் இந்த உடையில் மட்டுமே தோன்றுவார். அவர் சட்டையும் வேட்டியும் அணிந்து நாங்கள் பார்த்ததேயில்லை. அவர் ஒருவரே மாவரைத்து, இட்லி, தோசை போன்ற பலகாரங்களை ஒரு எந்திரத்தைப் போல தயார் செய்து கொண்டேயிருப்பார். கந்த பிள்ளையின் ஹோட்டலில் விறகடுப்பு மட்டுமே பயன்படுத்துவார்கள். சமயங்களில், கடலைத் தொலி, தின்று போட்ட மக்காச் சோளக் கருது போன்றவையும் அடுப்பை எரிக்கப் பயன்படுத்தப்படும். கந்த பிள்ளையிடம் பேச வரும் அவரது நண்பர்கள் ஏகாம்பரத்திடமும் பேசிக்கொண்டிருப்பார்கள். சமகால அரசியல், சினிமா (குறிப்பாக நடிகைகளின் உடல்வாகு மற்றும் தொடர்புகள்), ஊர் நிலவரங்கள், நல்ல மற்றும் கள்ளக் காதல் செய்திகள் போன்றவற்றைக் குறித்து ரசமான மொழியில் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி அரட்டையடிக்க வந்தவர்தான் பால்பாண்டி. அண்ணா நடுநிலைப் பள்ளிக்கு எதிராக சிறிய பெட்டிக் கடை வைத்திருப்பவர். கூடவே பழைய பாத்திரங்களைச் செப்பனிடும் வேலையையும் செய்து கொண்டிருந்தார். பாலகுரு அவரது மகள் வயிற்றுப் பேரன். அவரது மகள் அவரோடுதான் இருந்தாள். கணவனோடு ஏதோ பிணக்கு. பாலகுரு எங்களோடு கிரிக்கெட் விளையாட வருவான். பத்து வயதுச் சிறுவர்கள் விளையாட அப்போது எங்கள் ஊரில் எந்த மைதானமும் இல்லை. இருந்த சில மைதானங்களையும் பெரியவர்கள் கையகப்படுத்தியிருப்பார்கள். அதனால், எங்கள் தெருவையே மைதானமாகப் பயன்படுத்திக் கொண்டோம். அப்படி விளையாடும்போது அடிக்கடி, பந்து அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளுக்குள் நுழைந்துவிடும். அந்தந்த வீட்டாரிடம் கெஞ்சிக் கேட்டு பந்தை மீட்டெடுப்பதைப் தவிர பெரிதாக வேறு பிரச்சினை ஒன்றும் இல்லை. வீடுகளுக்குள் நுழையும் பந்தை சாமர்த்தியமாக மீட்டெடுக்கும் வேலை பாலகுருவினுடையது. கெஞ்சுவதில் அவன் மன்னன். “அக்கா, இனிமே இங்க வெளையாட மாட்டோம்கா”, “மாமா, இந்த ஒருதடவக் குடுத்துருங்க மாமா, போன வாரம் நீங்க சொல்லி, அண்ணாமலைக் கடையில கடல மாவு வாங்கிட்டு வந்தத நெனச்சுப் பாருங்க மாமா” என்று ஆளுக்கு தக்கவாறு பேசி அவர்களது மனதைக் கரைத்து பந்தை மீட்டுக் கொடுப்பான். அந்த உபகாரத்துக்காக அவனுக்கு மட்டும் ஒரு ஓவர் அதிகம் போடுவோம்.

சம்பவம் நடந்த அன்று, அவரது தாத்தா பால்பாண்டியோடு கந்தபிள்ளை ஹோட்டலில் பஜ்ஜி சாப்பிட வந்திருந்தான் பாலகுரு. மாலை ஆறு மணியிருக்கும். வெளிச்சம் இன்னும் வற்றவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் அவரது தாத்தாவின் சைக்கிள் கேரியரில் அவன் அமர, அவனது தாத்தா சைக்கிளைக் கிளப்பினார். சாலையின் ஒரு பள்ளத்தில் சிக்கிய சக்கரத்தால், தாத்தா நிலைதடுமாறி ஒருபக்கமாகச் சாய்ந்தார். சட்டென அவர் காலை ஊன்றி நின்று கொண்டார். ஆனால், பின்னால் அமர்ந்திருந்த பாலகுரு அப்படியே சாலையில் சாய்ந்தான். மிகச் சரியாக, அந்த வழியில் போய்க்கொண்டிருந்த சரக்கு லாரியின் சக்கரத்தினடியில் அவன் தலை நுழைந்தது. அங்கிருப்பவர்கள் சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்தருந்தது. அவரது தாத்தா தனது தலையில் பலமாக அடித்தபடியே “பிள்ளயக் காவு கொடுத்துட்டேனே, பிள்ளயக் காவு கொடுத்துட்டேனே” என்று கேவிக் கொண்டிருந்தார். கந்த பிள்ளையும், ஏகாம்பரமும், ஓடி வந்து லாரியை மடக்க முயன்றார்கள். அதற்குள் நிலைமையை உணர்ந்து கொண்ட டிரைவர், கண் இமைக்கும் நொடியில், லாரியிலிருந்து இறங்கி, போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடிப் போனான். அடுத்த தெருவில்தான் ஸ்டேஷன் இருந்தது. அருகில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் காட்சிகளையெல்லாம் அங்கிருந்தே பார்க்க முடிந்தது. உடனே சம்பவ இடத்துக்கு ஓடினோம். பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். சிறிது நேரத்தில், போலீஸும் வந்துவிட்டது. அவர்கள் சாலையை உடனே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

எங்களால் பாலகுருவின் முகத்தையே பார்க்க முடியவில்லை. அவனது கரும்பச்சை நிற சட்டையும் டவுசரும் ரத்தத்தில் ஊறியிருந்தது. தலை உருக்குலைந்திருந்தது. தலை இருந்த இடத்துக்கு அருகில் வெண்ணிறத்தில் காலி பிளவர் போன்ற வஸ்து சிதறிக் கிடந்தது. அது அவனது மூளை என்றான் என் பக்கத்தில் நின்றிருந்த ஆனந்தன். ஒரு பந்தைப் போல கிடந்த அந்தப் பாகத்தை யாராவது மீண்டும் எடுத்து பாலகுருவின் தலைக்குள் புகுத்தி அவனை உயிர்ப்பித்து விட மாட்டார்களா என்று மனது அடித்துக் கொண்டது. பாலகுரு உயிரோடு இருந்திருந்தால் கிரிக்கெட் பந்தை மீட்பது போல இதையும் மீட்டெடுத்திருப்பான். கையறு நிலையில், வெறுமனே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது எங்களால்.

தூரத்தில் பெரிய கோயிலுக்கு சாமி கும்பிட்டுத் திரும்பும் பெண்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது. விதியின் கோரமான திட்டத்தின்படி, அந்தக் கூட்டத்தில் பாலகுருவின் அம்மாவும் இருந்தார். “ஐயோ, பாலகுருவோட அம்மா வர்றாங்கடா” என்றான் அருகில் நின்றிருந்த ஆனந்தன். அவர் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார். சாலையின் நடுவே மூளை தெறித்துச் சிதறிய நிலையில் பிரேதமாகக் கிடக்கும் மகனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சாலையில் கூட்டமாக இருந்த இடத்தை தன் இயல்பான ஆர்வத்தால் நெருங்கி வந்து பார்த்தவர், அடுத்த சில நொடியில், அங்கே செத்துக் கிடப்பது தனது மகன் தான் என்று தெரிந்ததும், ‘ஐயய்யோ’ என்றபடி மயங்கிச் சரிந்தார். அதன்பிறகு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. முதுகில் ஒரு அடிபோட்டு அப்பா என்னை வீட்டுக்கு இழுத்துச் சென்று விட்டார்.

அடுத்த சில நாட்களுக்கு பள்ளி, அதை விட்டால் வீடு என்ற வரைபடத்தைப் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டோம். சிநேகிதர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவே முடியவில்லை. சேர்ந்து விளையாடுவதைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது. தெருவில் நிகழ்ந்த இந்தத் துக்கத்தின் விளைவாகக் கொந்தளித்த சோகமும், கழிவிரக்கமும், அச்சமும், சுயநலமும் தெருவாசிகளை இறுக்கமானவர்களாக மாற்றிவிட்டன. பாலகுருவின் வீட்டின் முன் வேயப்பட்டிருந்த பந்தல் மட்டும் நடந்து முடிந்த துக்கத்தின் சாட்சியாக காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

அடுத்த சில வருடங்களில், பாலகுருவின் தாத்தாவும் இறந்துவிட்டார். ஆனால், அவனது அம்மா மட்டும் அந்தத் துக்கத்தில் இருந்து விடுபடவேயில்லை. நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று அது. அவரது மனம் பிறழ்ந்துவிட்டது. பத்து வயதில் எந்தச் சிறுவனைப் பார்த்தாலும் தனது மகனாகவே எண்ணிக் கொண்டு அவன் பின்னால் சென்றுவிடுவார். தெருவாசிகள் அவரைத் தேற்றி மீண்டும் வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தாலே சிறுவர்கள் அஞ்சி ஓடத் துவங்கினார்கள். ஒருநாள் இருள் கூடிய மாலை வேளையில் அண்ணாமலை கடையில் சீனி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் என்னையும் பிடித்துக் கொண்டார். “யப்பா குரு,யப்பா குரு, யப்பா குரு” என்று மந்திரத்தைப் போல திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளையே உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் கையில் இருந்த சீனிப் பொட்டலத்தை இறுகக் பற்றியபடி அழத் துவங்கியிருந்தேன். அவரது விரல்கள் காய்த்துப் போயிருந்தன, ஒரு விதமான சொர சொரப்புடன் என் முகத்தை ஆழமாக வருடிக் கொண்டிருந்தன அந்த விரல்கள். கலங்கிய முகமும், சுருங்கிய தோலும், காய்ந்த விரல்களும், அழுக்கு நாற்றமெடுக்கும் உடையும், ‘யப்பா குரு’ என்ற மந்திர உச்சாடனமும் என்னை ஆழமான அச்சத்துக்குள் புதைத்துவிட்டன. கலங்கி நின்ற என்னை அங்கிருந்த பெரியவர்கள் வந்து, அந்த அம்மாவிடம் இருந்து மீட்டார்கள். பொங்கி வந்த விடுதலை உணர்ச்சியில் தள்ளப்பட்டு நான் வீடு நோக்கி ஓடினேன். அதன் பிறகான சில நாட்களில் அந்தக் குடும்பம் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டது. பல வருடங்கள் கழித்து இப்போது யோசித்துப் பார்க்கையில் தோன்றுகிறது. அந்த அம்மா என்னிடம் எதைக் கண்டார், தனது மகனைத்தானே? இன்னும் கொஞ்ச நேரம் அந்த அம்மாளின் அணைப்பில் இருந்திருந்தால் அவர் தனது மகனை மேலும் சிறிது நேரம் என்மூலம் தரிசித்திருப்பார் அல்லவா? அவ்வளவு சீக்கிரமாக ஏன் அவரிடம் இருந்து விடுபட்டு ஓடினோம் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

நகுலன்

உக்கிரமான நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொள்ளும்போது சட்டென சில கவிதைகளும் உடன் தொற்றிக்கொள்கின்றன. கவிதையின் அமரத்துவத்தையும் ஆழத்தையும் உணர இதுபோன்ற வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் உரைகல்லாகப் பயன்படுகின்றன. நகுலனின் கவிதை இது.

கவிதை

அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையைக்
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
“நண்பா, அவள்
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”

நகுலன் காட்டும் அம்மாவுக்கு எண்பது வயது. நான் பார்த்த அம்மாவிற்கு முப்பது வயதுதான் இருக்கும். வயது ஒரு பொருட்டில்லை என்று இப்போது தோன்றுகிறது. இழந்த சித்திரத்தை ஒரே சுவரிலோ அல்லது வேறு வேறு சுவர்களிலோ தேடுவதற்கு ஒரு அம்மாவுக்கு எண்பது வயது ஆகியிருக்கத்தான் வேண்டுமா என்ன?