முழுமைத் தற்காப்பு -40 ஆண்டு நிறைவு

நித்திஷ் செந்தூர்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று மாலை 6.20 மணிக்குத் தீவு முழுவதும் பொது எச்சரிக்கைச் சங்கொலி (Siren) 20 வினாடிகளுக்கு எழுப்பப்படுகிறது. பிரிட்டிஷ் துருப்புகள் 1942ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களிடம் சரணடைந்த நேரத்தை அனுசரிக்கும் வகையில் சங்கொலி எழுப்பப்படுகிறது. அந்நாளில் முழுமைத் தற்காப்பு தினம் சிங்கப்பூரில் அனுசரிக்கப்படுகிறது.

“முழுமைத் தற்காப்பு” 1984ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. எந்த நெருக்கடியையும் தாண்டிச் செல்லக்கூடிய சிங்கப்பூரை உருவாக்குவது அதன் இலக்கு. பல்லினங்களையும் பல சமயங்களையும் கொண்டுள்ள சிறிய நாடு சிங்கப்பூர். தடையற்ற வர்த்தகம் என்பது சிங்கப்பூரின் உயிர்நாடி. சிங்கப்பூர் ஆகாயம், கடல், இணையம் என எல்லா வகையிலும் உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் துருப்புகள் 1942ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களிடம் சரணடைந்த நேரத்தை அனுசரிக்கும் வகையில் முழுமைத் தற்காப்பு தினம் சிங்கப்பூரில் அனுசரிக்கப்படுகிறது.

உலக நடப்புகளோ சம்பவங்களோ சிங்கப்பூரை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும். பயங்கரவாதம், பொருளியல் மந்தம், கொவிட், சார்ஸ் முதலிய சவால்கள் நாட்டின் அரசுரிமையும் நலனையும் அச்சுறுத்தியபோது, சிங்கப்பூரர்களை ஓர் அணியில் சேர்த்துள்ளது முழுமைத் தற்காப்பு. சவால்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பு துணை நின்றுள்ளது. அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த தனது பங்கினை ஆற்ற வேண்டும் என்பது தான் முழுமைத் தற்காப்பின் முக்கியச் செய்தி.

இராணுவத் தற்காப்பு, குடிமைத் தற்காப்பு, பொருளியல் தற்காப்பு, சமூகத் தற்காப்பு, மனநலத் தற்காப்பு ஆகிய ஐந்து தூண்களோடு மின்னிலக்கத் தற்காப்பு ஆறாவது தூணாக 2019ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் ஊடாக மின்னிலக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் எனக் கருதப்படுகிறது.

இவ்வாண்டு முழுமைத் தற்காப்பு தனது 40 ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது. அதனையோட்டி முதல்முறையாக ‘Exercise SG Ready’ எனும் சிங்கப்பூர் தயார்நிலைப் பாவனைப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நெருக்கடிகளையும் இடையூறுகளையும் சமாளிக்க சிங்கப்பூரர்களின் தயார்நிலையை அதிகரிப்பது பாவனைப் பயிற்சியின் நோக்கம். ‘தடங்கலுக்குத் தயாரா?’ என்ற கேள்வியை முன்வைத்து கடந்த மாதம் (பிப்ரவரி) 15ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை பாவனைப் பயிற்சி தீவு முழுவதும் நடத்தப்பட்டது.

இணையத் தாக்குதல்கள், போலித் தகவல்களைப் பரப்பும் இயக்கங்கள், வெவ்வேறு இலக்குகளைக் குறிவைக்கும் ஆளில்லா வானூர்திகள் என நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பல்வேறு தரப்புகளைக் குறிவைத்து தகவல் அறியப்படாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்வதாகப் பாவனைப் பயிற்சி அமைந்தது. அந்தத் தாக்குதல்களால் சில பள்ளிகளுக்குத் தண்ணீர், மின்சாரம் அல்லது உணவு விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. சில பள்ளிகளில் அவரச உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் அந்தப் பாவனைப் பயிற்சி சில பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாவனைப் பயிற்சியில், சமூக வசதிகள், வர்த்தக, அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவையும் கலந்துகொண்டன. அங்கு வெவ்வேறு தினங்களில் மின்படிகளும் குளிர்சாதன வசதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்தத்தில் சுமார் 500 கல்வி, சமூக, வர்த்தக, அரசாங்கக் கட்டடங்கள் தயார்நிலைப் பாவனைப் பயிற்சியில் பங்கேற்றன.

சுமார் 500 கல்வி, சமூக, வர்த்தக, அரசாங்கக் கட்டடங்கள் தயார்நிலைப் பாவனைப் பயிற்சியில் பங்கேற்றன.

‘உலகில் கொந்தளிப்பும் நிச்சயமற்றத் தன்மையும் அதிகரித்துள்ள நிலையில், நெருக்கடி நிகழும்போது எல்லாம் சிங்கப்பூரர்களின் மீள்திறன், தயார்நிலை, ஒற்றுமை ஆகியவற்றை அதிகரிக்கிறது பாவனைப் பயிற்சி’ என்றார் பிரிகேடியர்-ஜெனரல் கெல்வின் ஃபான். அதோடு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூரர்கள் முழுமைத் தற்காப்பிற்குத் தங்களது கடப்பாட்டைப் புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பை நிலைநாட்டுவதில் மக்களின் மன உறுதியே முதன்மையானது என்றார் அவர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்), முழுமைத் தற்காப்பு மாநாடு நடைபெறும். அதோடு, நடமாடும் முழுமைத் தற்காப்புக் கண்காட்சி இடம்பெறும். அதில் சிங்கப்பூரர்கள் கடந்த 40 ஆண்டுகளாக முழுமைத் தற்காப்பிற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு காட்சிப்படுத்தப்படும்.

உசாத்துணை
https://seithi.mediacorp.sg/singapore/singapore-total-defence-day-15th-feb-716161
https://seithi.mediacorp.sg/singapore/total-defence-day-41581
https://www.mindef.gov.sg/oms/imindef/mindef_websites/topics/totaldefence/resources/TD40_Logo_CI_Guide_Final.pdf
​​​https://www.straitstimes.com/singapore/1st-islandwide-total-defence-exercise-held-in-feb-food-power-disruptions-will-be-simulated
https://www.mindef.gov.sg/web/portal/mindef/news-and-events/latest-releases/article-detail/2024/February/29feb24_fs3