உதிரிப்பூக்கள்

0
98
மஹேஷ் குமார்

விண்வெளியில் சாதனை படைக்கும் சிங்கை

சிங்கையைச் சேர்ந்த ஏட்வேல்யூ நிறுவனத்தின் கம்பியில்லாத் தொடர்பு (Wi-Fi) தொழில்நுட்பம் சர்வதேச விண்வெளி நிலையங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த வாஸ்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விண்கலங்கள், விண்வெளி நிலையங்கள் (ISS) போன்றவை பூமியைச் சுற்றி வரும்போது அவை தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களின் பார்வைக்குள் வரும்போது மட்டுமே அவற்றுடன் தொடர்புகொள்ள முடியும். இந்த IDRS எனப்படும் புதிய தொழில்நுட்பம் நாம் பயன்படுத்தும் அருகலை போல எப்போதும் அவற்றுடன் தொடர்பில் இருக்க வழிவகை செய்கிறது. மேலும் விண்ணில் பறந்துகொண்டிருக்கும் விண்கலங்களுக்கிடையேயும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். முதன் முதலைல் இதை வாஸ்ட் நிறுவனத்தின் ஹேவன் – 1 என்ற வணிக விண்வெளி நிலையத்தில் செயலுக்கு வர உள்ளது. இது சிங்கப்பூருக்கு ஒரு பெருமையே.

மீண்டும் காணப்பட்ட மீன்

பூமியிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோய்விட்ட இனம் என்று கருதப்பட்ட ‘கெலி ப்ளேட்ஃபின்’ எனப்படும் ஒருவகைக் கெளுத்தி மீன் மீண்டும் சிங்கையில் காணக் கிடைத்தது. சிங்கை தேசியப் பல்கலையைச் சேர்ந்த மீன் ஆராய்ச்சியாளரான முனைவர் டான் ஹோக் ஹூய் எதிர்பாராத விதமாக நீ சூன் பகுதியில் சதுப்பு நிலத்தில் உள்ள ஒரு சிறு நீர்ப்பரப்பில் கண்டார். ஆனால் இந்த வகை மீன்கள் கடைசியாக 1993இல் சிங்கையிலிருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் உள்ள சுமத்திரா கடல் பகுதியில்தான் காணப்பட்டதாக தரவுகள் உள்ளன. அங்கிருந்து 2004 சுனாமியின்போது வந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் தற்போது இது சேர்க்கப்பட்டுள்ளது.

கரியமில வாயுவை அகற்றும் முயற்சி

2025 துவக்கத்தில் சிங்கையில் செயல்பாட்டுக்கு வரவுள்ள ஒரு ஆலையில் கடல் நீரிலிருந்து கரியமில வாயுவை அகற்றிச் சேகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. மின்னாற்பகுப்பு முறையில் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் பிரிக்கப்பட்ட பின்னர், இருக்கும் கரியமில வாயுவை கால்சியம் மக்னீசீயம் போன்ற தாதுக்களுடன் சேர்த்து சுண்ணாம்புக் கட்டிகளாக ஆக்கி அவற்றை மீண்டும் கடலுக்குள்ளோ தனியாகவோ சேமித்து வைக்கலாம். சுமார் 10,000 ஆண்டுகள் வரை அவை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகையில் இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 110 ஆயிரம் டன் அளவிலான கரியமில வாயுவை கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் கிடைக்கும் ஹட்ரஜனைக் கொண்டு இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்யமுடியும்.

உண்குச்சிகளிலிருந்து அறைகலன்கள்

சிங்கையைச் சேர்ந்த சாப்வேல்யூ எனும் ஒரு தனியார் நிறுவனம், உணவுக்குப் பின்னர் தூக்கியெறியப்படும் உண்குச்சிகளைச் சேகரித்து அவற்றை பொடியாக்கி, அதிக வெப்பத்தில் பிசினுடன் சேர்ந்து அழுத்தி சிறு பலகைகளாக உருவாக்குகிறது. பின்னர் இந்தப் பலகைகள் சிறு கூடைகள் முதல் அலுவலகங்களில் பயன்படும் பெரிய மேசை வரை பல்வேறு விதமான சிறிய, பெரிய அறைகலன்களாக வடிவெடுக்கின்றன. மற்ற மரத்தால் செய்யப்பட்ட கலன்களைப் போலவே இவையும் திடமாகவும் உறுதியாகவும் நீண்டநாள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம், மரங்கள் வெட்டப்படுதல் போன்ற சூழலியல் தீமைகள் குறைகின்றன.