வாசிப்பனுபவம்

0
114
மஹேஷ

இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீடு. நூலின் தலைப்பைப் பார்த்ததுமே நினவுக்கு வந்தது ‘நினைவில் காடுள்ள மிருகம்…’ என்ற மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை.

நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப் பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன

இது அத்தனையையும் இந்தத் தொகுப்பை வாசித்தபின் உணரலாம். கவிஞரின் மனநிலையையும் ஆழங்காணலாம். தொகுப்பிலுள்ள முதல் கவிதையில்,

கருப்புப் பேரீச்சம்பழங்கள்
அத்தனை பகல்களின் ஒளியையும்
தம்முள் ஒளித்துக்கொண்டன

என்கிறார். இந்த முதல் வரியிலேயே கவிஞர் தான் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று நிலைநிறுத்திக்கொள்கிறார். இந்த வரிகள் தரும் புத்துணர்ச்சி கொஞ்சம் அலாதியானது. நாங்கள் பொள்ளாச்சியில் படிக்கும்போது பக்கத்துக் கடலைக்காட்டில் பன்றிகளோடு போட்டி போட்டு வேர்க்கடலைச் செடிகளை பிடுங்குவோம். புதிதாகப் பிடுங்கப்பட்ட சேறு அப்பியிருக்கும் பச்சை வேர்க்கடலைச் செடியின் ஈரத்தை உணர்வது, பார்ப்பது, முகர்வதுபோலவே இருந்தது.

கவிதைக்கு எளிமை ஒரு விதமான அழகு என்றால் கொஞ்சம் பூடகமாக, கொஞ்சம் கனவுக் காட்சிகளாகச் சொல்வதும் ஒரு அழகு. அந்த கனவுக் காட்சிகளைக் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார் மோகனப்பிரியா. ஒரு சிறுமியாக அப்பாவோடு அவர் வேலை செய்த நூற்பாலைக்குப் போனதையும், பிறகொரு காலத்தில் நின்று போன அந்த இயந்திரங்களின், அந்தச் சுவர்களின் மௌன கீதங்களைக் கேட்ட சாட்சியாக மிக எளிமையாக நேரடியாக ஒரு கவிதையில் காட்டுகிறார். அதே சமயம் ‘கானல் வெளி’ கவிதையில் கொஞ்சம் தங்கி இருந்து ஆசுவாசப்படுத்தி அனுபவிக்கும் வகையில் ஒரு கனவுக் காட்சியாகக் காட்டுகிறார்.

அந்த நூற்பாலை கவிதை லிங்குசாமி எழுதிய ஒரு கவிதையை நினைவுபடுத்தியது.

யாரோ தெரியவில்லை
அந்த இரவு நேரப் பேருந்தின்
கடைசி இருக்கையிலிருந்து
தொடர்ந்து
விசும்பல் சத்தம்
வந்துகொண்டே இருந்தது

‘நினைவுத்துளிகள்’ – நாமே நம்மிடம் அன்னியப்பட்டு நிற்கும் தருணங்கள். ஒரு குடும்பப் புகைப்படத்தில் இருக்கும் நமது குழந்தைமை எங்கோ தொலைந்து போனது… உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தால் வெளிப்படும் ஒரு முப்பரிமாணப் படம் போல கவிதைக்குள்ளிருந்து காட்சிகள் வெளிப்பட்டு எழுந்து வருகின்றன.

காணாத கண்ணிமைகளில்
நரை கூடியிருந்தது ஒன்றுக்கு.
கன்னங்களில் துயரத்தை ஒதுக்கி
பற்களுக்கிடையே மறைத்திருந்தது
மற்றொன்று

வாசிக்கும்போதே படத்தில் உள்ளவர்களின் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை முகங்கள் காட்டுவதை, இத்தனை காலம் தாண்டியும் கவிஞரால் உணர முடிகிறது. அதைக் எழுத்தில் காட்டவும் முடிகிறது.

‘நகர்வின் கனம்’ – ஒரு சின்னஞ்சிறு அசைவில் நாம் விரும்பாத ஒரு நிகழ்வு, ஒரு வினை நிகழும்போது நம்மை ஏமாற்றமடையவைக்கும். நல்ல படிமம். அதுவும் ஒரு நட்பு கைகூடி வரும் (தூவும் மழையில்…) நிலையில் நம் ஒரு சொல்லோ ஒரு பார்வையோ அந்த விரும்பா வினையை நிகழ்த்துவதை எளிதாகச் சொல்கிறார். அதன் கனத்தையும் உணர வைக்கிறார்.

‘வேடம் தரித்த வீதி…’ சாதாரண பட்டியல் கவிதை போலத் தோன்றினாலும் கடைசி வரியில் நிற்கும் அந்த ஒற்றைப் பவளவல்லி மரத்தின் இரவுப் பிரதிபலிப்புகள் கவிதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன.

ஏதோ ஒருவிதமான அலைக்கழிப்பு, பல கவிதைகளில், வரிகளிலும் காட்சிகளிலும் வெளிப்படுகிறது. அதை வாசகனும் உணர முடியும். ‘யாமத்தில் கசியும் துக்கம்’, ‘சிலந்தி நகர்த்தும் காலம்’ போன்ற கவிதைகள் இவ்வகையில் அமைந்துள்ளன.

போலவே, பூனை என்னும் படிமம் பல இடங்களிலும் திரிந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கருத்தாக உருக்கொள்கிறது. அந்த உருமாற்றம் அழகாக நல்ல அனுபவங்களை அளிக்கிறது.

‘நகர்வின் வலி’ கவிதையில் “எலி மறந்த பூனையின் கண்கள்…” என்னும் வரியில் நமது வெகு இயற்கையான உள்ளுணர்வில் ஊறியுள்ள குணங்கள் கூட மாறும் கணங்களைச் சொல்கிறார்.

‘தத்துவத்தை வெளியேற்றுதல்’, ‘விடுவித்தல்’ – இந்தக் கவிதைகள் கிளைத்துக் கிளைத்து மலர வைக்கும் பரிமாணங்கள் எண்ணற்றவை. வாழ்வின் ஒரு கணக் களியாகட்டும், பல வருட வலியாகட்டும்… இந்தக் கவிதைகளில் இரு கை விரல்களும் கோர்த்துக் கொள்வது போல இயல்பாகப் பொருத்திப் பார்த்துவிடலாம்.

ஆனால், சில இடங்களில் வாசக வெளியை அடைத்து கவிஞரின் குரல் குறுக்கிடுகிறது. உதாரணத்திற்கு அணில் கவிதை – ‘நான் நகும் நொடியில்’ என்ற இடத்தில் கவிதை முடிந்துவிட்டது. ‘இந்த வயிறு நிறைவதை அறிவாயா?’ எனும்போது கவிஞர் வந்து தலையைத் திருப்புகிறார்.

நம்மில் திரியும் ஞாபகக் பெருங்களிறை அடக்குவது மிகவும் சிரமம். ஆனால் இப்படி கவிதைகளாகப் படைத்து அந்தக் களிற்றைப் பழக்கிவிடலாம். அதை கவிஞர் செய்து காட்டியிருக்கிறார்.

கடல் நாகங்கள் பொன்னி / கவிதைத் தொகுப்புஆசிரியர்: இன்பா / சால்ட் பதிப்பகம்

பொன்னி நதிக்கரையிலிருந்து திரைகடல் தாண்டி வந்து கடல் நாகங்களுடன் விளையாடும் ஒரு கவிஞரின் கவிதைத் தொகுப்பு இது.

திணைகள் மீதான காதலில் – குறிப்பாக சிங்கையின் திணைக்குறிப்புகளை வெளிப்படுத்தும் கவிதைகள். தொகுப்பில் வகைத் தலைப்புகளே கவிதையாக இருப்பது சிறப்பு.

நூலைக் கையில் வாங்கி உள்ளடக்கத்தில் கவிதைத் தலைப்புகளைப் பார்த்ததும் சட்டெனப் புருவம் உயர்த்தி புன்னகைக்கச் செய்தது ‘பனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகள்’. சிங்கையும் பனடாலும் இரண்டறக் கலந்தவை. சாதாரண தலைவலி, காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் பனடால். ஒவ்வொருவர் வீட்டிலும் எந்த நேரத்திலும் 50 பனடால் மாத்திரைகளாவது இருக்கும். அதில் 49 காலாவதி ஆனதாக இருக்கும். எனவே இந்த ஊரின் சாரட்டுகளுக்கு பனடால் சக்கரங்கள் தொடர்ந்து பூட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்.

‘முள் கரண்டியில் புரளும் விரல்கள்’ பகுதியில் உள்ள கவிதைகளை வாசித்த பின்னர் புரளுபவை விரல்கள் மட்டுமல்ல என்று உணர முடிகிறது. கடல் நாகங்களை என்பதை நாம் கையாளாத, நம்மால் கையாள முடியாத இயற்கை எனக்கொண்டால் அந்த இயற்கையை வியப்பதை நாம் தொகுப்பில் உள்ள கவிதைகளில் காணலாம்.

தேசம் தாண்டும் பொன்னி – நானும் நீங்களும்தான். இது என் புரிதல். உங்களுக்கு வேறு புரிதல்கள் இருக்கலாம். அதுவே கவிதையின் அழகியல். ரசனைக்கேற்ப வண்ணத்தை மாற்றிக் காட்டி மயக்கும். நிறக்குருடு ஆக்கும். பார்வையற்றவனுக்கும் கண்ணில் ஒளியைப் பாய்ச்சும். அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழற்றி தூர எறியும்.

நினைவுக் கோடரியால் பிளந்து பார்க்கிறாள்
மரித்துக் கிடக்கின்றன
உரக்குழியில் மண்வெட்டிகள்

‘மாய மலர்’ கவிதையில் உள்ள இந்த வரிகளை வாசிக்கையில் அவரவர் நினைவுக் குழிகளில் அவரவருக்குத் தெரிவது வெவேறாக இருக்கலாம்.

“நடுச் சாலையில் தன் நிழலைத் தானே தேடி அலைகிறான் புத்தன்” என்ற வரிகளை வாசித்தபின் பார்க்கும் சாலைப் பணியாளர்கள் எல்லாரும் புத்தர்களாகவே தெரிகிறார்கள.

“திங்கள் – சனி திரௌபதியின் சேலை – பசித்துக் கிடக்கிறது ஞாயிறு” – சிங்கையில் இது நிதர்சனம். உடலுழைப்புப் பணியாளர்கள் வாரம் முழுதும் இழுத்த சேலையைத் துவைத்துக் காயப் போட்டு மடித்து இஸ்திரி போட்ட ஞாயிறு பசித்துக் கிடப்பதை உணர முயற்சி ஏதும் தேவையில்லை.

“ஓடியாடி விளையாடிய மைதானத்தைக் காணாமல் தேடி அலைகிறது கிழட்டுச் சிங்கம்” – சதா தன் நிலவியலை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர்களும் காலத்தைத் தொலைத்த பொன்னிகள்தான் என்பது சிங்கையின் வளர்ச்சியில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம்.

“பட்டு பொம்மை விற்பவள் – வேறெந்த மரமும் நிழல் தரவில்லை – கண்சிமிட்டியபடி மாடிப்படியைக் காட்டுகிறாள்” – ஏதோ ஒரு ஆதிதொழிலின் மிச்சமிருக்கும் நிழல் படர்ந்திருக்கும் ஒரு திணையை திடமாக முன்வைக்கிறது.

பொதுவாக புழக்கத்தில் இல்லாத நல்ல சொற்களைப் பொருத்தமாகக் கையாண்ட விதத்திலும் கவிஞர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். ஞாழல் மலர், மஞ்சை, மௌவல், உமணர், உகிர் போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.

“கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன் எப்போதும் அழகைத் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். கவிதை அவனுக்கு ஒரு புதையல்” என்பார் பேராசிரியர் தி.சு.நடராசன். கவிஞர் இன்பாவுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

கவிதையின் அங்கங்களாக உரு (shape), நலன் (appropriateness, relevance), ஒளி (imaging) என்று கூறுவர். புதுக்கவிதைகளில் வடிவத்திற்கு சுதந்திரம் உண்டு. வாசகர் தொடர்புகொள்ளும் வகையிலும் உரையாடும் வகையிலும் இருக்கவேண்டும். கவிதையைக் காட்சிப்படுத்துதலில் அதன் சிறப்பு இருக்கிறது. இந்த மூன்றுமே இந்தத் தொகுப்பில் பொருந்தி வந்துள்ளது மற்றொரு சிறப்பு.