வெற்றுத் தளம்

நா.கீதா பிரேமா

‘அம்மா… பிரவுன் பூனேஏஏஏஏய்’ சாப்பாடு வைக்க வருபவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பூனைகள் சின்னவளின் சத்தம் கேட்டு லேசாக கழுத்தைத்தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் தூக்கத்தைத் தொடர்ந்தன. அக்காவின் பள்ளி வாகனம் வரும் வரை காத்திருக்கத்துணை இந்தப் பூனைகள்தான். சிங்கப்பூர் நகரம் முழுக்க அமைதியாக, ஆணவமாக நிறைந்து திரியும் குடியிருப்பாளர்கள்.

உறைமோர் வாங்கக் கூட வழியற்ற இந்தப் பெருநகரில் வெளிறிப்போன இந்தப்பகல், தனிமையின் அடர்த்தியைத் தன் பங்கிற்குச் சற்று உயர்த்தி கருணையற்று வெறிக்கிறது.

கூடிப் பேசும் முதியவர்கள் இல்லாத அடுக்கக வெற்றுத்தளங்களையே நினைத்துப் பார்க்க இயலாது. பெருந்தொற்றுக் காலத்தில் அவரவர் கூடுகளுக்குள் இன்னும் இறுக்கமாகச் சுருண்டுகொள்ள, பெரியவர்களுக்கு வீட்டில் முடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பூனைகளைப் போலவே இந்நகர முதியோரும்… எங்கும் நிறை ஒளியாக… அல்லது இருளாக.

வாழ்வெல்லாம் நின்று, ஓடி உழைத்ததில் வெளிப்பக்கமாக வில்லாக வளைந்து கிடக்கும் கால்களுடன், ஒன்றுமே செய்யத் தேவையில்லாத முழு நாளை என்ன செய்யவென்று தெரியாமல் கம்பு ஊன்றித் திகைத்து நோக்கிக் கொண்டிருப்போர் சிலர். பேரப்பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு, குழந்தைகளின் தள்ளு வண்டியின் தயவிலேயே நடந்து திரிவோர், பேட்டரி வண்டிகளின் துணை கொண்டு கடைகளுக்குப் போய் வருவோர், அதிகாலையிலேயே குழுவாக தாய்ச்சீ செய்து கொண்டிருப்போர், தாதிப் பெண்கள் தள்ளி வரும் சக்கர நாற்காலிகளில் உயிரே இல்லாத கண்களுடன் வெறுமையை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருப்போர், அதிதீவிரத்துடன் உடற்பயிற்சிக் கருவிகளில் இயங்கிக் கொண்டு அல்லது வியர்க்க விறுவிறுக்க ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு இருப்போர்…

‘அம்மா… தாத்தால்லாம் காணோம்?’ – என் அப்பாவைப் போன்ற சாயல் கொண்ட தாத்தாவைத் தேடுகிறது பிள்ளை. எதிர்ப்படும்போதெல்லாம் ‘ஹல்லோஓஓஓ’ உற்சாகமாக ஆரம்பித்து தொடர்ந்து குறைந்தது ஐந்து நிமிடங்களாவது பேசிக் கொள்வோம். வேடிக்கை என்னவென்றால் எனக்கு சீனமோ மலாயோ தெரியாது, அவருக்குத் தமிழ் தெரியாது. ‘ஹலோ அங்கிள், மக்கான் ரெடி? (சாப்பிட்டாச்சா)’ என தமிழர்களின் வழக்கமான எனது விசாரிப்பில் ஆரம்பித்து, ‘சாப்பாடு வாங்கத்தான் போகிறேன், பிள்ளை பள்ளிக்குப் போய்விட்டாளா? இன்று பெரிய மழை வரும், கால் முட்டுகளில் கடும் வலி, தொழுகைக்குப் போகிறேன், பிள்ளைக்கு மருத்துவரிடம் போகிறோம்’ என்று அனைத்து உரையாடலும் புரியும் விதமான சைகையில்தான். பிண்ணனி இசை போல அவரது மலாயும் என் ஆங்கிலமும் ஒலிக்கும்.

சக்கர நாற்காலியில் தினமும் முதியோர் நிலையத்துக்குப் பகலைக் கழிக்கச் செல்லும் அவரது மனைவி எதிர்ப்பட்டாலே ‘தங்கச்சீ, என்ன சாப்பாடு’ என்று முகம் மலர வருவார். இளவயதில் மலேசியத் தோட்டங்களில் வசித்தபோது தமிழர்களிடம் கற்றுக் கொண்ட சிலபல சொற்களில் அவருக்குப் பிடித்தமானது ‘தங்கச்சீ’தான் என்று தோன்றும். ‘அவளுக்கு முதியோர் இல்லத்தில்தான் நண்பர்கள், எனக்கு எல்லா இடத்தும் நண்பர்கள்தான்’ என்று பெரியவர் பெரிதாகச் சிரிப்பார். தாத்தா பாட்டியை தொலைபேசி வழியாக மட்டுமே காணும் பிள்ளைகளுக்கு இங்கு இவர்கள்தான் தாத்தாவும் பாட்டியும்.

‘தாத்தா வீட்ல தூங்குறாங்க போல…’ என்று பிள்ளைக்குப் பதில் சொல்லும்போதுதான் யோசித்தேன், யாருமே வெளியில் வராத ஊரடங்குக் காலங்களில் ஒரே முறை அவர்களைப் பார்த்ததுதான்… பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வு வந்து இப்போது இயல்புநிலை திரும்பிவிட்டாலும் அவர் தட்டுப்படவில்லையே… சட்டென ஒரு பெரும்பயம். ஒருவர் விடாது கொரோனா விதைத்துப் போனது இந்தப் பயத்தைத்தான். கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கைந்து முதியவர்களிலும் பெரியவர் இல்லை. மகன் வீடு இரண்டு பிளாக் தள்ளி இருப்பதாகச் சொன்னார்கள்… அங்கு போயிருப்பார்களோ…’

கைப்பேசியிலேயே தம்மைப் புதைத்துக் கொள்ளும் இளவயது, நடு வயது ஆட்கள் போலன்றி, மின் தூக்கியில் பிள்ளைகளோடு நின்றால் உடன் வரும் எந்த முதியவரும் இரண்டு சொற்கள் புன்னகைத்து விசாரிக்காமல் கடக்க மாட்டார்கள். உலகை தம் கண்கொண்டு நேராகப் பார்க்கும் தலைமுறை அவர்களோடு முடிந்து போகும் போல. அந்தக் கண்களைச் சந்திக்கும் ஆளின்றி, அவர்களும் மிட்டாய் உடைக்கும் விளையாட்டுகளில் மூழ்கிப் போவதையும் காணலாம்.

பணத்துக்குக் குறைவில்லாத முதுமைக் காலம் இங்கு அத்தனை பெரிய சிக்கல் இல்லை. பணிப்பெண் துணையுடன் சிங்கையின் கேசினோக்களில் மணிக்கணக்கில், ஆயிரக்கணக்கான டாலர்களுக்கான வில்லைகளுடன் சக்கர நாற்காலிகளிலேயே அமர்ந்து சுற்றி வரலாம். ஆற்றோர கேளிக்கைக் கூடங்களில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டே வாழ்வின் இறுதிக்கால இனிமையைக் கொண்டாடலாம், அக்கம்பக்க முதியோருடன் விளையாட்டுகளில் களிக்கலாம்…. இவர்கள் யாருடைய முதுமையும் அவர்களுக்கோ நமக்கோ பெரிதாகப் படுவதில்லை.

மாறாக, கூன் விழுந்த முதுகுடன் பொருட்கள் வைக்க உதவும் சக்கர வண்டிகளைத் தள்ளிக்கொண்டு, காலி அட்டைப்பெட்டிகளைத் தேடிச் சேர்த்து கடையில் எடைக்குப் போட்டு சில டாலர்கள் பெற்று அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் முதிய பெண்கள், மெட்ரோ நிலையங்களின் வாசல்களில் தம் மொத்த வலிமையையும் திரட்டி டிஷ்யூ தாள் பொட்டலங்களை ஏந்தி விற்பதற்காக நிற்போர், காசு இடுவோர் பற்றிக் கண்டுகொள்ளாது, தமக்குத் தெரிந்த இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டே இருக்கும் கிழவர்கள், ஒவ்வொரு அடியாகக் காலை இழுத்து இழுத்து நடந்து, துப்புரவுப் பணி செய்வோர்….

நகராது நின்றால் தள்ளி மிதித்து நசுக்கி மேலே ஏறிப்போய்விடும் உலகில் இவர்களை நிதானித்து நோக்குவோர் யாருமில்லை. கண்ணில் பட்ட அடுத்த நொடி பார்வையை விலக்கிகொண்டு ஓடுவதுதான் வாய்க்கும். உணவகங்களில் ஈரத்துணி கொண்டு நம் மேசையைத் துடைக்கும் தோல் சுருங்கிய நடுங்கும் கைகளைப் பார்க்கையில் நம் அகம் ஆழத்தில் நடுங்கிப் போகும். பொங்கி வரும் குற்ற உணர்வு என்ன செய்ய என்று திகைத்து விட்டு மறுபடி உள்ளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். பணத்தின் துணையோடு மட்டுமே ஊரில் விட்டு வந்த பெரியவர்களின் முகங்கள் சட்டென மனதில் வந்து போகும்.

‘அவரவர் பிழைப்பு அப்படி… யார்தான் என்ன செய்ய முடியும்’ என்ற வெற்றுச் சமாதானத்துடன் இப்படியான கணங்கள் கடந்தும் போகும்.

சீனர்களது முன்னோர் வழிபாட்டுக்கான மேசை ஏற்பாடுகள் அருகில் நடந்து கொண்டிருந்தன. சிங்கப்பூரின் இந்த வெற்றுத்தளங்களுக்கான பயன்பாடுகள் வெவ்வேறு வண்ணம் கொண்டவை. தீபாவளி நேரங்களில் மத்தாப்புகள் சிதறும். ஆகஸ்ட் மாத ‘பசித்திருக்கும் பேய்’களுக்கான வழிபாட்டில் சிங்க நடனமும் ட்ராகன் நடனமும் ஆர்ப்பாட்டமாக நடக்கும். சட்டென அலங்கரிக்கப்பட்டு திருமணமும் விருந்தும் நடக்கும். காப்பீட்டு முகவர்கள் குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்கான வரவேற்பறையாக மாறும். எப்போதுமே முதியோருக்கான எளிதான ஒன்று கூடல் இடம் இதுதான்.

மஞ்சள் திரைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருந்தால் யாரோ ஒருவரின் இறுதிப் பயணத்துக்கான நாட்கள் என்று பொருள். கவனமாக அவ்விடம் தவிர்த்து சுற்றிக் கொண்டு செல்வோம். ஓரிரு நாட்களில் சடங்குகள் முடிந்த பின் மறுபடி பழைய நிறம் கொண்டு விடும். இந்த வெற்றுத்தளங்கள் அறியாதவை என்று ஏதுமில்லை.

இன்னொரு வாரமும் கடந்து போனது. கடைக்குப் போக மின் தூக்கியில் இறங்கி வந்து ஐந்தாறு அடிகள் வைத்ததுமே கண்ணில் பட்டது மஞ்சள் நிறத் தடுப்புத் திரை. சட்டென ஒரு திகைப்பு. இந்த அடுக்ககத்தின் கீழேயே இறுதிச்சடங்கு நடக்கிறதென்றால் இங்கிருந்த யாரோதானா?? தெரிந்த முதியவர் யாராவதா? சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து கொண்டிருந்த, சின்ன விரல் அசைவுகளில் மட்டுமே உயிர் கொண்டிருந்த ஐந்தாம் தளத்தின் பாட்டியாக இருக்குமோ? ஒருவேளை….?! சே… அப்படி இருக்கக்கூடாது… வேறு யாராவது என்றால் பரவாயில்லையா? மனது இரண்டாகப் பிரிந்து கொண்டு குழம்பி நின்றது.

சரி, வேறு வழியில்லை… அங்கே வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியின் முன்னே இறந்தவரது படம் வைக்கப்பட்டிருக்கும். அந்த வழியே கடந்து சென்றால் பார்த்து விடலாம் என்று இரண்டு எட்டுகள் வைத்திருப்பேன்.

‘தங்கச்சீஈஈ…’ என்று பத்தடிகள் பின்னால் குரல் கேட்டது. படுவேகமாகத் திரும்பினேன். பெரியவர் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வர, அவர் மனைவி என்னை நோக்கி மகிழ்வாகக் கையசைத்தார். மனமெல்லாம் பொங்க வேகமாக அருகில் போனேன். ‘எங்கே போனீர்கள் பார்க்கவே முடியவில்லையே?’ என சைகை நடனம் ஆடி நான் கேட்க, ‘வீட்டை சற்று பழுது பார்க்க வேண்டி வந்ததால் சில மாதங்கள் மகன் வீட்டுக்குப் போய் விட்டோம்’ என்று பதில் நடனம் வந்தது.

விடுபடுதலும் நிறைவுமாக கையில் ஏந்தியிருந்த பொட்டலத்தைக் காட்டிக் கேட்டேன்…

‘மக்கான் ரெடி??’

‘நாசி லெமா எனக்கும் மீ கோரிங் மனைவிக்கும். வரலாமே சேர்ந்து உண்ணலாம்’ என்றார் பெரியவர்.

மறுப்பாகக் கையசைத்தேன் ‘இன்னொரு நாள் உறுதியாக… ஹரி ராயாவுக்கு பிரியாணி சாப்பிடலாம்’

‘கேன் கேன் லா… கண்டிப்பாக. கடவுளின் விருப்பமிருந்தால். இப்போதைக்கு இந்த இனிப்பைச் சாப்பிடு’ என்று பையில் துழாவி ஒரு சாக்லேட்டை எடுத்து கையில் தந்து விடை பெற்று மனைவியோடு நகர்ந்தார்.

உடனேயே இனிப்பை உறை பிரித்து வாயில் போட்டுக்கொண்டு மனதிலும் முகத்திலும் மலர்ந்த சிரிப்போடு நடக்கத் தொடங்கினேன்.

எதுவுமே வெறுமையாக இல்லை.