அறிமுகம்

எழுத்துகளின் அழகை ரசிப்பதிலும் அவற்றைப் பலவடிவங்களில் வரைந்து பார்ப்பதிலும் எழுபதுகளின் தொடக்கத்தில் மாணவனாக இருந்தது முதலே எனக்கு ஆர்வம் இருந்து வந்தது. வளர வளர அது மிகுந்தது; ஈடுபாடும் ஆழமானது. அதே எழுபதுகளின் இரண்டாம் பகுதியில் தமிழில் தட்டெழுதுவதை நானே கற்றுக்கொண்டு, தமிழ்த் தட்டச்சுப்பொறியைக் கொண்டு மிகப்பல ஆவணங்களைத் தட்டெழுத்தில் பதித்தேன்.
தமிழ்த் தட்டெழுத்தை நான் பெரிதும் விரும்பியதற்குக் காரணம், எந்தவித மின்னுட்பமும் இல்லாத அந்தப் பொறி இயங்கும் முறையும், தமிழ்த் தட்டெழுத்து முறையுமே. எடுத்துக்காட்டாக, முதலில் புள்ளியைத் தட்டி அதன்பிறகே அடியெழுத்தைத் தட்டவேண்டும். அடியெழுத்தைத் தட்டும்போது அந்த எழுத்து புள்ளியின் கீழ் சேர்ந்தவுடனே கட்டம் நகரும். இதேபோலத்தான் இகரம், ஈகாரம் ஏறிய உயிர்மெய் எழுத்துகளும். இந்தப் பொறியின் இயக்கம் இடைநிலைப்பள்ளி மாணவனாக இருந்த என்னை மிகவும் கவர்ந்தது.
தமிழ்த் தட்டெழுத்தை நான் பெரிதும் விரும்பியதற்குக் காரணம், எந்தவித மின்னுட்பமும் இல்லாத அந்தப் பொறி இயங்கும் முறையும், தமிழ்த் தட்டெழுத்து முறையுமே.

பல்கலைக்கழக வாழ்க்கை 1985இல் முடிந்தவுடனேயே தமிழ் எழுத்துகளைக் கணினிக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன். அன்று முதல் இன்று வரை இத்துறையில் பல வேலைகளைச் செய்திருந்தாலும் எழுத்துருவாக்கச் செயல்களை மட்டும் இந்தக் கட்டுரையில் பகிர விரும்புகின்றேன். இஃது ஏறக்குறைய 40 ஆண்டுகாலப் பயணம். முதன்மைப் பகுதிகள் சிலவற்றை மட்டும் இங்குச் சற்று ஆழமாகக் காண்போம்.
கணினித் திரைக்குள் தமிழ் எழுத்துகள்
இன்று நாம் பயன்படுத்தும் விண்டோசு, மெக்கிண்டாசு கணினிகள் 80களின் மையப் பகுதியில் மலேசியாவில் பொதுப்பயன்பாட்டில் இல்லை. எளிதில் கிடைக்கும் கணினிகளில் எம். எஸ். டாஸ். இயங்குதளமே இருந்தது. சுட்டி (mouse) பெரும்பாலும் விளையாட்டுகளுக்கும், ‘ஆட்டோகெட்’ (Autocad) போன்ற கட்டடக் கலைச் செயலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்தக் கணினிகளை வைத்துத் தமிழில் பணிகளைச் செய்யவேண்டும் என்றால் முதலில் இவற்றின் திரையில் தமிழ் எழுத்துகள் தோன்ற வழி செய்ய வேண்டும். இங்குதான் எனது முயற்சிகள் தொடங்கின.
எம். எஸ். டாசில் பயன்படுத்தக் கூடிய மொத்த எழுத்துகள் 256 மட்டுமே. இவற்றை படம்-1இல் காணலாம்:
இந்த எழுத்துகள் வன்பொருளில் (hardware) பொறிக்கப்பட்டிருக்கும். இதில் உள்ள சில எழுத்துகளுக்குப் பதில் தமிழ் எழுத்துகளைச் சேர்க்கலாம் எனும் முயற்சியில் இறங்கினேன். அந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற முயற்சிகளை யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஒதுக்கப்பட்டுள்ள இந்தக் குறைவான எண்ணிக்கையிலான குறுகிய கட்டத்திற்குள் தமிழ் எழுத்துகளை வடிவமைக்க வேண்டும். எவ்வாறு வடிவமைத்தேன் என்பதை மட்டும் இங்கே விளக்குகிறேன்.

படம்-1இல் உள்ள எழுத்துகளில், முதல் வரிசையில் உள்ள 32 எழுத்துகளும் கட்டளைகளைக் குறிப்பவை. இவற்றை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. அதனால் இந்த முதல் 32 எழுத்துகளையும் அப்படியே விட்டுவிட்டேன். இரண்டாம் வரியில் உள்ள முதல் எழுத்து இடைவெளி (space). இதனையும், இதனைத் தொடர்ந்து வரும் 95 எழுத்துகளும் எல்லாச் செயலிகளும் பயன்படுத்தும் நிறுத்தற்குறிகள், ஆங்கில எழுத்துகள், எண்கள் போன்றவை. இவற்றை மாற்றினால் கணினியையே சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகலாம். எஞ்சி இருப்பவை 128 எழுத்துகள். இவற்றை ‘மேலிட எழுத்துகள்’ என்று சொல்லலாம். இவற்றையும் மற்ற செயலிகள் பயன்படுத்தும். இந்த மேலிட 128 இடங்களில், சிலவற்றை தமிழுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்த மேலிட 128 இடங்களில், சிலவற்றை தமிழுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.

இடம்: ஒரே கட்டத்தில் அடங்கும் எழுத்து.
வலம்: இரண்டு கட்டங்களில் அடங்கும் எழுத்து.
தமிழ் எழுத்துகள் அனைத்தையும் தனித்தனியே அடக்கமுடியாது; இடமும் போதாது. உயிர் எழுத்துகள், ஆய்தம், உயிர்க்குறியீடுகள், மெய்யெழுத்துகள், அகரம், உகரம் ஊகாரம் ஏறிய உயிர்மெய் எழுத்துகள், ‘டி’, ‘டீ’ ஆகிய எழுத்துகள் – இவற்றை மட்டும் சேர்த்தால் போதும் தமிழை முழுமையாக எழுதிவிடலாம் என்று தோன்றியது. இவை அனைத்தும் 128 இடங்களில் அடங்கிவிடும். என்றாலும் சில மேலிட எழுத்துகளை மாற்றாமல் வைத்துவிடலாம் என்று தோன்றியது. மேலும் ‘ண’, ‘ண்’, ‘ணு’, ‘ணூ’ போன்ற அகலமான எழுத்துகளை ஒரே கட்டத்தில், அதுவும் 8 புள்ளிகளே கொண்ட கட்டத்தில் அடக்க முடியாது. இவற்றுக்கு இரண்டு கட்டங்கள் தேவைப்பட்டன.
இவ்வாறு வடிவமைத்துத் தேவையான எழுத்துகளையும் பகுதிகளையும் கணினியின் வன்பொருளில் சேர்த்துவிட்டேன். சேர்த்தபின் கணினியைத் தட்டும்போது அதன் திரையில் முதன் முதலில் தமிழ் எழுத்துகளைக் கண்டேன்!
சொற்தொகுப்பும் தமிழ் உள்ளீடும்
வன்பொருள் வழியாகத் தமிழ் எழுத்துகளைச் சேர்த்ததே கணினியில் ஏற்கனவே ஆங்கிலத்திற்காக உள்ள சொற்தொகுப்புச் செயலிகளில் தமிழும் புழங்கவேண்டும் என்பதற்காகவே. அதனைச் செய்தாகிவிட்டது. இனி தமிழை உள்ளிட வேண்டும். எம்.எஸ்.டாஸ் கணினிகளில் உள்ளிடுமுறைகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பு இல்லை. ஆனால், விசைப்பலகையில் இருந்து வரும் கட்டளைகளை இடைநிறுத்தி மாற்றி அமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, விசைப்பலகையில் ‘A’ எனும் ஆங்கில எழுத்தைத் தட்டினால், அந்தக் கட்டளையை இடைநிறுத்தி ‘A’ என்பதற்கு பதில் தமிழ் எழுத்தான ‘அ’ எழுதப்பட்டது என்று கட்டளையை மாற்றிவிடலாம். இவ்வாறே உள்ளிடு முறையை அமைத்தேன். இதனைக் கணினிக்கு மிக நெருக்கமான சில்லு மொழியில்தான் (assembly language) எழுதவேண்டும். பொறியியல் பட்டப்படிப்பில் இந்த மொழியைக் கற்றிருந்ததால் எழுதி முடித்தேன்!
அச்சு
எம்.எஸ்.டாஸ் இயங்குதளத்தில் தமிழுக்கான இந்தக் கட்டமைப்பை உருவாக்கிய காலத்தில், புள்ளி வரிசைகளைக் கொண்டு எழுத்துகளை அச்சிடும் புள்ளியச்சுப்பொறிகளே (dot matrix printers) மிகுதியான பயன்பாட்டில் இருந்தன.

வலம்: செயலியின் இயக்கத்தில் அச்சாகும் தமிழ் எழுத்து.
படம்-3இல் காணப்படும் ஆங்கில எழுத்தான ‘H’ எழுத்தை அச்சிட 6 முறை பின்கள் தாளில் புள்ளிகளை இடும். முதலிலும் கடைசியிலும் எல்லா பின்களும் புள்ளிகளைத் தாளில் பதிக்கும். இடையில் உள்ள 4 இடங்களில் நடுவில் உள்ள பின் மட்டுமே புள்ளியிடும். இந்த அடிப்படையில்தான் தமிழ் எழுத்தான ‘ர்’ எழுத்துக்கு எந்தெந்தப் புள்ளிகள் இடப்படுகின்றன என்பதனைப் படம் 3-இன் வலப் பகுதி காட்டுகிறது.
இதுபோலவே எல்லாத் தமிழ் எழுத்துகளையும் இந்தப் புள்ளியச்சுப்பொறியை அச்சிடவைத்தேன்.
வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துகளை ஒரு கோப்பினுள் சேர்ப்பதன்வழி தமிழ் எழுத்துகளை அச்சிடுவதற்கான தரவை (data) ஒரு வட்டில் (diskette) சேமித்துப் பயன்படுத்தத் திட்டமிட்டேன். இதுவே நான் உருவாக்கிய முதல் எழுத்துரு. ஒரே எழுத்துருவைக் கொண்டு மாற்று வடிவங்களையும் உருவாக்கினேன். இந்தத் தீர்வுகள் அடங்கிய செயலித் தொகுப்புக்கு “முரசு” என்று பெயரிட்டேன். இதே செயலிதான் பிறகு “முரசு அஞ்சல்” என்று பெயர் மாற்றம் கண்டது.
ஒரே எழுத்துருவைக் கொண்டு மாற்று வடிவங்களையும் உருவாக்கினேன். இந்தத் தீர்வுகள் அடங்கிய செயலித் தொகுப்புக்கு “முரசு” என்று பெயரிட்டேன்
ஒரே ஆவணத்தில் பல எழுத்துருக்கள்
நடைமுறையில் இருந்த வெர்ட் ஸ்டார் (Word Star), வெர்ட் பெர்ஃபெக்ட் (Word Perfect) போன்ற செயலிகளில் ஆங்கிலத்திலும் மலாயிலும் ஒரே ஆவணத்தில் வெவ்வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்த முடிந்தது. தமிழில் அச்சுக்குப் போகும்போது, அச்சுமுறை வேறாக இருந்ததால் அச்சிட முடியவில்லை. நான் மேலே உருவாக்கிய தமிழ் அச்சுமுறை ஆங்கிலத்தைவிட வேறுபட்டிருந்தது. அதனால், தமிழில் பக்க வடிவமைப்பைச் செய்வதற்கு வேறொரு அமைப்புத் தேவைப் பட்டது.
பக்க வடிவமைப்புக்காக வெற்றெழுத்தை (plain text) தட்டெழுதப் பயன்படுத்தப்படும் செயலிகளைப் பயன்படுத்தினேன். அப்போது சைட் கிக் (Side Kick) எனப்படும் செயலி வெற்றெழுத்து உள்ளீட்டுக்கு மிகவும் புகழ் பெற்றிருந்தது. பயன்பாட்டுக்கு எளிமையானதாகவும் இருந்தது. வெற்றெழுத்துக்கிடையில் பக்க வடிவமைப்புக்கான கட்டளைகளை அறிமுகப்படுத்தினேன். தட்டச்சுப் பொறி சற்றுப் பின்சென்றது. கணினிகளில் பரவலான தமிழ்ப் பயன்பாடு மிகத்தொடங்கியது.
லேசர் அச்சுப்பொறிகள்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எம்.எஸ்.டாஸ் கணினிகளே பரவலான பயன்பாட்டில் இருந்தாலும், லேசர் அச்சுப் பொறிகளும் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கிவிட்டன. வெர்ட் ஸ்டார், வெர்ட் பெர்ஃபெக்ட் போன்ற செயலிகளைக் கொண்டு அழகான ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தித் தரமான ஆவணங்களை உருவாக்கி வந்தனர். அப்போதுள்ள லேசர் அச்சுகள் பெரும்பாலும் எச்.பி. நிறுவனத்தின் பி.சி.எல். (PCL) தொழில்நுட்பத்தையே பயன்படுத்தின. இந்தத் தொழில்நுட்பத்திற்கான எழுத்துருக்களையும் தமிழில் உருவாக்கினேன். லேசருக்கான எழுத்துருக்களையும் கோப்புகளுக்குள் அடக்கினேன். இந்த உருவாக்கம், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வெளிவந்த தமிழ் நாள், வார, மாத இதழ்களையே மாற்றி அமைத்தது.
மலேசியாவில் வெளிவந்து கொண்டிருந்த ‘மயில்’ எனும் கல்வித்துறை வார இதழே முதன் முதலில் இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் துணிந்து இறங்கியது. அதன்பின் ‘நயனம்’ எனும் வார இதழும் அதற்குத் தொடர்புடைய ‘தமிழ் ஓசை’ என்னும் நாளிதழினரும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த வெற்றி சிங்கப்பூரின் ‘தமிழ் முரசு’ நாளிதழையும் ஈர்த்தது. அவர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
மலேசியாவில் வெளிவந்து கொண்டிருந்த ‘மயில்’ எனும் கல்வித்துறை வார இதழே முதன் முதலில் இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் துணிந்து இறங்கியது.
விண்டோசின் வருகை
மெக்கிண்டாசுக் (Macintosh) கணினிகளைவிட மலிவான விண்டோசுக் (Windows) கணினிகள் வெளிவந்தவுடன், அதில் இயங்கிய பேஜுமேக்கர் (Page Maker) எனும் செயலி தமிழ் அச்சு உலகத்தில் மீண்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திற்று. எம்.எஸ்.டாசில் இருந்ததுபோல் இல்லாமல், ஆப்பிளின் மெக்கிண்டாசைப் போலவே விண்டோசிலும் திரைக்கும் அச்சுக்கும் ஒரே எழுத்துரு நுட்பம்தான். வடிவமைப்பைத் திரையிலேயே பார்க்கலாம். திரையில் பார்த்தவாறே அச்சிலும் பெறலாம் (WYSIWYG).
இதற்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றின புதிய எழுத்துரு தொழில்நுட்பங்கள். எண்பதுகளில் அடோபி உருவாக்கிய போஸ்டுஸ்கிரிப்ட் (Post Script) நுட்பமும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஆப்பிள் உருவாக்கி, அதன்பின் விண்டோசிலும் சேர்க்கப்பட்ட துரூ-டைப் (TrueType) நுட்பமுமே அவை. இந்த நுட்பங்களைக் கொண்டு தமிழ் எழுத்துருக்களை உருவாக்கத் தொடங்கினேன். எழுத்துருக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருந்தது.
யூனிகோடு
யூனிகோடு என்பது உலகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற எல்லா மொழிகளுக்குமான பொதுவான ஒரு குறியீட்டுத்தரம். தமிழ் எழுத்துகளைத் தமிழ் எழுத்துகள் என்று மின்னுலகத்திற்கு அடையாளம் காட்டுவதே இந்த யூனிகோடு செந்தரம்தான்.

இந்தத் தரம் இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்னரே முழுமையாகக் கணினிகளில் சேர்க்கப்பட்டது. விண்டோசு 2000த்தில் ‘லதா’ என்னும் தமிழ் எழுத்துருவையும் சேர்த்தார்கள். வட இந்தியரான ஆர்.கே.ஜோஷி என்பவரால் இடைமுகப் பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த எழுத்துரு, வேறு தமிழ் எழுத்துருக்கள் இல்லாத காரணத்தால் பரவலான பயன்பாட்டை விரைவாக அடைந்தது. இதற்கு முன் வந்த விண்டோசு கணினிகளில் தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள் சரிவர இயங்குவதற்கான கட்டமைப்பு இல்லை.
ஆப்பிளின் மெக்-ஓஎஸ் இயங்குதளம், எல்லா யூனிகோடு எழுத்துகளும் இயங்குவதற்கான கட்டமைப்பை அதே 2000ஆம் ஆண்டு சேர்த்தது. ஆனால் ‘இணைமதி’ என்னும் தமிழ் எழுத்துருவும், அஞ்சல், தமிழ்-99 ஆகிய உள்ளிடு முறைகளும் 2004ஆம் ஆண்டே சேர்க்கப்பட்டன. இந்த எழுத்துருவையும், உள்ளிடுமுறைகளையும் ஆப்பிளுக்காக நானே உருவாக்கினேன். அப்போது, இருபது ஆண்டுகளை எட்டிக்கொண்டிருந்த எனது முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இது அமைந்தது. ஐபோன், ஐபேட் முதலிய ஆப்பிள் கருவிகளில் எல்லாம் தமிழுக்கும் மேலும் 13 மொழிகளுக்கும் நான் உருவாக்கிய எழுத்துக்கள் போய்ச் சேர்ந்தது.
அஞ்சல், தமிழ்-99 ஆகிய எழுத்துருவையும், உள்ளிடுமுறைகளையும் ஆப்பிளுக்காக நானே உருவாக்கினேன். ஐபோன், ஐபேட் முதலிய ஆப்பிள் கருவிகளில் எல்லாம் தமிழுக்கும் மேலும் 13 மொழிகளுக்கும் நான் உருவாக்கிய எழுத்துக்கள் போய்ச் சேர்ந்தது.
யூனிகோடு செந்தர அறிமுகம் எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழின் பயன்பாட்டை முழுமையாக மாற்றியமைத்தது. தமிழ் எழுத்துருவாக்கத்திற்கு யூனிகோடு கொண்டு வந்த சில மாற்றங்களை மட்டும் இங்கே விளக்குகிறேன்.
உருப் போடுதல் (shaping)
யூனிகோடுக்குமுன் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள், வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொறு எழுத்தும் ஒரு வடிவம். அவை எழுத்துகளாகக் கணினிக்குள் கருதப்பட்டதில்லை. யூனிகோடு முறையில் வடிவங்களுக்கும் எழுத்துகளுக்கும் வேறுபாடு உண்டு. ‘மொ’ என்பது யூனிகோடுக்குமுன் இருந்த முறையில் – கொம்பு, ம, கால் என – மூன்று வடிவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் யூனிகோடில் ‘மொ’ என்பது, மகரம் ஒகரக் குறியீடு எனும் ‘இரண்டு எழுத்துகள்’ என்றே கணினி பொருள் கொள்ளும்.

ம, ஒகரக் குறியீடு எனும் இந்த இரண்டு எழுத்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரும் போது, கணினியில் உள்ள உரு போடும் முறை (shaping engine), மகரத்திற்குப் பின் வரும் ஒகரக் குறியீட்டிற்கு இரண்டு வடிவங்கள் இருப்பதை உணர்ந்து (இடப்புறம் உள்ள கொம்பு வலப்புறம் உள்ள கால்) அதற்கேற்றவாறு வடிவங்களை தானாகவே ஒழுங்குபடுத்தி அடுக்கிவிடும். அவ்வாறு அடுக்கியவுடன், இது ‘மொ’ என்பது நமக்குத் தெரியும். ஆனால் ‘மு’ விற்கான வடிவம் மகரத்தையும் உகரக் குறியீட்டையும் இணைக்கும் தனி வடிவம். இங்கே அடுக்கும் வேலை இல்லை. மாற்றும் வேலையே உள்ளது. ‘மகரமும் உகரக் குறியீடும் இணைந்து வந்தால், இந்த (மு) வடிவத்தைச் சேர்’ எனும் கட்டளையை நாமே எழுத்துருவில் சேர்க்கவேண்டும்.
எழுத்துகளை ‘எழுத்துகளாகவே’ கணினிக்குள் சேமிப்பதும் புழங்குவதும் யூனிகோடின் முதன்மையானக் கோட்பாடுகளில் ஒன்று. இதனால் மொழிக்கணிமைக்கு மிகப்பல நன்மைகள் உள. சேமிக்கப்பட்ட எழுத்துகளை வடிவங்களாக மாற்றித்தருவது, அதாவது உருப்போட்டுக் கொடுப்பது, எழுத்துருவின் வேலை. அதனை மட்டும் இங்கே காண்போம்.
தற்போது இரண்டு வகையான உரு போடும் முறைகள் உள்ளன. ஒன்று ஆப்பிளின் ஏ.ஏ.டி. (AAT: Apple Advanced Typography). மற்றொன்று மைக்குரோசாப்டும் அடோபியும் சேர்ந்து உருவாக்கிய ஓப்பன் டைப் (Open Type). தமிழுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இரு முறைகளிலும் உள்ளன!
அம்சங்கள் (features)
எழுத்துகளை உருப்போட்ட பிறகு, எழுத்துருவில் எழுத்துருவியலாளர் சேர்த்துள்ள அம்சங்களை வெளிக்கொணர வேண்டும். ஓர் எழுத்துருவில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்களைச் சேர்க்கலாம். தமிழ் எழுத்துகளுக்கு அழகு சேர்க்கும் சில சிறப்பு அம்சங்களைக்கொண்டு எழுத்துருகளுக்கு மேலும் அழகு சேர்க்கலாம். அவற்றுள், நான் அடிக்கடிப் பயன்படுத்தும் மூன்று அம்சங்களாவன: ‘வரலாற்று வடிவங்கள்’, ‘சூழிட மாற்று வடிவங்கள்’, ‘கையெழுத்து ஒட்டுகள்’. இவற்றைச் சற்று ஆழமாகக் காண்போம்.
வரலாற்று வடிவங்கள் (Historical Ligatures)
தமிழில் உள்ள ஏழு எழுத்துகளின் வடிவங்கள் 80களில் மாற்றம் கண்டன. ணா, னா, றா, லை, ளை, ணை, னை ஆகிய எழுத்துகளே அவை. கையெழுத்துப் பயன்பாட்டில் இருக்கும் இந்தப் பழைய வடிவங்களைச் சில வேளைகளில் அச்சில் தோற்றுவிக்கும் தேவை ஏற்படும். இதுபோன்ற தேவைகள் தமிழில் மட்டும் அல்ல. மற்ற மொழிகளிலும் இருக்கின்றன. இவற்றையும் எழுத்துருவில் சேர்ப்பதற்கு வகைசெய்வதுதான் இந்த வரலாற்று வடிவங்கள் எனும் அம்சம். நடைமுறையில் உள்ள வடிவம் இயல்பான வடிவமாகவும், வரலாற்று வடிவங்கள் விருப்பத்தேர்வாகவும் எழுத்துருவில் அமையும்.
சூழிட மாற்று வடிவங்கள் (Contextual Alternates)

இந்த அம்சத்தைப் பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம். இரண்டை மட்டும் காண்போம்:
முதலாவது: உரசல்களைத் தவிர்ப்பது. இது பெரும்பாலும் காட்சி எழுத்துருக்களுக்குப் பயன்படும் (display typefaces). கீழிறக்கம் (descenders) உள்ள எழுத்துகள் பக்கத்துப்பக்கத்தில் வந்தால் கீழே உரசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றைத் தடுப்பதற்காக சூழிட மாற்று வடிவங்களை எழுத்துருவில் சேர்க்கலாம்.
படம் 5-இல் முதல் சொல்லில் இரண்டாவதாக வரும் ற எழுத்தின் வால், முதலில் வரும் ற-வின் வாலைவிடச் சற்றுச் சுருங்கி இருப்பதைப் பாருங்கள். அவ்வாறு சுருக்காமல் விட்டால் இரண்டாவது ற முதல் ற-வோடு உரசும். இரண்டு ற எழுத்துகள் பக்கம்பக்கமாக வருவது ஒரு சூழிடம் (context). இந்த இடத்தில், மாற்றுவடிவம் (alternate form) எனும் விதியைக் கட்டளைகளின் வழி இந்த அம்சத்தில் சேர்க்க வேண்டும். இதேபோலத்தான் படத்தில் உள்ள மற்ற சொற்களில் ஏற்பட்டிருக்கும் உரசல்களும் தீர்க்கப்பட்டுள்ளன.

இரண்டாவது: விளையாட்டுத் தன்மையைச் சேர்ப்பது (playful display typefaces). படம் 6-இல் உள்ள எழுத்துரு, குழந்தைகளின் விளையாட்டுச் செயலிகளுக்காக நாங்கள் உருவாக்கி வரும் பன்மொழி எழுத்துரு. ஒரே எழுத்து இருமுறை தோன்றும் போது, இரண்டாவது வடிவத்தை விளையாட்டுக்காக மாற்றிப் பார்த்தோம். படம் 6-இல், ‘பட்டம்’ எனும் சொல்லில் புள்ளிக்குக் கீழுள்ள ‘ட’ வும், அதன் பக்கத்தில் உள்ள ‘ட’ வும் சற்று வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. இதையே ஆங்கிலச் சொற்களில் உள்ள ‘aa’, ‘oo’ எழுத்துகளிலும் காணலாம். இந்த எழுத்துருவின் பெயர் ‘ஆம்பல்’.
கையெழுத்து ஒட்டுகள் (Cursive Attachments)

பயன்படுத்தப்பட்ட சூழிட மாற்று வடிவங்கள்.
ஒருவருடைய கையெழுத்தை எழுத்துருவாக மாற்றுவது மிகவும் நுணுக்கமான செயல். ஆயினும் கையெழுத்தின் வேகத்தைக் காட்டச் சில ஏற்பாடுகளைச் செய்யலாம். வேகமாக எழுதும்போது இணைந்து வரும் எழுத்துகளை அப்படியே எழுத்துருவில் இணைக்க உதவுவதுதான் கையெழுத்து ஒட்டுகள் எனும் அம்சம்.
முதலில் எழுத்தின் இழுப்புகள் (strokes) எங்கே தொடங்குகின்றன என்பதனையும் எங்கே முடிகின்றன என்பதனையும் ஒரு பட்டியலில் குறிப்பிட வேண்டும். இந்தப் பட்டியலையே கட்டளைகளாகக் கருதி, முடிவு உள்ள ஓர் எழுத்துக்குப்பின் தொடக்கம் உள்ள ஓர் எழுத்து வந்தால், எழுத்துருநுட்பம் அதைச் சேர்த்துவிடும். படம் 8 இதனைத் தெளிவாக விளக்கும்.

‘தி’ எழுத்தும் ‘கு’ எழுத்தும் அடுத்த எழுத்தோடு ஒட்டிக் காணப்படுகின்றன. கீழ் வரி: ஒட்டுகள் அற்ற எழுத்துகள்.
அம்சங்களைச் செயல்படுத்தும் செயலிகள்
மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் மைக்குரோசாப்ட்டு செயலிகளைத் (வெர்ட், பவர் பைண்ட், எக்சல்) தவிர மற்றச் செயலிகள் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன. அடோபி செயலிகள் அனைத்திலும், ஆப்பிள் செயலிகள் அனைத்திலும், லிப்ரா போன்ற பெரும்பாலான திறவூற்றுச் செயலிகளிலும் இவை அழகாகச் செயல்படும். கணினிகளில் மட்டுமன்றி, ஐபோன் ஆண்டிராய்டு கருவிகளிலும் இந்த அம்சங்கள் சரிவர இயங்கும்.
நிறைவுரை
கணினிகளில் தமிழ் எழுத்துகளைச் சேர்க்கும் பணியை என்பதுகளின் மத்தியில் தொடங்கினேன். இந்தப் பணி, திரைகளில் தொடங்கி, பல்வேறு அச்சுப்பொறிகளுக்கேற்பப் பல வடிவங்களில் எழுத்துருக்களை உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது; மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் அச்சுத்துறையையே மாற்றியமைத்தது.
லேசர் அச்சுப்பொறிகளும் விண்டோசு, மெக்கிண்டாசுக் கணினிகளும் எழுத்துவாக்கப் பணிகளைப் பெருமளவில் எளிமைப்படுத்தின. யூனிகோடு எனும் உலக வரிவடிவங்களுக்கான செந்தரம், எல்லா மொழி எழுத்துகளுக்கான நுட்பவியல் பயன்பாட்டைத் தரப்படுத்தி, எழுத்துருவாக்கப் பணிகளைப் பரவலாக்கியது. ஒருவர் உருவாக்கிய எழுத்துருவை, எல்லாத் தமிழ் ஆவணங்களுக்கும் பயன்படுத்தலாம் எனும் வசதியைத் தந்தது யூனிகோடு தரமே.
யூனிகோடை அடிப்படையாகக் கொண்டு எழுத்துருக்களை அழகுற வடிவமைக்கவும், பல்வேறு அம்சங்களைச் சேர்க்கவும் ஓப்பன் டைப், ஏ.ஏ.டி எனும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவை தமிழ் எழுத்துருவியல் வளர்ச்சிக்கும் பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒரே எழுத்துருவில் தமிழோடு மற்ற மொழிகளுக்கான எழுத்துருக்களையும் உருவாக்கலாம். இதனால் எழுத்துருவியலாளர்களின் பயனர் எண்ணிக்கையும் பன்மடங்கு விரிவடைகிறது.
அழகான தமிழ் எழுத்துருக்கள் தொடர்ந்து உருவாக்கம் காணவேண்டும். ஆர்வமும் பயன்பாடும், புதிய உருவாக்கங்களை ஊக்குவிக்கும் பண்பாடும் இருந்தால் புதிய புதிய உருவாக்கங்களை நாம் கண்டு, பெற்று மகிழலாம்!
[கணித்தொகை – தமிழிணையம்99 முதல் கணித்தமிழ்24 வரை, பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாட்டுச் சிறப்பு மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கமான வடிவம். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாகத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒருங்கிணைத்த மாநாடு, பிப்ரவரி 8 முதல் 10 வரை சென்னையில் நடந்தது]
இணைப்புகள்:
அன்றாடக் கணினிகளில் தமிழ் நுழைந்த கதை – பகுதி 1
அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 1
அன்றாடக் கணினிகளில் தமிழ் நுழைந்த கதை – பகுதி 2
அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 2