கன்னி

இன்றைக்கும் எதிர்வீட்டின் வாயில்படியில் சாந்தி வந்து நிற்கிறாள். வழக்கம்போலவே அவளது முகம் தென்பட்டவுடன் வாயில் கதவு மூடப்பட்டுவிடுகிறது. அவள் வெளியேறும் வரை அந்த வீட்டின் கதவு திறக்கப்படாது என்று எங்களுக்குத் தெரியும்.
எங்களாலும் அவளோடு முன் போல இணக்கமாகப் பேச முடியவில்லை. அவளும் எங்களோடு பேச முன்வருவதுமில்லை. எப்படி இருந்த நட்புறவு இப்படி சிதைந்து விட்டது? சில நாட்களாகவே இந்த தர்ம சங்கடம் பழகிப் போய்விட்டது.
சாந்தி, தான் காதலித்த பையனோடு வீட்டை விட்டு ஓடிப்போனபின் மீண்டும் மீண்டும் அவளது பெற்றோரைச் சந்திக்க இந்த வீட்டுக்கு வருகிறாள். ஆனால் அவளுக்காக மூடப்பட்ட கதவு திறக்கப்படுவதேயில்லை. ஒவ்வொரு நாளும் நம்முடைய நம்பிக்கைகளின் சேகரத்தை தகர்த்து எறிவதற்கே பிறப்பெடுக்கும் இந்தக் காலகட்டத்தில் எதைத்தான் அல்லது யாரைத்தான் நம்புவது? பத்தாண்டுகளுக்கு முன்னர் எங்கள் எதிர்வீட்டில் சாந்தியின் குடும்பம் குடியேறியது முதல் அவள் ஓடிப்போன நாள் வரையிலும் சாந்தியைக் குறித்து எவரும் எசகு பிசகாகப் பேச இயலாதவகையில்தான் அவளது சுபாவம் இருந்தது. ஆரம்பப் பள்ளியில் இருந்து கல்லூரி வரையில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயிலும் கல்வி நிலையங்களில்தான் சாந்தி படித்தாள். தமிழ்நாட்டின் தென்பகுதி கிராமங்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தியின் குடும்பம் அவளது படிப்புக்காகவே சென்னைக்குக் குடியேறியது. ஒரே மகளைச் சென்னையில் படிக்க வைக்க அவரது அப்பா மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். தனியார் துறையில் வேலைப் பார்த்தவராதலால் அவருக்கு இந்த தொலைதூர இடமாற்றம் சிரமமானதாக இருக்கவில்லை. ஆனால், அவருக்குச் சிரமமாக இருந்ததெல்லாம், தன்னுடைய சொந்த பந்தங்களைப் பிரிவதுதான். ஆனாலும் ஒரே மகளின் கல்வி என்ற விளக்கின் முன் சொந்த பந்தங்களின் நிழல்கள் சுருங்கிவிட்டன.

கல்விக் கடலை எளிதாகத் தாண்டிவிடக்கூடியவள் சாந்தி என்று முதல் சில வருடங்களிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளது கண்களில் அசாத்தியமான ஒரு கூர்மை தென்படுவதாக எங்கள் வீட்டில் பேசிக்கொள்வார்கள். எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பவள் எப்போதாவது ஓய்வு வேளையில் எங்கள் வீட்டிற்கு வருவாள். அப்படி வந்துவிட்டால் மீண்டும் அவளது வீட்டிற்குத் திரும்ப பல மணி நேரங்கள் ஆகிவிடும். அம்மாவிடம் சமையலறை வேலைகளில் உதவியபடியே அவளது ஊர்க்கதைகளைப் பேசுவாள். பின்னர் என்னிடம் வருவாள், பள்ளி கல்லூரியெல்லாம் முடித்தானபின் என்னவாகப்போகிறாய்? என்று கேட்பாள். அப்படி ஏதாவது ஆகத்தான் வேண்டுமா? என்று நான் கேட்பேன். வாழ்க்கைல லட்சியம்னு ஒண்ணு வேணும்ல? என்பாள். “லட்சியம்” போன்ற கனமான சொற்களையெல்லாம் அவள் பேசிக் கேட்கையில் அச்சமான இருக்கும். பிறகு அக்காவிடம் சென்று மணிக்கணக்கில் அரட்டையடிப்பாள். முன்னிரவில் அவளது அப்பா வந்து அவளை அழைத்துச் செல்லும்வரை எங்கள் வீட்டிலேயே இருப்பாள்.
மகள் மேல் அளவுக்கு அதிகமாகப் பாசம் வைத்த பெற்றோரைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. ஆனால், அதுவே ஒருகட்டத்தில் பாரமாக மாறிப் போனதோ என்று தோன்றச் செய்யும் வகையில் சாந்தியை அவளது பெற்றோர் எப்போதும் தங்கள் கண் பார்வை வட்டத்திலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முடித்ததும் சாந்தி வேலைக்குப் போக விரும்பினாள். வெளியுலகத்தில் புழங்கி தன்னுடைய ஆளுமையை வளர்ந்தெடுத்துவாறே குடும்பத்துக்கும் உதவியாய் இருக்க அவளுக்கு ஒரு வேலை இன்றியமையாதது என நினைத்தாள். ஆனால், அவளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூடியமட்டிலும் அவளை மிக விரைவாக மணமுடித்து அனுப்பிவிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்தனர் சாந்தியின் பெற்றோர். அறிவிக்கப் படாததொரு வீட்டுச்சிறையில் அவளை வைத்திருந்ததாக எங்களுக்குத் தோன்றியது. அருகில் இருக்கும் கோயிலுக்கு மட்டும் அவள் தனியாகச் சென்று வர அனுமதித்தனர். அல்லது எங்கள் வீட்டாரோடு சேர்ந்து எங்கேனும் வெளியே சென்று வரலாம். மற்றபடி, அவள் விழித்திருக்கும் நேரமெல்லாம் வீடு, வீடு, வீடுதான். “இப்படி வீட்டுக்குள் வைத்திருக்கத்தான் இத்தனை தூரம் வந்து அவளைப் படிக்க வைத்தீர்களா”? என்று எங்கள் தந்தையார் சாந்தியின் தந்தையிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. முதுமைக்கேயுரிய அறியமுடியாத அச்சங்களால் பீடிக்கப்பட்ட சாந்தியின் தந்தையை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனாலும், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாந்தி தொடர்ந்து தன்னால் ஆனமட்டும் வீட்டிலிருந்து கொண்டே இணைய வழிக் கல்வி மூலம் தன் அறிவை மேம்படுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். சாந்திக்கு அவளது அப்பாதான் உயிர். அவர் இதய நோயாளி என்பதால் அவருக்கு எந்த வேளைக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்று அவளுக்குத்தான் தெரியும். பின்னிரவில் அப்பா இருமினாலே எழுந்து கொள்வாள். அவர் மீண்டும் தூங்கும் வரை அவருக்கு சிஷ்ருஷை செய்தவாறு இருப்பாள். தன்னுடைய தாயே தனக்கு மகளாகப் பிறந்துவிட்டதாக அவள் பெருமை பட்டுக் கொள்ளும்போதெல்லாம், இந்த விதமான சம்பிரதாயமான வசனங்களை ஏன் ஒவ்வொரு பெண்ணின் தந்தையும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும்.
எப்போதையும் போலத்தான் அன்றைய பொழுதும் விடிந்தது. காலை எட்டு மணி வாக்கில் அருகில் உள்ள கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய சாந்தி, பத்து மணியாகியும் வரவில்லை. அவள் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றானவுடன், அவளது வீட்டைத் தாண்டி அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. முதலில் அவளைக் குறித்து எவரும் தவறாக நினைத்திருக்கவில்லை. உடம்பு சரியில்லாமல் வழியில் எங்கேனும் மயங்கி விழுந்துவிட்டாளா என்று தெரிந்து கொள்வதற்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று தேடிக்கொண்டிருந்தார்கள். யாராவது அவளைக் கடத்தியிருப்பார்களா என்றும் எனக்குத் தோன்றியது. ஆகக் கடைசியாக, ஒருவேளை இப்படியும் இருக்குமோ, காதல் கீதல் என்று விவகாரம் திசைமாறியிருக்குமோ என்றும் யோசித்தேன். கையறு நிலையில் மனம் செல்லும் தூரத்திற்கு அளவேயில்லை. கண்டவற்றை யோசித்து ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். ஒரு பெண் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாலேயே அவள் காதலித்துத்தான் ஓடிப்போயிருப்பாள் என்று மனம் நினைக்குமானால் அது எவ்வளவு அசிங்கமான மனமாக இருக்கும் என்று என்னை நானே சபித்துக் கொண்டேன். “சுவரில் தெரியும் பல்லி சீக்கிரம் கவ்விக் கொண்டு போய்விடாதா என் இதயத்தில் சுற்றும் குருட்டு ஈயை”, என்ற தேவதச்சனின் கவிதை வரியெல்லாம் நினைவுக்கு வந்தது. அன்று மாலையே அவளது அப்பாவின் செல்பேசியில் ஒரு புதிய எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்தி அனுப்பியது சாந்தியேதான். தான் காதலித்த பையனுடன் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னைத் தேடவேண்டாம் என்றும் தகவல் அனுப்பியிருந்தாள். இப்போது என் மனம் என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிப்பது போலிருந்தது. இது எப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது அல்லவா என்று அதன்பின்னர்தான் எங்களுக்குத் தோன்றியது. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் தனக்கான காதலனை எப்படித் தேடிக் கொண்டாள், துணிவாக எப்படி திருமணம் வரை சென்றாள் என்பதற்கான பதிலை அவளது செல்பேசியில் உள்ள சமூக ஊடகச் செயலிகளில் பரிமாறப்பட்ட செய்திகளும் படங்களும் தெரிவித்தன.
அதன்பின்னர், சாந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாவரும் சேர்ந்து சென்று, காவல் நிலையத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தினார்கள். அவர்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. தன்னுடைய வீட்டிற்கு இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று அனைவரின் முன்பாகவும் சாந்தி அறிவித்தாள். அதன்பின்னான நாடகீயக் காட்சிகள் யாவும் முடிவுற்று, நாட்களின் நீண்ட ஊர்வலத்தில், மனக்காயங்களின் மீது காலக்களிம்பு தடவப்பெற்று எல்லாமே ஒருவிதமான இயல்புத்தன்மைக்குத் திரும்பி விட்டிருந்தது. சாந்தியின் அப்பாவும் துக்கத்தை மறந்து வெளியில் வரத் துவங்கியிருந்தார். ஆனால், சாந்தியின் அம்மாவினால் அந்தத் துயரில் இருந்து வெளிவரமுடியவில்லை. வீட்டிற்குள்ளேயே தன்னைப் பொருத்திக் கொண்டு விட்டார். தன்னுடைய தவற்றினால்தான் இது நடந்தது என்று அவர் நம்பத் துவங்கிவிட்டார். எவரது சமாதானத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. இதில் தன்னுடைய தவறு ஏதோ இருக்கிறது என்ற அவரது ஆழ்மனத் தீர்மானத்தை எவராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை.
பாசம் என்பது இருமுனையும் கூர்கொண்ட வாள்தான் போலிருக்கிறது. மறுமுனை மழுங்கிவிட்டது என்று எதிரெதிர் முனையில் இருப்பவர்கள் நினைக்கும்படியான மயக்கத்தினை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் வாள் அது. சில மாதங்களில், எவரும் எதிர்பாராதவிதமாக, தன் கணவனுடன் சாந்தி மீண்டும் அவளது வீட்டிற்கு வந்தாள். ஆனால், சாந்தியின் தாய் அவளை வீட்டிற்குள் அனுமதிக்கவேயில்லை. கதவை இறுகப் பூட்டிக்கொண்டார். வாசலின் முன் சாந்தி பலவிதமாக மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அந்தக் கதவுகள் அவளுக்காகத் திறந்து கொடுக்கவில்லை. அவளுடன் வந்திருந்த அவளது கணவன், அப்போதுதான் கல்லூரி முடித்திருந்தான். உருப்படியான வேலை ஒன்றும் இல்லை என்று பிறகு தெரியவந்தது. ஒவ்வொரு தினமும் அவர்கள் இருவரும் பொறுமையாக வீட்டின் கதவுகள் திறப்பதற்குக் காத்திருந்தனர். சில தினங்களில் சாந்தியின் கணவன் அவளுடன் வருவதை நிறுத்திக்கொண்டான். நாள் முழுக்கப் பூட்டிய இந்த வீட்டின் கதவின் முன் நிற்பதற்கு பதிலாக ஏதாவது கம்பெனியின் வாசலில் காத்திருந்து வேலை தேடச் சென்றிருக்கலாம். ஆனால், சாந்தி மட்டும் தினமும் அந்த மூடிய கதவுகளுக்கு முன்னர் பொறுமையாகக் காத்திருக்கிறாள். என்றாவது அந்தக் கதவுகள் அவளுக்குத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன்.
பிரமிளின் “கன்னி” என்ற கவிதை புகழ்பெற்றது.

ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல் மிதிக்க
மடங்கி சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள் நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று ஒரு கதிர்.
உச்சியில் ஒரு நெல்
சுற்றிலும் வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்-
இன்று நிழல் நகரும்
நாளை உதயம் உனக்கும்
நாணத் திரைநகரும்
உயிர் முதிரும்,
உன் கூந்தலின் உமிநீக்கி
வெடித்தெழும் வெண்முகம்
ஓரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.
சுற்றிலும் நூற்றியெட்டு அரிவாள் நிழல்கள் சூழ்ந்திருந்த போதிலும், ஒரே ஒரு நெற்கதிர் மெல்ல வளைந்தெழுந்து தனித்து நாணுவதுதான் கன்னிப் பருவம். அத்தனைத் தனித்துவமானது. ஆனாலும், தருணம் வரும்போது அந்தப் பருவமும் கடந்துபோகும். கன்னிமை என்பதை கள்ளமற்ற தூய்மை என்பதாக புரிந்துவைத்திருக்கிறோம். ஏதேதோ காரணங்களால் நம்முடைய கட்டுப்பாடுகளை மீறி அந்த தூய்மையில் களங்கம் படிவதை மட்டும் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ? நாங்கள் அந்த வீட்டைக் காலிசெய்து விட்டோம். சாந்தியின் கூந்தலில் உமிநீங்கி இந்நேரம் ஒரு வெண்முகம் வெளிவந்திருக்கும். கன்னிமை என்ற கூந்தலின் உமிநீக்கி வெடித்தெழுந்த வெண்முகத்தை சாந்தியின் தாய் இந்நேரம் ஏற்றுக்கொண்டிருப்பாளா? சாந்திக்கான கதவுகள் திறக்கப்பட்டிருக்குமா? நூற்றெட்டு அல்ல, ஆயிரத்தெட்டு அரிவாள்களின் நிழல்களாகக் கேள்விகள் மனதில் எழுகின்றன. பதில்தான் கிடைக்கவில்லை.
எழுத வந்த காதை
எத்தனைதான் ஆவேசமாக அள்ள முயன்றாலும் நம் இருகைகளின் இடைவெளி வழியாக நழுவிச் செல்லும் நீர் போன்றவை நவீன கவிதைகள். அவற்றை முழுக்க விளக்கி விட முடியாது. அதே சமயம், அத்தனை புதிரானதாகவும் அவை இல்லை. எதிர்பாராததொரு கணத்தில், ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில், ஏதோ ஒரு மின்சாரம் போன இரவில் அவை சட்டெனத் திறந்துகொள்கின்றன. அதன்பின் அவை நமக்கே நமக்கு மட்டுமான பிரத்யேகமான கவிதைகளாக நிலைபெற்று விடுகின்றன. நம் அனுபவ வட்டத்துக்குள் வந்தவிட்டபின்னர், உள்ளங்கை ரேகைகளைப் போல நவீன கவிதைகள் தெளிவாகத் தெரியத் துவங்குகின்றன. கவிதை நமக்குள் ‘திறக்கும்’ கணங்கள் பொற்கணங்கள். நாம் முயற்சி செய்யும்போதெல்லாம் புரியாத கவிதை, நம் முயற்சியில்லாமலேயே அது போன்ற கணங்களில் திறந்து கொள்கின்றன. ஒளிந்திருக்கும் குழந்தையைக் கண்டுபிடிப்பது போல உவகைமிகுந்த கணங்கள் அவை. அதுபோன்று எனக்குள் தங்கள் அர்த்தத்தைத் திறந்து கொடுத்த சில கவிதைகளைக் குறித்து எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதேசமயம், இக்கவிதைகளைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதப்பட்ட விளக்க உரையாகவும் அது அமைந்துவிடக்கூடாது என்றும் முடிவு செய்தேன். என் வாழ்வில் நான் அனுபவித்த சில நிகழ்வுகள் வழியாகவும், என் ஊர் மனிதர்களின் கதைகளைச் சொல்வதன் வாயிலாகவும் இக்கவிதைகள் எனக்குள் சென்று சேர்ந்த மர்மத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
ஆகவே, ஒரு கதையைச் சொல்லி அதன்மூலம் கவிதையின் அர்த்தத்தைத் தொட்டுக் காட்டுவதே நான் செய்ய வேண்டியது என்று தெளிந்தேன். ஏட்டின் வாயிலாக அல்லாது வாழ்வின் வாயிலாக கவிதையைப் புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறை என்பதை ஜெயமோகனின் சங்க சித்திரங்கள் வாசித்ததன் வாயிலாக முன்னரே அறிந்திருந்தேன். எழுதியே ஆக வேண்டிய சில நிகழ்வுகள் மனதுக்குள் வெகு காலமாக புரண்டு கொண்டிருந்தன. அந்த நிகழ்வுகள் யாவும் பல கவிதைகளின் உள்ளர்த்தங்களை எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. ஆகவே, அந்த நிகழ்வுகளையெல்லாம் கவிதையின் அர்த்தங்களோடு கோர்த்தபடி எழுதத் துவங்கினேன். கதையாகவும் இல்லாமல், கட்டுரையாகவும் இல்லாமல் ஒருவகை Creative Non-Fiction வகையில் எழுதப்பட்டவை இவை. ஒரு வசதிக்காக, கட்டுரைகள் என்றே இவற்றை அழைக்கிறேன். கதையின் மூலமாகக் கவிதையைச் சொல்லும் முயற்சி இது.இக்கட்டுரைகளை எழுதியபோது சிலப்பதிகாரத்தைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன், அதன் பாதிப்பில்தான் “காதை” என்ற சொல் இந்தத் தொடரின் தலைப்பாக ஆனது. கட்டுரையின் வடிவத்தோடும் உள்ளடக்கத்தோடும் பொருந்தி வந்ததால், “கவிதை காண் காதை” என்ற தலைப்பு உருவானது.
இக்கட்டுரைகளை சக நண்பர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. நண்பர் சிவானந்தம் நீலகண்டனைத் தொடர்பு கொண்டேன். “தி சிராங்கூன் டைம்ஸ்” இதழில், கவிதைகள் குறித்த கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத விரும்புவதாகச் சொல்லி சில கட்டுரைகளை அவருக்கு அனுப்பினேன். கட்டுரைகள் அவருக்குப் பிடித்திருந்தன, உடனே தொடரைத் துவங்குங்கள் என்று அவர் ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மேலும் மேலும் எழுதத் துவங்கி இப்போது இரண்டு வருடங்களை நிறைவு செய்யப் போகிறேன். இன்னமும் தொடர்கிறது.
இந்தத் தொடர் எழுதும்போது நண்பர் சிவானந்தம் கொடுத்த ஒத்துழைப்பும் ஊக்கமும் மறக்க முடியாதது. கட்டுரைகளுக்கு வந்த பாராட்டுகள், எதிர் வினைகள் யாவற்றையும் உடனுக்குடன் எனக்கு அனுப்புவார். அது குறித்து பேசிக்கொள்வோம். பிரசுரமாவதற்கு முன் கட்டுரையில் ஏதேனும் பிழை இருந்தால் அதையும் அவர் என்னிடம் முன்னரே தெரிவித்து கட்டுரையை மேம்படுத்த உதவியிருக்கிறார். இக்கட்டுரைகளின் முதல் வாசகரான சிவாவுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தொடருக்காக நான் எந்தவித முன்திட்டமும் கொண்டிருக்கவில்லை. இந்தத் தொடருக்காக எதையும் புதிதாக வாசிக்கவும் இல்லை. இதில் இடம்பெறும் கவிதைகள் யாவும் என் கடந்தகால வாசிப்பில் எனக்கான பிரத்யேகமான கவிதைகளாக உருக்கொண்டவை. நினைவின் அடுக்கில் முன்பின்னாகப் புரண்டு கொண்டிருந்தவை இக்கவிதைகள். இதை எழுதியவர்களையும் என் கவிஞர்கள் என்றே மனம் ஏற்றுக்கொள்கிறது. இது போன்ற இன்னும் பல கவிதைகள் கடலின் அடியில் அலையும் வலம்புரிச் சங்குகளாக எனக்குள் அலைந்தபடியிருக்கின்றன. ஆம். இக்கவிதைகள் ஒவ்வொன்றும் வலம்புரிச் சங்குகளே, சாதாரணமாகக் கிடைக்கப் பெறாதவை. இது போல ஒவ்வொரு கவிதை வாசகருக்கும் அவருக்குள் வலம்புரிச் சங்குகளாக பல கவிதைகள் இருக்கும். அவற்றையும் இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்தலாம். இந்தக் கட்டுரைகள் வாசித்ததன் வழியாக நவீன கவிதை குறித்த மேலதிக வெளிச்சத்தை இதன் வாசகர்கள் பெறக்கூடும் என்று நம்புகிறேன். இதுவரை கிடைத்த எதிர்வினைகள் என் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. தொடர்ந்து எழுதுவேன். என் கட்டுரைகளுக்கு ஒவ்வொரு முறையும் சிறப்பான ஓவியங்களும் வடிவமைப்பும் தந்துதவும் திரு.ராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நண்பர் மகேஷ்குமார் மற்றும் சிராங்கூன் டைம்ஸ் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.