
‘டான்சிலோ’ பழத்தைச் செடியிலிருந்து பறித்தபோது அழகரசு மனம் குத்தாட்டம் போட்டது. முதல்நாள் டேவிட் அந்தப் பழத்தைப் பற்றிக் கூறியது அவர் மனத்தில் விரிந்தது. ‘இது ஆரஞ்சு, எலுமிச்சை இரண்டின் கலப்பில் பிறந்த பழம். இதன் பெயர்கூட ஸ்பானிஷ் மொழியிலிருந்து வந்ததுதான்!’ என்று விளக்கினார். பழம் முழுக்கப் பழுத்து மென்மையாக இருந்தது. செடி நோகாமல் ஒன்றைப் பறித்தார். தோலை நீக்குவது எளிதாக இருந்தது. தோலை உரிக்கும்போதே சாறு பீரிட்டு அடித்தது. ஒரு சுளையைப் பிரித்தெடுத்துச் சாப்பிட்டார். சுளை சாறு நிறைந்தும் சுயமாகவும் இருந்தது. செடியிலிருந்து ஆரஞ்சுப் பழத்தைப் பறித்துச் சாப்பிடுவது ஆயுளில் இதுதான் முதல் முறை. தோட்டத்தில் காய்த்துத் தொங்கிய பிளம், பிளேக் பெர்ரி, பேரிக்காய், ஆரஞ்சு (ஆரஞ்சில் பலவகை), ஆப்பிள், கிரேஃப் ஃபுரூட் முதலிய பழங்களைப் பார்த்த அனுபவமும் அவற்றைப் பறித்துக் கூடையில் நிரப்பிய அனுபவமும் அலாதியாக இருந்தது. வீட்டின் நுழைவாயில் பகுதியைத் தவிர வலப்பக்கம், இடப்பக்கம், பின்புறம் எல்லாப் பகுதியிலும் பல்வகைப் பழச்செடிகள் நிறைந்து பசுமை போர்வையைப் போர்த்தி இருந்தன. அது மட்டுமல்லாமல் நுழைவாயிலையும் தோட்டத்தின் முன்பகுதி பூராவையும் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்திலான ரோஜாச் செடிகள் நிறைத்திருந்தன. பூ ஒவ்வொன்றும் உள்ளங்கைக்குள் அடங்காத அளவில் பெரியதாக இருந்தன. அவரது மகள் பாமகள் மருமகன் டேவிட் இருவரின் கவனிப்பு, உழைப்பு, விருப்பம் ஆகியவற்றின் மொத்த விளைச்சல்! சுற்றிச் சூழ்ந்திருந்த மலையடிவாரத்தையொட்டி அந்தப் பங்களாக்கள் அமைந்திருந்தன.
“ஒரு தட்டில வச்சு உரிங்க. சாறு தரையில ஒழுகுது! டேவிட் இப்போதான் ‘மோப்’ போட்டாரு,’’ மனைவியின் வழக்கமான சட்டாம்பிள்ளைத்தனம்! மருமகன் பெயரைக் கொஞ்சம்கூட தயக்கமோ கூச்சமோ இல்லமல் சொல்கிறாளே என்றெண்ணி அழகரசு சிரித்துக் கொண்டார்.
மோண்டோ வந்தார்.
டேவிட்டின் அரிய நண்பர்களுள் ஒருவர். பாமகள் வாசலுக்குச் சென்று வரவேற்றாள். பேத்தி ராதிக்காவுக்கும் பேரன் லோக்லனுக்கும் அவரைப் பார்த்ததில் ஏகப்பட்ட கொண்டாட்டம்! பேரப்பிள்ளைகளும் பாமகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு, ஹாய் அங்கிள்!..’’ என்று முகமன் கூறி வரவேற்றனர். அழகரசுவைப் பார்த்ததும் ‘ஹல்லோ!..’’ என்று மனத்தில் பொங்கிய மகிழ்ச்சியை வாயில் கொணர்ந்து அவரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அழகரசு மனைவியையும் நலம் விசாரித்தார். கடந்த முறை அழகரசு தன் மனைவி ரோஜாவுடன் கான்பெராவுக்குச் சென்றிருந்தபோது மோண்டோ மரியாதை நிமித்தம் வந்து அவர்களைச் சந்தித்து அறிமுகமாகியிருந்தார்.
மிகவும் பருமானான உடல்! பழகுவதற்கு இனிமையான மனிதர். நகைச்சுவையாக ஏதாவது சொல்லிவிட்டு மற்றவர்கள் சிரிப்பதற்கு முன்பு அவரே பலத்த சத்தத்துடன் சிரிப்பார். அப்போது அவரின் பருத்த உடல் தொட்டிக்குள் நிரம்பியிருக்கும் நீரைப்போல் குலுங்கிக் குலுங்கித் தளும்பும்!

மறுநாள் கிறிஸ்துமஸ் என்பதால் பெரிய ‘கேக்’ வாங்கி வந்திருந்தார். பாமகள் அவருக்கு விருப்பமான உணவு வகைகளைப் பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்தாள். கோழிக்கறி, ஆட்டு விலாஎலும்புப் பொறியல், குச்சியில் செருகி நெருப்பில் வாட்டிய ஈறால், அவருக்கு மிகவும் பிடித்த பிரியாணிச் சோறு எல்லாம் தயாராக இருந்தன. மோண்டோ வெளியே சென்று சென்றார். சற்று நேரத்தில் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ‘சாண்டோ குளோஸ்’ நுழைந்தார். மோண்டோவின் அந்தக் தோற்ற மாற்றத்தைக் கண்டு எல்லாரும் கைதட்டி ஆரவாரித்தனர். இரத்தச் சிவப்புநிற அங்கியும் வெள்ளைநிறக் காலரும் அதைப்போன்று இருவண்ணம் கலந்த குல்லாவும் அனைவருக்கும் பிடித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரமாண்ட உடல் சாண்டோ குளோஸ் உருவத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. கொண்டாட்டம் தொடங்கியது. பையிலிருந்து பளபளக்கும் தாளில் சுற்றப்பட்ட கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளை வெளியில் எடுத்து ‘‘மேரி கிறிஸ்துமஸ்!..’’ என்று வாழ்த்திக் கைகுலுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். டேவிட், பாமகள், பேத்தி, பேரன் இவர்களோடு அழகரசு, ரோஜா இருவருக்கும் தனித்தனியே பெயர் எழுதிக் கொடுத்தார். எல்லாருடைய முகத்திலும் முல்லைத் தோட்டம்! பரிசு பெறுவதில் ஏற்படும் மகிழ்ச்சி பெரியவருக்கும் சிறியவருக்கும் ஒன்றுதான்!
பரிசு பெறுவதில் ஏற்படும் மகிழ்ச்சி பெரியவருக்கும் சிறியவருக்கும் ஒன்றுதான்!
‘‘நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அதனால் எதுவும் வாங்கி வரவில்லை. இது எங்கள் அன்புப்பரிசு என்று சொல்லி இரண்டு இரண்டு ஐம்பது வெள்ளிப் பச்சை நோட்டுகள் அடங்கிய அன்பளிப்பு உறையை அழகரசு அன்போடு மோண்டோவின் கைகளில் திணித்தார். ‘‘உங்கள் மகிழ்ச்சியே என் நிறைவு!,’’ புன்னகையோடு பெற்றுக் கொண்டார். எல்லாரும் பரிசுப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர். டேவிட்டுக்கு உயர்ரகத் தோல் பணப்பை, பாமகளுக்கு பால்நிறத்தில் பொன்னிற சங்கிலி கோர்த்த கைப்பை, அழகரசுக்கு ஒரு ஸ்வெட்டர், அவருடைய மனைவிக்கு உல்லன் சால்வை, பேத்திக்கு ஒரு டாலர் நெக்லஸ், பேரனுக்கு பச்சைநிறத்தில் ஒரு டைனோசர்ஸ் பொம்மை! அந்தப் பொம்மையை உடனே வெளியே எடுத்து அதை வைத்து அவன் விளையாட ஆரம்பித்துவிட்டான். பேட்டரி போட்டதும் அது உறுமிக்கொண்டு நடக்க ஆரம்பித்தது. அசைந்து அசைந்து நடக்கும்போது கண்ளிலும் வாயிலும் நெருப்புப் பொறி! அதைப் பார்த்து லோக்லன் மட்டுமல்ல பெரியவர்களும் சிரித்தோம்.

உணவருந்தத் தொடங்கினோம். மோண்டோ ஒரு தட்டு நிறையப் பிரியாணிச்சோறு, வாட்டிய இறால், பொறித்த இறைச்சி, ஒரு கிண்ணத்தில் கோழிக்கறி எடுத்துக் கொண்டார். தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து முன்னாலிருந்த நீண்ட மேசையில் வசதியாகத் தட்டை வைத்துச் சாப்பிட டேவிட் ஏற்பாடு செய்திருந்தார்.எல்லாரும் அங்கு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். அழகரசு தட்டில் உணவு கொஞ்சமாக இருந்ததைப் பார்த்து, ‘‘இது போதுமா?’’ என்று மோண்டோ கேட்டார். போதும் என்று சொன்னால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று எண்ணி ‘‘பிறகு எடுத்துக் கொள்வேன்’’ என்று அழகரசு மரியாதையாகச் சொன்னார்.
‘‘நான் உணவுப் பிரியன். எனக்குச் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். கைநிறையச் சம்பாதிக்க வேண்டும். வயிறு நிறையச் சாப்பிடவேண்டும். மனம் நிறையச் சந்தோஷமாக வாழவேண்டும். அதுதான் என் வாழ்க்கைத் தத்துவம்’’ என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தார். அவர் சிரிப்பிற்குத் தோட்டத்து மரங்களும் செடி கொடிகளும் அசைந்தாடி வணக்கம் தெரிவித்தன. டேவிட் ‘வைன்’ நிரம்பிய அழகிய கிளாஸ்களை மேசைமேல் வைத்தார். டேவிட்டும் மோண்டோவும் ‘ச்சியர்ஸ்!..’ கூறி இலேசாகக் கிளாஸ்களை இடித்துவிட்டு வைனை உறிஞ்சினர். சிவப்பு நிறத்தில் இருந்த வைன் உள்ளே இறங்கியதும் மோண்டோவின் முகம் சிவந்து வைன் நிறத்துடன் மல்லுக்கு நின்றது.
அவர் சிரிப்பிற்குத் தோட்டத்து மரங்களும் செடி கொடிகளும் அசைந்தாடி வணக்கம் தெரிவித்தன.
‘‘நீங்கள் ஏன் வைன் அருந்தக் கூடாது?’’ என்று கேட்டார்.

‘‘கூடாது என்றில்லை. வழக்கமில்லை. கொஞ்சம் அருந்தினாலும் உறக்கம் வந்துவிடும். அப்புறம் உங்கள் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விடும் என்றேன்’’ அழகரசு அடக்கமாகப் பதிலுரைத்தார்.
‘‘நல்ல பதில்!’’ மேலும் இரண்டு மிடறு வைன் மோண்டோவின் தொண்டையில் இறங்கியது.
எப்போதாவது அழகரசு வைன் அருந்துவது உண்டு என்றாலும் மருமகனும் மாமனாரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை அழகரசுவின் தமிழ் மனம் ஏற்கவில்லை!
‘‘அங்கிள், இந்த உலகத்தில் பிறருக்குத் தீங்கு இழைக்காத எதுவும் நல்ல செயல்தான். எனக்குப் பிடித்ததைச் சாப்பிடுகிறேன்; குடிக்கிறேன். அது தப்பில்லைதானே?’’ மோண்டோவின் கேள்வியில் குழந்தைத்தனம் இழையோடியது.
‘‘நிச்சயமாக இல்லை!’’ அழகரசுவின் பதிலில் உறுதி தொனித்தது. இரவு பதினொரு மணிக்கு மோண்டோ புறப்பட்டார்.
‘‘நாளை வருவீர்களா?’’
‘‘இல்லை. குயீன்ஸ்லாந்திலிருந்து எனது தம்பியும் தங்கையும் குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள். ஒரு வாரம் தங்கிவிட்டுத்தான் போவார்கள். அவர்களை உபசரிக்க வேண்டும். இந்த முறை அவர்களோடுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்’’ கண்சிமிட்டிச் சிரித்துக்கொண்டே தன் ‘லேண்ட் ரோவரை’ ஓட்டிச் சென்றார். ‘‘அவருக்கு இந்த வண்டிதான் பொருத்தம்,’’ என்று ரோஜா சொல்லப் பாமகள் இலேசாகப் புன்னகைத்தாள். அழகரசு சிரிப்பில் பங்கு கொள்ளவில்லை. மோண்டோ சென்றதும் வீடு வெறிச்சோடிப் போயிற்று!

மறுநாள் கிறிஸ்துமஸ். இரவில் தோட்டத்தில் அழகரசுவும் டேவிட்டும் அமர்ந்திருந்தார்கள். டேவிட்டிடம் மோண்டோவைப் பற்றி விசாரித்தார் அழகரசு. ‘‘அவர் தனியாள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவருடைய மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இவருடன் வெளியில் செல்லுவதையோ தோழியர்களிடம் அறிமுகப்படுத்துவதையோ அந்த அம்மையார் விரும்புவதில்லை. இவர் தோற்றம் தனக்கு ஏற்றாற்போல் இல்லை என்ற அதிருப்தியோடு அவர் பிரிந்து சென்றுவிட்டதாக அறிகிறேன். இப்போது வேறொருவரை மணம் புரிந்து கொண்டிருக்கலாம். இவருடைய தம்பியும் தங்கையும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இவருக்கும் ஒரு குறையுமில்லை. தனி வீடு இருக்கிறது. போக்குவரத்திற்கு லேண்ட்ரோவர் வைத்திருக்கிறார். இன்னும் வேலை செய்கிறார்’’ மோண்டோவின் வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக டேவிட் கூறினார்.
‘‘தனியாளாக இருக்கிறார். வீட்டில் வேறு யாராவது இருந்தால் அவர் தேவைகளை நிறைவேற்ற முடியும்,’’ அழகரசு.
‘‘அப்படிச் சொல்ல முடியாது அங்கிள். மனைவி இருந்தாலும் வீட்டைச் சுத்தம் செய்வதையும் சமையல் வேலையையும் இருவரும் பகிர்ந்துதான் செய்யவேண்டும். வீட்டுக்கு வந்து இரவு உணவைத் தயாரித்துச் சாப்பிடுவது இங்கு வழக்கமாகிவிட்டது. விருந்துக் காலங்களில்தான் வெளியில் உண்ணுவோம்’’
மனைவி இருந்தாலும் வீட்டைச் சுத்தம் செய்வதையும் சமையல் வேலையையும் இருவரும் பகிர்ந்துதான் செய்யவேண்டும். வீட்டுக்கு வந்து இரவு உணவைத் தயாரித்துச் சாப்பிடுவது இங்கு வழக்கமாகிவிட்டது.
நீண்ட நேரம் எங்கள் பேச்சு தொடர்ந்தது. இருவரும் எழுந்து நடந்து சென்றோம். பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் பளிங்குக் கண்ணாடியில் செய்த இரண்டு மான்கள் கழுத்தில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. அவற்றுக்கென்று விளக்குப் பொருத்தப்பட்டிருந்தால் விளக்கொளியில் அவை ஜொலித்தன! பெரும்பாலான வீடுகளில் மான்களும் சாண்டாகுளோஸ் உருவமும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ‘‘ஏன் மான்களுக்கு முக்கியத்துவம்?’’ மீண்டும் டேவிட்டிடம் அழகரசு கேட்டார்.
‘‘அவைதான் சாண்டாகுளோஸ் அமர்ந்திருக்கும் ரெயின்டீர் பனிச்சறுக்கு வண்டியை வடதுருவத்திருந்து இழுத்து வருபவை. அவருக்கு உதவுவதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன’’ மருமகன் விளக்கினார். உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் பட்டியலைச் சாண்டாகுளோஸ் வைத்திருப்பதாகவும் அவர்களின் நடத்தையின் அடிப்படையில் அவர்களை இனிமையான குழந்தைகள், குறும்புக்காரக் குழந்தைகள் என்று வகைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் இரவில் நல்ல நடத்தையுடைய குழந்தைகளுக்குப் பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பரிசுகளையும் தீய நடத்தையுடைய குழந்தைகளுக்கு நிலக்கரியையும் வழங்குவார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது’’ டேவிட் மேலும் விளக்கினார். நாங்கள் இருவரும் மெதுநடை நடக்கும்போது கிறிஸ்துமஸ் மரங்களின் நைலான் விளக்கு அலங்காரங்களையும் வீடுகளின் முன்புறம் ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.
வழக்கம்போல் அழகரசுவுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. போர்வையை விலக்கியதும் ஜில்லென்ற குளிகாற்று பாதத்தில் பதிந்தது. வெய்யில் வரும்வரை படுத்திருந்தார். காலை ஏழு மணியிருக்கும் மழை பெய்வது போன்ற இரைச்சல்! சன்னலைத் திறந்து சாலையைப் பார்த்தார். மழைத்தூறல்கள் இல்லை! பின் எங்கிருந்து இரைச்சல் வருகிறது! முற்றத்தைக் கடந்து கதவைத் திறந்து வெளியே வந்தார். தலைகாட்டத் தொடங்கியிருந்த மஞ்சள் வெய்யில் உடலைத் தழுவியது. அதேநேரம் சுழன்றடித்த காற்றில் சாலையோரமிருந்த மெலிந்த நீளமான பசுமையோடு கொஞ்சம் சாம்பல் நிறம் கலந்து மரம் பூராவும் படர்ந்திருந்த இலையைத் தாங்கிக் கொண்டிருந்த மெக்னோலியா மரங்கள் ஆனந்தமாய் அசைந்து கொண்டிருந்தன. பசும் இலைகள் பரட்டைத் தலைபோல் பரவியிருந்த ‘பர்ச்’ மரங்களும் காற்றுடன் கைகோர்த்தன. காற்றின் வீச்சினால் ஏற்பட்ட அசைவின் ஒலிதான் மழை பொழிவதைப்போல் இருந்திருக்கிறது!
‘‘அடேயப்பா! எவ்வளவு காற்று! அதுவும் தூய்மையான காற்று! கழுவித் துடைத்துவிட்டதுபோன்ற சற்றும் அழுக்கில்லாத சாலை! மூச்சை இழுத்துத் தூய்மையான குளிர் காற்றை நுரையீரல் முழுவதும் நிரப்பிக் கொண்டார். நெஞ்சு நிமிர்ந்து தாழ்ந்தது. அப்போது டேவிட் பரபரப்போடு ஓடிவந்தார்.
‘‘மோண்டோவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்’ ’என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார். அதைக்கேட்டு அழகரசு அதிர்ந்து போனார். அனைவரும் காரில் கேன்பரா பொது மருத்துவமனையை அடைந்தபோது மோண்டோவுக்கு அவசரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவருடைய தங்கை எலிசபெத் கூறினார். மருத்துவமனை இருக்கைகளில் எலிசபெத், அவர் கணவர், இரண்டு பிள்ளைகள், தம்பி ஜான்சன் மனைவி, பிள்ளைகள் அனைவரும் வாடிய முகத்தோடு அமர்ந்திருந்தனர். அழகரசும் மற்றவர்களும் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டனர். டேவிட் மட்டும் ஜான்சனுடன் இரகசிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

இருக்கையிலிருந்து விரைந்து எழுந்து தன் மகள் பாமகளை வெளியில் அழைத்து வந்தார். உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினார். பாமகள் காரணம் கேட்டபோது சொல்கிறேன் என்று மட்டும் அடிக்குரலில் சொல்லி வைத்தார். கார் வீட்டையடைந்ததும் அழகரசு தோட்டத்தின் வலப்பக்க மூலைக்கு ஓடினார். அங்கு சற்று மேடான பகுதியில் ஆலிவ் மரம் தழைத்திருந்ததை டேவிட் ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஆலிவ் இலைகளும் கிளைகளும் கடவுளின் ஆசீர்வாதம், பாதுகாப்பு, உதவியின் சின்னமாகும். அத்துடன் ஆலிவ் கிளை உலக அமைதியின் சின்னமாகவும் இருந்தது. ‘உலகத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது ஒரு புறா அதன் அலகில் ஆலிவ் இலையுடன் திரும்பியது என்று படித்திருக்கிறார். அவசரமாக அடர்த்தியாகத் தழைத்திருந்த ஆலிவ் கிளையில் ஒன்றை முறித்துக் கையிலெடுத்துக் கொண்டு காருக்குத் திரும்பினார். கார் மருத்துவமனைக்குத் திரும்பியபோது மகளிடம் விவரத்தைச் சொன்னார். பாமகள் தன் தந்தையைப் பார்த்தபோது மிகுந்த மரியாதையும் பக்தியும் பார்வையில் மிளிர்ந்தது. கையில் ஆலிவ் கிளையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து மற்றவர்களோடு காத்திருந்தார். கடுமையான எட்டு மணிநேர இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மோண்டோ அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. கையில் ஆலிவ் கிளையுடன் பிரம்மை பிடித்து நாற்காலியில் சோர்ந்து சரிந்தார் அழகரசு. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மருத்துவர் வந்தார்.
ஆலிவ் இலைகளும் கிளைகளும் கடவுளின் ஆசீர்வாதம், பாதுகாப்பு, உதவியின் சின்னமாகும். அத்துடன் ஆலிவ் கிளை உலக அமைதியின் சின்னமாகவும் இருந்தது.
‘‘எவ்வளவோ முயற்சி செய்தோம். மோண்டோவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. ‘மேசிஃப் அட்டாக்’! மனித சக்தி அவ்வளவுதான்’’ ஜான்சன் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார். குரல் அவர் உடலின் சோர்வையும் மனத்தின் தளர்ச்சியையும் வெளிப்படுத்தியது. அனைவரும் ‘‘ஹா!…’’ என்று ஓலமிட்டனர். பேச முடியாமல் சிலர் நிலைகுத்தி நின்றனர். சிலர் வாயை மூடிக்கொண்டு பொருமினர். எல்லார் கண்களிலும் கண்ணீர். சட்டியின் விளிம்பைத் தாண்டிப் பொங்கிவழிந்த பால் நுரை அமைதியாகக் கொதிநிலை அடங்கியதுபோல் கிறிஸ்துமஸ் களிப்பும் கொண்டாட்டமும் கேன்பரா மருத்துவமனையில் அடங்கிப் போயிற்று! ஆலிவ் கிளை அழகரசுவின் கையிலிருந்து நழுவி விழுந்தது!
‘‘சிலமணி நேரத்திற்கு முன்பு எங்களோடு சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இப்போது கடவுளோடு இருக்கிறார்! என்ன நிலையற்ற வாழ்வு!’’ எலிசபெத் தேம்பினார்.
‘‘இது எதிர்பாராததுதான். உலகமே இயேசுவின் வருகையை எண்ணிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இன்று கிறிஸ்துமஸ் குதூகலத்தைத் தொலைத்தவர்கள் நாம் மட்டுமாக இருக்க முடியாது எலிசபெத்!’’ பாமகள் ஆறுதல் கூறினாள்.
‘‘தலைவலியோ வயிற்று வலியோஅவரவருக்கு வந்தால்தான் தெரியும்!’’ என்றாள் எலிசபெத்.
‘‘உண்மைதான்’’ என்றாள் பாமகள்.
எளிமையான முறையில் தேவாலயத்தில் பிரார்த்தனை. பத்துப் பதினைந்து பேர்கள்தான் இருந்தார்கள். பின்னர், எரியூட்டு நிலையத்தில் கப்பென்று பற்றிய மின்னடுப்புத் தீக்கிரையாகி மோண்டோ தூய்மையான சாம்பலானார். காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ‘‘மோண்டோவின் சொத்துகள் எல்லாம் எலிசபெத்துக்கும் ஜான்சனுக்கும்தானே சேரும்?’’ அழகரசு கேட்டார்.
‘‘இல்லை அங்கிள். அவர் ஏற்கெனவே சொல்லி இருக்கிறார். தனக்குப்பின் தன் வீடு, மனை, பணம் எல்லாம் ஒரு தொண்டூழிய அமைப்புக்குச் சேர வேண்டும் என்று அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு உயில் எழுதி வைத்துவிட்டார்’’
‘‘அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே!”
‘‘இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! அவரது செல்வம் தேவையுள்ளோரை நாடிச் செல்கிறது! ’’ டேவிட்டின் குரலில் ஒரு நிறைவு தொனித்தது.
அதைக் கேட்டதும் அழகரசு கல்லாய்ச் சமைந்தார்.
புனித நிக்கலசு பேராயர் ஆவேசமாக மோண்டோவுடன் ஊடுருவி ஒன்று கலந்தார். பருத்த உடலைக் கொண்ட மோண்டோ ஒரு நொடியில் சாண்டோ குளோசாக மாறி புன்னகையுடன் விண்ணில் சிரித்துக் கொண்டே கையசைத்தார். மழை சோவெனப் பொழியத்தொடங்கியது.