அன்புள்ள சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களுக்கு…

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பதிப்புத் துறையில் இருக்கிறேன். அச்சிதழ் வெளியிடுவதில் உள்ள பல சிரமங்கள் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. 100 மாதங்களில் பல புதிய சிங்கப்பூர் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும் அவர்களின் படைப்புகளை வெளியிடவும் சிராங்கூன் டைம்ஸ் ஒரு காரணியாக இருப்பதை அறிந்து சிங்கப்பூரில் ஓர் அச்சு இதழுக்கான என் பங்களிப்பின் தேவையை முக்கியமாகக் கருதுகிறேன். இதில் ஆசிரியர் குழுவின் அயராத முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவதோடு இதழை மெய்ப்பு பார்க்கும் பணியிலும், வடிவமைப்பு மற்றும் அச்சிடும் பணியிலும், பல சிரமங்களுக்கிடையே இதழ்களைக் கொண்டு வந்து சேர்த்து தொய்வில்லாமல் உழைக்கும் பகுதி நேர- முழு நேர ஊழியர்களுக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்.

நான் செல்லும் வெளிநாடுகளில் சிங்கப்பூரரின் சிந்தனை என்ற முழக்க வரியோடு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும், பொதுச் சேவை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலும் சிராங்கூன் டைம்ஸ் பற்றி விசாரிப்புக்கள் வரும்போது சிங்கப்பூர் எழுத்துகள் பற்றிய சமகால அவதானிப்புகளை இலகுவில் அவர்கள் அடையாளம் கண்டுகொள்வதை அறிந்து கொள்ள முடிகிறது. சிங்கப்பூர்வாசிகளின் படைப்புகள் சிங்கப்பூரைத் தாண்டியும் கவனம் பெறுவதற்கு சிராங்கூன் டைம்ஸ் இணைய இதழாகவும் வந்து கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுனர் குழுவின் தொழில்நுட்பத்துடன் இந்த இணைய இதழ் வெளிவருகிறது. அச்சிதழ்களைக் கொண்டு வருவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் சிராங்கூன் டைம்ஸ் சிங்கப்பூர் அடையாளத்தை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் தளமாக உருப்பெற்று 100 இதழ்களின் எல்லை தொட்டது இன்னும் தொடர்ந்து இதழைக் கொண்டுவரவேண்டும் என்ற ஊக்கத்தை எனக்கு அளிக்கிறது.
வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி!
தமிழில் பேசுவோம்.
முஸ்தபா
நிறுவனர்

