சிங்கையில் உலக சதுரங்கப் போட்டி!
முதல் முறையாக உலக சதுரங்கப் போட்டி 2024 சிங்கையில் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென் இந்தியாவைச் சேர்ந்த தொம்மராஜு குகேஷ் இருவரும் மோதவிருக்கின்றனர். இந்தப் போட்டியில் 138 ஆண்டு வரலாற்றில், 1978இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற பிறகு 46 ஆண்டுகளுக்கு ஒரு தெற்காசிய நாட்டில் நடைபெறுவது இது இரண்டாம் முறையாகும். இது போன்ற சர்வதேசப் போட்டிகளுக்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமே என்றும், இதன் மூலம் ஏற்கெனவே வளர்ந்து வரும் சதுரங்க விளையாட்டு சமூகம் இங்கு இன்னமும் ஊக்கம் பெறும் என்று சதுரங்க விளையாட்டு சம்மேளனம் உற்சாகத்துடன் உள்ளது.
படம் நன்றி: செஸ்.காம்
காளான் பிரியர்களுக்கு நற்செய்தி!
ஃபிங்க் பயோடெக் நிறுவனம் சிங்கையில் செங்குத்தான சுவர்த் தோட்டங்களில் காளான் வளர்ப்புக்காக இட அனுமதி பெற்றுள்ளது. சிங்க தெங்கா பகுதியில் சுமார் 3 கால்பந்துத் திடல்கள் அளவுள்ள இடத்தில் தனது புதிய காளான் வளர்ப்பு நிலையத்தை அமைக்கவுள்ளது. இங்கு 60 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பட்டன் காளான்கள் வளர்க்கப்போவதாகவும் நிலையத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டு காளான் வளர்ச்சியை கண்காணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் ‘30 ஆம் ஆண்டில் 30’ என்ற உணவுக் கொள்கையில் கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் காளான்களின் பங்காக இருக்கும்.
படம் நன்றி: அக்ரோ ஃபார் ஆசியாகாம்
பில் கேட்ஸ்- தெமாசெக் கைகோர்ப்பு!
பில் கேட்ஸ் நிறுவியுள்ள ‘ப்ரேக்த்ரூ எனர்ஜி’ அமைப்பு ‘எண்டர்ப்ரைஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்துடனும் ‘தெமாசிக் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்துடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் உள்ள அறிவியல் சிந்தனையாளர்களையும் உள்ளடக்கிய பருவநில மாற்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பல்கலைக் கழகங்களில் கிடைக்கும் திறமைகள் மூலம் உணவு, மருத்துவம், மறுசுழற்சி, மேற்சுழற்சி போன்ற அம்சங்களில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டடைய வாய்ப்புகள் உருவாகும் என்றார் பில் கேட்ஸ்.
படம் நன்றி: தி எட்ஜ் சிங்கப்பூர்.காம்
அமெரிக்க ஆகாயப்படைக் கல்லூரியில் சிங்கப்பூரர்!
அமெரிக்காவின் கொலராடோ மானிலத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்க ஆகாயப்படைக் கல்லூரியில் 2024 ஆண்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த லெஃப்டினண்ட் ஜொனதன் லோ முதல் தர வரிசையில் தேறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு சிங்கப்பூரர் முதலாவதாக வருவது இந்த ஆண்டுதான். நான்கு வருட பயிற்சிக் காலத்தில் இராணுவப் பயிற்சி மட்டுமல்லாது தனிநபர் குணநலன்கள், ஆளுமைத்தன்மை, விளையாட்டு, உடல்திடம் என்று பல்வேறு கோணங்களில் தேர்வு செய்யப்படுகின்றனர். லெஃப்டினன்ட் ஜொனதன் லோ சிங்கப்பூர் கொடியைப் பறக்க விட்டபடி பட்டமளிப்பு விழாவில் பங்குகொண்டதை சிங்கப்பூர் பெருமையுடன் கொண்டாடியது.
படம் நன்றி: சேனல் ந்யூஸ் ஆசியா