உழைப்பாளர் தினம் – சினிமா விமர்சனம்

பிரபாதேவி

தமிழ்த்திரையுலகிற்குச் சிங்கப்பூர் புதிதன்று. அதேபோலத்தான் சிங்கப்பூருக்கும். ஆனாலும் புதிதாக ஒரு கருப்பொருளை எடுத்து அதைப் படமாக்க எண்ணி வெற்றியும் கண்டிருக்கிறது ஒரு படக்குழு.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கின்ற உறவென்பது தொப்புள்கொடி உறவன்று. அது உழைப்புக்கொடி உறவு. அதுவே இரு நாடுகளையும் செம்மையாய்க் கட்டிப்போட்டிருக்கிறது. சொந்த ஊர், குடும்பம், நட்பு, காதல் என எல்லாவற்றையும் விட்டுக் கடல் கடந்து உழைப்புக்காக பிழைப்புக்காக என்று வந்தாலும், அவ்வுழைப்பு உழைப்பாளர்களின் கனவுகளை முழுமையாக நனவாக்குகிறதா இல்லையா என்பதே இப்படத்தின் மையக் கருத்து.
ஒரு திரைப்படம் எடுப்பதென்பது அவ்வளவு எளிதானதன்று அதுவும் கொடுந்தொற்றுக் காலத்தில் இருந்த நடைமுறைச்சிக்கல்களுக்கு நடுவே படப்பிடிப்பு செய்து ஒரு படத்தை உருவாக்கியதெல்லாம் பெருஞ்செயல்தான். அதனால்தான் ஊழியர்களின் விடுதிச்சூழலையும் விடுமுறைநாள் ஒன்றுகூடல்களையும் முழுவதுமாகக் காட்டமுடியாமல் போயிருக்கிறது.
தமிழகத்திலிருந்து சிங்கப்பூர்க்கு முகவர் மூலம் வேலைக்காக வந்து, கட்டுமானத்துறையில் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிகின்ற ஆண்களின் வாழ்வியலைச் சொல்லும் இத்திரைப்படம், சிங்கப்பூரில் கார்னிவல் திரையரங்கில் 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் சிறப்புக்காட்சியாக வெளியிடப்பட்டது.
பத்துப் பதினைந்துபேர் தங்குகின்ற விடுதியறை. நம்மூரில் குட்டியானை என்றழைக்கப்படும் TATA ACE போன்ற வண்டிகளில் உட்கார்ந்து பணிக்குப் பயணம். நெகிழித்தாள்களில் கட்டிக்கொடுக்கப்படும் தேநீர்/குளம்பி, நண்பகல் உணவு இடைவேளையில் பணியிடத்தில் ஆங்காங்கேயோ சாலையோரங்களிலோ ஒரு சிற்றுறக்கம். ஞாயிற்றுக்கிழமை என்றால் தேக்காவில் நண்பர்களோடு ஒன்றுகூடல் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டவர்களைத்தான் ஊரில் பலரும் “அவனுக்கென்னப்பா.. சிங்கப்பூர்ல இருக்கான்” என்று ஒற்றைவரியில் பகட்டுவாழ்க்கைக்குள் திணித்துக் கற்பனை செய்துகொள்கின்றனர். அதுவன்று உண்மை. நெகிழித்தாள் பையிலிருக்கும் தேநீரை உறிஞ்சுகுழல் மூலம் அவர்கள் குடிப்பதைப்போலத்தான் காலமும் அவர்களின் இளமையையும் கற்பனைகளையும் மெதுமெதுவாக உறிஞ்சுகின்றது. ஆனாலும் குடும்பம் என்ற ஒன்றுக்காகத் தமது இழப்புகளைப் பெரிதாக எண்ணாது உழைப்போரே இங்கு பெரும்பான்மையினர்.
அவர்களைப்பற்றியும் அவர்களது வாழ்வியலைப் பற்றியும் ஓரளவு கூற முனைந்திருக்கிறது இத்திரைப்படம். இன்னும்கூட நன்றாகச் சொல்லியிருக்கலாம்தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இப்படம் நல்லதொரு முயற்சி.
கட்டடத் தொழிலாளிகளின் பிரிக்கமுடியாத உடைமைகளாக இருக்கும் தாளில் பொதியப்பட்ட சோற்றுப்பொட்டலம், காலில் அணிந்திருக்கும் எடைமிகுந்த பாதுகாப்புக் காலணி இவற்றையெல்லாம் படத்தில் காட்டியிருக்கலாம்.
என்னதான் கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் பாதிப்பேர் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தமது வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்வதை ஒரு குற்றமாகவே சுட்டிக்காட்டியிருக்கலாம். அதை இயல்பாகவும் கேளிக்கையாகவும் காட்டியிருப்பது வருந்தத்தக்கது.
வெளிநாட்டில் கடின உழைப்புக்குத் தன்னைத் தெரிந்தே தின்னக்கொடுத்திருக்கும் இளைய மகனை, வீட்டில் ஊதாரியாக குடிகாரனாக வம்பனாகத் திரியும் மூத்த மகனுக்காக வஞ்சம் செய்து ஏமாற்றுகின்றனர் பெற்றோர். உழைப்பவனுக்கான மதிப்பும் உரிமையும் சொந்த வீட்டிலேயே சிதைக்கப்படுகையில் அவன் மனம் எத்துணைக் கொதிக்கும்? அந்தக்காட்சியில் பெற்றோரும் மகனும் இன்னும் நன்றாகவே நடித்திருக்க வேண்டும். முதுகில் குத்தப்பட்ட வஞ்சத்தை, பார்க்கின்ற நமக்கு முழுமையாக அந்தக்காட்சி கடத்தவில்லை. படம் தொடங்கும்போது நாயகன் ஏன் அத்தனை விரைவாகக் தலைதெறிக்க ஓடிவருகிறார் என்பதற்கான காரணமும் அடுத்தடுத்த நடிப்பில் வெளிப்படவில்லை.
குருவிபோல் பணம் சேர்த்து, ஒரு கடையைக் கட்டினால் அது அமைச்சரின் தன்னலத்திற்காக இடிபடப்போகின்றது என்று தெரியவரும் காட்சியில் சற்றும் அழுத்தம் இல்லை. இம்மூன்று காட்சிகளிலும் இன்னும் அழுத்தமும் கனமும் கூட்டப்பட்ட நடிப்பு வெளிப்பட்டிருக்கவேண்டும்.
பின்னணி இசை இப்படத்திற்குப் பலம் சேர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாடல்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. தொடக்கப்பாடல் ஒரு துள்ளலிசைப்பாடலாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவற்றிலெல்லாம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் உரையாடல்கள் இன்னும் கூர்மையாக காத்திரமாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.
நம் கூடவே நண்பர்களாய்ச் சுற்றிக்கொண்டிருந்த செவ்வாழைகள் திடீரென்று வெள்ளித்திரை நடிகர்களாகிவிட்டதை எண்ணி மகிழ்வும் பெருமையும் வரத்தான் செய்கிறது. முதல் முயற்சியில் அவர்களும் தேர்ந்துவிட்டனர் என்றே சொல்லலாம். நாயகனின் சொந்தவூரில் அவரது நண்பனாக நடித்தவருடைய நடிப்பையும் பாராட்டியாகவேண்டும். சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக மாதங்கியும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்
இப்படத்தில் கதாநாயகனாக நடித்து, படத்தையும் இயக்கியிருக்கும் நண்பர் சந்தோஷ் நம்பிராஜனுக்கு மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும். ஆனாலும் என்னுடைய வாக்கு இயக்குநர் சந்தோஷுக்குத்தான். அவருடைய ஆசான் செழியனின் கற்பிப்பு நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது படம் முழுவதும். இயக்குநராகப் பல நெளிவு சுளிவுகள் அவருக்கு இயல்பாகவே கைவருகின்றன என்பதை நாமும் உணரலாம். அவர் இன்னும் பல வெற்றிப்படங்கள் இயக்கிட வாழ்த்துகிறோம். நடிகராக மிளிர அவர் இன்னும் கடுமுழைப்பைப் போடவேண்டும்.
படத்தில் நடித்திருந்த நண்பர்கள் நீதிப்பாண்டி, ஜெயக்குமார், தமிழ்வாணன், நிர்மல் நால்வர்க்கும் மகிழ்வான வாழ்த்தும் மனம்நிறைபாராட்டும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாய்க் கைகூடட்டும்.
மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும். ‘உழைப்பாளர் தினம்’ நல்லதொரு முயற்சி. குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம். அடுத்தமுறை சிங்கப்பூரில் இயல்புக்காட்சியாக வெளியாகும்போது எல்லோரும் சென்றுபாருங்கள்