விபத்தில் தூக்கி வீசப்பட்டு எதன்மீதோ மோதி விழுந்த மாதிரி இருந்தது. சற்று முன்பிருந்த பசி, போனயிடமே தெரியவில்லை. என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதைப்போல அப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பீங்கான் தட்டுகளில் கரண்டிகள் உராயும் மிக மெல்லிய ஒலி மட்டுமே கேட்டது. ‘அப்பா அப்படியா சொன்னார்?’ ஏன்??? கேள்விக் குறிகளோடு மீயிலிருந்து ஆவி மேலெழும்பியது. பேச முடியும் அளவிற்கு வருவதற்கு எனக்குச் சுமார் இரண்டு நிமிடங்களாகியிருக்கும். அப்பாவின் கைகளிலிருந்த கரண்டியும் முள்கரண்டியும் பாஸ்தாவை இப்படியும் அப்படியுமாகத் தள்ளின. ஓவெனக் கத்த வேண்டும்போலிருந்தது. எங்காவது ஓடிவிடலாமா? கண்ணாடிபோலப் பளபளக்கும் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டோடக் காத்திருந்தன.
“நம்மைவிட்டுச் சென்றவரை ஏன் தேட வேண்டும்?” என்றேன். சில நிமிடங்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பாவின் தலை, மெல்ல மேலும் கீழும் போய் வந்தது.
“இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் வரப் போகிறது…” தலையைக் குனிந்துகொண்டார்.
நாங்கள் ஹோட்டலிலேயே இருப்பதால் அப்பா கிறிஸ்துமஸ் கொண்டாட வெவ்வேறு இடங்களைத் தேர்வு செய்வார். நிறைய பேர் வருவதும் போவதுமாக அன்றைய நாள் மிகவும் உற்சாகமளிக்கும். சிங்கப்பூர், அப்பாவின் தாய்நாடான இங்கிலாந்து, அப்பா பணியாற்றிய கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளில் கொண்டாடியிருந்தாலும் சென்ற கிறிஸ்துமசை தாய்லாந்தில் கொண்டாடியது மிகவும் பிடித்திருந்தது. பாட்டியின் வீட்டை, மாமா பிள்ளைகளுடன் அலங்கரித்தது புது அனுபவம். இரவின் கருமைக்கு வண்ணம் தீட்டி மகிழும் மின்விளக்குகளின் ஒளியைவிட மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
இரவின் கருமைக்கு வண்ணம் தீட்டி மகிழும் மின்விளக்குகளின் ஒளியைவிட மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
“என்னதான் நல்லாருக்கேன்னு சொன்னாலும், வெள்ளைக்காரன கல்யாணம் பண்ணிக்கிட்டியே எப்படி இருப்பியோன்னு உள்ளுக்குள்ள கவலை இருந்தது. உன்னை தாங்குற கணவரையும், பாசத்தைப் பொழியுற உன்னோட புள்ளையையும் நேரில் பாத்ததுல மனசு நிறைஞ்சிடுச்சி” என்று கிறிஸ்துமசுக்காக நாங்கள் பேங்காக் போயிருந்தபோது பாட்டி சொன்னதாக அம்மா கூறியவை நினைவுக்கு வந்தன.
‘அப்படிப்பட்ட நாங்கள்தான் இன்று வேண்டாதவர்களாகிவிட்டோம்…!’
“இப்படியெல்லாம் ஆகுமெனக் கனவிலும் நினைக்கவில்லையே…” மேசையில் தலையைச் சாய்த்திருந்த அப்பாவின் முதுகு குலுங்க, என்னால் தாங்க முடியவில்லை. உடனே நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்தேன். எல்லாமே போய்விட்டது என்றார். உதாசீனப்படுத்தியவரை நினைத்து உருகுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அண்ணாந்து பார்க்கும் உயரத்திலுள்ள அப்பாவை
ஒரு சிறுவனை சமாதானப்படுத்துவதுபோல அழைத்துப் போகையில், பதினான்கு வயதிலேயே பொறுப்பு கூடியதுபோலிருந்தது. மின்தூக்கியில் செல்லும்போது சிலர் வினோதமாகப் பார்த்தனர். அப்பாவின் கைகளை அழுந்தப் பற்றியபோதும், அவர் எதையும் உணரும் நிலையில் இல்லை. கண்ணீர்த்துளிகள் என் கைகளில்பட்டுத் தெறித்தன.
அறைக் கதவைத் திறந்தவுடன் மேசை மேலிருந்த தலைக்கவசங்கள்தான் முதலில் கண்களில்பட்டன. வேகமாய்ப் போய் அவற்றைப் புறங்கையால் தள்ளிவிட்டேன். அப்பாவுடையதும் என்னுடையதும் சற்றுத் தள்ளிப்போய் விழ, அம்மாவின் தலைக்கவசம் மட்டும் என் காலடியிலேயே கிடந்தது. ஓங்கி எத்தினேன். சுவற்றில் மோதி விழுந்த அது கொஞ்ச நேரம் தரையில் சுற்றிக்கொண்டேயிருந்தது.
மாலை நேரங்களில் மூவரும் சைக்கிளில் கிளம்பி, விருப்பம்போலச் சுற்றிவிட்டு இரவு உணவை முடித்த பின்தான் ஹோட்டலுக்குத் திரும்புவோம். சில சமயங்களில் அம்மா சைக்கிளில் சுற்றப் போக வேண்டாம் என்பார். அம்மாவுக்கு வயதாகிவிட்டது என அப்பா சொல்ல, நானும் ஆமாம் என்பேன். அம்மா எங்களைத் துரத்த, சிரித்துக்கொண்டே கையசைத்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். ஆர்ச்சர்ட் வட்டாரத்தை ஒரு சுற்று முடிப்பதற்குள் அம்மா எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வார்.
தரையில் சுற்றிய தலைக்கவசத்தையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டிருந்த அப்பா, ஒன்றும் பேசாமல் போய்க் கட்டிலில் விழுந்தார். எனக்கும் அழுகை வந்தது. எவ்வளவு நேரம்தான் கட்டுப்படுத்த முடியும்? சிறு குழந்தையைப்போலத் தாவி அப்பாவை அணைத்துக்கொண்டேன்.
குளிர்பதனத் தொழிலில் வல்லுநரான அப்பா நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்குவதில்லை. இலண்டனிலிருந்து பணி நிமித்தமாகச் சிங்கப்பூருக்கு வந்தவர், தாய்லாந்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிய அம்மாவை காதலித்து மணம் புரிந்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்குச் சென்றவர்கள், அங்கேயே நான்காண்டுகளைக் கழித்தனர். அதுதான் சேர்ந்தார்போல அதிகமாக ஓரிடத்தில் வாழ்ந்த நாடு என அப்பா சொல்வார். அதன் பிறகு அவ்விடத்தை சிங்கப்பூர் பிடித்தது. என்னுடைய இரண்டாவது பிறந்தநாளை இங்குதான் கொண்டாடினோம்.
“எனக்காக வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதூதன் உன் அப்பா” என்று சொல்லும்போது அம்மாவின் முகம், கனிந்த செர்ரிப் பழம்போலக் காட்சியளிக்கும். அதற்காகவே சிறுவனாக இருந்தபோது அவர்களது காதல் கதையை அடிக்கடிக் கேட்பேன். அம்மாவும் அலுக்காமல் சொல்வார்.
இந்தக் கதைக்கு முடிவேயில்லையா என அப்பா சிரித்துக்கொண்டே கேட்பார். எதற்கு முடிக்கணும் அம்மாவும் புன்னகையுடன் கேட்க இருவருக்கும் நடுவில் மகிழ்ச்சியாக உறங்குவேன்.
வலது கையால் என்னை அணைத்திருந்த அப்பா, இடது கையால் கண்ணீரைத் துடைத்துவிட இன்னும் அதிகமாய் அழுகை வந்தது. எதற்காக அழ வேண்டும் என்ற கேள்வியெழ எழுந்து உட்கார்ந்தேன்.
என்னுடைய மேசையில் பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படித்து முடித்தபின் எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைக்காததற்காக அம்மா கடிந்துகொள்வார். அவ்வப்போது ஒழுங்காக எடுத்து வைத்தாலும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் எல்லாமே மாறிவிடும். அந்தந்தப் பொருட்கள் அந்தந்த இடத்தில்தான் இருக்க வேண்டுமென அம்மா சொல்வார். ஆனால், அப்பா அப்படியல்ல. எந்த நேரமாக இருந்தாலும் கொஞ்சமும் அலுப்பின்றி பாடம் சொல்லிக் கொடுப்பார். அதிலும் கணிதத்தையும் அறிவியலையும் அவரைவிட யாராலும் அவ்வளவு எளிதாகக் கற்றுத் தர முடியாது. அவரது உதவியால்தான் கணிதமும் அறிவியலும் விருப்பப் பாடமாகி வகுப்பில் முதலிடம் பிடித்தேன். தேர்வு முடிவுகள் வருகையில் அப்பாவின் முகத்தில் தனிக் கர்வம் தெரியும்.
மேசை மேலிருந்த பூங்கொத்து வாடியிருந்தது. அம்மாவுக்காக அப்பா அடிக்கடி பூங்கொத்துகளை வாங்கி வருவார். அம்மாவின் நாற்பதாவது பிறந்தநாளுக்காக அப்பா ஓர் இளஞ்சிவப்பு வண்ண ரோஜாச்செடியைப் பரிசளித்திருந்தார். அந்தச் செடியுடன் அம்மா சில சமயங்களில் பேசியதையும் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நாளிலேயே அந்தச் செடி பட்டுப்போய்விட்டது. இதற்குப் போய்க் கவலைப்படலாமா என அப்பா அன்று பெரிய பூங்கொத்தாக வாங்கி வந்தார். விரும்பிய செடிகளை வளர்ப்பதற்காகவாவது தோட்டம் உள்ள வீட்டில் வசிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. சொந்தமாக வீடு வாங்குவதிலோ வாடகை வீட்டில் குடியிருப்பதிலோ அப்பாவுக்குத் துளியும் விருப்பமில்லை. நீண்ட காலமாக ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள ஓர் உயர்தர ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். இதற்காகச் செய்யும் செலவில் ஒரு வீடே வாங்கிவிடலாம் என அம்மா அடிக்கடி சொல்வார்.
“வாழ்க்கையை நல்லா அனுபவிக்கணும். வீடு வாங்கினா இங்கேயே தங்க வேண்டி வரும். உலகம் இவ்ளோ பெருசா இருக்குறப்ப, இத்துனூண்டு நாட்டில் எதற்காக நம்மைச் சுருக்கிக்கொள்ள வேண்டும்?” என அப்பா கேட்பார். “வீணே பணத்தைக் கரியாக்குவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை” என்று அம்மா சொல்வார். “ஆசியாக்காரர்களின் மனநிலையே இதுதான்” என அப்பா சொல்ல அம்மாவிற்கு கோபம் வரும். “கல்யாணம் செய்துகொள்ள மட்டும் ஆசியாக்காரி வேண்டும். மனைவியின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென உங்கள் தேசம் சொல்லித் தரவில்லையோ?” என்று அம்மா கேட்பார். அப்பாவிடமிருந்து புன்னகையே பதிலாக வர, அம்மாவின் கோபம் இன்னும் அதிகமாகும். சிறிது நேரத்திலேயே என்ன அதிசயம் நடக்குமோ? இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
விரும்பிய செடிகளை வளர்ப்பதற்காகவாவது தோட்டம் உள்ள வீட்டில் வசிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.
இப்படிப்பட்ட பெற்றோரின் வாழ்வில் என்ன பிரச்சினை எதற்காகக் கருத்து வேறுபாடு வந்தது என்பதே எனக்குத் தெரியாது. அப்பாவின் முகத்தில் நிரந்தரமாக வெறுப்பு குடிகொள்ள, அம்மாவின் வசீகரப் புன்னகையும் காணாமல் போனது.
அன்று பள்ளி முடிந்து வந்தபோது அப்பா மட்டும்தான் இருந்தார். அம்மா எங்கேயெனக் கேட்டேன். அதற்குப் பதில் சொல்லாமல் சாப்பிடப் போகலாம் என்றார். “அம்மா எங்கேப்பா?” மீண்டும் கேட்டேன். ஒன்றுமே பதில் சொல்லாமல் சன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அம்மா எங்கே? ஏன் அப்பா வேறு யாரோபோல இருக்கிறார்?’ அருகில் சென்று “என்னப்பா?” என்று கேட்டேன். “சாப்பிடப் போகலாமா?” என்றார். ‘அப்பாவுக்கு என்னவாயிற்று? அம்மா எங்கே போயிருப்பாங்க?’ குழப்பத்துடனே குளியலறைக்குப் போனேன். குளித்துவிட்டு வந்த பிறகும் அப்பா அங்கேயே நின்றிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. எப்போதுமே சாப்பிடுவதற்கு அப்பா வெவ்வேறு இடங்களுக்குத்தான் அழைத்துச் செல்வார். ஆனால், அன்று நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என்றார். அவரது முகம் அவ்வளவு இறுக்கமாகயிருந்து நான் பார்த்ததேயில்லை.
அப்பாவும் எழுந்து உட்கார்ந்தார். “இனி நம்ம வேலையைப் பாப்போம், அழக்கூடாது சரியா?” என் கண்களைத் துடைத்தார். ‘நொந்து போயிருந்தவரை நானும் சிரமப்படுத்திவிட்டேனே’ என்மீதே கோபம் வந்தது. யாராவது கேட்டால் அம்மா தாய்லாந்துக்குப் போயிருப்பதாகச் சொல்லச் சொன்னார். நான் மட்டும் ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போய் வரவா எனக் கேட்டதற்கு வேண்டாமென்றார்.
‘அம்மா ஏன் அப்படிச் செய்தார்?’ கேள்விக்கு விடையில்லாமலே நாட்கள் போயின.
சில நாட்கள் கழிந்த பின் ‘கெய்ர்ன்ஹில் கோர்ட்டில்’ உள்ள ஒரு வாடகை வீட்டுக்குப் போகலாமென அப்பா சொன்னார். ‘இதை முன்பே செய்திருக்கலாமே’ அம்மாவின் நினைவு மெல்லிய மின்னல் கீற்றாய் உள்ளே தலைகாட்டியது. தவிக்கவிட்டவரை நினைக்கலாமா? தலையை வேகமாக உதறினேன்.
ஹோட்டலை காலி செய்துவிட்டுக் கிளம்பும்போது கார் பார்க்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களின் மேல் பார்வை விழுந்தது. அப்பாவும் அவற்றைப் பார்ப்பதைக் கவனித்தேன். டேக்சியின் கதவை வேகமாக மூடும் சத்தம் கேட்கவும் சைக்கிள்களின் மேலிருந்த பார்வையை வெறுப்போடு திருப்பினேன்.
வீட்டு வேலைகளுக்காக அப்பா, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினார். அந்நியர் ஒருவர், எப்போதுமே வீட்டிலிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதுகூட அப்பா சொன்னதைப்போலச் சில மாதங்களில் பழகிவிட்டது. அம்மாவின் மீதுள்ள கோபம் மட்டும் நாளுக்குநாள் கூடிக்கொண்டே போனது.
எங்களது வீட்டுக்கு அருகில் என் வயதுடையவர்கள் காற்பந்து விளையாடினர். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். காற்பந்தை உதைக்கும்போதெல்லாம் அம்மாவின் நினைவு வரும். பந்தை உதைக்கையில் மனத்திற்கு இதமாகயிருந்தது. என் கோபத்திற்கு வடிகாலாய்க் காற்பந்தாட்டம் இருந்தாலும் அவ்வப்போது அதையும் மீறி மனத்தில் வெறுமை சூழ்வதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒருநாள், பள்ளி முடிந்தபின் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் சுற்றிக்கொண்டேயிருந்தேன். விளையாடப் போகவும் பிடிக்கவில்லை. நகரத்தைவிட்டு வெகு தூரம் வந்திருந்தேன். தாகம் எடுத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்பேயில்லை. காட்டில் கேட்ட காற்றின் ஓசையை மீறி இரயில் போகும் சத்தம் கேட்டது. இரயில் நிலையத்திற்குப் போக வேண்டுமானால் இன்னும் ரொம்ப தூரம் நடக்க வேண்டும். சோர்வுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். கீழே ரம்புத்தான் பழங்கள் கிடந்தன. அருகில் கிடந்த ஒரு பழத்தை எடுத்தேன். அப்போது இலேசான உறுமல் சத்தம் கேட்டது. கையிலிருந்த ரம்புத்தான் நழுவியது. வயதான ஒருவர் அவ்வழியே வந்ததைப் பார்க்கவும் சற்றுத் தைரியமானேன். மீண்டும் உறுமல் சத்தம் கேட்டது. பன்றி குட்டி போட்டிருப்பதாகவும் மனித வாடை அடிப்பதால் குட்டிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ எனச் சத்தம் கொடுப்பதாகவும் சொன்னார். என்னை அங்கிருந்து போய்விடுமாறு சொன்னதை நான்
கண்டுகொள்ளவில்லை. கொஞ்சம் தூரம் போன பிறகு திரும்பிப் பார்த்த பெரியவர், அங்கே இருக்காதே என்று சத்தமாகச் சொன்னார். புத்தகப்பையைத் தோளில் மாட்டினேன்.
‘என்னுடைய அம்மாவால் மட்டும் எப்படி பிள்ளையைத் தவிக்கவிட்டுப் போக முடிந்தது?’
முன்புபோலப் படிப்பில் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை. என்னுடைய படிப்பில் மிகுந்த அக்கறையைக் காட்டிய அப்பா, அதைச் சுத்தமாக மறந்தார். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்குக்கூட வரவில்லை. ஆசிரியர்கள் கேட்டபோது அப்பா இலண்டனுக்குப் போயிருப்பதாகச் சொன்னேன். எல்லாப் பாடங்களிலும் பின்தங்கியிருப்பதால் அதைப்பற்றிப் பேச அம்மாவையாவது அழைத்து
“வாழ்க்கையை நல்லா அனுபவிக்கணும். வீடு வாங்கினா இங்கேயே தங்க வேண்டி வரும். உலகம் இவ்ளோ பெருசா இருக்குறப்ப, இத்துனூண்டு நாட்டில் எதற்காக நம்மைச் சுருக்கிக்கொள்ள வேண்டும்?”
வா என்றார். ஏற்கனவே அப்பா சொல்லியிருந்தது கை கொடுத்தது.
ஒருநாள், காற்பந்து விளையாடிவிட்டுத் திரும்பிய என் காதுகளில் அப்பாவின் குரல் எட்டியது. “பேங்காக் வந்ததுதான் நான் செய்த பெரும் தவறு. அங்கே வந்த பிறகுதான் அவளுக்குப் புதிய நண்பர்கள் தேவைப்பட்டனர், அதுவும் ஆண் நண்பர்கள்…!” அந்தளவுக்கு அவர் குரலுயர்த்திப் பேசிக் கேட்டதேயில்லை. குனிந்த தலையுடன் மாமா செல்வதைக் கதவு மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கொண்டாட்ட நேரங்களில் மட்டுமே மது அருந்தும் அப்பா, எந்நேரமும் அதனுடனே காணப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்குப் போய்விடலாமா என்று ஒருநாள் கேட்டார். அப்பாவுக்கு இடமாற்றம் அவசியம், அதேசமயம் என் படிப்பும் பாதிக்கக்கூடாது என நினைத்தேன். அவர் என்னை வற்புறுத்தவில்லை. அப்பா ஆஸ்திரேலியாவுக்குப் போனபிறகு எப்போதாவது தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போதும் படிப்பைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. வீட்டு வாடகை, பணிப்பெண் சம்பளம், என் செலவுகளுக்கு என எல்லாவற்றுக்கும் காசோலை வந்துகொண்டிருந்தது.
காற்பந்தாட்டத்தில் ஒருநாள், இரட்டை கோலடித்து என் அணியை வெற்றிபெற வைத்தேன். “உங்கம்மா ஓடிப் போயிட்டாங்களாமே” எதிரணியைச் சேர்ந்த ஒருவன் சத்தமாகக் கேட்டான். சீறி வந்த காற்பந்து மண்டையைப் பதம் பார்த்தமாதிரி இருந்தது. அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடினேன்.
‘நான் ஏன் உயிரோட இருக்கணும்?’
விடாமல் கதவு தட்டப்பட்டது. வீணர்களின் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கலாமா? என்றைக்கு இருந்தாலும் உன்னுடைய அம்மாவைப் பார்க்கதான் போகிறாய், எல்லாவற்றையும் சேர்த்து வைத்து அவரிடமே கேள் எனப் பணிப்பெண் சொன்னார்.
விரைவில் பள்ளிக்கும் செய்தி பரவி மறைமுகத் தாக்குதல் தொடர, அம்மாவின்மீதிருந்த கோபம் வளர்ந்துகொண்டேயிருந்தது.
திடீரென ஒருநாள் அப்பா, உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு வரச் சொன்னார். பள்ளி விடுமுறை தொடங்க சில வாரங்களே இருந்தன. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் உடனே வா என்றார். பெற்றோருடன் பல நாடுகளுக்குச் சென்று வந்தாலும் நான் மட்டும் தனியே விமானப் பயணம் செய்வது முதல் முறை என்பதால் உற்சாகமாக இருந்தேன். ஒருவேளை விமான நிலையத்திற்குத் தான் வரவில்லையெனில் டேக்சி எடுத்து வந்துவிடுமாறு சொல்லியிருந்தார். மெல்பர்ன் போய்ச் சேர்ந்ததும் அப்பாவைத் தேடி என் பார்வை அலைந்தது. ஏமாற்றத்தைத் தள்ளிவிட்டுக் கிடைத்த டேக்சியில் ஏறி அமர்ந்தேன்.
பாவம் அப்பா. நான் ஏன் அவரைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்ச நாட்களாக தோன்றுகிறது. அங்கேயே படிக்கிறேன் எனச் சொல்ல வேண்டும். அதைக் கேட்டால் நிச்சயம் மகிழ்ச்சியடைவார். அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். சில நிமிடங்கள் பதிலேயில்லை. மீண்டும் அழுத்தினேன். கதவைத் திறக்கும் ஒலி கேட்டது. கதவைத் திறந்த மனிதரை குழப்பத்துடன் பார்த்தேன். “மகனே… வந்துவிட்டாயா…?” எலும்பும் தோலுமாக இருந்தவர் என்னை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டார். இது அப்பாவா? நம்பவே முடியவில்லை. ஆறடி உயரமுள்ளவர் எப்படி இப்படிச் சிறுத்துப் போனார்? விளங்காமலே நின்றேன். “ஏன் அங்கேயே நிற்கிறாய்? உள்ளே வா” என்று அழைத்தார். குரலில்கூட அவரது கம்பீரம் காணாமல் போயிருக்க, கண்ணாடி போன்ற கண்கள் மட்டுமே அப்பாதான் என்பதை உறுதியாகக் காண்பித்தன. என் கைகளைப் பிடித்து அழைத்துப் போகையில் தடுமாறினார். உடனே
தாங்கிப் பிடித்தேன். நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் கலக்கத்தைக் கண்டேன்.
“உங்களுக்கு என்னப்பா ஆச்சு?” என்று கேட்கும்போதே அழுகை வந்தது. ஓராண்டில் நான் நன்றாக வளர்ந்துவிட்டதாகச் சொன்னார். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அவர் இளமையில் இருந்ததைப்போலவே ஆகிவிடுவேன் என்றார். “போய்க் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்” துருத்திக்கொண்டு தெரிந்த முன்பற்கள் புன்னகையில் பளீரிட்டன. அடுத்த ஆண்டுதான் அப்பாவுக்கு ஐம்பது வயதாகும். உள்வாங்கிய கன்னமும் பாதியாக மடங்கியிருந்த உடலும் தொண்ணூறு வயதிற்குரிய தள்ளாமையைக் காட்டின. ஓராண்டுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்தபோதுகூட நன்றாகத்தானே இருந்தார்? எல்லாவற்றுக்கும் அம்மாதான் காரணம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவானது. கோபத்தை அடக்கி குளியலறையை நாடினேன்.
பொரித்த கோழி, பீன்ஸ், ஆம்லெட், ஆவி பறக்கும் உருளைக்கிழங்கு என உணவு மேசை நிறைந்திருந்தது. வீட்டுக்கு அருகில் சாப்பாட்டுக்கடை இருக்கிறதா எனக் கேட்டேன். அப்பா இலேசான புன்னகையோடு தான்தான் எல்லாவற்றையும் தயாரித்ததாகச் சொன்னார்.
‘நடக்கவே சிரமப்படுபவர் இவ்வளவையும் சமைத்திருக்கிறாரே…!’
சாப்பிடும்போது எதற்கு கலங்குகிறாய்? நன்றாகச் சாப்பிடு என்றார். நீங்களும் சாப்பிடுங்கப்பா என்றபோது பிறகு சாப்பிடுவதாகச் சொன்னார். வற்புறுத்திச் சொல்லவும், குவளையில் மூடி வைத்திருந்த கஞ்சியை எடுத்தார். ஒரு மிடறு விழுங்கவே மிகவும் சிரமப்பட்டார். உடனே ஆஸ்பிடலுக்குப் போகலாம் என அழைத்தேன். இப்படித்தான் இருக்கும், தானாகவே சரியாகிவிடும் என்றார். அதற்கு மேல் என்னாலும் சாப்பிட முடியவில்லை. “இதுக்குதான் அப்புறமா சாப்பிடுறேன்னு சொன்னேன்” என்று சொன்னவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சிரமத்துடன் தட்டில் இருந்தவற்றை விழுங்கினேன்.
பேச வேண்டும் என்று சொல்லி என்னை பால்கனிக்கு
‘என்னுடைய அம்மாவால் மட்டும் எப்படி பிள்ளையைத் தவிக்கவிட்டுப் போக முடிந்தது?’
அழைத்து வந்தார். இப்படி மூச்சு வாங்கும்போது என்ன சொல்லப் போகிறார் எனக் குழப்பத்தோடு பார்த்தேன். என்னைப் பார்ப்பதும் கருமேகத்தில் மறைந்து பின் தலைகாட்டும் நிலாவைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தார். ஏதோ சொல்லத் தயங்குகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. “நாம சிங்கப்பூருக்குப் போயிடலாம். அங்குள்ள டாக்டருங்க உங்களைப் பழைய நிலைக்கு கொண்டு வந்துடுவாங்கப்பா” என்றேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தவர், “பழைய நிலைக்கு?” என்று கேட்டதோடு திடீரெனச் சிரிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து வேகமாக இருமவும் நான் பயந்து போனேன். சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை. மூச்சிறைப்பது மட்டுமே கேட்டது.
“சந்தேகமே வேணாம்பா. சிங்கப்பூருக்குப் போனால் எல்லாம் சரியாகிடும்.”
“ம்…. ச… சந்தேகத்தால்தான்… வீண் சந்தேகம்….” நெஞ்சுக்கூடு மேலும் கீழும் ஏறி இறங்கியது.
“பேசாதீங்கப்பா, வாங்க இப்பவே டாக்டரைப் பாக்கப் போகலாம்.”
“ஒ… ஒரு முக்கியமான விஷயத்தை… ஒரு முக்கியமான விஷயத்தை… சொல்லதான் உன்னை வரவழைத்தேன்…” வேக வேகமாக மூச்சு வாங்கியது.
“எதாயிருந்தாலும் காலையில் பாத்துக்கலாம். இப்ப கிளம்புங்கப்பா.”
“வே… வேணாம்… இ… இனி… அதுக்கெல்லாம் அவகாசமில்லை…”
புயலில் அடிபட்டு வந்த உணர்வு விமானத்தில் ஏறி உட்கார்ந்தபோது தோன்றியது. அழுதழுது முகம் வீங்கியிருந்தது. எவ்வளவு அழுதாலும் வற்றிப்போகாத கண்ணீர் பெருக்கெடுத்தது. குடி நுழைவுச் சோதனை முடித்து வெளியே வந்து காத்திருந்த டேக்சியில் ஏறினேன்.
‘கெய்ர்ன்ஹில் கோர்ட்’ என்று ஓட்டுனரிடம் சொன்ன அடுத்த நொடியே ஆர்ச்சர்ட் சாலை காவல் நிலையம் என்றேன். ஓட்டுனர் திரும்பிப் பார்த்து, ஆர்ச்சர்ட் சாலை காவல் நிலையம் போகணுமா? ‘கெய்ர்ன்ஹில் கோர்ட்’ போகணுமா? என்று கேட்டார். எனக்குத் தலை வெடிப்பதுபோலிருந்தது. காவல் நிலையம் என்றேன். ஓட்டுனர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். டேக்சி வேகம் பிடித்தது.
காவலதிகாரிகள் என்னை நம்பவியலாமல் பார்த்தனர். ஓர் அதிகாரி என்னுடைய பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தார். அதன் பிறகு என்னையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தார்.
“நாம சிங்கப்பூருக்குப் போயிடலாம். அங்குள்ள டாக்டருங்க உங்களைப் பழைய நிலைக்கு கொண்டு வந்துடுவாங்கப்பா”
காபி கலந்து எடுத்து வருமாறு காக்கி நிற அரைக்கால் சட்டை அணிந்திருந்த கான்ஸ்டபிளிடம் சொன்னார். உடனே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் வேண்டாம் என்றேன்.
“ரொம்ப களைப்பா தெரிகிறாய். ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்” என்றார். அதற்குமேல் மறுக்க முடியவில்லை. சுடச்சுடக் காபி தொண்டைக்குள் இறங்கியது. இரண்டு மேலதிகாரிகள், இரண்டு கான்ஸ்டபிள்களுடன் காவல்துறை வாகனம் எங்கள் வீட்டை நோக்கிப் பயணப்பட்டது. காற்பந்து திடலைக் கடந்து செல்கையில், சற்று ஓய்வெடுத்திருந்த கண்ணீர் மீண்டும் பெருகியது. அழ வேண்டாமெனச் சொன்ன காவலதிகாரி, இலேசாக முதுகில் தட்டிக் கொடுத்தார்.
வண்டியைவிட்டு இறங்கும்போதே கால்கள் பின்னிக்கொள்வதைப்போல உணர்வு ஏற்பட்டது. நடுங்கும் கரங்களால் கதவைத் தட்டினேன். “அதற்குள் வந்துட்டீங்களா?” வியப்புடன் கேட்ட பணிப்பெண், எனக்குப் பின்னால் நின்றிருந்த காவல் துறையினரைப் பார்த்து மிரண்டார்.
அனைவரும் வீட்டுக்குள் போனோம். இதயம் தடததவென அடித்துக்கொள்ள, அவர்களை அடுப்பங்கரைக்கு அழைத்துச் சென்றேன். சிறு உணவு மேசையிலிருந்த பாதி கடிக்கப்பட்ட ரொட்டியையும் திறந்திருந்த வெண்ணெய் டப்பாவையும் பணிப்பெண் அவசரமாக எடுத்தார். அதிகாரி அவரைத் தள்ளிப் போகச் சொல்லி கை காட்டினார்.
“இங்க என்னப்பா செய்திருக்கீங்க?”
“குப்பை போடுற வழியா கரப்பானுங்க வீட்டுக்குள்ளே வந்துடுது. அதனால அடைச்சிருக்கேன்.”
அடுப்பங்கரையில் கை கழுவும் தொட்டிக்குக் கீழேயுள்ள பாதி இடம் சிமென்ட் பூசி அடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஒருமுறைகூட நான் கரப்பானைப் பார்க்கவில்லையே!
உபகரணங்களை எடுத்துக்கொண்டு வந்த காவலர்கள் கட்டப்பட்டிருந்த பகுதியை சுத்தியலையும் உளியையும்கொண்டு உடைக்க முயற்சி செய்தனர். மிகவும் உறுதியாக இருந்தது. அவர்கள் வேகவேகமாக
அடிக்க, என் இதயம் துடியாய்த் துடித்தது. சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. அந்தப் பகுதியைத் தடவிப் பார்த்த காவலர் உள்ளே ஏதோ இருப்பதாகச் சொன்னார். விரைவிலேயே அப்பகுதி தகர்க்கப்பட்டு, அதற்குள்ளேயிருந்த ஒரு பெட்டியை எடுத்தனர். என் உடல் தடதடவென ஆடியது. ஒரு காவலதிகாரி நாற்காலியை என்னருகில் இழுத்துப்போட்டு உட்கார வைத்தார்.
நம்பர் பூட்டு இருந்த பகுதியில் சுத்தியலால் அடித்து கிடைத்த சிறு இடைவெளியில், திருப்புளியைவிட்டு நெம்பவும் பெட்டி திறந்துகொண்டது. மற்றவர்களின் பார்வை ஆர்வத்துடன் அதற்குள் போனது. அந்தப் பெட்டிக்குள்ளே ஒரு பச்சை வண்ண டிரங்குப் பெட்டி இருந்தது.
“இந்த டிரங்குப் பெட்டி எதுக்குப்பா?”
“நம்ம பொருளையெல்லாம் ஹோட்டலிலிருந்து எடுத்துக்கொண்டு போவதற்குதான்.”
‘அம்மாவின் ஆடைகளை ஹோட்டலின் துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்துட்டோம். அப்புறம் எதற்குப் பெரிய பெட்டி?’ எனக்குப் புரியவில்லை.
“பூட்டை உடைங்க.”
காலை மடக்கி நாற்காலிமேல் வைத்து நடுங்கும் கைகளால் கால்களைக் கட்டிக்கொண்டு பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“எ… என்னை… மன்னி….!”
சாய்ந்த உயிரற்ற உடல் நினைவுக்கு வந்தது.
சுத்தியலிடம் அடி வாங்கிய பூட்டு பிளந்தது.
‘இ… இதை… என்னால் தாங்க முடியுமா?’
டிரங்குப் பெட்டியும் திறக்கப்பட்டது.
“அம்மா….!”
‘ம்… ஐம்பதாண்டுகளில் நாங்கள் சுற்றிய இடங்களெல்லாம் கட்டடங்களாகிவிட்டன!’
சாலையோரத்து செடிகளும் மரங்களும் வண்ண விளக்குகளால் கிறிஸ்துமசை வரவேற்க காத்திருந்தன. வெண்ணிற கவுன் அணிந்திருந்த சிறுமி, காற்றுக்குமிழிகளை ஊதியவாறு வந்ததைப் பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சி அசைந்தாடி வருவதுபோலிருந்தது. சிறுமி புன்னகையுடன் என்னைப் பார்த்தாள். அப்போது, பறந்து வந்த காற்றுக்குமிழி ஒன்று கன்னத்தில் பட்டது. அம்மாவின் வாசம் என்னைச் சூழ்ந்தது.