கிளி பறந்த வானம்
அந்தக் கடலைக் காட்டின் நடுமேட்டில் இருக்கும் வேப்பமரத்தடிதான் நானும் ஜகதீசனும் சந்திக்கும் இடம். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவன் தனக்காக வேலை எதுவும் தேடிக்கொள்ளவில்லை. பரம்பரையாக விவசாயக் குடும்பம். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு. ஆகையால், அவனை விட்டால் அந்தக் குடும்பத்தில் விவசாயத்தைத் தொடர வேறு ஆளில்லை. விவசாயம் பெரிதாக வருமானம் தரவில்லை. ஆனாலும், ஒர் நோன்பைப் போல விடாப்பிடியாக அதைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். தான் கற்றுக் கொண்ட படிப்பின் மூலமாக வங்கி உதவிகளைப் பெற்றுக் கொண்டு, விவசாயத்தில் ஏதேனும் புதுமையைப் புகுத்த முடியுமா என்று முயன்று பார்த்துக் கொண்டிருக்கிறான் ஜகதீசன். நான் ஊரில் இருந்தவரை அவனை இந்த வேப்ப மரத்தடியில்தான் சந்திப்பது வழக்கம்.
இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்த இடத்தில் இருந்து பார்த்தால், ஒட்டுமொத்த கடலைக் காடும் நம் பார்வை வெளிக்குள் சிறைப்படும். மறுபுறம் கண்ணுக்கு எட்டியவரையிலான செடி கொடி மண்டிய வெட்ட வெளியின் தரிசனம் கிடைக்கும். இப்போது அந்த இடத்தில் காற்றாலையின் வெண்ணிற அசுரக் காற்றாடிகள் தங்கள் ராட்சதக் கத்திகளால் வெயிலை வெட்டிக் கொண்டிருக்கின்றன. வளைந்து செல்லும் சாலையில், எப்போதாவது சில வாகனங்கள் செல்லும் காட்சி காணக் கிடைக்கும். தூரத்தில் தோட்டத்திற்குள் வருபவர் யாராக இருக்கும் என்று இங்கிருந்து பார்த்தே கணிக்கலாம். வேலை முடிவதற்குள்ளேயே எவரேனும் வெளியேறினால் கூட இங்கிருந்து பார்க்க முடியும். கூடுதலாக, மாலை மயங்கும்போது சாய்வாக விழும் வெயிலின் ரேகைகள் எதிரில் இருப்பவரைப் பொன்மயப் பின்புலத்தில் பொலிவாகக் காட்டும். சுழற்றிக்கொண்டு அடிக்கும் காற்றில் நடக்கும் மனிதர்களின் கைலிகள் பறப்பது துல்லியமாகத் தெரியும். ஊர்க் கதைகளையும், உலகக் கதைகளையும், வெட்டி நியாயங்களையும் நாங்கள் பேசிக் கொள்வது இந்த இடத்தில்தான். எங்கள் இருவரின் நாவில் இருந்து வருடக்கணக்காக வெளிவந்த கோடிக்கணக்கான சொற்களையெல்லாம் அந்த காற்று இன்னும் ஏந்திக் கொண்டிருக்கிறதா?
கடைசியாக ஜகதீசனைச் சந்தித்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு. அதன்பின் இப்போதுதான் அவனைச் சந்திக்க வந்திருக்கிறேன். அருகில் இருக்கும் கிராமத்திற்கு ஒரு வேலையாகப் போயிருக்கிறான். செல்போனில் பேசியபோது, “வீட்டில் காத்திரு, நான் வந்துர்றேன்” என்று சொன்னான். “வீட்டுக்கெல்லாம் அப்புறம் போய்க்கலாம், நான் நம்ம சபைக்கு வந்திர்றேன். நீயும் வந்திரு” என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன். அந்த இடம் அப்படியேதான் இருந்தது. காலமாற்றத்துக்கு அதைக் காவு கொடுக்காமல் அந்த வேப்பமரத்தடியை அப்படியே வைத்திருந்தான் ஜகதீசன். அநேகமாக என்னைப் போலவே பிற நண்பர்களையும் அந்த இடத்தில்தான் சந்திக்கிறான் போலிருக்கிறது. மனிதர்களுக்கு இப்படிப்பட்ட, தனக்கே தனக்கேயான ஒரு இடம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் வீட்டிற்கு வெளியேதான் அப்படிப்பட்ட இடத்தை மனிதர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். சாயங்கால வெயிலில் அந்த இடத்தில் உட்கார்ந்தபோது, இழந்துபோன வருடங்கள் எல்லாம் மடியில் வந்து அமர்ந்து கொண்டது போல இருந்தது. ஒரே சமயத்தில் இளமையானவனாகவும் வயதானவனாகவும் என்னை உணரச் செய்யும் இடமாக இது மாறிக்கொண்டேயிருக்கிறது.
இந்த இடத்தில் அமர்ந்தாலே தவிர்க்க இயலாமல் இறந்த காலம் உயிர்பெற்றுவிடுகிறது. மனித உடல் எதிர்காலம் நோக்கிப் போய்க்கொண்டேயிருக்கிறது, ஆனால் உள்ளம் மட்டும் இறந்த காலத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னால், இதே இடத்தில்தான் வண்ணக்கிளி தன்னை வந்து சந்தித்தது குறித்து ஜகதீசன் என்னிடம் சொன்னான். வன்ணக்கிளி என்பது அவளுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர். அவளது மெய்யான பெயர் சித்ரா. சித்ரா, ஜகதீசனின் மாமா மகள். இருவரும் சிறுவயதில் இருந்தே பழகிவந்தனர். பருவம் அதைக் காதலாக மாற்றியிருந்தது. ஆகையால், இருவரும் காயடிக்கப்படாத ஆட்டைப் போல கட்டுக்கடங்காமல் காதலித்தனர். ஓ! அது ஓர் உலகப் புகழ்பெற்ற உள்ளூர் காதல் கதை..
அடுத்த தெருவில் இருக்கிறது வண்ணக்கிளியின் வீடு. ஜகதீசன் அவளிடம் நேரடியாகப் பேசினாலே இரு வீட்டாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனாலும், வீட்டிற்குத் தெரியாமல் சந்திப்பதே காதலர்களின் வீரத்திற்கு அழகு என்பதால், இருவரும் மறைந்து திரிந்து பேசிப் பழகுவார்கள். காதலின் உந்துபலகையின் மீதேறி காற்றில் தாவி களவியல் பயின்றார்கள். தரை என்று ஒன்று இருப்பதையே அவர்களது கால்கள் அறியவில்லை. பேசிப் பேசியே பொழுதுகளை நரைக்கச் செய்தது போதாதென்று கடிதங்களும் எழுதிக்கொள்வார்கள். ஜகதீசன் எழுதிய பல கடிதங்களை நானே வண்ணக்கிளியிடம் சென்று சேர்க்கும் தபால்கார உத்தியோகம் பார்த்திருக்கிறேன்.
எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரியில்தான் நாங்கள் படித்தோம். கல்லூரியிலும் இவர்களது அமரகாதல் பிரசித்தி பெற்று விட்டது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் பேருந்தில், வண்ணக்கிளியின் அருகில் எந்தத் தோழி அமர்ந்திருந்தாலும், ஜகதீசனைப் பார்த்ததும் எழுந்து கொள்வாள். அந்த இடத்தில் ஜகதீசன் சென்று அமர்ந்துகொள்வான். சுற்றியிருப்பவர்களின் பொறாமைப் பெருமூச்சுகளால் அந்த இருக்கை ஒருகணம் மானசீகமாகப் பொசுங்கும். காதல் நீரால் வளரும் பயிரல்ல. காற்றால் வளரும் பயிர். ஏக்கப்பெருமூச்சுகளாலும், பொறாமைப் பெருமூச்சுகளாலும் வளரும் பயிர். ஒரு கட்டத்தில் ஊர் இதையெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டதால், இவர்களது காதல் எவர் கண்ணையும் உறுத்தவில்லை. ஆனால், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டிவிட்டது.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஜகதீசன் ஏதாவது உத்தியோகத்துக்குப் போவான் என்று வண்ணக்கிளியின் குடும்பம் எதிர்பார்த்தது, ஆனால் இவன் விவசாயமே கதி என்று இருந்துவிட்டது அவர்களுக்கு ஏமாற்றமளித்தது. விவசாயத்தை விட்டு வெளியேறிச் சென்று ஏதாவது நகரத்தில் ஒரு ஆபிசர் வேலைக்குப் போகச் சொல்லி வண்ணக்கிளி சொன்னதாகவும் அதனை மறுத்து இவன் பேசியதாகவும் தங்களுக்குள் முதன்முதலாக ஒரு பெருஞ்சண்டை வெடித்ததாகவும் ஜகதீசன் சொன்னான். இரு குடும்பத்துக்கும் இதன் காரணமாக பனிப்போர் வெடித்தது. ஒரு கட்டத்தில், ஜகதீசன் விவசாயத்தில்தான் தொடரப் போகிறான் என்று திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டதால், வண்ணக்கிளியின் குடும்பத்தினர் அவளுக்கு, வெளியே வரன் பார்க்கத் துவங்கினர். ஜகதீசனின் குடும்பத்தினர் அவனை வேறு ஏதாவது வேலைக்குப் போகாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு விவசாயத்தை இவன் மூலமாகத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம். இந்தப் பிணக்குகளுக்கிடையே அனல் அவிந்த பாத்திரத்தின் சூடு குறைவது போல, ஜகதீசன் வண்ணக்கிளியின் காதலின் சூடும் குறைந்து, குளிர்ந்து, உறைந்து போய்விட்டது. வருடங்கள் செல்லச் செல்ல மெல்ல உதிர்ந்தும் போய்விட்டது. குடும்பத்தை மீறி ஒன்றும் செய்யமுடியாமல், அவர்கள் பார்த்துவைத்த ஒருவனை வண்ணக்கிளி மணந்து போய்விட்டாள். அதன் பிறகான சில மாதங்கள், ஜகதீசன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இதே வேப்பமரத்தடியில் நானும் வேறு சில நண்பர்களும் அவனுக்குப் பக்கம் பக்கமாக அறிவுரைகள் வழங்கித் தேற்றினோம். யாவற்றையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டு காலம் மட்டும் தன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. ஜகதீசன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான்
சில வருடங்களுக்குப் பிறகு ஊர்த் திருவிழா நாளில், வண்ணக்கிளி தனது கணவனுடன் சொந்த ஊருக்கு வருகை தந்தாள். வெயில் தாழத் துவங்கிய ஒரு மாலை வேலையில், கணவனுடன் கோயிலுக்கு வந்திருந்தாள். ஜகதீசனும் அங்கு இருந்திருக்கிறான். தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சம்பவத்தைத்தான் கடந்த முறை ஜகதீசன் என்னிடம் சொன்னான்.
தன்னுடைய கணவனிடம் ஜகதீசனை அறிமுகப்படுத்தி, “இவர்தான் என் மாமா ஜகதீசன்” என்றிருக்கிறாள். அவனும், “நீங்கதானா அது, உங்களப்பத்தி ரொம்ப சொல்லியிருக்கா” என்றிருக்கிறான்.
ஜகதீசன் என்னிடம் சொன்னான், “அவ தன் புருஷன்ட்ட என்னப் பத்தி என்ன சொன்னான்னு எனக்குத் தெரியாதுடா. ஆனா, இந்த ஊர் அவங்கிட்ட நிறைய சொல்லியிருக்கும். இங்க எதுவுமே ரகசியமில்லை. ஆனாலும், அதயெல்லாம் ரகசியமாகவே வைச்சுருக்கத் தெரிஞ்சுருக்கு எல்லாருக்குமே. எல்லாஞ் தெரிஞ்சிருந்தும் எதுவுமே நடக்காதது மாதிரி எல்லாருக்குமே நடிக்கத் தெரிஞ்சுருக்கு” என்றான்.
“அந்த வகையில் எல்லாருமே நடிகர் திலகங்கள்தான்” என்றேன் நான்.
வண்ணக்கிளியின் கணவன், ஜகதீசனைப் பார்த்து, “சீக்கிரம் கல்யாணம் செய்துக்கங்க. தவறாம எனக்குச் சொல்லியனுப்புங்க” என்றிருக்கிறான்.
“சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க மாமா” என்று புன்னகையுடன் வண்ணக்கிளியும் சொல்லியிருக்கிறாள்.
“நீ என்ன சொன்ன?” என்று நான் ஜகதீசனைப் பார்த்துக் கேட்டேன்.
“வேற என்ன சொல்றது, சரிம்மான்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காம வந்துட்டேன்” என்றான் ஜகதீசன்.
“உண்மையத்தாஞ் சொல்றியா, இல்ல அவ போகும்போது எப்படியாவது உன்னத் திரும்பிப் பாப்பான்னு காத்திட்டு இருந்தியா”, என்றேன்.
“போடா புண்ணாக்கு”, என்று சொல்லிச் சிரித்தான் ஜகதீசன்.
சமயவேலின் இந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
சந்தி
நான் உன் கணவரோடு
நீ என் மனைவியோடு
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும் மிச்சரும் காபியும்.
நீங்கள் எங்கு படித்தீர்கள்?
பஸ் ஸ்டாண்ட் பக்கமா உங்கள் வீடு?
77-ல் சென்னையிலா இருந்தீர்கள்?
குவைத் வெயில் எப்படி?
டிரைவிங் கஷ்டமா அங்கே?
அடடே கல்யாணத்துக்கு வந்திருக்கலாமே?
மழையா வரும்போதும்?
மோகன் உங்கள் ப்ரண்டா, அப்படியா?
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரேயொரு விஷயம் மட்டும்
தொடப்பட முடியாமல்
நம்மைச் சுற்றிச் சுற்றி
புதைந்து எழுந்து புதைந்து
நழுவிக்கொண்டிருந்தது.
கேசட் முடிந்து அறையில்
மௌனம் விழுந்த அரை நிமிஷம்
நமது இருதயங்களுக்கடியில் எலும்புகள் நழுவின
மொத்தச் சூழலையும் நொறுக்கி
நம் முழு இருப்பையும் அசைத்துவிடும்
ஒரு கனத்த கேள்வியின்
விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.
கேசட் மீண்டும் தொடர
நம் இருதயங்களின் நல்லோரத்தை மட்டும்
விரிவு படுத்தி விரிவு படுத்தி
நாம் சிரிக்கத் தொடங்கினோம்.
இந்தக் கவிதையில் “நமது இருதயங்களுக்கடியில் எலும்புகள் நழுவின” என்ற வரி வலிமையானது. இருதயங்களுக்கடியில் எலும்பு நழுவி முறியும் ஒலியையும் வலியையும் மட்டும் பிறர் அறியாமல் மறைக்கக் கற்றிருக்கிறோம். நெருங்கிய நண்பனான என்னிடமே வண்ணக்கிளியைச் சந்தித்ததும் தனது இருதயத்தில் ஏற்பட்ட வலியை ஜகதீசன் பகிர்ந்துகொள்ளவில்லை. அது எப்போதும் அப்படித்தானே இருக்கும்?
தூரத்தில் அவன் தலை தெரிகிறது. வந்துவிட்டான். இந்தச் சம்பவத்தைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் நான் அவனிடம் இன்று மாலை முழுக்கப் பேசுவேன். தவறியும் இதைக் குறித்துப் பேசமாட்டேன். ஏனெனில், நானும் என் இருதயத்தின் நல்லோரத்தை விரிவுபடுத்துவதில் தேர்ந்து விட்டேன்.
சுற்றிலும் நூற்றியெட்டு அரிவாள் நிழல்கள் சூழ்ந்திருந்த போதிலும், ஒரே ஒரு நெற்கதிர் மெல்ல வளைந்தெழுந்து தனித்து நாணுவதுதான் கன்னிப் பருவம். அத்தனைத் தனித்துவமானது. ஆனாலும், தருணம் வரும்போது அந்தப் பருவமும் கடந்துபோகும். கன்னிமை என்பதை கள்ளமற்ற தூய்மை என்பதாக புரிந்துவைத்திருக்கிறோம். ஏதேதோ காரணங்களால் நம்முடைய கட்டுப்பாடுகளை மீறி அந்த தூய்மையில் களங்கம் படிவதை மட்டும் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ? நாங்கள் அந்த வீட்டைக் காலிசெய்து விட்டோம். சாந்தியின் கூந்தலில் உமிநீங்கி இந்நேரம் ஒரு வெண்முகம் வெளிவந்திருக்கும். கன்னிமை என்ற கூந்தலின் உமிநீக்கி வெடித்தெழுந்த வெண்முகத்தை சாந்தியின் தாய் இந்நேரம் ஏற்றுக்கொண்டிருப்பாளா? சாந்திக்கான கதவுகள் திறக்கப்பட்டிருக்குமா? நூற்றெட்டு அல்ல, ஆயிரத்தெட்டு அரிவாள்களின் நிழல்களாகக் கேள்விகள் மனதில் எழுகின்றன. பதில்தான் கிடைக்கவில்லை.