சிகரெட் புகைக்கும் சித்தாளு

சிவானந்தம் நீலகண்டன்

சர்ச்சைக்குள்ளான சம்சுயி சுவரோவியம்

மெக்ஸ்வெல் எம்ஆர்டி நிலையத்தில் இறங்கி, வழி இரண்டில் வெளியேறினீர்கள் என்றால் ஒரு சுவரோவியம் கண்ணில்படும். அவ்வோவியத்தில் சிவப்புத் தலைப்பாகை, நீல ஆடை, வலதுகையில் புகையும் சிகரெட் சகிதம் ஒரு மாது நாற்காலியில் அமர்ந்தபடி உங்களை உற்றுப்பார்ப்பார். இந்த சம்சுயி (samsui) மாது சுவரோவியத்தை சிங்கப்பூரில் வசிக்கும் அமெரிக்க ஓவியர் ஷான் டன்ஸ்டன் (Sean Dunston) கடந்த ஏப்ரல் மாதம் வரைந்து முடித்தார். அப்போதிலிருந்து பல சலசலப்புகள். புகைப்பிடித்தலை ஓவியம் சகஜமாக்குகிறதா என்பதில் தொடங்கி ஒரு சம்சுயி மாது இத்தகைய தோற்றத்தில் இருந்திருப்பாரா என்பதுவரை பல்வேறு சர்ச்சைகள். அவற்றோடு கலைச்சுதந்திரத்தின் எல்லை எது என்ற கேள்வியும் எழுந்தது.
சிவப்புத் தலைப்பாகை, நீல உடை அணிந்த பெண்ணின் உருவம் என்றாலே அவர் சம்சுயி மாது என சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்கின்றனர். அதற்குக் காரணமுண்டு. ஒரு தொலைக்காட்சி வரலாற்றுத்தொடர் (Samsui Women, 1986), உள்ளூர் ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்கள், ஓர் ஆய்வுநூல் (Remembering the Samsui Women, Kelvin E.Y. Low, 2014), மெக்டொனால்ட் வெளியிட்ட சம்சுயி ஹலோ கிட்டி பொம்மை (2015), சைனா டவுன் வட்டாரத்தில் குறைந்தது எட்டு இடங்களில் சம்சுயி மாதர் ஓவியம் அல்லது சிற்பம் என்று கடந்த சுமார் அரைநூற்றாண்டாக சம்சுயி மாதர்கள் தொடர்ந்து சிங்கப்பூரர் நினைவில் பசுமையாக நீடிக்கின்றனர். சம்சுயி மாதர் சித்திரிப்பு எத்தகையது என்றாலும் அதில் சிவப்புத் தலைப்பாகையும் நீல உடையும் தவறாது இடம்பெற்றுவிடும்.
தொடக்கப்பள்ளியில் படிக்கும் என் மகளிடம், “சம்சுயி மாதர் தெரியுமா?” என்றேன். “தெரியுமே. சிவப்புத் தலைப்பாகை கட்டியிருப்பர், கடும் உழைப்பாளிகள், கட்டடத் தொழிலாளிகள், நாளொன்றுக்கு 50 காசு ஊதியத்தில் வாழ்ந்தவர்கள்” என்று ஒரேமூச்சில் ஒப்பித்தாள். பள்ளியில் கிடைத்த பாடம். ‘சம்சுயி மாதர் என்றால் இப்படித்தான்’ என்ற கற்பனை சிறுவயதிலேயே பிள்ளைகளிடம் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. ஒருவேளை சிற்பம் அல்லது வண்ணமில்லா நிழலோவியம் என்றால் தோளில் ‘காண்டா’ சுமந்து செல்பவராகவோ அல்லது கையில் மண்வாரி வைத்திருபவராகவோ சம்சுயி மாது இருப்பார்.
தென்சீனக் கடலோரத்தின் சம்சுயி பகுதியிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குமுன், சுமார் 200,000 பெண்கள் அன்றைய மலாயாவுக்குப் பிழைப்புத்தேடி புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலோர் சீனாவில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டு பொறுப்பற்ற கணவன்மார்களால் கொடுமைக்குள்ளானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. சொந்த ஊரில் விவசாயப் பின்னணியுள்ள பெண்கள் என்பதால் உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள். சிங்கப்பூரில் கட்டுமானத் துறையிலிருந்த சித்தாள் பஞ்சத்தைப் பார்த்ததும் அதில் நுழைந்தனர். எதிர்ப்பேச்சு பேசா எந்திரமாக உழைத்துத் தமக்கென ஓர் அடையாளத்தையும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளையும் ஈட்டிக்கொண்டனர்.
சம்சுயி மாதர் சுமார் 2,000 பேர் சிங்கப்பூரில் சைனா டவுன் வட்டாரத்தில் வாழ்ந்துகொண்டு பெரும்பாலும் கட்டடத் தொழிலில் சித்தாள்களாக வேலைசெய்துள்ளனர். வெயிலுக்கும் சுமைக்கும் ஈடுகொடுக்க அவர்கள் கட்டிய சிவப்புத் தலைப்பாகை காலப்போக்கில் அவர்களது அடையாளமாகிவிட்டது

சம்சுயி மாதர் சித்திரிப்பு எத்தகையது என்றாலும் அதில் சிவப்புத் தலைப்பாகையும் நீல உடையும் தவறாது இடம்பெற்றுவிடும்.

எதிர்ப்பேச்சு பேசா எந்திரமாக உழைத்துத் தமக்கென ஓர் அடையாளத்தையும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளையும் ஈட்டிக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி சிவப்புத் தலைப்பாகை சித்தாள் என்றாலே – சம்சுயி பகுதியிலிருந்து வரவில்லை என்றாலும் – அவர் சம்சுயி மாது என்றே கருதப்பட்டார். ஏற்கெனவே குடும்ப வாழ்க்கையின் கசப்பைக் கண்டதாலோ என்னவோ வெகுசிலரைத்தவிர சிங்கப்பூரில் அவர்கள் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. தனியாள்களாகத் திரளும், அவர்களுக்குள் உதவிக்கொள்ளும் ஒரு சமூகமாக வாழ்ந்தனர். ஆயினும் சீனாவிலிருந்த குடும்பத்தினரைக் கைவிடாமல் தம்மால் இயன்ற பொருளுதவியை அனுப்பிவைத்தனர்.
தனியாள்களாகவே வாழ்ந்ததால் காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. சுமார் 700பேர் 1970களில் எஞ்சியிருந்தனர். அவர்களும் 70ஐ ஒட்டிய வயதுகளில் இருந்தனர். அவ்வயதிலும் அசராமல் வேலைசெய்துகொண்டிருந்த அவர்களை சிங்கப்பூர் தன்னுடைய அடையாளங்களுள் ஒன்றாக ஆக்கிக்கொண்டது. ஒரு தனிநாடாக 1965இல் ஆகி, கடும் சவால்களைச் சந்தித்துத் தனக்கென ஓர் அடையாளத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த சிங்கப்பூர், சம்சுயி மாதருடன் தன்னை இணைத்துப் பார்த்தது பொருத்தமானதே. அக்காலகட்டத்தில் சம்சுயி மாதர் இருந்தபடி, வயதான, கடினமாக உழைக்கும், பழைய ‘டயர்’களில் செய்யப்பட்ட காலணிகளை அணிந்த தோற்றத்திலேயே கலைப்படைப்புகளில் இடம்பெற்றனர்; மக்கள் மனத்திலும் அப்படியே நிலைபெற்றனர்.
ஷான் டன்ஸ்டன் வரைந்த சுவரோவியமோ அவ்வாறு பொதுப்புத்தியில் நிலைத்துப்போன உருவத்தைக் கலைத்துப்போட்டது. சிவப்புத் தலைப்பாகை, நீல உடையைத்தவிர மற்ற அனைத்தையும் டன்ஸ்டன் மாற்றிவிட்டார்; இளமைத் தோற்றம், வலது கையில் புகையும் உயர்தர சிகரெட், இடது மணிக்கட்டில் உசத்தியான வளையல், தரமான காலணி என்று வரைந்து அழகுபார்த்துவிட்டார். புகைப்பிடித்தலைக் குறைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஓவியம் பொருந்தவில்லை என்று மே மாதத்தில் நகரச் சீரமைப்பு ஆணையம் கட்டட உரிமையாளருக்கு ஒரு மின்னஞ்சல் போட்டது.

அதற்கிடையில், சம்சுயி மாதைப் ‘புதிய’ தோற்றத்தில் பார்த்து அதிர்ந்த பொதுமக்களுள் ஒருவர், கடின உழைப்பாளிகளான சம்சுயி மாதரைப் பாலியல் தொழிலாளி போலவும் மோசமான வகையிலும் ஓவியம் சித்திரித்துள்ளதாக நகரச் சீரமைப்பு ஆணையத்துக்கு ஒரு கடிதம் போட்டுவிட்டார். ஆணையம், ஜூன் மாதத்தில், அந்தக் கருத்தையும் கட்டட உரிமையாளருக்குத் தெரிவித்ததோடு, ஓவியத்தை மாற்றியமைப்பதற்கான யோசனையை வழங்க கெடு விதித்தது. டன்ஸ்டன் விஷயத்தைத் தன் இன்ஸ்டகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, இவ்வளவு இறுக்கமும் கடுமையும் காட்டினால் சிங்கப்பூரில் கலைத்திறம் அமுங்கிவிடும் என்று விசனப்பட்டார். அவரது ஆதரவாக உள்ளூர் கலைஞர்கள், பொதுமக்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் சுமார் 80 சுவரோவியங்கள் வரைந்த கலைஞர் யிப் இயூ சோங் (Yip Yew Chong), சம்சுயி மாது ஓவியத்திலுள்ள சிகரெட்டை அழிக்கச்சொல்வது “மிகவும் அதிகம்” என்றார். தான் ஒருமுறை பழைய சிங்கப்பூரில் கஞ்சா புகைக்கும் உடலுழைப்புத் தொழிலாளர்களைத் தன் சுவரோவியத்தில் இடம்பெறச் செய்ய விரும்பியதாகவும் ஆனால் சுயதணிக்கை செய்துகொண்டதாகவும் ஆதங்கப்பட்ட அவர், அவ்வாறு கலைஞர்கள் தயங்காத அளவுக்குச் சூழல் அமைவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்தச் சுவரோவியத்தில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் ஓவியம் வரையப்பட்டது ஒரு பழமைப் பாதுகாப்பு வட்டாரக் கடைவீட்டின் (conserved shophouse) சுவரில். அவ்வட்டாரத்தில் சுவரோவியங்கள் மனம்போன போக்கில் வரையப்பட்டால், பாதுகாக்கப்படும் பழமைத் தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் இன்ன ஓவியம் வரையப்போகிறோம் என்று முதலில் ஆணையத்திடம் கட்டட உரிமையாளர் அனுமதி பெற்றே வேலையைத் தொடங்கவேண்டும். அந்த நெறிமுறையை உரிமையாளர் கடைப்பிடிக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்டிய தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், முன் அனுமதி பெறாமல் ஓவியத்தை வரைந்துவிட்டுப் பிறகு அதில் சிக்கல் என்று வரும்போது கலைச்சுதந்திரம், கட்டுப்பாடு, இறுக்கம், கடுமை என்று பொதுவெளிக்குக் கொண்டுசென்று அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றார்.
முன்னர் குறிப்பிடப்பட்ட சம்சுயி மாதர் குறித்த ஆய்வுநூலில், பேராசிரியர் கெல்வின் லோ, ‘சீனப் புலம்பெயர் பெண்கள்’, ‘முன்னோடிகள்’, ‘பெண்ணியவாதிகள்’, ‘மூத்தோர்’ ஆகிய நான்கு வடிவங்களில் மட்டுமே சும்சுயி மாதரைக் கற்பனை செய்ய சிங்கப்பூரர்கள் பழகிவிட்டதாக 2014ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார். டன்ஸ்டனின் சுவரோவியம் அவ்வடிவங்களை மீறிக் கற்பனை செய்ததே பொதுவாக அதிர்ச்சிக்குக் காரணம் எனலாம். ஆயினும், சம்சுயி மாதர் சிங்கப்பூருக்கு அதிகமாக வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் இள வயதினரே என்பதால் அவர்களைக் கற்பனை செய்ய ஒரு கலைஞர் விரும்பினால் அதில் எவ்வித தவறுமில்லை என்பது எளிதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய வாதமே. வரலாறு மாற்றி எழுதப்படுகிறது எனக் குறைபட இங்கு அதிக இடமில்லை.
சுவரோவியம் தொடர்பான கருத்துகளை வாசித்துக்கொண்டிருந்த எனக்கு, ஒரு சம்சுயி மாதுவிடமே இந்த ஓவியத்தைக் காட்டிக் கருத்து கேட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஒருவேளை அவர்கள் அனைவரும் அனேகமாக இன்று மறைந்துபோயிருக்கலாம். ஆயினும், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் இந்தச் சுவரோவிய விவகாரத்தைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த ஷான் ஹு (Shawn Hoo) ஒரு நல்ல காரியம் செய்தார். சம்சுயி மாதர் ஒருவரின் கொள்ளுப்பேத்தியைத் தேடிப்பிடித்துக் கருத்து கேட்டார்.
இசைக்கலைஞரான இன்ச் சுவா (Inch Chua), தன் கொள்ளுப்பாட்டியை அவரது இளமைத்தோற்றத்தில் காண்பது அளவற்ற மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். ஓய்வுநாள்களில் பாட்டி ஏகாந்தமாக சிகரெட் புகைத்த கதைகளை மட்டுமே தான் கேட்டிருந்ததாகவும் தற்போது சுவரோவியம் அவ்வரலாற்றுக்கு உயிர்கொடுத்து விட்டதாகவும் சொன்னார். மேலும், எல்லா சம்சுயி மாதரும் வயதானவர்களாகவும் சுருங்கிய தோலுடனும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எல்லாக் கடற்கொள்ளையர்களும் கட்டைக்கால்களும் தோளில் கிளியுமாக இருப்பார்கள் என நினைப்பதற்குச் சமம் என்றும் ஒரு போடுபோட்டார்.
ஒருபக்கம் விதிமீறல், கலைச்சுதந்திரம், வார்ப்புக் கண்ணோட்டம் (stereotypes) என்று வாதவிவாதங்கள் சூடுபிடிக்க, மறுபக்கம் விவாதங்களிலிருந்த சில சொற்களை மட்டும் பிடித்துக்கொண்டு கிளைவிவாதங்களும் பொறிபறக்கத் தொடங்கின. எடுத்துக்காட்டாக, பாலியல் தொழிலாளிபோலச் சித்திரிக்கப்பட்டுவிட்டார் என்ற கருத்துக்கு எதிராக, பாலியல் தொழிலாளி என்றால் கேவலமா? அதுவும் ஒரு தொழில்தான் என்று பாலியல் தொழிலாளருக்கு

உதவும் லாப நோக்கற்ற அமைப்பான ‘ப்ரொஜெட் எக்ஸ்’ (Project X) குரல் கொடுத்தது. ‘அவேர்’ (AWARE) அமைப்பும் அக்குரலோடு இணைந்தது. பெண்களின் நடையுடை பாவனைகள் இப்படித்தான் அமையவேண்டும் என எதிர்பார்க்கும் ஆணாதிக்க மனப்பாங்கின் வெளிப்பாடாக அமைப்பு அக்கருத்தை விமர்சித்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், முன் அனுமதி பெறாமால் சுவரோவியத்தை வரையத் தொடங்கியது தவறுதான் என அனேகமாக விவாதத்தில் பங்குபெற்ற அனைவருமே ஒப்புக்கொண்டாலும் வரைந்த ஓவியத்தில் மாற்றம்செய்வது தேவையற்றது என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு அதிகமானப்போல ஒரு தோற்றம் உண்டானது. அதைத்தொடர்ந்து, ஓவியம் திருத்தப்படுவது குறித்த தன் நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்துவருவதாக ஆணையம் தெரிவித்தது. ஜூலை 10 அன்று, நகரச் சீரமைப்பு ஆணையமும் சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, சர்ச்சைக்குள்ளான சம்சுயி மாது சுவரோவியம் மாற்றம் ஏதுமின்றி அப்படியே இருக்கலாம் என்று தெரிவித்தது. ஆயினும் அனுமதி பெறாமல் ஓவியத்தை வரையத் தொடங்கியதற்காகக் கட்டட உரிமையாளருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதித்தது. ஓவியம் புகைப்பிடிப்பதை சகஜமாக்குகிறது என்றாலும் பெரும்பாலான பொதுமக்கள் ஓவியத்தை சிகரெட் விளம்பரமாகக் கருதவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியது.
புகைப்பிடித்தலைக் குறைக்க சிங்கப்பூர் கடந்த பல்லாண்டுகளாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தப் பின்புலத்தைக் கருத்திற்கொண்டால்தான் சம்சுயி மாதுவின் கையில் சிகரெட் புகைவதற்கு ஆணையம் எழுப்பிய மறுப்பு விளங்கும். குறிப்பாக, 2016லிருந்து கடைகளில் சிகரெட் பெட்டிகளைப் பார்வையில் படுமாறு வைக்கத் தடை, 2019லிருந்து தரப்படுத்தப்பட்ட சிகரெட் அட்டைப்பெட்டிகளில் குறைந்தது 75 விழுக்காட்டுப் பரப்பில் புகை நோய்களின் படங்கள் அமைவதைக் கட்டாயமாக்கியது, ஆச்சர்ட் ரோடு வட்டாரப் பொது இடங்களில் புகைக்கத் தடை, சிகரெட் வாங்கக் குறைந்தபட்ச வயதை 18லிருந்து

முன் அனுமதி பெறாமல் ஓவியத்தை வரைந்துவிட்டுப் பிறகு அதில் சிக்கல் என்று வரும்போது கலைச்சுதந்திரம், கட்டுப்பாடு, இறுக்கம், கடுமை என்று பொதுவெளிக்குக் கொண்டுசென்று அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல.

சம்சுயி மாது சுவரோவியச் சர்ச்சையை வரலாறு, கலைச்சுதந்திரம் என்று நிறுத்திவிடாமல் நிகழ்காலத்திற்கும் பொருளுள்ளதாக நீட்டிக்க அவர் முயன்றது பாராட்டத்தக்கது.

மெல்லமெல்ல அதிகரித்து 2021லிருந்து 21ஆக ஆக்கியது என்று அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன. டன்ஸ்டனும் புகைப்பிடித்தல் குறித்த அக்கறை நியாயமான ஒன்றே என ஒப்புக்கொண்டார்.
சுவரோவியத்தில் மாற்றம் தேவையில்லை என மாறிய நிலைப்பாட்டை வரவேற்ற நியமன நாடாளுமன்ற உறுப்பினர் உஷா சந்திரதாஸ் தெரிவித்திருந்த ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது. சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர் வாழ்க்கை ஒரு சமகாலப் பிரச்சினை என்பதால், சம்சுயி மாது ஓவியம் நாம் சமகாலப் புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்க்கும் விதத்தையும் அவர்களோடு பழகும் முறையையும் யோசித்துக்கொள்ளவும் உதவும் என்று குறிப்பிட்டிருந்தார். சம்சுயி மாது சுவரோவியச் சர்ச்சையை வரலாறு, கலைச்சுதந்திரம் என்று நிறுத்திவிடாமல் நிகழ்காலத்திற்கும் பொருளுள்ளதாக நீட்டிக்க அவர் முயன்றது பாராட்டத்தக்கது. அபூர்வமாக எழுந்தடங்கும் இத்தகைய விவாதங்களைக் காற்றுள்ளபோதே பல்வேறு வகைகளில் தூற்றிக்கொள்ளவேண்டும்.
சம்சுயி மாது சுவரோவியத்தில் மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டாலும் புகைப்பிடித்தலை சகஜமாக்கும் ஓவியத்தின் தன்மையினால் விளையக்கூடிய தாக்கத்தைக் குறைக்க ஏதாவது செய்யுமாறு ஆணையமும் சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. ‘புகைப்பிடித்தல் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்பதுபோல ஓர் அறிவிப்பைக் கீழே போட்டுவிடலாமா என டன்ஸ்டன் தரப்பு யோசித்துவருகிறது.
புகையால் புகையத் தொடங்கிய சம்சுயி மாது சுவரோவியச் சர்ச்சை சரியானவகையிலும் கண்ணியமாகவும் நடந்து ஓய்ந்திருப்பதாகவே நினைக்கிறேன். கட்டடம் அமைந்திருக்கும் 297 சவுத் பிரிட்ஜ் ரோடு உள்ளூர்வாசிகளையும் சுற்றுப்பயணிகளையும் ஒருசேர ஈர்த்துவருகிறது. இப்போது மீண்டும் பார்க்கும்போது, தனக்கு இதெல்லாம் நடக்குமென்று முன்பே தெரியும் என ஓவிய சம்சுயி மாது மந்தகாசம் புரிவதுபோலத் தோன்றுகிறது. கலை செயல்படும் விதம் எப்போதுமே தனி ரகம்தான்!