இலங்கையில் மலாயர்கள்: மொழி அடையாளம் இழந்த துயரம்!

ஜிஃப்ரி ஹாசன்

இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மலாயர்களாவர். இலங்கைச் சோனகரோடு மத அடிப்படையில் ஒரே சமூகமாக இணைந்து கொண்ட உப மரபினங்களில் மலாயர்களே ஏனைய உபமரபினங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். இலங்கையில் கிட்டத்தட்ட மலாயர் சனத்தொகை அறுபதாயிரம். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட இது 0.3 சதவீதமாகும். நாட்டின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதமாகும்.
இந்த எண்ணிக்கையை ஆசிஃப் ஹூஸெய்ன் 2011இல் மூன்றாவது பதிப்பாக வெளிவந்த தனது செரண்டிப் என்கிற நூலில் தருகிறார். அதேநேரம், 1993 இல், அதாவது செரண்டிப்புக்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் எம்.எம்.எம். மஹ்ரூஃப் தான் எழுதிய Community of Sri Lanka Malays: Notes Toward a Socio-Historical Analysis என்கிற கட்டுரையில் மலாயர் சனத்தொகை ஐம்பதாயிரத்துக்கும் குறைவு என்கிறார். அவர்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் இருபதுக்கு ஒன்று என்றும், நாட்டின் மொத்த சனத்தொகையில் முந்நூறுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர்.
இந்த முடிவுகளின்படி பார்த்தால் ஒரு இருபது வருட காலப்பகுதிக்குள் அவர்களின் சனத்தொகை கிட்டதட்ட 10,000 பேரால் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் விக்கிபீடியாத் தகவலின்படி 2012 சனத்தொகைக் கணக்கெடுப்புக்கிணங்க, மலாயர்களின் மொத்த சனத்தொகை 40,189 ஆகும். அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 0.2 சதவீதமாகும்.

ஒல்லாந்தரால் நாடு கடத்தப்பட்டவர்களாகவோ அல்லது தங்களின் இராணுவத்தில் சேவையாற்றுவதற்காகவோ கொண்டு வரப்பட்டனர்.

மலாயர்கள் இலங்கைக்கு 17ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில், ஒல்லாந்தரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் ஒல்லாந்தரால் நாடு கடத்தப்பட்டவர்களாகவோ அல்லது தங்களின் இராணுவத்தில் சேவையாற்றுவதற்காகவோ கொண்டு வரப்பட்டனர் என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மலாயர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னணியைச் சொல்கிறார். இப்படி நாடுகடத்தப்பட்டவர்களில் மன்னர்கள், இளவரசர்கள், தளபதிகள், உயர் குடிகள் என முக்கியமானவர்களும் உள்ளடங்கி இருந்தனர். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் டச்சுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இவர்கள் சவாலாக விளங்கியதனால் நாடு கடத்தப்பட்டனர்.
ஆயினும் அதற்கு முன்னரே மலாயர்களுக்கு இலங்கையுடன் தொடர்பு இருந்து வந்திருப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். நுஃமானும் தனது ஆய்வில் அதனைக் குறிப்பிடுகிறார். இலங்கையின் வரலாற்று நூலான சூளவம்சத்தின்படி மலேசியத் தீபகற்பத்தின் மன்னனான சந்திரபானு 13ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இலங்கையை ஆக்கிரமித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக ஆனான்.
தவிர, இலங்கையின் புவியியல் அமைவிடமும் மலாயர்களின் இலங்கை வருகைக்கு ஒரு காரணமாக இருந்தது. இந்தோனோசியத் தீவுக்கூட்டத்துக்கும், மடகாஸ்கருக்குமிடையே இந்து சமுத்திரத்தின் மத்திய பகுதியில் இலங்கை அமைந்திருந்ததால் கடல்வழி மலாயர்கள் தங்கள் பயணப்பாதையில் தங்குவதற்காக இலங்கையை நாடிக் குடியேறிய வரலாற்றுச் சம்பவத்தை பேராசிரியர்களான ஹூஸைன்மியா, எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அவர்கள் சாவகச்சேரி (ஜாவகச்சேரி- Java settlement) எனுமிடத்தில் குடியேற்றத்தை அமைத்தனர். தெற்கில் ஹம்பாந்தோட்டையில் குடியேறினர். மலாய் மொழியில் படகைக் குறிக்கும் Sampan என்ற சொல்லில் இருந்தே ஹம்பாந்தோட்டை எனும் பெயர் உருவாகி இருக்கிறது. சிங்களத்தில் “ச“ என்பதற்கு பதிலாக “ஹ“ வையும் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சிங்களப் பண்பாட்டோடு ஓரளவு மலாய்ப் பண்பாட்டுக்கு ஒட்டுறவு ஏற்பட்டடிருப்பதையும் அறிய முடிகிறது. படகைக் குறிக்கும் ஒறுவ எனும் சிங்களச் சொல் இவர்களிடமிருந்தே சிங்களமொழி பெற்றுக்கொண்டது. இலங்கை மலாய் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியரான ஹூஸைன்மியா ஒல்லாந்தர் காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மலாயர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நோக்குகிறார். முதல் குழு இந்தோனோசியாவிலிருந்து அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள். இரண்டாவது குழு இராணுவ சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒல்லாந்தரால் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் என்கிறார்.
இலங்கையில் மலாயர்களின் குடியேற்றத்தைப் பொறுத்தவரை, மேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலுமே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். இதற்குக் காரணம் மேல் மாகாணம் காலனித்துவ சக்திகளின் முக்கிய தளமாக விளங்கியது. அவர்களது படைச்சேவகர்களாகவும், பணியாளர்களாகவும் அவர்கள் செயற்பட்டதால் மேல்மாகாணம் அவர்களுக்கு தோதான இடமாக அமைந்தது. மத்திய மாகாணமும் கண்டி இராச்சியத்தின் முக்கிய நகரமாக விளங்கியது. அதனால் அங்கும் மலாயர் சனத்தொகை ஏனைய இடங்களோடு ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருப்பதாக மஹ்ரூஃப் குறிப்பிடுகிறார். ஏனைய இடங்கள் அவர்களது விசேட ஆற்றல்களுக்குப் பொருத்தமான களம் அல்ல என அவர்கள் உணர்ந்ததனால் தங்களது குடியேற்றங்களை மலாயர்கள் அடர்த்தியாக அமைக்கவில்லை எனவும் கூறுகிறார்.
முதன்மையான அசல் மலாயர்கள் ஒல்லாந்தரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நீர்கொழும்பு, கல்பிட்டி போன்ற டச்சுக் கோட்டைகளை தளமாகக் கொண்ட இடங்களில் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். அவை படைக் குடியிருப்புகளாகவே கருதப்பட்டன. ஒல்லாந்தரின் இராணுவத்தில் பணியாற்றிய மலாய் ஆண்களின் குடியிருப்பாக அது இருந்தது. பின்னர் அவர்கள் குடும்பமாக அங்கு குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கான தொழுகையறையும் அங்கு அமைக்கப்பட்டது. பின்னர் அது பள்ளிவாயலாக வளர்ச்சியடைந்தது. பள்ளிவாயல் பராமரிப்புக்கான முஅத்தின்கள், இமாம்கள் என இன்னும் மக்கள் தொகை சற்றே அதிகரித்தது. ஒரு குடியிருப்பிலிருந்த மலாய் சிப்பாய் இன்னொரு குடியிருப்புக்கு இடமாற்றம் செய்யப்படும்போது அந்த வெற்றிடத்துக்கு இன்னொரு மலாய் சிப்பாய் வந்து சேர்வார். இப்படி அந்தக் குடியிருப்பின் தொடர்ச்சி பேணப்பட்டது.

மலாயர்கள் ஒல்லாந்தருக்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலும் தங்களது இராணுவசேவையை தொடர்ந்து மேற்கொண்டனர். இலங்கையின் கரையோரப் பகுதி ஒல்லாந்தர் வசம் இருந்தபோது ஒல்லாந்தர் தங்களது கோட்டைகளையும், கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் பாதுகாப்பதில் மலாயர்களையே சார்ந்திருந்தனர். ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்ற முனைந்தபோது கடல்மார்க்கத்தில் ஒல்லாந்துப் படைகளோடு சேர்ந்து பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக மலாயர் படையும் போரிட்டது. பின்னர் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றும் போராட்டத்திலும் மலாயரின் உதவி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இலங்கை மலாயர்கள் தங்களை இன அடையாளம் சார்ந்து மலாய் மக்கள் (The Malay People) அல்லது ஜாவா மக்கள் (People of Java) என்றே அழைத்துக் கொள்கின்றனர். தமிழில் சாவாகர் (Cavakar) எனக் குறிக்கப்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இவர்களை ஜாவாக்கள் என்றே அழைக்கின்றனர். சிங்கள மக்கள் இவர்களை “ஜா மினிஸ்சு“ என அழைக்கின்றனர்.
இலங்கை மலாயர்கள் மலாய் மொழியையே பேசி வந்தனர். ஒரு காலத்தில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் “மலாயர் மஞ்சரி“ என்றொரு சமூகச் சித்திர நிகழ்ச்சி மலாய் மொழியில் ஒலிபரப்பாகியது. ஆனால் இலங்கையில் கல்விமொழியாக மலாய் மொழி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் காலப்போக்கில் அது மலாயர்களின் வீட்டு மொழியாக மட்டும் சுருங்கியது.
அவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் இவற்றில் ஏதேனுமொரு மொழியையே தங்கள் கல்வி மொழியாகத் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. 1950களில், சுதேசமொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் வரை, பெரும்பாலான இலங்கை மலாய்க்காரர்கள் தங்கள் கல்வி மொழிமூலமாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். 1950களில் அவர்களில் பெரும்பாலானோர் சிங்கள மொழிக்கு மாறினர். ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையினர் தமிழ் மொழிக்கும் மாறினர்.
சோனகரிடமிருந்து அவர்களை பண்பாட்டுரீதியாக வேறுபடுத்திக் காட்டியது மொழி மட்டுமே ஆகும். அவர்கள் தமிழுக்கு மாறியதுடன் அந்த தனித்துவத்தையும் இழந்தனர். இப்படித்தான் இலங்கை மலாயர்கள் தங்களது மொழி அடையாளத்தை இழந்தனர். பிறகு மத அடையாளம் சார்ந்து பார்த்தால் அவர்கள் சோனகருடனேயே இணைய வேண்டி இருந்தது.
ஆனாலும் அவர்கள் தங்களை ஒரு தனியான

மலாய் மொழியில் படகைக் குறிக்கும் Sampan என்ற சொல்லில் இருந்தே
 ஹம்பாந்தோட்டை எனும் பெயர் உருவாகி இருக்கிறது.

இனமாகவும் (அவர்கள் உண்மையில் ஒரு தனியான மரபினமே), தேசியமாகவும் அங்கீகரிக்குமாறு ஆங்கிலேயரிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இலங்கை வாழ் மலாயர்களை ஒன்றிணைக்கவும், மலாய் இன அடையாளத்தை வலியுறுத்தவும் அகில இலங்கை மலாய் சங்கம் (All Ceylon Malay Association) என்றொரு அமைப்பை 1922இல் உருவாக்கினர். சட்டசபையில் தங்களுக்கான தனிப் பிரதிநிதித்துவத்தையும் கோரினர். தவிர இந்த அமைப்பு மலாயர்களின் தனித்துவ அடையாளத்தை வலுப்படுத்தும் பொருட்டு அந்த மொழியில் இலக்கியப் படைப்புகளை உருவாக்கவும் விரும்பியது. ஆனால் எதுவும் வெற்றிபெறாமல் கடைசியில் அவர்கள் சோனகர்களுடன் உட்திருமணங்களைப் புரிந்து கலந்து இலங்கை முஸ்லிம்கள் என்ற பேரடையாளத்துள் நுழைந்தனர்.
1900 ஆண்டுவாக்கில் இலங்கை முஸ்லிம்களின் சமூக அமைப்பு வேறுபட்ட வகைகளில் காணப்பட்டது. உண்மையில், இலங்கையரை இன அடிப்படையிலான அரசியல் சமூகங்களாக பிரித்தானியரே மாற்றியமைத்தனர். இலங்கையை பிரதானமாக மூன்று சமூகங்களாகவே அவர்கள் ஆக்கினர். இலங்கையரை இப்படி ஆழமாக இனரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிளவுபடுத்தியவர்கள் பிரித்தானியர்களே. தமிழ் பேசும் சமூகத்தையும் அவர்கள் இரு சமூகங்களாகவே ஆக்கினர். தமிழர்கள்-சோனகர்கள் என இருசமூகங்களாக தமிழ் பேசும் மக்கள் அரசியல் அர்த்தத்தில் இரு இனங்களாக பிளவுற்றனர். இவ்வாறு இனங்களை அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக வேறுபடுத்திவிட்டு அதேநேரம் ஒவ்வொரு சமூகத்தையும் உள்ளகரீதியாக ஒழுங்குபடுத்தினர். இலங்கையில் குடியேறி இருந்த மலாயர்கள் இந்தோனோசியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் வந்தவர்கள் என்பதைப் பார்த்தோம். பிரித்தானியரது காலத்தில் அவர்கள் அனைவரும் மலாயர் எனும் ஓர் இன அடையாளத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். இதனையே சிங்கள சமூகத்திலும், தமிழ்ச் சமூகத்திலும் செய்தனர். வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த பழங்குடிகளையும், ஏனைய உப மரபினங்களையும் சிங்களவர்களோடு இணைத்தனர். அதேபோன்று கிழக்கிலிருந்த பழங்குடிகளையும், உப மரபினங்களையும் தமிழரோடு இணைத்தனர். இவ்வாறே மலாயர்களும் மதரீதியாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதால் சோனகரோடு இணைந்து தங்களது இன அடையாளத்தை பண்பாட்டுரீதியாக

ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்களுக்கு வழிகோலினர். இப்படித்தான் (ஓரளவு) பிரித்தானியர் காலத்திலேயும், அதற்குப்பின்னரும் இங்கு இஸ்லாத்தை மதமாகப் பின்பற்றி வந்த பல்வேறு இனக்குழுக்களும் சோனகரோடு இணைந்து இலங்கை முஸ்லிம்கள் என்ற பேரடையாளத்தைப் பூண்டனர்.
ஆனால் உண்மையில் மலாயர்கள் ஒரு தனித்துவமான மரபினம்தான். இலங்கை அரசியல் சூழலைக் கவனத்திற்கொண்டும், அவர்களது எதிர்கால நலன்களைக் கவனத்திற்கொண்டும் அரசியல்ரீதியாக மலாயர்கள் இலங்கை முஸ்லிம்கள் என்ற அடையாளத்துள் தங்களை பொருத்தியுள்ளனர். ஆயினும், அவர்கள் பெரும்பாலும் இந்த மரபின வேறுபாட்டைக் கவனத்திற்கொண்டு சில இடங்களில் அதனைப் பேணவும் செய்கின்றனர். கிழக்கில் மலாயர்கள் இன்று மிகச் சொற்பமான எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர். அவர்களை முஸ்லிம்கள் ஜாவாக்கள் என்றே அழைக்கின்றனர். முஸ்லிம்களுடன் மேற்கொள்ளப்பட்ட திருமண உறவு மூலம் அவர்கள் முஸ்லிம்களுடன் தனித்துவ எல்லைகளற்றுக் கரைந்துள்ளனர். ஆயினும் சில ஆண்களுக்கு மட்டும் இன்றும் துவான் என்ற பெயரைச் சூட்டுகின்றனர். இன்றைய புதிய தலைமுறையில் அந்த மரபும் மிகவும் அருகிக் கொண்டு வருவது போலவே தோன்றுகின்றது.
[email protected]
Ref.Books:
Asif Hussain- Sarandib (Neptune Publication) P.650
M.M.M.Mahroof- The Sub Communities of the Muslims of Sri Lanka (Exploring Sri Lankan Muslims: Selected writings of MMM Mahroof edited by MLA Cadre South Eastern University of Srilanka) P.45
Libid P.23
M.A.Nuhman-Sri Lankan Muslims: Identity with cultural Diversity International Centre for ethnic Studies P.21
Libid P.22