குழந்தை இலக்கியப் படைப்பாளர் விழியனுடன் நேர்காணல்
அன்ஷிகா ஹவ்காங் தொடக்கப்பள்ளி மாணவி. வாசிப்பதிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். விழியன் எழுதிய பல புத்தகங்களை வாசித்து, அதில் உள்ள கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த்ததாகக் கூறும் அன்ஷிகா அவரிடம் தனக்குத் தோன்றிய சில கேள்விகளைக் கேட்டு பதில் பெற்று “தி சிராங்கூன் டைம்ஸ்” இதழுக்கு அனுப்பி வைத்துள்ளார், மாணவர்களின் இதுபோன்ற ஆர்வத்தை சிராங்கூன் டைம்ஸ் வரவேற்கிறது.
விழியன் (உமாநாத் செல்வன்) தமிழக எழுத்தாளர். சிறார் இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பள்ளிக் கல்விக்கான துணைக் குழுவில் உறுப்பினர். தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றார். பரதநாட்டியம் கற்றவர். புகைப்படக் கலைஞர். விழியன் சிறார்களிடையே பொது அறிவை வளர்த்தல், விஞ்ஞானச் செய்திகளை அவர்களிடம் சேர்த்தல், சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், சிந்தனையை மேம்படுத்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு எழுதி வருகிறார். குழந்தைகளுக்கான மொழியில், அவர்களைக் கவரும் வகையில் எளிய நடையில் சிறார்களுக்காக எழுதிவரும் படைப்பாளிகளுள் முக்கியமானவராக விழியன் மதிப்பிடப்படுகிறார்.
உங்கள் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எழுதுவதில் சுவாரஸ்யம் எவ்வாறு உருவாகியது என்பதை எங்களிடம் கூற முடியுமா?
அப்பா ஒரு தீவிரமான வாசகர். இப்போதும் ஒரு புத்தகம் எடுத்தால் முழுதாக வாசித்துவிட்டே நகர்வார். அப்படியான ஒரு வீட்டில் எங்கும் புத்தகங்கள் இருப்பது இயல்பே. நானே சிறு வயதில் வீட்டில் எனக்காக இருக்கும் நூல்களை நூலகம்போல நடத்தினேன். நான் மட்டுமே பயனாளர். ஆகவே வாசிப்பு இயல்பாக இருந்தது. எழுதுவேன் என்பது நான் கல்லூரி முடிக்கும் வரையிலும் தெரியாது. தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் யோசித்தவற்றைப் பகிரவேண்டும் எனத் தோன்றியது. மேலும் எழுத்து செயல்பாட்டிற்கான ஓர் ஆயுதம் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்டேன்.
சிறுவயதில் உங்களுக்குச் பிடித்த விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்குகள் என்ன?
கிராமத்தில் வளரவில்லையே என்ற ஏக்கம் இப்போதும் உண்டு. வேலூர் என்பது நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஒரு நிலப்பரப்பு. தெருக்களில் நண்பர்கள் விளையாடும் எல்லா விளையாட்டும் விருப்பமானதே. கிரிக்கெட்டில் துவங்கி பம்பரம், கோலிக்குண்டு வரை ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விளையாட்டு. வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளும் அதிகம். தனிப்பட்ட பொழுதுபோக்குள் என எதுவும் வளர்த்துக்கொள்ளவில்லை.
எழுத்தின் மீதான உங்கள் ஆர்வம் எப்போது தொடங்கியது?
ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஏதோ ஒன்று சொல்வதற்கு இருக்கும்; அதனை ஏன் சொல்லத் தவறிவிட்டார்கள் என ஆராய்வதில் அதிகக் கவனம் இருக்கும்.
கல்லூரி முடித்தபின்னர் வேலைக்குச் சேர்ந்த பின்னரே எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அதற்குப் முதற் காரணம் அடர்ந்த வாசிப்பு. வேலைக்குச் சென்ற பின்னரே அதி தீவிரமாக வாசிக்கத்துவங்கினேன்.
உங்களை எழுத ஊக்குவித்த முதல் புத்தகம் என்ன?
அப்படி ஒரு புத்தகம் எதனையும் குறிப்பிட இயலாது. எல்லாக் காலகட்டத்திலும் கவனிக்கப்படாத அல்லது பேசப்படாத புத்தகங்களே தேடித்தேடி வாசிப்பேன். என்ன காரணத்தால் இப்புத்தகம் பேசப்படவில்லை என ஆராய்வேன். ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஏதோ ஒன்று சொல்வதற்கு இருக்கும்; அதனை ஏன் சொல்லத் தவறிவிட்டார்கள் என ஆராய்வதில் அதிகக் கவனம் இருக்கும்.
ஒரு கதையை எழுதும் போது உங்கள் மனதில் முதலில் என்ன வரும்?
முதலில் தோன்றுவது இந்தக் கதை என்ன தாக்கத்தை வாசிக்கும் குழந்தைகளுக்குத் தரவேண்டும், அடுத்தது எந்த வயதுக் குழந்தைகளுக்காக இதனை எழுதவேண்டும் என்பதே.
உங்கள் கதைகளின் கதாபாத்திரங்களை எப்படி உருவாக்க முடிகிறது?
ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். பெரும்பாலும் கதாபாத்திரங்கள் அனைவருமே நான் சந்திக்கும் குழந்தைகளின் தாக்கமே. அவர்கள் இப்படிச் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தே கதைகள் அனைத்தும் இருக்கும். நிஜத்தோடு அதனால் நெருங்கிய தொடர்பு இருக்கும். பெயரிடுவதும் அப்படியே.
எழுதும்போது உங்களுக்குப் பிடித்த இடம் எது?
உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. கதைக்கான கருவினைப் பல நாட்களாக யோசிப்பேன். எல்லாம் நேரடியாகத் தட்டச்சிவிடுவேன். பெரிய நாவல் என்றால் மட்டும் சில அடிப்படை அம்சங்களை குறிப்பாக எழுதி, பின்னர் தட்டச்சுவேன். திருத்துவது எளிது என்பதே முதல் காரணம்.
உங்கள் கதைக்கரு எவ்வாறு உங்களுக்கு வரும்?
பயணங்களில் இருந்தும் புத்தகங்களில் இருந்தும். சந்திக்கும் நபர்கள், குழந்தைகள், உரையாடல்கள், அவற்றின் கிடைக்கும் சம்பவங்கள், வாசிக்கும் கட்டுரைகள் இவைகளே துவக்கப்புள்ளிகள். அங்கிருந்து கொஞ்சம் கற்பனையும் கலந்து புதிதாகக் கதைகள் உருவாகும்.
உங்கள் கதைகள் படிக்கும் தமிழ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன பாடத்தை வழங்க விரும்புகிறீர்கள்?
முதலில் இந்த உலகம் எல்லோருக்குமானது என்பதே அடிப்படைக் குறிக்கோள். சக உயிர்களை நேசிப்பது, அறிவார்ந்த சிந்தனை என்பது என்ன? சிக்கல்களைப் புதிய பார்வையில் இருந்து பார்ப்பது, சமூகத்தை அக்கறையுடன் நேசிப்பது, தன்னால் இயன்ற அளவிற்கு அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவது உட்பட ஏராள விஷயங்களைச் சொல்லவே விரும்புகின்றேன்.
தமிழில் எழுதுவதற்கான உங்களுக்கு முக்கியமான உத்வேகம் என்ன?
குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்று முடிவெடுத்தபோது உலக க்ளாசிக் புத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். அப்போதுதான் இந்த அனுபவங்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தரவே இல்லையே என்று தோன்றியது. மொழிபெயர்ப்பது என்பது வேறு, நேரடியாக அம்மாதிரியான கதைகளைக் கொடுப்பது என்பது வேறு. வாசிக்க வாசிக்கத் தமிழில் குழந்தைகளுக்குச் சிறப்பான கதைகளை எழுத வேண்டும் என்று தோன்றியது.
உங்களை தமிழில் எழுத ஊக்குவித்த முதல் அனுபவம் என்ன?
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் துவங்கி 50 ஆண்டு விழாவைப் பள்ளியில் கொண்டாடினர். அப்போது ஏழாம் வகுப்பு படிக்கின்றேன் என நினைக்கின்றேன். “வந்தார்கள் வந்தார்கள் வென்றார்கள் வென்றார்கள்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். கவிதை எழுதி இருக்கிறேன் எனத் தலைமை ஆசிரியர் செலினா வில்லியம்ஸிடம் கூறினேன். உடனே பள்ளி மேடையில் அந்த விழாவின்போது மேடையேற்றினார்கள். அதுவே முதல் படைப்பு என நினைக்கின்றேன். அதன் பின்னர் பள்ளி ஆண்டு மலரில் நான் மட்டும் ஒரு கவிதை எழுதி இருந்தேன். கல்லூரி சமயத்தில் குஜராத் பூகம்பம் நிகழ்ந்தது. அப்போது “போதும் தாயே போதும்” என்ற ஒரு கவிதை எழுதினேன். கல்லூரி அறிக்கைப் பலகையில் அது பல மாதங்கள் வைக்கப்பட்டு இருந்தது. நண்பர்கள் அப்போது அடிக்கடி அந்தக் கவிதையை வைத்துக் கிண்டல் செய்வதும் உண்டு.
நீங்கள் மிகவும் விரும்பும் எழுத்தாளர் யார்?
குழந்தைகளுக்கான எழுத்தாளர் எனில் நிச்சயம் ரஸ்கின் பாண்ட். அவரின் மொழிக்காகவும் அவர் கதைக்களத்திற்காகவும் மிகவும் பிடிக்கும்.
எழுத்தாளரானதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
ஒரு சாதாரண மென்பொறியாளராக இருந்தாலும் வெளியூர்களுக்குப் பயணம் செய்திருப்பேன். இப்போது எழுதுவதால் எந்த ஊருக்குச் சென்றாலும் கொஞ்சம் குழந்தைகளாவது வந்து சந்திக்கின்றனர். குழந்தைகளுக்காக எழுதுவதால் நிறையக் குட்டி குட்டி நண்பர்கள் கிடைக்கின்றார்கள். இது ஒரு பெரிய வரம்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த பல கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது?
எப்போதும் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம் மலைப்பூவில் வரும் லட்சுமி. அம்மாதிரியான லட்சுமிகளுக்காகவே நான் எழுத வேண்டும் என ஆசையும் படுவேன்.
என்னைப் போன்ற வெளிநாடுவாழ் மாணவர்கள் தங்கள் மொழிதிறன்களை மேம்படுத்திக்கொள்ள வழிமுறைகள் யாவை?
எந்த ஒரு துறைக்கும் தேவையானது பயிற்சியும் விடாமுயற்சியும் மட்டுமே. மேடைப்பேச்சு, எழுதுவது எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. வாசித்தல் அப்படியானது அல்ல. அது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றவேண்டும். வாழ்வின் போக்கினை மாற்றும். மேடைப்பேச்சுக்கு எழுதுவதற்கு மற்றொரு முக்கிய தேவை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல். விமர்சனங்களே நம்மைச் செதுக்கும். வெறும் பாராட்டுகள் மட்டுமே நம்மை அடுத்த நிலைக்கு நகர்த்திவிடாது. தட்டிக்கொடுத்தலும் கைக்குலுக்கலும் நிச்சயம் தேவை, கூடவே கொஞ்ச கராரான விமர்சனம். அது வளர்ச்சிக்கானது எனில் வரவேற்று ஏற்றுக்கொண்டு நடைபோட வேண்டும்.