சமூக ஊடகங்களின் மக்கள் அதிகாரம்

நிஜந்தன்

தகவல் பரிமாற்றத்திற்கும், கேளிக்கை ரசனைகளுடன் பொழுதை கடக்க தலைப்பட்ட தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் தற்போது தனக்கென ஒரு ஊடக அதிகார மையமாகவும் உண்மைக்கு மாறான பரப்புரை மற்றும் மீண்டும் கட்டமைக்கக்கூடிய உளவியல் மாற்றத்திற்கு தன்னை முன்னிலைப்படுத்தும் சூழல் உலகெங்கிலும் காணப்படுகிறது. சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் இரண்டு இளைஞர்களின் தன்னிச்சையான வன்முறைகளை உளவியல் ரீதியிலும், சமூக அளவிலும் கட்டமைக்கும் முனைப்புகளோடு அல்லது பார்வையாளர்களை அதற்கு அணிதிரளாக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பெரிதும் சார்ந்திருந்தது ஆன்லைன் இணைய வழி ஊடகம்தான் என்பதை அறிவோம். இது ஒருபுறம் இருக்க சட்டவிரோத முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஊடகத்தின் பார்வையாளர்களை வணிக ரீதியில் ஏமாற்றும் ஏமாறும் உளவியலை முன்வைத்து சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ அவர்களை ஒரு போலியான விளம்பரத்தில் செயற்கை டிஜிட்டல் மூலம் தோன்ற வைத்து பரப்புரை செய்த நிகழ்வான இந்த ஊடக அபாயம் நம் நினைவில் வந்து போகிறது. இப்படி உலகளாவிய அளவில் இந்த ஆன்லைன் இணைய ஊடகங்கள் மற்றும் சிறு சமூக ஊடகங்களின் செயல்பாடும் பரபரப்பிற்காக முறைகேடான தவறான புரிதலை தங்கள் பார்வையாளர்களின் பொதுப்புத்தியில் பதிவிட வைக்கும் போக்குகளை மட்டுப்படுத்த வேண்டியது ஊடக தர்மத்தின் உடனடி செயல். ஆகவே இந்த இருண்ட வெளிகளில் இயங்கும் சமூக ஊடகங்களின் போலியான ஊடக அதிகாரம் பார்வையாளர்களின் மத்தியில் ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்களை தமிழகச் சூழலில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

மக்கள் அதிகாரத்தின் அடிநாதமே ஊடகங்கள்தான். கருத்துச் சொல்லத்தானே மனிதன் வாய் திறந்தான்? ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆளுகைக்கும்தானே வழி வகுக்கிறது?
முக்கிய செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பல படிமங்களில் இருக்கும் மக்களின் குரலையும் மக்களின் தேடலையும் தொடர்ந்து பிரதிபலித்து வருகின்றன. அவை எங்கு மையம் கொள்கின்றன. என்பதுதான் தற்போதைய காலத்தின் பரிணாமமாக இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த ஒரு கொலை நிகழ்வு செய்தித்தாள் செய்தி சேனல்களை ஆக்கிரமித்த விதமும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த விதமும் வேறு வேறாக இருந்தது.
ஒரு கொலையை ஒரு சட்டம் ஒழுங்கு நிகழ்வாக முக்கிய ஊடகங்கள் பதிவிட்டன. காவல்துறையின் கவனக்குறைவு, உடனடி அதிரடி செயல்பாடு, புலனாய்வுத் திறன் வெளிப்பாடு போன்ற அம்சங்கள் நிறைந்த விளக்கங்களாக முக்கிய ஊடகங்களின் செய்திகள் அமைந்தன. ஆட்சியாளர்களின் அலட்சியம் அல்லது தற்காப்பு போன்ற தளங்கள் அவற்றின் செய்திச் சொல்லாடல்களில் ஊடாடின.
ஒரு மனிதனை அவர் உயிருடன் இருந்த காலத்தைவிட அதிகம் பிரபலம் கொண்டவராக சமூக ஊடகங்கள்தான் மாற்றின அவருடைய பின்புலம், அவர் வளர்ந்த விதம், அவருடைய படிப்பு, அவர் உதவிய மனிதர்கள், அவருடைய ரவுடித்தனம் அல்லது அது

இல்லாதது. கொலைகளில் தொடர்பு அல்லது அது இல்லாதது என்றெல்லாம் அவரைப் பற்றிய பேட்டிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. அவை பல லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்தன.
முக்கிய ஊடகங்களைப் பார்ப்பவர்கள் மேலோட்டமான அம்சங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களின் பார்வையாளர்கள் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு புதிய செய்தி தனக்காகக் காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கிறார்கள். உடனடியாக யாரோ ஒரு விருந்தினர் கொலைக்குற்றவாளியை அடையாளம் காட்டிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு செய்தி உண்மையான ஒரு பிரதியாக பார்வையாளர்களைச் சென்றடைகிறதா என்பது எப்போதும் சந்தேகம்தான். அதை வெளிப்படுத்தும் ஊடகம். அது இருக்கும் சூழல், அதை நுகரும் பார்வையாளரின் நிலைப்பாடு என்று ஒரு செய்தி தளம் மாறுகிறது. தடம் மாறுகிறது.
நனவிலி மனதில் கட்டமைக்கப்பட்ட வரலாற்று, தத்துவ, உளவியல் முடிச்சுகள் அவிழும் கணங்களாக செய்தி உட்கிரப்புக் கணங்கள் அமைகின்றன. ஏற்கனவே

தீர்மானிக்கப்பட்ட நிலைப்பாடுகள் எப்போதும் செய்தி நுகர்வின் பரிமாற்றங்களாக மாறிவிடுகின்றன.
நடுநிலை செய்தி சாத்தியம் இல்லையா என்பது எப்போதும் கேள்வியாக இருக்கிறது. நடுநிலை செய்தி எப்போதும் சாத்தியம்தான். மனிதன் நடுநிலையாக மாறினால்தான் நடுநிலை செய்தி சாத்தியமாக இருக்கும். மனிதன் தனக்குள் ஒரு நிலைப்பாட்டின் வேராக இருக்கும் வரை அது தொலைந்த கனவாகவே மாறி இருக்கும்.
மனிதனுள் ஆதி மனிதன் ஆட்சி செலுத்துகிறான். அவனுக்குள் இருக்கும் சமூக. அரசியல், பாலியல் தேடல்கள் செய்திக்கான தேவையை உருவாக்குகின்றன. செய்தியை உருவாக்குபவரும் அதே அலைவரிசையில் இருப்பவராக மாறிவிடுகிறார்.
முக்கிய ஊடகங்கள் பார்வையாளர்கள் கணக்கை தொடர்ந்து எடுத்து வருகின்றன. ஒரு நிகழ்ச்சி அல்லது செய்தி அறிக்கை எத்தனை பார்வையாளர்களைச் சென்று சேர்கிறது என்ற விவரங்கள் ஒவ்வொரு வாரமும் வந்துவிடுகின்றன. எது போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமிக்கின்றன என்ற வகையில்தான் நிகழ்ச்சிகள் கட்டமைக்கப்படுகின்றன.

ஆழ்குழாய் கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்து சடலமாக மீட்கப்படும் வரை முக்கிய செய்தி ஊடகங்கள் நேரலைக் காட்சிகளை காட்டிக்கொண்டே இருந்தன. ஒரு உயிர் பிழைக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்பினார்கள் என்று ஊடகங்கள் நினைத்தன. தன் உயிரைப் போல விழுந்த சிறுவனின் உயிரை மக்கள் நினைப்பார்கள் என்று செய்தி ஊடகங்கள் தங்களை வடிவமைத்துக்கொண்டன அது திரைப்படக் காட்சி போன்ற அம்சங்களைக் கொண்டதாக மாறியது மக்கள் துயரத்தையும் துணிவின் மகிழ்வையும் எப்போதும் தேடுபவர்களாக இருக்கிறார்கள்.
முக்கிய செய்தி ஊடகங்களை, தொடர்ந்து மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதில்லை ஒரு செய்தி நடக்கும்போது அது பற்றிய நேரலைக் காட்சிகளை செய்தி ஊடகங்களில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் அந்தச் செய்திகளின் பின்னணியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உடனடியாக சமூக ஊடகங்கள் பார்வையாளர்களின் தேடலை பூர்த்தி செய்யும் பாலங்களாக செயல்பட்டுவிடுகின்றன. செய்திக்கான கணினி வரைகலை அட்டைகளாக உடனுக்குடன் செய்திகள் பல லட்சம் பேரை அடைந்துவிடுகின்றன அவற்றின் மூலம் கட்டமைக்கும் கற்பனைச் செய்திகள் தனியான மனச் சந்தைகளை உருவாக்குகின்றன.
ஒரு காலத்தில் பல லட்சம் விற்ற அச்சுப் பத்திரிகைகள் இன்று சில ஆயிரம் அளவுக்குக் குறைந்துவிட்டன என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும் தினசரி செய்திப் பத்திரிகைகளின் விற்பனையும் பெருமளவு சரிவைக் கண்டிருக்கிறது இதற்கு முக்கியக் காரணம் இணைய வசதி பெருக்கமும் அனைவர் கைகளிலும் செல்பேசி வந்துவிட்டதும்தான்.
அனைவர் கைகளில் செல்பேசி இருந்துவிட்டாலும் செய்தியை நுகர எல்லோரும் தயாராக இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான் ஒரு காலத்தில் அரசுத் தொலைக்காட்சி மட்டும் இருந்த நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு செய்தி அறிக்கை மட்டுமே வந்தது அந்தச் செய்தி அறிக்கையை ஊரே நின்று பார்த்தது பல லட்சம் விற்ற செய்திப் பத்திரிகைகளை மக்கள் வாங்கிப் படித்தார்கள். கல்வியறிவு குறைவாக இருந்த அந்தக் காலத்திலேயே மக்களின் பொது அறிவு நன்றாக இருந்தது. நாட்டின் அரசியல்வாதிகள் முதல் வெளிநாட்டுப் பிரமுகர்கள் வரை மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் இன்று இருபத்து நான்கு மணி நேரமும் செய்தி அலைவரிசைகள் இயங்குகின்றன. எப்போது நினைத்தாலும் செல்பேசியில் செய்திகளைப் பார்க்க முடியும். நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று மக்களின் செய்தி அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது அதற்கு முக்கியக் காரணம் செய்தி என்பது மக்களின் ஆழ்மனதிலிருந்து மெதுவாக நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது.
செய்தி என்பது வெளிப்புறமாக நடந்து கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு அகவய சொல்லாடல் எப்போதும் இருக்கிறது. வெளிப்புறச் செய்திகளில் தன்னைப் பொருத்திப் பார்க்கும் ஒரு பால நிகழ்வு செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தன்னை இருத்தி வைக்கும் உளவியல் தவிர்க்க இயலாததாக மாறிவிடுகிறது. ஒரு பத்திரிகை சொல்லும் செய்தி தான் சொல்வது போல மாறிவிடுகிறது. ஒரு பத்திரிகையில் குறிப்பிடப்படும் நபர் தன்னைப் போலத் தெரிகிறார். தன்னை அதிகாரம் செலுத்தும் நபர் தானே என்பது போல மாற்றம் கொண்டுவிடுகிறார். ஒரு அதிகாரியும் ஆளப்படுபவரும் ஒன்றாக ஆகிற தருணம்தான் செய்தியை சுவாசிக்கும் தருணமாக உருப்பெறுகிறது.

செய்தி அதிர்ச்சி தருகிறது. செய்தி ஆச்சர்யம் தருகிறது. செய்தி சுவாரஸ்யம் தருகிறது. செய்தி துக்கம் தருகிறது. செய்தி மகிழ்வு தருகிறது செய்தி பெருமிதம் தருகிறது செய்தி உற்சாகம் தருகிறது. செய்தி சோர்வு தருகிறது. செய்தி சோம்பல் தருகிறது. செய்தி ஓட வைக்கிறது. செய்தி முடங்க வைக்கிறது.
ஏன்?
செய்திகளில் மையம் கொண்டிருக்கும் நாயகர்கள் எல்லாம் செய்தியை நுகரும் நபர்கள்தான்.
ஒரு கிரிக்கெட் அணி வென்று வந்தவுடன் நாடு முழுக்கக் கோலாகலம் களைகட்டிவிடுகிறது. அணியை வரவேற்க நகரங்களில் பல லட்சம் பேர் குழுமுகிறார்கள். கிரிக்கெட்டை நேரில் பார்த்தவர்களைவிட தொலைக்காட்சியில் பார்த்தவர்கள்தான் அதிகம் பேராக இருக்கிறார்கள். அவர்களின் தேச கௌரவமும், தனி மனிதப் பெருமையும் இந்த ஊடகக் காட்சிகள் மூலம் பன்மடங்குப் பெருக்கப்படுகின்றன அதனால் அவர்கள் அணியை வரவேற்பதில் மிகுந்த பரவசம் அடைகிறார்கள். இது தன்னெழுச்சியாக நடக்கிறது.
இதுதான் ஊடகங்களின் முக்கிய தாக்கம் என்று கொள்ள வேண்டும். ஊடகங்கள் இன்னும் முழுமையான மக்கள் அதிகார மையங்களாக மாறவில்லை. இதற்கு ஊடகங்களையோ அவற்றின் உரிமையாளர்களையோ ஆட்சியாளர்களையோ குற்றம் சொல்ல முடியாது. மக்களின் மன நிலைதான் இதற்குக் காரணமாக இருக்கிறது. ஊடகங்கள்தான் மக்களின் மனநிலையாக உறைந்துபோயிருக்கின்றன. ஆனால் ஊடகம் மக்கள் மனதில்தான் இருக்கிறது என்பது மெதுவாக பக்குவம் அடைந்து வருகிறது.
சாதாரணப் பார்வையாளர்களும் ஊடகவாதிகள்தான் என்ற ஜனநாயக சொல்லாடலைக் கொடுத்தவைதான் சமூக ஊடகங்கள்.
இந்தியாவில் 2019 மக்களவைத் தேர்தல் வாட்ஸ்ஆப் மூலம் போட்டியிடப்பட்டது என்று சொல்வார்கள். அதே போல் கடந்த 2024 மக்களவைத் தேர்தலும் யூட்யூப் மூலம் போட்டியிடப்பட்டது என்றும் கருதப்படுகிறது. யூட்யூப் நெறியாளர்களும் தொகுப்பாளர்களும் பல கோடி பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தார்கள். ஒரு பக்கமாகச் சொல்லப்பட்டக் கருத்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் கட்சிகள் அடைந்த வெற்றிகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்று சொல்லிவிடலாம்.
முக்கிய ஊடகங்களின் மொழித் தளமும் கருத்துச் செறிவும் பெருமளவுக்கு தற்காலத்தில் நீர்த்துப்போய்விட்டன என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. அதைவிட நீர்த்துப் போன ஒரு பின்புலத்தில்தான் சமூக ஊடகங்கள் இயங்கிவருகின்றன. இது போன்ற ஏற்றத் தாழ்வுகள்தான் மக்களின் துல்லியமான மன நிலைகளை பிரதிபலிக்கின்றன தன் குறைகொண்ட ஊடகம்தான் தனக்கான ஊடகம் என்று பார்வையாளர்கள் தங்களை எப்போதும் தயார்ப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது நிரூபணமாக இருக்கிறது.
தமிழகத்தில் திரைப்பட விமர்சனங்கள் செய்யும்

பல தமிழ் யூட்யூபர்களை இங்கு நினைவுகொள்ளலாம். படங்களை கிழி கிழி என்று கிழித்துவிடும் அவர்களின் காணொளிகள் பல லட்சம் பார்வையாளர்கள் நொடியில் சென்றடைந்துவிடுகின்றன. அவர்களின் விமர்சனங்களையும் மீறி பல படங்கள் நன்றாக ஓடுகின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது.
சுய அதிகார இன்பத்தையும், சுய பாலியல் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாக சமூக ஊடகங்களின் உட்பொருள்கள் சங்கிலிகளை உருவாக்குகின்றன இதில் சிக்குண்ட பார்வையாளன் தொடர்ந்து அந்தத் தேடலில் மயக்கம் கொள்கிறான்.
இந்தக் கண்ணிகளின் சூட்சுமங்களில்தான் சமூக ஊடகங்களின் வெற்றி மையம் கொண்டிருக்கிறது எந்த சமூக ஊடகம், யூட்யூப் சேனல் இந்தக் கண்ணிகளைச் சரியாகக் கட்டமைக்கிறதோ அது வெற்றியின் தளத்தில் இயக்கம் கொள்கிறது. சமூக ஊடகங்களில், யூட்யூப் சேனல்களில் பேசும் நிபுணர்கள் இந்த விருப்பக் கண்ணிகளை மறுஉற்பத்தி செய்பவர்களாகவும், அந்த மறுஉற்பத்தியின் மகிழ்வில் தங்களை மையப்படுத்திக்கொள்பவர்களாகவும் தொடர்ந்து மாறும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். அதிகார இருள்களில் இருக்கும் நிழல்களை மாயைகளாக விவரிப்பவர்களாகவும், பெரிய நட்சத்திரங்களின் படுக்கை ரகசியங்களை பொதுவெளியில் ரசித்துக் காட்டும் நடிகர்களாகவும் மாறும் பணியை அவர்கள் வெற்றிகரமாகச் செய்ய கடமைப்படுகிறார்கள்.
முக்கிய ஊடகங்களோ, சமூக ஊடகங்களோ எப்போதும் பார்வையாளர்களின் மகிழ்வின் தேடலுக்குத்தான் இரை கொடுக்கின்றன. ஆனால் அவை அந்தப் பணியிலிருந்து சரியும்போது பார்வையாளனின் இலக்குகள் மாறிவிடுகின்றன இப்போதைக்கு சமூக ஊடகங்கள் பார்வையாளர்களின் இரைக்கு இரையாகின்றன. பார்வையாளர்களை இரையாக்குகின்றன காலப்போக்கில் யாருக்கு அதிக இரை தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து ஊடகங்களில் தளங்கள் மாறும் ஊடகங்களின் உள்ளடக்கமும் மாறும் புதிய ஊடகங்களும் தலை தூக்கும்.