மூன்று தலைமுறையினரை இணைத்த தமிழ் இணைய மாநாடு

நித்திஷ் செந்தூர்

செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதை அழமாக ஆராய்ந்தது இவ்வாண்டின் தமிழ்க் கணிமை, தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மாநாடு. உத்தமம் எனப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ் உரையாடிகள் (Tamil Chatbots), தமிழுக்கான பெருமொழி மாதிரி வரைவுகள் (Large Language Models), தமிழ் விளையாட்டுகளை உருவாக்குதல் முதலியவை அலசி ஆராயப்பட்டன.
குறிப்பாக, தமிழுக்கு உரிய பெருமொழி மாதிரி வரைவை உருவாக்குவதன் அவசியத்தை மாநாடு வலியுறுத்தியது. தமிழ், ஒட்டுநிலை மொழி என்பதால் தமிழுக்கான நுணுக்கங்கள் மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் வேறுபடுக்கின்றன. எனவே, பொதுவான பெருமொழி மாதிரி வரைவு தமிழுக்குப் பொருந்தாது.
அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகரத்தில் உள்ள டெக்சாஸ் (Texas) பல்கலைக்கழக்கத்தில் ஜூன் 14 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை நடைபெற்ற 3 நாள் மாநாட்டில், சுமார் 300 பேர் பங்கேற்றனர். தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் டாலஸும் ஒன்று. அங்கு சுமார் 30,000 தமிழர்கள் குடியிருப்பதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது முறையாக அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. முதலாவது மாநாடு 2002ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவிலும் இரண்டாவது மாநாடு 2011ஆம் ஆண்டு பிலடெல்ஃபியாவிலும் முறையே நடைபெற்றது. இவ்வாண்டின் மாநாட்டில் சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டு 15

ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர். அதோடு, செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த பயிரலங்குகளும் நடத்தப்பட்டன.
மாநாட்டின் ஓர் அங்கமாக மாணவர்களுக்குத் தமிழ் நிரலோட்டப் போட்டி (Tamil Hackathon) ஏற்பாடு செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவுடன்

நிரலாக்க மொழிகளைப் (Programming languages) புத்தாக்கமாக இணைத்து தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாட்டு வளங்களை உருவாக்கினர் மாணவர்கள். மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த மெய்நிகர்ப் பூங்கா, கதை.AI, கலை.AI ஆகிய படைப்புகள் பரிசுகளைத் தட்டிச் சென்றன.
பறையிசை, பரதநாட்டியம், சிலம்பம் முதலிய தமிழர்ப் பண்பாட்டுக் கலைப் படைப்புகளும் மாநாட்டின் ஓர் அங்கமாக ‘பயில்’ பள்ளி மாணவர்களால் படைக்கப்பட்டன. மாநாட்டின் நிறைவில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் மஜ்ஜூநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மூன்று நாள் மாநாட்டில் மூன்று தலைமுறையினர் கலந்து கொண்டதைக் கண்டு தாம் பெருமிதம் அடைவதாக என்றார் அவர். அதோடு, புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் முன்னிறுத்துக்கின்றனர். அது செம்மொழியான தமிழுக்கு செய்யும் சிறப்பு என்றார் அவர்