
வளர்ச்சி நிலையில் ஏற்றுமதி வர்த்தகம்
கடந்த ஐந்து மாதங்களாக சரிவைக் கண்ட சிங்கப்பூர் வர்த்தக ஏற்றுமதி ஜூலை மாதம் வளர்ச்சி நிலையை அடைந்தது. அண்டை நாடுகளான மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருக்கிறது. மிகப்பெரிய சரிவைக் கண்டிருந்த எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 15.7 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. மின்னியல் அல்லாத பொருட்களிலும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 1.2% வளர்ச்சி நிலையில் பத்து பெரிய சந்தைகளிலும் ஏற்றம் கண்டுள்ளதாக Bloomberg தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஏற்றுமதிக்கு சாதகமாக இருக்கும் என்றும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
படம் நன்றி: cnbc
AI செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான புதிய ஆய்வு மையம்

சிங்கப்பூரில் Al செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சீராக முன்னேறி வருவதாகவும், குவாண்டம் நுண்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் மின்னியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோஸஃபின் தியோ தெரிவித்தார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக அடுத்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமையுமென்றும் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி மையம் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பள்ளியில் அமைக்கப்படுமென்றும், தொடக்கத்தில் பசுமை, பாதுகாப்புத் துறைகளின் பயன்பாட்டிற்கு உதவுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
படம் நன்றி: reuters
சிங்கப்பூரில் இஸ்லாமியக் கல்விக்காக புதிய கல்லூரி

தேசிய தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வாங், “சிங்கப்பூரில் இஸ்லாமியக் கல்விக்காக புதிய கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்தார். பல ஆண்டுகளாகவே MUIS அமைப்பின் முயற்சியில் எகிப்து, துருக்கி, ஜோர்டான், மொராக்கோ போன்ற நாடுகளுக்குச் சென்று ஆய்ந்து, இங்கும் ஒரு இஸ்லாமியக் கல்வி வடிவம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த இஸ்லாமியக் கல்லூரி அமையும். இதன் மூலம் சிங்கப்பூரில் புதிய இஸ்லாமியத் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
படம் நன்றி: ifonlysingaporeans.blogspot.com
உலகிலேயே ஆகச் சுத்தமான குடிநீர் தரும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்
உலகிலேயே மக்களுக்கு ஆகச் சுத்தமான குடிநீர் தரும் நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 99.9 புள்ளிகளை சிங்கப்பூர் பெற்றிருக்கிறது. யேல் பல்கலைக்கழகம் வெளியிட்ட EPI அறிக்கையில் அந்தப் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 108 நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. 2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 21வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது 2024ல் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கழிவுநீர் மறுபயனீட்டிலும், மறுசுழற்சியிலும் சிங்கையின் தொடர்ந்த முயற்சிகள் அதற்கான பலனைத் தந்துள்ளன. அதே சமயம் குடிநீர் மட்டுமல்லாமல் வேறு 10 அம்சங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பட்டியலில் சிங்கை 44வது இடத்தில் உள்ளது.
படம் நன்றி: Yale EPI Index 2024