2024 தேசிய தின அணிவகுப்பு வழமைபோல மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாட்டின் 59வது தேசிய தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து மே மாதம் அனுமதிச்சீட்டுகளுக்கான விண்ணப்ப தளம் திறந்ததுமே சுறுசுறுப்பாக விண்ணப்பித்து, பின்னர் சீட்டுகள் கைக்குக் கிடைத்த நாளிலிருந்து–அது ஒத்திகைக்கான அனுமதியாக இருந்தாலும்–மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் அணிவகுப்புகளைக் கண்டு நாட்டுடனான தங்களது இணைப்பை வலுப்படுத்திக்கொள்கின்றனர்.
பிரதமர் லாரன்ஸ் வாங் பதவியேற்ற பின்னர் வழங்கிய தனது முதல் தேசிய தின உரையில் பல்வேறு முக்கிய அம்சங்களைத் தொட்டுப் பேசினார். குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது கவனிக்கப்படவேண்டியது என்பதால் குழந்தைப் பிறப்புக்காக என்று சிறப்பாக பெற்றோர்க்குக் கூடுதல் 10 வார கால பகிரப்பட்ட விடுப்பு அளிக்கப்படுவது பெற்றோராகவுள்ளோர்க்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே. மொத்தமாக பெற்றோர்களுக்கு 30 வார விடுப்பு கிடைக்கும். முதல்முறை வீடு வாங்குவோருக்கான மானியம் அதிகரிப்பு, திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் ஸ்கில்ஸ் ஃப்யூச்சர் நிதி அதிகரிப்பு, வேலையிழந்தோருக்கான சிறப்பு பண உதவி, காலாங் பெருந்திட்டம் போன்றவை உள்ளடக்கிய அவரது உரை மக்களிடம் வரவேற்புப் பெற்றுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடமுடியவில்லை. சாந்தி பெரெராவின் காலில் ஏற்பட்ட காயத்தால் தகுதிச் சுற்றுகளில் வெளியேறினாலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படுள்ள repechage முறை மூலம் இரண்டாம் வாய்ப்புப் பெற்றார். இருந்தும் கால் காயம் தொடர்ந்ததால் மிளிரமுடியாமல் போனது. எனினும் சிங்கையின் தங்க தாகத்தைத் தீர்த்தார் மேமில்லன் மேடர் நீர்ச்சறுக்கு விளையாட்டில் தங்கம் கொணர்ந்தார். தொடர்ந்து நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் மேலும் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.
சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை [email protected] முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்