கவிதை காண் காதை | 23

0
1113

இயற்கை நீங்கினார்

கணேஷ் பாபு

இயற்கை என்பது இலக்கியத்தின் முதன்மையான பாடுபொருள்களில் ஒன்று. சங்க இலக்கியங்களையே கூட பெரும்பாலும் இயற்கை வர்ணனைகள்தான் ஆக்ரமித்திருக்கின்றன. மனிதனின் மேன்மைகளும், கீழ்மைகளும், அவனுடைய இன்ப துன்பங்களும் என யாவும் இயற்கையின் பின்னணியிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. இயற்கை யாவற்றுக்கும் ஓர் மௌன சாட்சியாகவே சங்க இலக்கியங்களில் இடம்பெறுகிறது. இவற்றையெல்லாம் என் நண்பனான விஜயன்தான் முதன்முதலில் எனக்குத் தெரியப்படுத்தினான். நவீன இலக்கியத்தின் யதார்த்தவாதப் படைப்புகளில் நாங்கள் இருவரும் வாசிப்பைத் துவக்கிய காலங்களில் அவன் மட்டுமே நவீன இலக்கியத்தில் இயற்கை இடம்பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தான். எங்கள் நண்பர் குழுவில் எப்போதுமே அவன் ஒரு தலைவனின் இடத்தை வகித்தான். எந்தப் படைப்பை வாசித்தாலும் அது குறித்த எங்கள் கருத்தை சரிபார்த்துக் கொள்ள அவனது கருத்தையே நாடுவோம். எதைக் குறித்தும் ஒரு தீர்மானமான கருத்தை உருவாக்கிக் கொள்பவனாகவும் அந்தக் கருத்தை வந்துசேர்ந்த விதத்தை விரிவாக விளக்கக்கூடியவனாகவும் இருந்தான்.

இயற்கையைப் பாடுவது என்பது இலக்கியத்தில் காலாவதியாகிவிட்டது என்றும் நவீன இலக்கியத்தில் இக்காலத்திலும் இயற்கையைப் பேசுவது என்பது குழந்தைத்தனமானது என்ற எங்கள் ஆரம்பகால அபிப்ராயங்களை அவன் மட்டுமே தனது தொடர்ச்சியான வாதங்களினால் மாற்றினான். அவ்வகையில் அவன் எனக்குச் செய்தது ஒரு மாபெரும் உதவி. பாரதியின் இயற்கையை வியந்து எழுதப்பட்ட வசன கவிதைகளைக் குறித்துப் பேசுவான். வால்ட் விட்மனின் புல்லின் நுனி கவிதைத் தொகுப்பு குறித்துப் பேசுவான். உலகக் கவிகளில் இயற்கையைப் பாடியவர்களில் முதன்மையானவரான வில்லியம் வேர்ட்ஸ்வோர்த்தைத் துணைக்கழைப்பான். இயற்கையைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிய அமெரிக்க சிந்தனையாளர்களான எமர்சன், தோரோ போன்றவர்களைக் குறித்துப் பேசுவான். இவ்வாறாக, இயற்கை என்பது இலக்கியத்தில் மாறாததொரு பேசுபொருள், அது பேசிப் பேசித் தீர்வதில்லை. அது எப்போதும் வளர்ந்து கொண்டே செல்லும் கருப்பொருள் என்பதை எங்கள் மனங்களில் பதியவைத்தான்.

இயற்கையைக் குறித்து வாசிப்பது மட்டுமல்லாமல், “பிரதியை விட்டு வெளியே வாருங்கள் நண்பர்களே” என்ற முழக்கத்துடன், அவன் எங்களை இயற்கையை நேரடியாகக் கண்டு ரசிக்க அழைத்துச் செல்வான். விடுமுறைக் காலங்களில் அருகில் இருக்கும் அணைக்கட்டுக்குச் செல்வோம், அருவிகள், காடுகள், மலைச்சரிவுகள், ஆறுகள் என பார்த்துக் கொண்டே செல்வோம். குறிப்பாக, சுற்றுலாத் தளங்கள் அதிகம் உள்ள தேனி மாவட்டத்தில், அவன் எங்களை அழைத்துச் செல்வதெல்லாம் உள்ளூர்க்காரர்களான நாங்களே அதிகம் அறிந்திராத பகுதிகளுக்குத்தான். மனிதர்கள் அதிகமும் புழங்கியிராத அடர்மலைச் சரிவுகளில் உள்ள குகைகளுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறான். வைகறை வெளிச்சத்தில் அவனுடன் மலையில் நடப்பது என்பது ரம்மியமானதொரு அனுபவம். சூரிய ஒளி புதிதாகப் பிறந்து திகழத் தொடங்கும் அவ்வேளையில், பாரதியின் வசன கவிதைகளை முணுமுணுப்பான். “ஒளியே, நீ யார்? ஞாயிற்றின் மகளா? ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?” போன்ற வரிகளை அவன் அந்தக் காலையில் சொல்வது ஒரு மந்திரம் போல ஒலிக்கும். “இயற்கை என்பது அடிப்படையிலேயே நேர்மறையானது. எதிர்மறை என்பது இயற்கையில் இல்லை, அப்படி ஒன்று இருந்தால் அது நம்முடைய பிழையான புரிதல்தானேயொழிய, இயற்கையில் அப்படி ஒரு குணம் இல்லை” என்பது அவனது பொன்மொழிகளில் ஒன்று. காடுகளிலேயே சுற்றித் திரிந்ததால் மலைப்பளியர்களை நட்பாக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பார்த்து விட்டால், தூய தேனடைகளைக் கொடுப்பார்கள். அதிலுள்ள தேனைப் பிழிந்து பருகும்போது, காட்டின் சாற்றைப் பருகிக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதம் தோன்றும்.


ஒன்று சேர்வதும், பிரிந்து செல்வதும்தானே மனித வாழ்வின் இயற்கை. அந்த நெறிப்படி நாங்கள் கல்லூரி காலம் கடந்ததும், கேரம் போர்டு காய்களைப் போலத் திசைக்கொருவராகச் சிதறிப் போனோம். அவரவர் வழியில், சோற்றைத் தேட வேண்டியவர்களானோம். எங்கெல்லாமோ சென்று, என்னவெல்லாமோ செய்து, ஒருவழியாக நிலைப்பெற்றப்பின், திரும்பிப் பார்க்கையில், காலம் கடந்துவிட்டிருந்தது. எவருக்கும் எவரிடமும் தொடர்பில்லை. புதிய மனிதர்களும், புதிய சூழல்களும் வாழ்வின் வெளியை நிரப்பிவிட்டப் பிறகு, பழைய நண்பர்கள் யாவரும் நம் முதுகுக்குப் பின் எங்கோ தூரத்தில் சிறுபுள்ளிகளாக எஞ்சிவிடுகிறார்கள்.


பல வருடங்களுக்குப் பிறகு, சென்னையில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலில் தற்செயலாக விஜயனைச் சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் அப்படியேதான் இருந்தான். பெரிதாக மாறவில்லை. ஆனால், உள்ளூர வேறொருவனாக மாறியிருந்தான். பேசப் பேசத்தான் அவன் திசைமாறியிருப்பது புரிந்தது. கட்டிடங்களை கட்டிக் கொடுக்கும் பில்டராகத் தொழில் புரிகிறான். மிகவும் வசதியாகயும் லாபங்களில் திளைப்பதாகவும் சொன்னபோது நிறைவாக இருந்தது. ஆனால், இந்த நீண்ட பயணத்தில், அவன் மனதில் இருந்த இயற்கையும் காடுகளும் ஒளியிழந்து மங்கிப் போயிருந்தன. “ஊருக்கே போறதில்லடா, அங்க போய் என்ன செய்ய? நம்ம தொழில் சென்னையிலதான். கொஞ்ச நாள்ல பெங்களூரிலும் ஒரு பிராஞ்சத் துவக்கிருவேன்.” என்றான். நான் இலக்கியம் குறித்தும், இயற்கை குறித்தும் அவனிடம் பேசத் துவங்கும்போதெல்லாம் அதை அசட்டை செய்து பேச்சை மாற்றினான். “அதுவொரு காலம்டா. பழங்காலம். ஒரு இளமை வேகத்துல இலக்கியத்துலயும் இயற்கையிலயும் வெறித்தனமா ஈடுபட்ட காலகட்டம் அது. ஆனா, அதையே நிரந்தரமா தலைல தூக்கி வைச்சுட்டு இருக்க முடியாது. இந்த இடத்துக்கு வர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்டா.. மீண்டும் பழைய விஷயங்கள்ல ஈடுபட்டு பொழுத வீணடிக்க விரும்பல” என்றான். எந்த இயற்கையை வியந்து போற்றிக்கொண்டிருந்தானோ, அதையே அழித்து கட்டிடங்களைக் கட்டுபவனாக மாறிப்போயிருந்த விஜயனை நம்ப மாட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பணத்தைப் பற்றியும், சொத்துகளைப் பற்றியும், வாய்ப்புகளைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்த இந்த விஜயன் நானறிந்த விஜயனல்ல. நானறிந்த விஜயன் தொலைதூதக் காடுகளிலும் மலைச்சரிவுகளிலும் மரங்களின் செறிவுகளிலும் தொலைந்து போய்விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

“இங்க தாம்பரத்துக்குப் பக்கத்துல ஒரு அபார்ட்மெண்ட் கட்டுறேன். ஏர்போர்ட்க்கு பக்கம்தான். உன்னோட சிங்கப்பூர் நண்பர்களுக்கு என்னய அறிமுகப்படுத்திவிடு. அவங்களுக்கு குறைவான விலைல தரமான ஃப்ளாட்டுகளக் கட்டிக் கொடுக்கலாம். உனக்கும் ஃப்ளாட்டு வேணும்னா சொல்லு. எத்தன ஃப்ளாட்டு வேணும்?” என்று பேசிக்கொண்டே போன வியாபாரி விஜயனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியவில்லை.


ஒருவேளை இயற்கை ஆர்வலனான பழைய விஜயனைச் சந்திக்க முடிந்தால், அவனிடம் பேசுவதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. நவீன கவிதையிலும் இயற்கை இடம்பெற்றுவிட்டது. அப்படியான எண்ணற்ற கவிதைகள் இருக்கின்றன. கார்த்திக் நேத்தா எழுதிய இந்தக் கவிதையை வாசித்துப் பார் என்பேன். அந்தப் பழைய விஜயனுக்கு இந்தக் கவிதை நிச்சயம் பிடிக்கும். அவனுக்கே இந்தக் கவிதையை சமர்ப்பணம் செய்கிறேன்.