
பா.இராமநாதன்
உரையாடல் தொகுப்பு : மணலி அப்துல் காதர்
சிங்கப்பூரின் பிரபல உயிர் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும், ACE இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர் நிறுவனத்தின் நிறுவன மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் உயிர் ஆராய்ச்சி சோதனை வடிவமைப்பு மற்றும் புதுமையான தயாரிப்பு மேம்பாட்டில் வல்லுனராகவும் அறியப்படும் முனைவர் பா.இராமநாதன் அவர்களை சிராங்கூன் டைம்ஸ் இதழுக்கான ஒரு நேர்காணல் மூலம் அவரது வியத்தகு சாதனைகளை, ஆய்வு முயற்சிகளை அதன் வெற்றிகளை நம் வாசகர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றோம்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் மருத்துவ ஆராய்ச்சித்துறையிலும், ஆராய்ச்சி மற்றும் கற்றல் மேம்பாடுகளில் வணிகம் சார்ந்த செயல்பாடுகளும், பங்களிப்பு கொண்ட நீங்கள் உங்களைப் பற்றியும், உங்கள் ஆய்வுக்காலங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
சிங்கப்பூர் ACE இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், உயிர் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா, சிங்கப்பூர், தைவான் நாடுகளில் ஆய்வுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றேன். இந்தத் துறைகளில் நான் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றேன்.
இதன்மூலம் ஆராய்ச்சி மேம்பாடு, கற்றல் மேம்பாடு, வணிக மேம்பாடு ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களைக் கொண்டுள்ளேன். எனது ஆராய்ச்சி அனுபவங்கள் உயிரியல் மருத்துவ அறிவியல், மருத்துவ ஆராய்ச்சித் துறைகளில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்கள், சுகாதாரம், பயிற்சித் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டியவை. நான் பல ஆய்வுக் கட்டுரைகளையும், புத்தக அத்தியாயங்களையும் தமிழிலும் ஆங்கிலதிலும் வெளியிட்டுள்ளேன். மாநாடுகள், கருத்தரங்குகளில் முக்கிய சிறப்பு உரைகளையும் அளித்துள்ளேன். எனது சாதனைகளுக்காகவும் பல்வேறு பங்களிப்புகளுக்காகவும் நான் பல அங்கீகரிக்கப்பட்ட விருதுகளையும் வெகுமதிகளையும் பெற்றுள்ளேன். மாணவர்கள், பேராசிரியர்கள், தொடக்க நிலையில் உள்ள வர்த்தகக் குழுக்களுக்கும் கற்பிக்கவும், வழிகாட்டவும், பயிற்சியளிக்கவும், சமீபத்தில் நான், ஸ்கூல் ஆஃப் பிசினஸ், VIT சென்னை வளாகம், தமிழ்நாடு, இந்தியாவின் வருகைதரும் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
உங்கள் வணிக நிறுவனத்தின் சேவைகளும், செயல்பாடுகளும் என்ன வகையில் துறை சார்ந்து இருக்கிறது?
ACE இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர் என்பது ஆறு வருடங்கள் பழமையான நிறுவனமாகும், இது பொதுவாக வணிக மேலாண்மை ஆலோசனை சேவைகள், உயர் ஆராய்ச்சி சோதனை வடிவமைப்பு, புதுமையான தயாரிப்பு மேம்பாட்டில் சேவைகளையும் ஆதரவையும் முக்கியமாக அளிக்கிறது. எங்களின் செயல்திறன் மதிப்புகளை மேம்படுத்தி எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் சிங்கப்பூரில் உள்ள ACE இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மூலம் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புக்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கு நாங்கள் தற்போது பெரிதும் கவனம் செலுத்தி வருகிறோம்.
நாங்கள் வணிக தொழில் நிறுவன வல்லுநர்கள். சிறந்த வாடிக்கையாளர் சேவை மைய மதிப்புகளை மையமாகக் கொண்ட எங்கள் தொழில்முறை வணிக ஆலோசனை சேவைகள் மூலம் நூற்றுக்கணக்கான வணிகப் பெருமக்கள் தங்கள் வணிகங்களை வளர்க்க உதவியிருக்கிறோம். உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும், உலக அளவிலும் விரிவடைவதற்கான முயற்சிகளில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும், பொருத்தமான நேரடியான, இணைய வணிகத் தீர்வுகள் சார்ந்த சேவை ஆதரவுகளை வழங்குவதன் மூலம், அவர்கள் வியாபாரத்தில் அதிகபட்ச பலனை அடைய முடியும்.
எங்களின் சேவைகள்:
வணிக ஒத்துழைப்புகள், கூட்டு முயற்சிகள், நிறுவனப் பங்குளை இணைத்தல் & கையகப்படுத்துதல், பங்குதாரர் கூட்டு ஒப்பந்தங்கள், வணிக இணக்கங்கள், ஒழுங்குமுறைகள், தணிக்கை, உரிமம், நூல், கட்டுரை வெளியீடுகள், பயிற்சித் தளங்கள், பயிற்சி, வழிகாட்டுதல்களுக்கான ஆதரவுகள், உத்திப்பூர்வ திட்ட உருவாக்கங்கள், திட்ட மேலாண்மை, தொழில்முறை நிபுணத்துவம், மனிதவள ஆதரவுச் சேவைகள், புத்தாக்கத் தொழில்நுட்ப மாற்றத்திற்கான தீர்வுகள், புதுமையான ஆராய்ச்சி வடிவமைப்பு முறைகள், தயாரிப்புகளின் மேம்பாடு, அறிவு சார்ந்த, தொழில்நுட்ப பரிமாற்ற ஆதரவுகள், வணிக நிதி உருவாக்கம்: அரசு மானியம், வங்கி நிதி, கூட்டமைப்பு நிதி, வணிக முதலீடு, திட்ட வர்த்தக நிதி ஆதரவுகளை வணிகத் துறையில் செயல்படுத்துவதில் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றோம்.
போட்டிகள் மிகுந்த வணிகத்துறையில் உங்களின் புதுமைகளும் செயல்பாடுகளும் வெற்றியை ஈட்டுமா?
போட்டிகளுக்கு மத்தியில் நல்ல திறமையான திறன்களுடன் வணிகங்களை மேம்படுத்துதல், மேன்மைகளுக்கான காரணிகள் மற்றும் உத்திபூர்வ செயல்பாடுகளுக்கான திட்டங்கள் ஆகியவற்றில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். இந்த அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதற்காக, நிறுவனத்திற்குத் தேவையான செயல்பாடுகள் மற்றும் நடைமுயிலான நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் “பிசினஸ் எக்ஸலன்ஸ்” மாற்றத்திற்கான போர்ட்ஃபோலியோ மற்றும் கட்டமைப்புகளை நாங்கள் எங்களின் நிறுவனச் செயல்பாடுகளில் உருவாக்கியுள்ளோம்.
மேலும் ஒரு “புதுமைக்கான வியூகங்களைப் பயன்படுத்தும் ஆலோசனை நிறுவனம்” என்ற வகையில், வணிக நோக்கக் கொள்கை எனும் குறிக்கோளுடன் திறமையான முறையில் புதுமைக் காரணிகள் மூலம் நீண்ட கால வெற்றியை அடைய நிறுவனச் செயல்பாடுகளை நிலைநிறுத்துவதன் மூலம் போட்டித்தன்மையை சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம்.
புதிய வாடிக்கையாளர்களை அடைய அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத் தயாரிப்புகள், சேவைத்தளங்கள் மூலம் வெவ்வேறு வணிக மாதிரிகளை உருவாக்க எங்கள் நிறுவனத்தில் உள்ள பல்வேறு விற்பனை, சந்தைப்படுத்தல் தளங்களுடன் பரிசோதனை மற்றும் பரிவர்த்தனை செய்யும் உத்திகளையும் பயன்படுத்தி வருகின்றோம்.
குழு உறுப்பினர்களிடையே செயல்பாட்டு முறைகளுக்கான ஒரு புதுமைக் கலாச்சாரத்தை உருவாக்குவது மற்றும் நிறுவுவது போன்ற வகைகளின் கீழ் உள்ள புதுமையான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை நாங்கள் எங்கள் வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக ஆதரிப்பதற்காகப் பயன்படுத்துகிறோம்.
- விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் திட்ட ஆலோசனை
திட்ட மேலாண்மை, நிர்வாக ஆலோசனை
வணிகம், நிறுவன அறிக்கை தயாரித்தல்
வணிக, நிறுவன உருவாக்கத்திற்கான முன் ஆலோசனைகள், நடைமுறைச் செயலாக்கங்கள்
தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் தொடர்பான ஆலோசனைகள், தீர்வுகள்
கணக்கியல், நிதிநிலை மேம்பாட்டு ஆலோசனைகள்
வணிக உத்திபூர்வ மேலாணமைத் திட்டமிடல், செயல்பாட்டு ஆதரவுகள், சேவைகள்இவைகளில் அடங்கும். இந்த நவீன அறிவியல் சார்ந்த எங்களின் உத்திகள் நிச்சயம் வெற்றியைக் கொண்டு வரும்.
என்னதான் புதிய உத்திகள், நவீன செயல்பாடுகள் இருந்தாலும் சவால்களும் கட்டுகடங்காமல் வளர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி…
எங்கள் வணிகங்களில் நிறைய சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறோம். B2Bக்கான வலுவான கூட்டுறவையும் B2C துறைகளுக்கான சிறந்த வாடிக்கையாளர் உறவுகளையும் நாங்கள் நம்புகிறோம். தற்போது நாங்கள் இந்த சவால்களில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் ஆகியவை இப்போது நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.
- மனிதவளத் திறன்கள், திறமைகளுக்கானப் பற்றாக்குறை
விரிவாக்கத்தை நிர்வகித்தலில் உள்ள சிரமங்கள்
புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள்
சந்தைப் போட்டியை சமாளித்தல்
நிதிகளைப் பாதுகாத்தல் & மேம்படுத்தி நிர்வகித்தல் போன்ற சவால்களையும் எதிர்கொண்டு நாங்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளை வலுப்படுத்த கூட்டு முயற்சிகளுடன் கூடிய கூட்டாண்மைச் சூழல்களை உருவாக்குகிறோம். மேலும் சிறந்த வாய்ப்புகளை ஆராய்வதற்காக B2B கூட்டாண்மைகளில் ஈடுபடுகிறோம்.
சிங்கப்பூர் உட்பட பிற நாடுகளில் உள்ள வணிகச் சமூகங்களுடன் பல கூட்டு முயற்சிகள், செயல்பாட்டுத் திட்டங்கள் மூலம் சிறப்பாக இணைக்க, திட்டங்களை விநியோகம் செய்யவும் மேலும் நெட்வொர்க்கிங் செயல்பாடுகளில் ஈடுபடவும் முயற்சிக்கிறோம்.
- ஆட்சேர்ப்பு, பணியாளர்களைத் தக்கவைத்தல், தொழிலாளர் தரம்
சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றுதல்
மூலதனம்/பணப் பற்றாக்குறையை நிர்வகித்தல்
நிர்வாகம், கணக்கியல் நடைமுறைகள்
நேர மேலாண்மை உத்திகள்
மார்க்கெட்டிங், விளம்பரம் மூலம் ஆதாயம்
நிர்வகித்தல், பலன்களை மேம்படுத்தி வழங்குதல்
பிற சிறு வணிக சிக்கல்களைத் தீர்ப்பது, சரியானத் தீர்வுகளுடன் திறம்படக் கையாளும் நுட்பங்களோடு எந்த சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலும் இயங்குகிறோம்.
வணிகம், துறை நிபுணத்துவம் சாராது சமூக – கலாச்சார செயல்பாட்டில் தங்களின் பங்களிப்பு குறித்து ….
பேச்சு, கலந்துரையாடல் அமர்வுகள், பயிலரங்குகள், மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற நேரிடையான, மெய்நிகர்வழி நிகழ்வுகளில் அதிக செயல்பாட்டுடன் ஈடுபடுவதன் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் போதிய ஆதரவளித்து சிறந்த பங்களிப்பைச் செய்கிறோம். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் ‘தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகத்தில்’ (www.tamildebatshow.org) செயலாளராகவும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுட்கால உறுப்பினராகவும் எனது சேவையையும் பங்களிப்பையும் தன்னார்வமாகச் செய்துவருகிறேன்.
ACE இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் கீழ், உலகெங்கிலும் உள்ள தமிழ்ப்பேசும் சமூகத்தினரிடையே தமிழ் கற்றல், கற்பித்தல், களப்பணியாற்றல் என்ற கருத்தை வலியுறுத்துவதற்கும் கற்பனை செய்வதற்கும் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனலில் “தமிழோடு தமிழராக” சமூகத்தை உருவாக்கியுள்ளேன். இது சம்பந்தமாகத் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். மேலும் பல கல்வி, வணிக, சமூக நிகழ்ச்சிகள், அமர்வுகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை ஊக்குவிக்க பல தமிழ் சங்கங்கள், அமைப்புகள், தொலைக்காட்சி, இதர ஊடக அமைப்புகளுடனும் நாங்கள் பணியாற்றி ஒத்துழைத்துள்ளோம்.
வணிகம், தொழில்முனைவு, தலைமைத்துவம், கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு தலைப்புகளில் முக்கிய உரைகள், சிறப்புப் பேச்சுக்கள், விவாத உரைகள், தமிழ்க் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் ஒரு துடிப்பான உலகளாவிய தமிழ் பேசும் மக்களுக்கானச் சமூக மன்றத்தை நிறுவுவதில் நான் மிக ஆர்வமாக உள்ளேன், இதன் மூலம் நமது கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களை தற்போதைய, வருங்கால சந்ததியினர் போற்றவும் பின்பற்றவும் முடியும் என நம்புகிறேன்.
தற்போது நான் சிங்கப்பூரில் உள்ள சர்வதேசப் பேச்சாளர்கள், பயிற்சியாளர்களின் சங்கத்தின் தலைவராக உள்ளேன் (Guild of International Speakers and Trainers – GIST), இது நமது சமூகத்தில் உள்ள மக்களுக்கு பொதுமேடைப் பேச்சு மற்றும் தொழில்முறை சம்பந்தமான பயிற்சியை அளிக்கும் திறனாளர்களை ஆதரிக்கிறது. நமது சமூகத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாகப் பல நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்களையும் நடத்தியுள்ளோம். எங்கள் சேவைகளையும் ஆதரவையும் மிகச் சிறப்பாக விரைவுபடுத்த, செயல்படுத்திட ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்கள், அமைப்புக்களுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
உலகெங்கிலும் உள்ள பலச் சமூக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசனைக் குழு உறுப்பினர், வாழ்நாள் உறுப்பினராகவும் தன்னார்வப் பங்களிப்புகளைச் இயன்றவரை செய்து வருகிறேன்.
வணிகம், தொழில்நுட்ப ஆராய்ச்சி கடந்து உங்களின் இதர இலக்குகள் குறித்து….
நான் சமூகமயமாக்கல், நெட்வொர்க்கிங் செய்ய ஆர்வமாக உள்ளேன். பல்வேறு நோக்கங்களுக்கானச் சமூகங்களின் உருவாக்கம் நமது சமூகத்தில் தற்போது நிலவும் பல பிரச்சினைகளை தீர்க்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். எனவே சமூகங்களை நிறுவுவதற்கு அல்லது சமூக நலன்கள் சார்ந்த பங்களிப்புகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட பல்வேறு சமூகங்களுடன் ஒத்துழைக்க இந்தக் குறிக்கோளுடன் நான் பணியாற்றுகிறேன். ஒரு பேச்சாளராகவும், வழிகாட்டியாகவும், நன்கு பயிற்சி பெறவும் பயிற்சியளிக்கவும் தயாராக இருக்கும் பலருக்குப் பயிற்சி அளிக்கவும் வழிகாட்டவும் விரும்புகிறேன்.
பொதுமேடைப் பேச்சு, மாநாடுகள், கருத்தரங்குகளில் முக்கிய உரைகளை வழங்குதல், கட்டுரைகள் எழுதுதல், சமூக ஊடக இடுகைகளைப் பகிர்தல், YouTube சேனல்களில் ஒளிபரப்ப வீடியோக்களை உருவாக்குதல், சமூக நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு ஆதரவாக தன்னார்வத் தொண்டுகள் செய்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.
வணிக, தனிப்பட்ட நோக்கங்களுக்காக நெட்வொர்க்கிங் மூலம் புதிய நபர்களுடன் நல்ல நட்புறவுகளை ஏற்படுத்துவதுடன், எனது அறிவைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் நான் மிகவும் ஆர்வமுடன் உள்ளேன்.
புத்தகங்கள் படிப்பது, வித விதமான உணவு வகைகளைச் சாப்பிடுவது, பயணம் செய்வது, ஷாப்பிங் செய்வது, டிவி பார்ப்பது, இணையத்தில் உலாவுவது, சமூக ஊடக வலையமைப்பு மூலம் புதிய நண்பர்களைக் கண்டறிவது, சமூக மன்றச் செயல்பாடுகளைப் பின்பற்றுவது, சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்ற பொழுதுபோக்குகள் எனக்கு உண்டு.
இந்த சமூகத்திற்கு உங்களின் துறை சார்ந்து என்ன வகையில் வேறு திட்டங்கள் இருக்கின்றன?
நான் வணிக மேலாண்மை, கற்றல் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கோட்பாடுகள் ஆகியவற்றில் அனுபவமுள்ள ஒரு திறமையான தொழில்முறை நிபுணராக, தொழில்முனைவோராக வழிகாட்ட ஆர்வமாக உள்ளேன். கல்வி மற்றும் தொழில் கூட்டாண்மை மூலம், புதிய பரிமாணமான கற்றல் உத்திகளைக் கொண்டு வரமுடியும் என்று நான் நம்புகிறேன், அங்கு மாணவர்கள் அதிகத் திறன் பெற்றவர்களாகவும், பணிகளை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தகுதியுடையவர்களாகவும் மாறுகிறார்கள், மேலும் அவர்கள் நாட்டின் நலனுக்காக எதிர்காலத்தில் வலுவான பணியாளர்களாகவும், ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும் வெளிப்படுவார்கள்.
புற்றுநோய் ஆராய்ச்சி, ஸ்டெம் செல் பயன்பாடுகள், தடுப்பூசிச் சோதனைகள், முன்னோக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட புதிய திட்டங்கள், ஆராய்ச்சிப் பகுதிகளில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான உயரிய பார்வை, தலைமைத்துவம், விடாமுயற்சி என்னிடம் உள்ளதாக நம்புகிறேன். இந்த விஷயத்தில் வெற்றிகரமான பணியாளர் குழு, வணிக ஒத்துழைப்புகளை உருவாக்க, வழிகாட்டுதல், நிலைநிறுத்துவதற்கான எனது திட்டங்களும் நடைமுறைகளும் பலராலும் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நான் தொடர்ச்சியான வாழ்நாள் கற்றல் மற்றும் இலக்குகளை அடைய குறிக்கோள் சார்ந்த திட்டங்கள் மற்றும் வணிக மேலாண்மை துறைகளில் நிரூபிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் நேரத்தைச் செலவிடுவதில் ஆர்வமாக உள்ளேன். கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மேம்பட்ட கூட்டு முயற்சிகளை ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்து அவற்றைச் செயல்படுத்தவும் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.
துறை சார்ந்தும், பல்வேறு உயரிய ஆராய்ச்சிகள் மூலமும் வெற்றிகரமான சாதனை மனிதராக இருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் தங்களை போன்று ஒளிர்வதற்கு தயாராகும் தலைமுறைக்கு சொல்லும் அறிவுரைகள் ஏதும் இருக்கிறதா?
நிச்சயமாக… மனிதநேயத்தில் சிறந்த கவனம் செலுத்தி நல்ல ஆளுமையாக உதவிபுரிய முயற்சி செய்யுங்கள். தோல்விகள் மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது கூட வெற்றிகரமான மேம்பட்ட வாழ்க்கைப் பயணத்திற்கு நல்ல உத்திகளாக இருக்கின்றன.
ஒரு நல்ல தொழில்முனைவோராக வாழ்க்கையைத் தொடங்குவது ஒரு துணிச்சலான முடிவாகும், தயவுசெய்து அதில் அதிக கவனமாக இருங்கள்.
வாழ்நாள் முழுவதும் கற்றல் மனப்பான்மை கொண்ட ஆளுமையாக இருங்கள். நீங்கள் முதலில் தொடங்கும் போது, உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதீர்கள். திறந்த மனத்துடன் கற்று மேம்பாடுகாண உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்.
விஷயங்களை மிகவும் சிக்கலானதாகவும் கடினமாகவும் உருவாக்குவதை விட எளிமையாகவும் எளிதாகவும் உருவாக்கி வைத்திருப்பது உங்களை வெற்றியடையச் செய்யும்.
உங்கள் இலக்குகளை சிறப்பாக அடையத் தக்கவைக்கும் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய செயல்கள், நிகழ்ச்சிகளை முன்கூட்டியேத் திட்டமிடுதல் மிக நல்ல பண்பு.
சரியான முடிவுகளை எடுக்கும்போது உங்களுக்கு வழிகாட்டவும் பயிற்சியளிக்கவும், சவால்களை சமாளிக்கவும் உங்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு பொருத்தமான அனுபவமுள்ள வழிகாட்டியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நெட்வொர்க் நிகர மதிப்புடையது என்பதால் உங்கள் நெட்வொர்க்கை வளர்த்தலில் ஈடுபடுதல் மிகவும் நல்லது
உங்கள் பாதைகளில் வரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துதல்
எதிர்மறையான பின்னூட்டங்கள், கருத்துகளை ஏற்றுக்கொள்வது உங்களின் பலவீனங்களையும் தவறுகளையும் களைவதுடன் நீங்கள் வலுவாக இருக்கவும் உதவும்
நன்றி ஐயா, உங்களின் இந்த அறிவுரைகளும், ஆலோசைனைகளும் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு புத்துணர்ச்சியையும் ஊக்கப்படுத்தும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் பல சிகரங்களை தொடவும், சிறப்பான முன்னெடுப்புகளுக்கும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.