காஞ்சி” – சேரன் கவிதைகள்

ச. மோகனப்ரியா

கடல் கடந்த வலியென்பது நமக்கு நம் இருப்பிடம் தாண்டி வந்த தற்காலிக வலி மட்டுமே. எப்போது வேண்டுமானாலும் போய்வரக்கூடிய, எல்லா சுகங்களோடும் இருக்கும் உறவுகளின் மடியில் அமைந்த நமது இருப்பிடம். இதையெல்லாம் கடந்து போரிலும் பல நூறு சாவுகளையும் கொடுமைகளையும் கண்டு கடல் கடந்த வந்த கண்களிலும் உயிரிலும் என்ன எஞ்சியிருக்கும்?


காஞ்சியில் கவிஞர் சேரன் வெளிப்படுத்துபவை அவ்வுணர்வுகளின் கூட்டு நனவிலித் தோற்றம். பல்லாயிரம் மக்களின் உள்ளங்களில் அணையாது ஒளிர்ந்து கொண்டிருக்கும் சாக்காட்டின் சித்திரங்களை அவர் தனது கவிதைகளில் புனைந்திருக்கிறார்.


ஒளி பொருந்திய அகல் விளக்கின் வெளிச்சத்தை உருவாக்க சிறு நெருப்பு போதுமானது. ஆயினும், அந்த விளக்கு இடைவிடாது சுடர எது வேண்டுமாய் இருக்கும்?
‘கார்த்திகை’ என்ற பெயரில் அவர் எழுதிய பின்வரும் கவிதையில் அகல் விளக்கை மட்டுமா ஏற்றுகிறார்? அத்தனை போர்களை, அத்தனை குண்டடிகளை, கொடூரங்களைக் கண்ட மனதுள் விளைந்து நிற்கும் அறம் எல்லா விளக்குகளின் ஒளியைக் காட்டிலும் விஞ்சி நீங்காது நிற்கும் ஒளியல்லவா?
எந்தத் தீப்பெட்டியாலும்
எல்லா நெருப்புப் பொறிகளாலும்
ஏற்றி வைக்க முடியாத ஒரு விளக்கை
அம்மா கடவுளிடம் கொண்டு சென்றாள்
அவர் சொன்னார்:
‘மகளே,
குருதியில் எரியும் கனவுக்கு
விளக்கேற்ற வேண்டாம்;
இறப்பும் நினைவும் ஒளியில் அல்ல,
அறத்தில்.
புலம்பெயரும் போது இழந்த வீட்டை, மீள்தல் சாத்தியப்படுமா எனும் துயரத்தை, நாடற்ற நாட்டவராகும் அனாதரவு நிலையை, நேர்மையாகக் கூறும் ‘சந்திரிகையின் பாடல்’ என்ற கவிதையில் தனது புலம்பெயர்ந்த துயரையும் அங்கே தமிழரிடையே தோன்றும் உணர்வுகளையும் ‘சந்திரிகையின் பாடல்’ கவிதையில் காட்சிப்படுத்துகிறார்.
என் வீட்டின் உடைந்த திண்ணையின்
மண் எடுத்து
காற்றில் அலறி
செங்கால் நாரையின் கழுத்தில் தொங்கி
நானும் புலம்பெயர்ந்த இடம்: கனடா
என்னுடன் வந்த ஒரு பிடி மண்
பனிக்காற்றில் கரைகிறது
அதனைத் தொடர்ந்து வந்த
கொன்றைப் பூவும் நாயன இசையும்
தமிழர்களுக்கு விளங்கவில்லை
அவர்களுக்கு
வேரும் இல்லை
விழுதுகளும் இல்லை
கற்பனைகள் இல்லை
கனவுகள் இல்லை
கால்களும் இல்லை
அவர்களுக்குச் சிறகைத் தருவதற்காக
இரண்டு கவிதைகள் எழுதினேன்
காற்றில் மிதக்கிறது ஒன்று
கடலில் அலைகிறது மற்றது.
நாம் பார்க்காத அவலம், நாம் அனுபவிக்காத துயர். எழுதி எழுதித் தீர்ந்திடாத அத்துயரின் நடுவே நம் புன்னகை அவருக்கு ருசிக்கவில்லை. அவர் வரையும் ஓவியங்களில் எங்கும் சாம்பல் நிறமே விரவிக்கிடக்கிறது என்று துயர்படுகிறார். அவரின் புன்னகையை நீங்கள் தரிசிக்கலாம். ஆனால் அதில் அமிழ்ந்திருக்கும் ஒளியற்ற இருளைக் கண்டறிய ‘சாம்பலும் புன்னகையும்’ கவிதை துணைபுரியும்.
இருள் கவியும்போது
உள்ளே நுழையும் வாயில் தெரியவில்லை.
அப்போதுதான் என்னைச் சேர்கிறது
நீங்கள் அனுப்பிய புன்னகை
அவலத்தை எழுதித் தோற்றுவிட்ட மொழியில்
இன்று ஒளியில்லை
எல்லா ஓவியத்திலும் சாம்பல்
எனக் கூவ விழைகிறேன்
குரல் எழவில்லை.
கிளி பற்றிய பல்வேறு கவிதைகளில் கிளியாக பறந்து தப்பிக்கும் மானுடத்தின் மீட்சியே எனக்குத் தெரிகிறது. எல்லாக்கிளிகளும் பறந்து எங்கோ புதிய நிலத்தில் தனக்காய் உருவாக்கும் ஒரு உலகம். அதில் தம் மக்களுக்காய் நிரந்தரமாய் இருக்கும் காடுகளும் மழையும் காதலும். ‘ஒரு கிளியைக் கூண்டிலிருந்து விடுவிக்கும்போது’ கவிதையில் நம்மைக் கட்டிப்போடும் முதல் நான்கு வரிகள்.
ஒளி கிளியைக் கூண்டிலிருந்து விடுவிக்கும்போதும்
யானைகளின் கால்களைப் பிணைத்த சங்கிலியை
அறுத்து விடும்போதும்
காடுகளை உருவாக்குகிறோம்
நீரில் கலங்கி அழியும் நிழல்கள்
அந்தக் காடுகளில் இல்லை
கடலையும் கரையையும் கடந்து வருகிறது
எங்களுக்கான காடு
மழைக்கும் காடுகளுக்கும் காதலுக்கும்
என
நம் கிளிகள்.
போரின் துயரம் ஆண்டாண்டுகளுக்கு நீங்காத துயர் என்றால் காதலின் துயரமும் உருக்கமும் அதே அளவுக்கு நீங்காததாகிறது. நிறைவேறாத காதல் நித்தியத்தன்மை பெற்றுவிடுகிறது.
பொழுதும் கால நிலையும் முயங்கி வரும் வேளைகளில் கிட்டிடாத காதல் நினைவுகள் இயற்கையில் எழில் பெற்று கவிதைகளில் மிளிர்கின்றன. அவை காலத்தின் சட்டகத்தில் நிலைபெறும் காவியமாகவும் மாறும் ஆற்றலைப் பெறுகின்றன.
பழங்கள் – 1
உறைபனிக் காலம் முடிய
சாளரத்தைத் திறக்கிறேன்
வெளியே ஆயிரம் மஞ்சள் பூக்கள்
பெயரறியா மரங்களின் மீது
சண்டையிடும் சிட்டுக்குருவிகள்
கொடியில் எஞ்சியிருக்கும்
சிவப்புப் பழங்கள்
அவற்றைச் சுகிக்க வரும்
வசந்த காலத்தின் முதல் பறவைகள்
எல்லாப் பூக்களையும்
கொய்து வீசிவிடும் அணில்கள்
கானகத்திலிருந்து இன்னும் திரும்பி வராத
நிறைவேறாத காதலின் மென்காற்று
எட்டாத பழம்.
நீர்விளக்கு, கதை இதுதான், கல்லில் எரியும் நெருப்பு ஆகிய கவிதைகள் தரும் காட்சிகளையும் அவை கடத்தும் உணர்வுகளையும் அறிய அவற்றை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.
அவலங்கள் ஒரு நாள் மாறும், அதைப் பற்றி தொடர்ந்து பாடும் ஒரு கவிஞனின் நம்பிக்கையான உறுதியான உள்ளம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.
போர்க் காலம் முடிந்துவிட்டது
அப்படித்தான்
நம்ப விரும்பினேன்.
எனினும் உலகம் கோணலானது.
உயிரின் மகிழம்பூ நறுமணத்தை
இறப்பு
திருட முடியாது.
நெடுஞ்சுவரைக் கரைக்கும்
கவிதைகளை ஒருத்தி எழுதிகிறாள்
அழுகை துணை இருக்கிறது.
பெரும்புயலில் உலகம் தத்தளிக்கும் போதும்
பறவை கூடு சேர்கிறது.
குஞ்சுக் குருவி பாடுகிறது
அதன் பாடல்
ஒரு ஏவுகணையையாவது
தடுத்து நிறுத்திவிடும்
நம்புகிறேன்.
மீண்டு வர இயலாத துயர் நிலப் பாடல்களிலிருந்து உப்புக்கரிக்கும் நீரின் பாடல்களாக விரியும் கவிதைகள். படையாளின் பாடல் துவங்கி ஒவ்வொரு கவிதையிலும் கவியும் இருள் நம் மனங்களை அசைக்கவல்லவை.
இக்கவிதைகள் கவிஞர் சேரனின் தீர்க்கமான குரலாக ஒலிக்கின்றன. ஒரு சிட்டுக்குருவியின் பலம் கொண்டு ஏவுகணைகளைத் தடுக்கும் சூத்திரம் அதில் ஒளிந்திருக்கிறது. வரும் காலத்தில் போர் வேண்டா உலகை நம் இளையோர் மனங்களில் விதைக்க இதைவிட நல்ல வழி எனக்குத் தெரியவில்லை.
பின்னட்டைக் குறிப்பில் எழுத்தாளர் றஷ்மி இத்தொகுப்பு குறித்து எழுதுகையில் இவ்வகையில் சொல்கிறார்.
“பாடித் தீராத வாழ்வு”. நான் பின்வருவதை அதில் சேர்க்கிறேன்.
படித்துத் தீராத பெருந்துயர்.
மீள்தல் சாத்தியமற்ற கொடுங்கனவு.
விழித்துக்கொள்வோம்.
mpriya.be@gmail.co