
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலைசிறந்த நண்பன்” என்று அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலையை ஓங்கி ஒலித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் கூறுவார்.

திரு. க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.
சிந்தனை மரபின் வளர்ச்சிக்கும், அறிவு சார்ந்த தலைமுறை எழுச்சிக்கும் புத்தக வாசிப்புதான் முதல்படி. படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஒன்றிணைந்த புத்தக வெளியீடு என்ற அறிவுச் சங்கிலிதொடரில் வாசகர்கள், அரசு நிறுவனங்கள் இணைப்புச்சரடாக இணைவதில்தான் வாசிப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும் வெற்றியின் கதவுகள் திறக்கப்படும். அந்த வகையில் தமிழ்களின் தாய்வீடான தமிழ்நாட்டில் சென்ற 2023 முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மிகுந்த முனைப்புடன் இயங்கி வருகிறது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் எல்லாம் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் அவைகள் பதிப்பாளருக்கும், வாசகர்களுக்கும் இடையே ஆன சந்தை செயல்பாட்டில் (வாங்குவதற்கும், விற்பதற்கும்) வணிகம் என்ற புள்ளியில் இயங்குவதற்குத்தான்.
ஆனால் 2023 தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சர்வதேச புத்தகக்கண்காட்சி (Chennai International Book Fair 2023 (CIBF 2023) வேறொரு ஏணிப்படிகளில் தமிழ்ப்பதிப்புலகையும் படைப்பாளர்களையும் ஏற்றிவிடவும், உலகத்தின் திசைகளெங்கும் தமிழ் சிந்தனை மரபை சங்கே முழங்காக ஒலிக்கச் செய்யவும் உந்துதலாயின. தமிழ்ப்படைப்புலகத்தின் வெளியீடுகளை உலகெங்கும் கொண்டு செல்லவும், உலகத்தின் கலைச் செல்வங்களை தமிழக்குக் கொண்டு வர “Bringing the World to Tamil, Taking Tamil to the World” என்ற முழக்கத்தின் செயல்திட்டத்தை முன்மொழிந்து சர்வதேசப் புத்தகக்கண்காட்சி முன்னெடுத்தது.
இந்த CIBF 2023 என்ற முதல் நிகழ்வுக்கு உலகெங்குமிருந்தும், இந்திய அளவிலும் புத்தகப் பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த முன்னோடித் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் நூல்களை உலக மொழிகளுக்கு மொழி பெயர்த்து கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு மானிய உதவி (Translation Grant) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு ஒதுக்கிய 3 கோடி ருபாய் நிதி உதவியால் தமிழ் மொழிக்கான உலகளாவிய அந்தஸ்தும் பெருமையும் வரிசை கட்டி காத்திருந்தன.
இந்த முதல் தொடக்க நிகழ்விலேயே 30 நாடுகளில் இருந்து பதிப்பாளர்களும், 15 நாடுகளின் இலக்கிய முகவர்களும் தமிழ் வாகர் உலகமே மகிழ்வுக்கொள்ளும் வகையில் பங்கேற்றனர். இதன்முலம் 365 மொழிபெயர்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகின. உலகத்தின் திசைகளெங்கும் தமிழ் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட நம் தமிழ்ச்சான்றோர்களின் கனவு மெய்படத் தொடங்கியது. தமிழிலிருந்து இத்தாலி, ஜெர்மன், பிரஞ்ச், ஆப்பிரிக்கா, மலேசியா, அரபு, உருது, ரஷ்யன் போன்ற மொழிகளுக்கு தமிழ் படைப்புகள் பறப்பதற்கு சிறகுகள் முறைத்தன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம், குஜராத்தி, அசாம் மொழிகளுக்கும் தமிழ்ப்படைப்புகள் பயணப்படத் தொடங்கின.
2024ஆம் ஆண்டின் இரண்டாவது சர்வதேச புத்தகக்காட்சியிலும் 30 மொழிகளில் 40 நாடுகள் பங்குபெற்றன. 780 புதிய மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த இரண்டாம் கட்ட நிகழ்வில் மலேசியா “Guest of Honour Country” என்று அறிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் மலாய் மொழியில் மட்டும் 50க்கும் மேற்ப்பட்ட தமிழ் நூல்கள் மொழி பெயர்த்து வெளியிட உந்துதல் ஏற்பட்டது.
Rights Buying and Rights Selling என்ற வெளிப்படையான கலாச்சார பரிவர்த்தனைகள் தமிழ்மொழிக்கு புதியதொரு அடையாளத்தை கொடுத்தன. இப்படியான மாபெரும் நிகழ்வுகளின் நீட்சியாக ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி சென்னையில் பிரத்யேகமாக இந்திய மொழிகளுக்கான சிறப்பு மொழிபெயர்ப்புத் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதுவரை தமிழ் நூல்கள் இந்தி, மலையாளம், தெலுங்கு என்ற எல்லைகளை மட்டுமே தொட்டு வந்தன. ஆனால் இந்த சிறப்பு நிகழ்வின் மூலம் இந்தி, குஜராத்தி, அசாம், ஒரிசா, கொங்கனி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் என்ற முழு இந்தியாவையே தமிழ் முலம் இணைக்க வழி வகைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மொழிக்கான மறுமலர்ச்சித் தடத்தில் தீவிரப்படுத்தப்பட்ட செயல்பாடான இந்நிகழ்வில் தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம், குஜராத்தி, இந்தி, மலையாளம், ஒரியா, இந்துஸ்தானி மராத்திய மொழிகளுக்கு தமிழ் இடம் பெயரவும் இந்தியாவெங்கும் நம் தமிழ் நிலை பெறவும் “பலநாட்டு நல்லறிஞர் இலக்கியங்களையும், நம் தமிழின் சிந்தனை மரபையும் கொண்டு செல்லவும், கொணர்ந்திங்கு சேர்க்கவும் தமிழ் படைப்புகளும், பதிப்புலகமும் புதிய வெளிச்சத்தில் பிரகாசமாயின.
இந்த கட்டுரையின் நோக்கமே இந்த செயல்திட்டங்கள் தமிழ்நாட்டின் பூகோள எல்லைக்கு மட்டும்தானா என்ற கேள்விக்கு விடைசொல்வதுதான். தமிழ் மொழியின் படைப்பாளர்கள் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும், மொழி என்ற அடையாள உறவில் இணைக்கப்படவும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற புலம் பெயர்ந்த நாடுகளின் தமிழ் எழுத்துக்களையும் உலகத்தின் நாடுகளின் தமிழ் எழுத்துக்களை உலகத்தின் நிலப்பரப்பிலும், இந்திய மாநில எல்லைகளிலும் நம் பண்பாட்டு. கலாச்சார பெருமைகளை பதிவு செய்வதற்கும் சிந்தனை மரபை படரவிடவும் முன்னெடுக்கிறது இந்த CIBF நிகழ்வுகள்.
மூன்றாவது CIBF 2025 எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 15-18 தேதிகளில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் சிங்கப்பூர் படைப்பாளர்களும், பதிப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் சிந்தனைகளின் வழியே செதுக்கிய படைப்புகளை உலகின் பலமுனைகளுக்கும் கொண்டு செல்ல வரவேற்கப்படுகின்றனர்.
ஆகவே சிங்கப்பூர் தேசத்தின் தமிழ் படைப்புலகம் நம் தமிழை உலக அறிவுச் சாளரத்தில் உட்கார வைக்கவும், இந்திய மொழிகளில் இதயங்களை இணைக்கும் கலாச்சாரப் பாலத்தையும் நிர்மாணிக்க முன்வர வேண்டும். சிங்கப்பூர் தேசத்தின் தமிழ் பண்பாட்டு மரபின் அறவு சார்ந்த கலாச்சார பதிவுகள், படைப்புகள் பிறமொழிகளுக்கு கொண்டு செல்ல தயாராக வேண்டும் என்று விழைகிறோம்.
சிங்கப்பூரிலிருந்து தூவப்படும் அறிவு மூலதன விதைகள் உலகெங்கும் தமிழுக்கான அறுவடையாக விளைச்சல் காணட்டும். உலகளாவிய தமிழ் அறிவுலகத்தின் கிழக்குவாசல் திறக்கப்பட தமிழ்நாட்டிலிருந்து பல கைகள் இணைந்துள்ளன.சிங்கப்பூர் படைப்பாளர்களின் கரங்களும் அதில் இணையட்டும் உலக நிலப்பரப்பில் தமிழின் வசிப்பிடம் அடையாளப்படட்டும்.