ஒரு வகையில் வள்ளுவனும், கம்பனும் எனக்கே கூட தமிழில் எழுதிய வெளிநாட்டுக்காரர்கள்தான் …

மணலி அப்துல்காதர்
சுரேஷ் பிரதீப் (1992) தமிழகத்தில் திருவாரூரில் பிறந்தவர். “நதிக்கரை இலக்கிய வட்டம்” என்ற இலக்கிய சந்திப்பு நிகழ்வுகளையும், Tamil Literary Talks” என்ற இலக்கிய விமர்சன உரைகளையும் வழங்கிவருபவர். இதுவரை இரண்டு நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரை தொகுதிகள் வெளியிட்டுள்ளார். கதையின் வெவ்வேறு வடிவங்களையும், பாத்திரப் படைப்புகளை  சோதனை செய்து பார்ப்பதும், மொழியின் மீது பிரயோகிக்கும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பெரும் கால வெளி கடந்தும் நிறுவ வைப்பது போன்ற நவீன கலை உத்திகளில் படைப்புகளை தந்துவருபவர். இருத்தலியல் சிக்கல்களையும், லட்சியவாதத்திற்கு எதிரான நம்பிக்கையின்மை கொண்ட தத்துவநோக்கும் இவரது படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. Deconstruct என்ற போக்கில் மையங்களை உடைத்தும், கதைக்குள் கதை என்னும் தன்மையுடனும், கதையிலிருந்து கதையை வெளியேற்றும் கூறுமை முறைகளுக்காகவும் இவரது “ஒளிர் நிழல்” நாவல் (2017) தமிழ் வாசிப்புத் தளத்தில் பரவலாக கவனிக்கப்பட்டது. “தனித்தனியே உறங்கிப் போவோம்” என்ற இவரது அண்மை குறுங்கதை மிகவும் வாசிப்புக்குள்ளாக்கப்பட்டு நல்ல விமர்சன தளத்தில் பதிவாகி இருக்கிறது. சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2024 (SLP) போட்டிக்கான புனைவு படைப்புகளுக்கு தேர்வுக்குழு நடுவராக இருந்த தமிழக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

அண்மையில் சிங்கப்பூர் இலக்கிய பரிசு (SLP) போட்டியில் புனைவு படைப்புக்கான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தீர்கள் அதுபற்றிய தங்கள் அனுபவம், பங்களிப்பு குறித்து….

முதல்முறையாக ஒரு பரிசுப் போட்டியில் நடுவராக நான் கலந்து கொண்டது 2018இல். நண்பர் ஶ்ரீனிவாச கோபாலன் ஒரு விமர்சனக் கட்டுரைப் போட்டி அறிவித்திருந்தார். அந்தப் போட்டி நடுவர்களில் ஒருவனாக பங்குபெற்றேன். ஆனால் நூல்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய பரிசொன்றுக்கு நடுவராக இருந்தது இதுவே முதல்முறை. இந்தப் போட்டியில் பதிமூன்று நூல்கள் இடம்பெற்றிருந்தன. என் விருப்பம் நண்பர்களின் பரிந்துரை தாண்டி இதுபோல தேர்வு செய்யப்பட்ட நூல்களை நான் வாசித்தது இல்லை. ஆகவே முதலில் சற்றுத் தயக்கம் இருந்தது. ஆனால் நூல்களை வாசித்தபோது அந்த தயக்கம் நீங்கியது. சில நூல்களை வாசித்தபோது ஆரம்பகாலத்தில் கதை எழுதியபோது நான் செய்த தவறுகளை எனக்குச் சுட்டிக்காட்டின. சில நூல்கள் ஆச்சரியப்படுத்தவும் செய்தன.

போட்டிக்கு வந்த இதர படைப்புகளையும் தீவிர கவனத்துடன் வாசித்திருப்பீர்கள் அவைகளின் படைப்பம்சங்கள் எப்படி….

ஒவ்வொரு நூல் குறித்தும் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். பொதுவான சில அவதானிப்புகளை முன்வைக்கிறேன். சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகள் குறித்து அங்கு வசிக்கும் சில நண்பர்களுடன்  விவாதிப்பேன். சிங்கப்பூர் குறித்த ஒரு சித்திரத்தையும் அவர்களுடனான உரையாடல்களில் பெற முடிந்திருக்கிறது. அதைவைத்து ஒன்றைச் சொல்ல முடிகிறது. சிங்கை தமிழ் இலக்கியச் சூழல் சீராக செழுமையடைந்துகொண்டே வருகிறது. சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு வரும் நூல்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுகிறது. அவ்வகையில் இந்த வருடத்தில் வந்திருந்த நூல்கள் அனைத்தும் ‘அடிப்படைத் தரம்’ என்ற அளவுகோலில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றன. இந்த நூலாசிரியர்களிடம் ஆரம்பநிலை எழுத்தாளர் ஒருவரிடம் சொல்ல வேண்டிய ஆலோசனைகள் எதையும் சொல்லத் தேவையில்லை. இலக்கியம் குறித்த பிழையான புரிதலுடன் தீவிரமான பாவனையை வெளிப்படுத்தும் போலியான படைப்புகளும் இந்த நூல்களில் இல்லை. சிங்கப்பூர் இலக்கியச்சூழல் குறித்து இதை ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கலாம்.

ஆனால் இந்த பதிமூன்று நூல்களை வாசித்து முடித்த பிறகு பேச எடுத்துக் கொண்ட கருக்களில் தனித்துவம் தெரிந்தாலும் மொழிநடை ஒன்று போலவே இருப்பதாகத் தோன்றியது. இப்படிச் சொல்லலாம். மொழிநடை என்பது ஒரு படைப்பாளியின் பிரத்யேகமான பார்வையுடன் தொடர்புடையது. ஒரு வகையான கோணல் என்றும் சொல்லலாம். புனைவிலக்கியத்தில் அந்தக் கோணல் மிக மிக அவசியம். மொழிநடையில் அத்தகையதொரு விலகல்களும் சற்றே பிரத்யேகத்தன்மைகளும் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது போது தனித்துவம் அவ்வளவாக வெளிப்படாத நூல்களாகவே இவை உள்ளன.

பொதுவாக அயலகப் படைப்புகளின் மீது ஒரு மாறுபட்ட விமர்சனப்பார்வை தமிழ்நாட்டில் உண்டு. படைப்பில் கலா நேர்த்தி, உள்ளடக்கத் தேர்வு,  கதை சொல்லும் பாங்கு இவைகளில் ஒரு போதாமை இருப்பதாக… இது பற்றிய தங்களின் பார்வை….

எனக்கும் இந்த விமர்சனம் சற்று வேறுவகையில் உண்டு. நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு சங்கதி குறித்தும் விரிவாகப் பேச முடியும். ஆனால் பொதுவாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். மலேசிய இளம் எழுத்தாளர் அர்வின்குமார் சென்ற வருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் ஒரு அமர்வில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவர் சொன்ன பதில்களில் இருந்து எனக்கு ஒன்று தெரிந்தது. அவருக்கு தமிழ்நாட்டு இலக்கியப் படைப்புகளில் பெரிதாக வாசிப்பில்லை. நான் அவரை குறைசொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ‘கம்பனும் வள்ளுவனும் எழுதிய மொழியில் நீ எழுதுகிறாய்’ என்ற போதம் உனக்கு வேண்டும் என்ற சொற்றொடரை நீங்கள் யாராவது சொல்லக் கேட்டிருக்கலாம். அதற்கு அர்த்தம் என்ன? அவர்கள் இந்த மொழிக்கு ஒரு செறிவினைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடுத்தகட்டம் நோக்கி நகரவேண்டும் என்பதுதான்.

ஒருவகையில் வள்ளுவனும் கம்பனும் எனக்கேகூட தமிழில் எழுதிய ‘வெளிநாட்டுக்காரர்கள்’தான். தூரத்தால் அல்ல காலத்தால்! ஆகவே ஒரு மொழிச்சூழலில் உச்சம் எங்கு சாதிக்கப்பட்டுள்ளதோ அதைk கற்பது எந்த நாட்டில் வசிக்கும் எழுத்தாளனுக்கும் அவசியம். ஷோபாசக்தியையும் தளையசிங்கத்தையும் அ.முத்துலிங்கத்தையும் ‘தமிழ்நாட்டு’ எழுத்தாளன் வாசிக்காமல் இருக்க முடியுமா? அதுபோல சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழ் எழுத்தாளர்கள் தமிழின் சாதனைப் படைப்பாளிகளை வாசித்தாக வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தது ஒரு தற்செயல் மட்டும்தான். நாளை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்கு அத்ததைய ‘பெஞ்ச்மார்க்’ ஆகலாம் இல்லையா? ஒருகட்டத்தில் ஈழப் படைப்பாளிகள் தமிழ்நாட்டு படைப்பாளிகளை பின்னுக்குத் தள்ளினர்‌. சிங்கப்பூர் இலக்கியச்சூழல் தமிழ்நாட்டு படைப்பாளிகளுடன் அத்தகைய உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.

அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் இலக்கிய பங்களிப்புகளில் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பதாக காண்கிறோம்..அது பற்றிய தங்கள் பார்வை….

ஆமாம். இந்தப் போட்டியிலும்கூட பாதிக்கும் மேலான நூல்கள் பெண்கள் எழுதியவை. இதுவொரு ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இலக்கியத்தின் ‘ஆபத்தான பகுதிகள்’ சில உள்ளன. அங்கிருந்து எழுதப்படும் படைப்புகளே கவனிப்புக்குரியதாக மாறுகின்றன. ஆபத்தான பகுதி என்று நான் குறிப்பிடுவது காமம் மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை அல்ல. தன்னுடைய இருப்பு சார்ந்த ஒரு அதிருப்திநிலை. அத்தகைய அதிருப்தியில் இருந்துதான் சமூகம் மீதான விமர்சனப்பார்வை உருவாக முடியும். சிலரிடம் மட்டுமே அத்தகைய அதிருப்தி இருப்பதாகத் தோன்றுகிறது. அதிருப்தி இருந்தே ஆகவேண்டுமா என்று கேட்கலாம். எல்லாமும் அமைந்த வாழ்க்கையிலும் கூட அதிருப்தி உருவாகவே செய்யும். அதிருப்தியே அளிக்காத அளவு நம்முடைய வாழ்க்கை அசுவாரஸ்யமாக இன்னும் மாறிவிடவில்லை!

ஒரு நல்ல படைப்பு உருவாவதற்கான கள சாத்தியப்பாடு, ஒரு கலைஞன் கண்டுணரும் படைப்பின் அவசியம் சிங்கப்பூரில் இருக்கிறதா…அல்லது ஒரு fantasyக்காகத்தான் படைப்புகள் எழுதப்படுகிறதா…

சிங்கப்பூர் இலக்கியச்சூழல் பற்றி நான் முன்வைக்கும் விமர்சனங்கள் எல்லாமே ‘மேலதிக’ எதிர்பார்ப்பில் இருந்துதான். ஆகவே வெறும் ஃபாண்டஸிக்காக சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லமாட்டேன். அப்படி யாரும் சொன்னால் அதை வலுவாக மறுத்துப் பேசுவேன். நான் வாசித்த நூல்கள் எல்லாமே genuine attemptsதான். ஆகவே நிச்சயமாக வருங்காலங்களில் சிங்கப்பூரிலிருந்து மேலும் நல்ல படைப்புகள் வருமென்று நம்புகிறேன். இன்னும் சற்று சுயபரிசோதனையும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற இலக்கியச்சூழல்களுடனான உரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கியச்சூழலை மேம்படுத்தும்.

வளர்ந்த தொழில் நுட்பம், நிறைவான வாழ்க்கை வசதிகள் கொண்ட சிங்கப்பூரில்  கலை இலக்கியம் குறித்த எல்லைகளில் படைப்பாளிகள் தங்களுக்கான அடையாளத்தை நிறுவிக்கொண்டிருக்கிறார்களா?

சிங்கப்பூரின் அன்றாட வாழ்க்கை தமிழ்நாட்டை ஒப்பிட மேம்பட்டதுதான். ஆனால் இலக்கியத்திற்கு அது மட்டும் போதாது. மேம்பட்ட வாழ்க்கைக்காக மனிதர்கள் பிணைக்கப்படும் நுகத்தடிகள் குறித்தும் இந்த நூல்களில் எழுதப்பட்டுள்ளது! தொழில்நுட்ப மேம்பாடு பொருளாதார மேம்பாடு கொள்ளும் சமூகங்கள் இரண்டு வகைகளில் தங்களுடைய படைப்புகளை விரித்தெடுக்கலாம். ஒன்று அறிவியல் புனைவுகள். அரூ என்ற அறிவியல் புனைவுகளுக்கான மின்னிதழ் சிங்கப்பூரில் இருந்து தொடங்கப்பட்டது தற்செயல் என்று நான் எண்ணவில்லை. மற்றொன்று நவீன செவ்வியல் புனைவுகள். இதுவரை உலகில் அறிவுத்துறைகள் வழியாகவும் கலையிலக்கியம் வழியாகவும் அடையப்பட்ட பார்வைகளை தொகுத்து அடுத்தகட்ட புனைவுகளை எழுதுவது. இவ்விரண்டு விஷயங்களிலும் சிங்கப்பூர் படைப்பாளிகள் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

தமிழ்நாட்டு படைப்புகள், சிங்கப்பூர் படைப்புகள் என்று ஒப்பாய்வு செய்தால் தங்களின் பார்வை என்னவாக இருக்கும்?

தற்போதுள்ள சூழலில் அத்தகைய ஒப்பீடு சாத்தியமில்லை. சிங்கப்பூர் இலக்கியச்சூழல் மிகச்சிறியது. தமிழ்நாட்டிலும் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமானதில்லைதான்! ஆனால் எண்ணிக்கை அதிகமல்லவா?

சிங்கப்பூர் இலக்கியச்சூழலை எந்தக் காரணிகள் அடிப்படையில் ஒப்பிட முடியும்? காலகட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, பூமணி ஆகியோருக்கு இணையாக அந்தக் காலங்களில் சிங்கப்பூரில் படைப்பாளிகளைத் தேடுவது இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் சமகாலப் படைப்புகளை ஒப்பிடலாம். மாநகர நெருக்கடிகள் பெரும் சிக்கலாக மாறி இருக்கும் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களை சிங்கப்பூர் படைப்பாளிகள் நுணுக்கமாக எழுதுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இவ்விஷயங்களை கையாளும் படைப்பாளிகளுடன் ஒப்பிடலாம். ஆனால் ஒப்பாய்வு என்பதெல்லாம் கல்விச் சூழலில் நடக்க வேண்டிய விஷயம்.

ஒரு சிறிய நிலவியல் பரப்பில் படைக்கப்படும் சிங்கப்பூர் படைப்புகளுக்கு உலக மொழிகளில் பரவலாக்கப்பட சாத்தியமிருக்கிறதா…

மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை அது சூழலின் உள்ளிருந்தே தொடங்கவேண்டும். விரிவான மற்றும் கூர்மையான வாசிப்பும் இருமொழி அறிவும் கொண்ட வாசகர்கள் வழியே மொழிபெயர்ப்பு நிகழும்போது தகுதியான படைப்புகள் ஆங்கிலத்திற்குச் செல்லும். சிங்கப்பூர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலுக்குமே அத்தகைய மொழிபெயர்ப்பாளர்களின் தேவை உள்ளது.