வாசிப்பனுபவம்

ஞாபகப் பெருங்களிறு – மோகனப்பிரியா கவிதைகள்

மேரி சுரேஷ்

‘கவிதை ஒரு பறவையைப் போல எல்லைகளைப் புறக்கணிக்கிறது’ – யெவ்து ஷெங்கோ.

நவீனத் தமிழின் பெரும் களத்தில் தன்  மனதின் சாட்சியாக கவிதைகளில் தன் அனுபவத்தைக் கலைவடிவமாகத் திறம்பட மாற்றியிருக்கிறார் கவிதை மீது தீராத பற்றும் காதலும் கொண்ட கவிஞர் மோகனப்ரியா. கவிதைகளின் வரிகளை  நுட்பமாக இவருக்கே உரிய தனித்துவமான மொழியாடலையும், நம் கவனத்தை திசைதிருப்பும் மாபெரும் உணர்வு நிலையையும் உருவாக்கியுள்ளார்.

இவரது கவிதைகளின் ஆழத்தை உணர வேண்டுமெனில் அதனை நெருக்கமான வாசிப்பு முறையாக்கிக் கொண்டால் மட்டுமே இயலும். அந்த வகையில் வாசகனுக்கு ஒரு ரகசிய வெளியை அளிக்கும்படி எழுதியிருக்கிறார். ஆழ்மன ஆராய்ச்சிகளின் மூலம் பெரும் மனோதத்துவ இயக்கத்தை உருவாக்கிய சிக்மண்ட் ஃபிராய்ட் போல தனது தொன்மத்தின் தொடர்ச்சியாக, ஆழ்மனதின் தீராத தாகத்தைத் தூண்டும் ஒரு விதமான மனோதத்துவத்தை முன்வைக்கும் பிரதிகளாக “ஞாபகப் பெருங்களிறு’’ உருவாகி இருக்கிறது. எதன் மீதும் புகார் சொல்லமுடியாத கனத்த மௌனத்தின் மீது  தன்னையும் உள்ளடக்கிய இயற்கையில்,எளிய அழகுகளில், ஏகாந்தத்தில் நிலைகொள்ள அடியெடுத்து வைக்கிறது கவிதை வரிகள்.

இந்த பிரதி வழக்கமான அர்த்தங்களிலிருந்து விடுவிக்கும் மாயத்தைச் செய்கிறது. மேலும் தர்க்கரீதியான ஒத்திசைவுக்கு சவால் விடும் படிமங்களை அடுக்கித் தன்னிச்சையாகப் பயணிக்கிறது. வாழ்வின் நுண்மையை ஆழமாக, விரிவாகப் பார்த்த விதம் வாசகர்களுக்கு ஒரு சிறந்த கலை இன்பத்தைத் தருகிறது. இங்குதான் இவரின் கவிதை வாசகர்களின் கவனம் பெறுகிறது.

  • வாழ்வின் மீச்சிறு அசைவுகள்
  • அலை புரளும் காலம்
  • நினைவின் பிளிறல்

என மூன்று தலைப்பில் கவிதைகளை பிரித்து தொகுத்திருக்கிறார்.

இந்த நவீனத்தின் குரல்களின் மூலம் பல்வேறு உணர்வுகளின் இசை லயம் கொண்ட இதயத் துடிப்பை கேட்க முடிகிறது. தனது நேர்கொண்ட பார்வையின் மூலம் மொழியின் அம்புக்கு கூர்தீட்டி வாழ்க்கையின் மேற்பரப்பிற்கு கீழே மறைந்திருக்கும் அற்புதங்களை, இயலாமையை, விரக்தியை, துயரத்தை வெவ்வேறு விதமாக பல்வேறு கோணத்தில் தனது அன்றாடங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.  

அலைபேசி பிம்பத்தின் நெருப்புக்குட்டி

அவளின் கைகளில் ஊதிப்பெருக்க

அவனற்றுப் புலரும் கனலியில்

பெருங்கடல் தாகத்தில்

இன்னும் இன்னும் தகித்தே கிடக்கிறாள்

எனக்குப் பிடித்த பிரத்தியேக ஒலித்துணுக்கு நீ

குறுஞ்செய்தி அனுப்புகையில் மட்டும்

கேட்க வைத்திருக்கிறேன்

‘இலவு காக்க மறந்த காலம்’ என்ற தலைப்பில் உள்ள கவிதை அப்பாவின் உழைப்பு, அது தந்த வலியின் கசப்பு அனுபவத்தை காட்சிகளாக்கும் இந்தக் கவிதை படிப்போரின் மனதில் நின்று துயரமாக பியானோவின் ஒலியை சன்னமாக ஒலிக்கச் செய்யும்.

வார்த்தைகளின் கண்ணாமூச்சி அரூபங்களாக தெறிக்கின்றன. சிறுமிகளும், முதியவர்களும், எளிய மக்களும் படிமங்களாக சில கவிதைகளில் வந்து போகின்றனர். எழுத்தின்  கணம் பால்யம், கனவு, நினைவு போன்றவற்றை நோக்கி நகர்கின்றன.

என் உடலிலிருந்து 

கசியத் துவங்குகிறது

சிவப்பு நிறத்தில்

ஒரு துக்கம்

கை நீட்டி ஒரு வெள்ளி கேட்டு

காப்பி குடிக்கும் முதியவரின் துயர் முகம் ஒத்திருந்தது.

இந்த அகவுணர்வுக் கவிதைகள் வாழ்வின் நிச்சயமற்ற எல்லைகளை கடந்து போகாமல் காக்க வைக்கிறது.

சில கவிதைகளில் குறிப்பிட்ட மூன்று வரிகள் ஹைக்கூவாக பூத்திருக்கின்றன. சொற்களின் கவித்துவம் நெஞ்சுக்குள் அதிர்வுகளை அலைகளாக நிகழ்த்திச் செல்கிறது.

எல்லா கவிஞர்களைப் போலவே, கவிஞர் மோகனப்ரியாவின் பார்வை பார்ப்பதையெல்லாம் உணர்ந்து பார்க்கும் தருணங்களை படைப்பின் மகத்துவத்தோடு வார்த்தைகளாக வடித்திருக்கிறார். கவிப் பார்வை வாய்த்தவருக்கு  புதுப்புது வார்த்தைகள் வாகை சூடும்.

பால்ய காலத்தில் பாதித்த பதிவுகள் தொகுப்பில் அழகான கவிதைகளாக வருவது இயல்பே. இவருக்கு இதுவும் பொருந்தும்.

பெண்களின் அக உலகமே புனைவுலகமாக இந்த பிரதி தன்போக்கில் அடையாளப்படுகிறது. எடுத்தாளப்படுகின்றது. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கூர்மையான மொழி நடையில் நம்மை கவனத்தில் இருத்துகிறது.

இந்தத் தொகுப்பில் நிகழ்வு போக்காக ஒரு கவிதையில் அணில் குட்டி பழத்தைத் தின்பதைப் பார்த்து,

ஆரமுதே! நீ உண்ட அத்தனையும்

இவ்வயிற்றையும் நிறைப்பதை அறிவாயா?

தத்துவப் போக்கையோ, அரசியலையோ சொல்லாமல் இதயத்தின் வலியையும், மனம் சார்ந்த ஒரு பக்கத்தைக் காட்டுவது போல் இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.

நீ என்னை முறைத்துக் கொண்டே அமர்ந்திருப்பதை 

என் முதுகு உணர்ந்திருந்தது.

ஒரு சில கவிதைகள் துயரத்தில் புரண்டு எழுந்திருக்கின்றன.

நீங்கள் கூடு விட்டு வரும் காலங்களில் 

சாலையில் நிரம்பி இருக்கலாம் 

உடல்களின் எஞ்சிய கனவு கூடுகளும் 

எம் கண்ணீரின் உப்புக் குவியல்களும்

ஆசுவாசங்களைத் தேடும் தார்ச் சாலையும் பாலமும்

நடுநிசியில் ஒன்றையொன்று விசாரித்துக் கொள்ள

புரண்டு படுக்கிறது 'மியாவ்' சொல்ல  மறந்த பூனை.

இந்தப் பார்வை கள்ளமற்ற குழந்தை போல் வியப்பு மேலிட வெளிப்பட்டிருக்கிறது.

சிலந்தி ஊர்ந்து

கீழிறங்கி வெளியேற வேண்டிப்

பாதி மூடிய கண்களுடன் தவம் புரிகிறது 

ஓவியத்தில் மான்

விளிம்பு நிலை மனிதத்தின் தொடக்கம் மற்றும் முதிர்ச்சிக்கு  அடையாளமான குரல்களுடன் வீட்டு விலங்குகளையும்,தோட்டத்து உயிரினங்களையும் துணைக்கு வைத்திருக்கிறார்.

ஒரு சில கவிதைகள் சங்கப் பாடலைத் தொட்டுச் செல்கின்றன. கவிதையின் ஒரு பரப்பில் காட்சி சித்தரிக்கும் தன்மை இயங்குகிறது. அனுபவம் சார்ந்த படிமங்கள் குறியீடுகளாக  அதன் போக்கிலேயே அழகாக உருவெடுத்து இருக்கின்றன. நன ஓடையில் எழுத்தை நனைய விட்டு இருக்கிறார். அக இலக்கியத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலிஸிஸ் கடைசி அத்தியாயத்தில் கையாண்டிருக்கும் யுக்தியை இவரின் ஒரு சில கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன.

இந்த நவீன கவிதைத் தொகுப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள கவிஞர் மோகனப்ரியாவின் கவிதைக்கான இயக்கம் நிச்சயம் கவனம் பெரும்.