பால பாஸ்கரன்
தமிழில்: மணலி அப்துல் காதர்
சிங்கப்பூர் – மலேயா (1875-1941)
மறைந்த இதழியல் ஆய்வாளர் திரு.பால பாஸ்கரன் எழுதிய Tamil Journalism ஆங்கில நூல் விரைவில் “சிராங்கூன் டைம்ஸ்” வெளியீடாக தமிழில் வெளிவர இருக்கிறது. நூலாசிரியர் எழுதிய அறிமுகவுரை (prologue) மட்டும் இங்கே மொழி பெயர்த்து வெளியிடப்படுகிறது.
“அர்ப்பணிப்புள்ள தமிழ் ஆய்வாளர்களின் பற்றாக்குறை சமூகத்தின் சாபமாகத் தொடர்கிறது…”
சிங்கப்பூர் மற்றும் மலேயாவில் தமிழ் இதழியலின் வளர்ச்சி நிலையை விரிவாகக் கண்டறியும் முதல் முயற்சியாக இந்நூல் அமைகிறது. இம்முயற்சியில் ஏன்இவ்வளவு வெற்றிடமும், தாமதமும் ஏற்பட்டது? ஏன் இந்த இடைப்பட்ட காலங்களில் இதற்கான பணிகள் செய்யப்படவில்லை? வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை? கண்டிப்பாக இது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல. மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சார்ந்த ஆழமான இதழியல் ஆய்வாளர்கள் கண்டிப்பாகத் தம்முடைய சமகாலத் தமிழ் இதழியல் ஆய்வுலகில் நிகழும் ஆய்வுகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் இதன் தேவையை உணரவும் இல்லை. ஆய்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இல்லை.
இந்த ஆய்வில் ஏற்பட்ட புறக்கணிப்பிற்கான காரணங்களைத் தேடி நாம் நெடுந்தூரம் செல்ல வேண்டியதில்லை. காலனித்துவத்தின் நீண்ட ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் படைப்புகளுக்கான முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டது என்பது தெளிவாகும். அறிஞர்கள் தமிழ் வளங்களை ஆராய்வதில் சற்றே கவனம் செலுத்தத் தவறினர் என்றே கூறலாம்.
தமிழ் இதழியல் துறையின் ஆராய்ச்சியைப் பற்றிப் பார்த்தால், முதலாவதாக, ஆய்வுக்குரிய தகவல் மூலங்களின் இருப்பை அறிவதிலேயே அறியாமை காணப்படுகின்றது என்பதை அறியமுடிகிறது. அடிப்படைத் தரவுகளின் இருப்பையே முழுமையாக அறியப்படாத நிலை இருந்துள்ளது. சிறிதளவு தகவல்கள் கிடைத்தாலும் கூட, ஆய்விற்கான முடிவுகளை வெளிக்கொண்டுவர அவற்றால் பெரும் பயன் ஏற்படவில்லை. ஒரு தீவிரமான ஆய்வாளருக்கு சிறிதளவு பயன் இருக்குமானால் கண்டறிய முடியாத உண்மைகளும் கடக்கமுடியாத ஆய்வுப் பாதையும் இல்லை என்றே கூறலாம். எவ்வளவு சிறிதளவிலான தரவுகளாக இருந்தாலும், சமுதாயம் பற்றிய நுட்பமான எதார்த்தங்களைக் கண்டறிவதற்கான சிறந்த மூலங்களாகவே அத்தரவுகளை நான் பார்க்கின்றேன்.
இரண்டாவதாக, அர்ப்பணிப்பு உணர்வுடைய தமிழ் ஆய்வாளர்களின்மையும் தொடர்ந்து ஒரு சாபக்கேடாக இருந்து வருகின்றது. இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்களைப் பற்றிய அறிவுசார்ந்த ஆராய்ச்சியில் பொறுப்பான விருப்பமில்லாத நிலை காணப்படுவதோடு கல்வித்துறையில் அது பொருத்தமற்றது என்ற நிலையில் கருதப்படுவது வருத்தத்திற்குரியது. விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் தமிழ் ஆய்வாளர்களிடையே அரிதாகக் காணப்படும் அம்சங்களாக மாறிவிட்டன. இத்தைகைய சூழல்களால், சாதாரணமான எழுத்துக்களைக் கூட நாம் வாசித்து நிறைவு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பரிதாபத்திற்குரிய தமிழ் ஆய்வுலகச் சூழல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் நிலவி வருகின்றது. பிற துறையினர் எவ்வாறு தனித்துவமான அறிவுப்பூர்வமான கண்டுபிடிப்புகளைத் தருகின்றனரோ, அது போலத் தமிழ் ஆய்வாளர்களும் தம் உழைப்பினை இரு மடங்காக்கிப் பயனுள்ள முடிவினைத் தரும் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தங்களுடைய தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் முழுமையாக அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலுமான புதியனவற்றை உருவாக்க வேண்டும்.
ஆர்வம் கொண்ட வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குப் பயனளிக்கக்கூடிய நல்ல சிறந்த பல வாய்ப்புக்களைச் சிங்கப்பூர் வழங்கி வருகிறது, முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பே அவர்களிடமிருந்து கோரப்படுகிறது. வெளிநாட்டு ஆர்வலர்கள் சிங்கப்பூரிலுள்ள அற்புதமான வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் அறிவுவளத்தினைப் பெருக்கும் முறையில் தத்தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர், சிங்கப்பூர் மிகவும் பரந்துபட்ட ஆய்வுத் தரவுகளைப் புத்தகங்கள், ஆய்வேடுகள், இதழ்கள், ஒலி மற்றும் காணொளி எனப் பல்வடிவங்களிலும் கொண்டுள்ளமை வியப்பிற்குரியது. என்னுடைய ஈடுபாட்டுடன் கூடிய கடுமையான உழைப்பு ஒரு தாயின் கர்ப்பத்தில் உருவாகும் குழவியைப் போல அருமையான படைப்பினைப் பலனாக அளித்துள்ளது. அதன் விளைவாக, சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நினைவு தினத்தினைச் சிறப்பிக்கும் வகையில் என்னுடைய இம்மகத்தான பணியினை 2019 ஆம் ஆண்டில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் தமிழ் அச்சுக்கலையைப் பற்றிய எந்த ஒரு ஆய்வையும், மலேயாப் பல்கலைக்கழகத்தின் நூலகம் 1969ஆம் ஆண்டு வெளியிட்ட இராம.சுப்பையாவின் “தமிழ் மலேசியானா“ பற்றிய குறிப்பின்றி ஆரம்பிக்க இயலாது. இப்புத்தகம் முதன்முதலில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வெளியான தமிழ்ப் புத்தகங்கள் மற்றும் இதழ்கள் பற்றிய முழுமையான தரவுத் தொகுப்பாக அமைந்துள்ளது. இத்தொகுப்பு 1887ஆம் ஆண்டு முதலாகவே தமிழ் இலக்கியப் பங்களிப்பு ஆரம்பித்துவிட்டது என்னும் வியத்தகு உண்மையை வெளிப்படுத்தியது. ஆனாலும் தொடர்ச்சியான ஆய்வுகள் பினாங்கில் 1863ஆம் ஆண்டிலும் சிங்கப்பூரில் 1868ஆம் ஆண்டிலும் தமிழ் இலக்கியப் பங்களிப்புகள் ஆரம்பமாகிவிட்டதை உறுதி செய்கின்றன. தற்செயலாக, இவ்விரண்டு பகுதிகளும் நீரிணைத் தீர்வின் (straits settlement) மூலமாக ஒரே நிர்வாக அலகுடன் இணைக்கப்பட்டன.
காலனித்துவ நிர்வாகம் நிலவிய முற்காலத்தில், தன்னுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் நூல்களையும் செய்தித்தாள்களையும் வெளியிடும்போது கண்டிப்பாக மூன்று பிரதிகளை அரசிடம் வழங்க வேண்டும் என்று சட்டங்களை நிறைவேற்றியது. சென்னையில் புத்தகப் பதிவுச் சட்டம் 1867ஆம் ஆண்டிலும் ஸ்ரீலங்காவில் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் பதிவுச் சட்டம் 1885ஆம் ஆண்டிலும் நீரிணை (straits settlement) குடியேற்றப் பகுதிகளில் புத்தகங்கள் பதிவுச் சட்டம் 1886ஆம் ஆண்டிலும் மலாய் மாநிலக் கூட்டமைப்புப் பகுதிகளில் அச்சிடுதல் மற்றும் புத்தகங்கள் சட்டம் 1915ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. இவ்வகையில் சென்னையில் பிரித்தானிய நூலகம் காப்பகப்படுத்தப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ள முதன்மை ஆதார மூலமாக அமைகின்றது. தொடக்கத்தில் பருவ இதழ்களைத் தவிர்த்துப் புத்தகங்களின் பதிவு குறைவாகவே இருந்துள்ளது.
இதனாலேயே வட்டாரப் படைப்புக்களின் அச்சுப் பிரதிகள் அரசாணை இயற்றப்பட்டதற்கு முன்னர் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை. சான்றாக, 1876ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “ஜாவி பேரணக்கன்” இதழின் பிரதிகள் 03.01.1887 தேதி முதல் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன. அதுபோல, 10.12.1881 அன்று தொடங்கப்பட்ட “லட் பாவ்” இதழின் பிரதிகள் 19.08.1887 தேதி முதல் மட்டுமே கிடைக்கின்றன. இச்சட்டத்தின் பயனாக விக்டோரியா மகாராணியின் பொன்விழாவினைக் கொண்டாடும் வகையில் 27.06.1887 அன்று ஆரம்பிக்கப்பட்ட ”சிங்கை நேசன்” தமிழ் இதழின் அனைத்து முழுமையான அச்சுப் பிரதிகளும் கிடைக்கின்றன. எட்டு பிரதிகள் மட்டுமே கிடைக்கப் பெறவில்லை. அதற்கும் அந்த இதழின் அச்சுக்கூடம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்பட்டதே காரணமாகும். “சிங்கை நேசன்” இதழ் இயங்கிய மூன்றாண்டுகளும் அரசின் மானியத்தினைப் பெற்று இயங்கியது குறிப்பிடத்தக்கது.
1875ஆம் ஆண்டு வெளிவந்த பழமையான தமிழ் செய்தித்தாளான “சிங்கை வர்த்தமானி” தன்னுடைய ஆரம்பகாலப் பிரதிகளை சேமித்து வைக்கத் தவறியுள்ளது. ஆனால், இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே வெளியிடப்பட்ட பெரும்பாலான ஆங்கிலப் பருவ இதழ்களின் பிரதிகள் வியக்கத்தக்க வகையில் சேமிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது 01.01.1824 அன்று வெளிவந்த “சிங்கப்பூர் கிரானிக்கல் மற்றும் கமர்ஷியல் ரிஜிஸ்டர்” (Singapore Chronicle and Commercial Register) இதழ் ஆகும். 01.01.1827 அன்று வெளிவந்த இவ்விதழின் பிரதியில் இருந்து 1837ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவ்விதழ் நிறுத்தப்படும் காலம் வரையிலான பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விடுபட்ட மூன்று ஆண்டுகளில் வெளியான பிரதிகளும் யாரோ ஒருவருடைய பொறுப்பில் தொகுக்கப்பட்டு இருந்தன. வருத்தத்திற்குரிய வகையில் இவை தொலைந்து போயின. ஆனால் இவற்றில் வெளிவந்த சில கட்டுரைகளை ஜெ.எச்.மூர் 1837ஆம் ஆண்டு வெளியிட்ட தன் நூலில் (Notices of the Indian Archipelago & Adjacent Islands) இணைத்துள்ளார். இவ்வாறு அவர் இணைத்ததை சி.ஏ.ஜிப்சன் ஹில் ஓர் இதழில் (The Journal of the Malayan Branch of the Royal Asiatic Society – JMBRAS 26.1: p.175-199) வெளியிட்ட தன்னுடைய “தி சிங்கப்பூர் கிரானிக்கல்“ என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது 1982ஆம் ஆண்டு முபீன் ஷெப்பர்டு பதிப்பித்த “சிங்கப்பூர் 150 ஆண்டுகள்“ என்னும் நூலில் மறுபதிப்பாக இடம்பெறுகின்றது.
இவ்விடத்தில் இரண்டு சுவையான வரலாற்றுக் கேள்விகள் தமிழ் இதழ்களின் தோற்றத்துடன் தொடர்புபடுகின்றன. ஏன் இந்த இதழ்கள் அனைத்தும் 1870ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன? அவை ஏன் இசுலாமிய ஆளுமைகளுடன் தொடர்புப்படுகின்றன? துருக்கியில் நிலைகொண்ட ஓட்டோமன் பேரரசின் சுல்தானைத் தம் கலீஃபாவாக ஏற்றுக் கொண்ட சன்னி இசுலாமியர்களை அப்பேரரசு நல்ல ஆதரவில் வைத்துக்கொண்டது. அனடோலியாவால் சிறப்புப் பெற்ற துருக்கியில் 1873ஆம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் விளைவாக 1874ஆம் ஆண்டு அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1875ஆம் ஆண்டு இப்பேரரசு திவாலானது. இயற்கைப் பாதிப்புக்களால் பலவீனப்பட்டு இருந்த துருக்கியின் மீது ரஷ்யா தன் பகையைத் தீர்த்துக் கொள்ள முயன்றது. 1853 முதல் 1856ஆம் ஆண்டு வரை நடந்த குற்றவியல் போரில் தன் நாட்டின் பகுதிகளை இழந்திருந்த ரஷ்யாவின் முன்னெடுப்புகளால் துருக்கி 1875ஆம் ஆண்டு முதல் 1878ஆம் ஆண்டு வரை பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. துருக்கியால் கையகப்படுத்தப்பட்டிருந்த பக்கத்து நாடுகளின் பகுதிகள் எல்லாம் தம்மைத் தாமே விடுவித்துக்கொண்டு சுதந்திரப் பகுதிகளாக அறிவித்தன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்த இசுலாமியர்கள் துருக்கியில் இருந்த தம்முடைய இசுலாமியச் சகோதரர்களுடைய நிலை பற்றி அறிய ஆர்வம் கொண்டனர். போர்க் காலத்தில் பொருளாதார உதவிகளைக் கூடச் செய்தனர். துருக்கி நிவாரண நிதியாக 270 கொடையாளர்கள் கூடி 7,804.90 டாலர்களை 1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுத்தனர். இதனைப் பயன்படுத்தி சம்சுகனி இராவுத்தர் 1912 -1913 காலத்தில் ”பினாங்கு ஞானாச்சாரியான்“ என்ற இதழினை வெளியிட்டார். இவ்விதழின் விரிவான தலையங்கங்கள் மிக விரிவாக துருக்கியின் வரலாற்றினைப் பதிவு செய்துள்ளன. மற்ற இதழ்கள் துருக்கியைப் பற்றிக் கவலையுறாத நிலையில், இலக்கியவாதிகளாக இருந்த இசுலாமியத் தொழில் முனைவோர் தம்முடைய சொந்த முயற்சியில் பதிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர், பினாங்கு மற்றும் தைபிங் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்ட தொடக்ககால இதழ்களின் பதிப்பில் இந்திய இசுலாமியர்களின் பங்களிப்பே மிகுதியாக உள்ளது. அவர்கள் சற்றே குறைந்த இதழியல் திறமை கொண்டிருந்தாலும் ஆர்வத்துடன் இப்பணியில் ஈடுபட்டனர். இத்தோடு மட்டுமல்லாமல், மலாய் மொழியிலும் துணிச்சலோடு முன்னோடிகளாக இதழ்களை வெளியிட்டனர். சில ஆங்கில இதழ்களைக் கூட வெளியிட்டனர். இவ்வகையில் சிங்கப்பூரில் இருந்து சிங்கை வர்த்தமானி(1875), சிங்கை வர்த்தமானி இரண்டாம் தொடர்வரிசை (1876), ஜாவி பேரணக்கன் (1876 1893), தங்கை நேசன் (Tangai Nesan) (1877), ஞான சூரியன் (1882), சிங்கை நேசன் (1887) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. பினாங்கிலிருந்து ஜாவி ஸ்டாண்டர்டு (1877 – 1878), பினாங்கு ஸ்டாண்டர்டு அண்டு மெர்கண்டைல் அட்வர்டைசர் (1878 – 1879), வித்ய விசாரிணி (1883), வாகை நேசன் (1884), விஜய கேதனன் (1887 ஆம் ஆண்டுக்கு முன் வரை), உலக நேசன்(1887), தஞ்சோங் பெனாகிரி (1894 – 1895) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. தைபிங்கில் இருந்து பெராக் வர்த்தமானி (1893 – 1895), தஜோபிமானி (1896 -1897), செரி பெராக் (1893 – 1895), ஜாஜஹான் மெலாயு (1896 – 1897), பெராக் பயோனியர் அண்டு நேட்டிவ் ஸ்டேட்ஸ் அட்வர்டைசர் (1894 – 1912) ஆகிய இதழ்கள் வெளிவந்தன.
சிங்கப்பூர் தேசிய நூலகம் மற்றும் மலாயா பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றில் உள்ள மூலங்களை நன்கு அலசி, உறுதியுடன் ஆராய்ந்ததன் மூலம் இந்தப் பணி இப்போது சாத்தியமாகியுள்ளது. பொறுமையாக அங்குள்ள இணைய வளங்களை ஆராய்ந்ததும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. பிரிட்டிஷ் லைப்ரரியின் இருப்புகளை முழுமையாகத் தேட வேண்டும் என்ற எனது தீராத ஆசை இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், இங்கு வெளியிடப்பட்டுள்ள எனது தமிழ் செய்தித்தாள்களின் பட்டியல் மிகவும் முழுமையானது மற்றும் பொருத்தமான கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து முடிக்கப் போதுமானது. இந்த சரிபார்ப்புப் பட்டியல் நீண்ட காலத்திற்கு ஆய்வு செய்வதற்குப் போதுமான சிறந்த தொகுப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த காரணத்திற்காக, நான் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு இடைவெளியை நிறைவு செய்துவிட்டேன் என்று நம்பிக்கையுடன் எனது படைப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆய்வின் மூலம், நமது நான்கு மொழிகளும் இணைந்து, நமது ஆரம்பகால இதழியல் சாகசங்களின் விரிவான மற்றும் அர்த்தமுள்ள வரலாற்றை நோக்கி உண்மையாகப் பெருமைப்படலாம். நிச்சயமாக, ஆராய்ச்சிக்கு வரம்பு இல்லை. இப்போதும் கூட, ஒரு ஆர்வமுள்ள திறனாய்வாளர் இங்கிருந்து சில இடைவெளியை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்தால் அவர் தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்ளலாம்.
நான் ஏன் 1941ஆம் ஆண்டுக்குள் என்னுடைய ஆய்வினை நிறுத்திக்கொண்டேன் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. ஆங்கிலேயர்களின் பின்வாங்கல் அந்த மோசமான ஆண்டில் ஜப்பானியர்களின் கொடூரமான வெற்றிக்கு வழி வகுக்கவில்லையா? ஒவ்வொரு கலாச்சாரத்திலும், புத்தகங்கள் அச்சிடுதல் என்பது பருவ இதழ்கள் வெளிவருவதற்கு முன்னரே இருந்தது. நமது அதிகாரப்பூர்வ மொழிகள் அனைத்தும் வளமான மற்றும் உயர்ந்த இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. பழமையான எழுத்துக்களில் இருந்து நவீன அச்சுக்கு அவர்கள் படிப்படியாக மாறியதைப் பாராட்டுவதற்கு, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் ஆரம்பகாலப் புத்தகங்களைப் படைப்பதில் உள்ள இயல்புளை ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்காக நான் சிறிது உரிமையை எடுத்துக் கொண்டுள்ளேன்.
பால பாஸ்கரன்
திசம்பர் 2019