ஆசிய நாடுகளின் பண்பாட்டையும் மரபையும் ஒளிரச் செய்யும் ஆசிய வணிகத்திருவிழா 2024

ஷாநவாஸ்
உரையாடல் தொகுப்பு : மணலி அப்துல் காதர்
ஆசியாவின் பலதரப்பட்ட மரபுகள், கலைகள் மற்றும் சுவைகள் இவைகளை ஒருங்கே ரசிக்கவும், ருசிக்கவுமான ஒரு மரபுத் திருவிழா எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் (3 முதல் 10) நடைபெற இருக்கிறது. உணர்வுகளையும் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்வான தருணங்களையும் தாண்டி ஆசியக் கண்டத்தின் இதயக்கதவுகளை தட்டித் திறக்கும் மறக்கமுடியாத நினைவுகள் சேகரமாகும் இனிய சூழலில் நம் மக்கள் ஒன்று சேரும் கலை விழா அது. விழாவில் பங்குபெறும் மக்களை மட்டும் பார்வையாளர் என்ற இலக்கில் இல்லாது வணிகர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மேம்பாடுகளுக்கும் இந்த விழா நம்மை வரவேற்க தயாராகி கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 6Aவில் அரங்கேறவிருக்கும் இந்த கலாச்சார கொண்டாட்டங்கள் பற்றி இந்த நிகழ்வின் அமைப்பாளர்களான SHAABAZ நிறுவனர் திரு.மாலிக் அவர்களிடம் நடத்திய உரையாடல்.
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆசியான் எக்ஸ்போ விழா குறித்தும் அதன் நோக்கம் குறித்தும்….
பொதுவாக ஒரு கண்காட்சி நடைபெற்றால் அது அந்த பகுதிக்கு மட்டுமானதாக நடக்கும். ஆனால் ‘ஆசியான் எக்ஸ்போ’ ஆசியான் கூட்டமைப்பு நாடுகளை தழுவி நடத்தப்படுகிறது. ஆசியான் நாடுகளின் அனைத்து தரப்பினரும் இவ்விழாவிற்கு வருகைதர உள்ளனர். ஒரே இடத்தில் பல நாடுகளில் கலாச்சார மரபுகளை வணிகப் பொருட்காட்சிகளைக் கண்டு அதன் முலம் பல்வேறு இன மக்களின் கலாச்சார உறவையும், வணிக உறவையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாக அமைகிறது.
இதுபோன்ற விழாக்கள் வெறும் வணிக உத்தி மற்றும் சந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறதா? அதையும் தாண்டி வேறு ஏதும் சிறப்பம்சங்கள் இருக்கிறதா?
இந்த விழாக்கள் வெறும் சந்தை மற்றும் பொருட்கள் வாங்க, விற்க மட்டுமல்லாது அந்தந்த நாடுகளின் தொழில் முனைவோர்களிடையே இணைப்புகளை ஏற்படுத்தவும் அந்த நாட்டின் தனித்தன்மைமிக்க மரபுசார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தி பன்னாட்டு வணிக ஒற்றுமையை நிறுவுவதும் இவ்விழாவிற்கு சிறப்பு அம்சங்களாக அமைகிறது.
பல் ஆசிய கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களை இதுபோன்ற விழாக்கள் எப்படி மக்களிடம் கொண்டுசெல்கின்றன?
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரக் கூறுகள் இருக்கின்றன. எந்தவொரு கலாச்சாரமும், பண்பாடும் அதன் மதிப்பீடுகளைப் பாதுகாக்கவும் பல்வேறு உறவு பாலங்களில் அவைகளை கொண்டு செல்லவும் நினைக்கும். ஒரு தேசிய இனத்தின் கலாச்சார, பண்பாட்டு வேர்களை கண்டறிந்து அதன் கூறுகளை, தத்துவங்களை நம் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதன் முலம் ஒரு புதிய மறுமலர்ச்சி உண்டாகிறது. அந்த வகையில் இப்படி ஒவ்வொரு நாடுகளின் தனித்தன்மை இவ்விழாக்களின் மூலம் நம் மக்களுக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது.
இவ்விழாவில் கலந்து கொள்ளும் ஆசியான் நாடுகளுக்கு இந்த விழாக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?
பல்வேறு ஆசியான் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளோடு இலங்கையும் இதில் பங்கேற்க முயற்சி எடுக்கின்றோம். இந்த நாடுகளின் வருகையால் அந்த நாடுகளை மதித்து, அரவணைக்கும் மனோபாவமும் உறவுகளும் பரஸ்பர நல்லெண்ணங்களும் ஒவ்வொரு நாட்டு மக்களிடம் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது. மதிப்பு மிகுந்த நேயமும் நல்லிணக்க உறவுகளும் இதில் பங்கேற்கும் நாடுகளிடமும், நாட்டு மக்களிடமும் தோன்ற வாய்ப்பு இருக்கிறது. இந்த பரஸ்பர நல்லிணக்க உறவுகளே பெரும் பயனாக இதுபோன்ற விழாக்களுக்கு கிடைக்கும்.
ஆசியான் எக்ஸ்போ ஒரு விழாக் கொண்டாட்டம் போல மட்டும் சிங்கப்பூர் மக்களுக்கு நடத்தப்படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் செய்திகள் சொல்ல வேண்டும் என்ற நோக்கமும் இருக்கிறதா?
இல்லை. சிங்கப்பூரில் வாழும் மக்களுக்காக மட்டும் நடத்தப்படவில்லை. பல் இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் பல நாட்டு மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் இங்கு கொண்டு வருவதன் மூலம் ஒரு ஆரோக்கியமான உறவு நிலை அவர்களுக்குள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்தும் இவ்விழாவிற்கு வருகை தர உள்ளனர். அவர்களின் சுற்றுலா, உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடுகள் ஆகியவைகளை இங்கு காட்சிப்படுத்துகிற வகையில் இவ்விழாவின் நோக்கமாகவும் இருக்கிறது.
இதுபோன்ற விழாக்கள் வெற்றி பெற அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுகள் எந்த வகையில் வேண்டப்படுகிறது?
அரசின் ஆதரவும், மக்களின் ஆதரவும் இந்த விழாவிற்கு வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு இவ்விழாவின் கலாச்சார நிகழ்வுகளின் நாட்டியம், இசை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கவேண்டும். அதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை வளர்த்தெடுக்க முடியும். அதற்கான மேடைகள் இங்கு உண்டு. மக்களுக்கான ஒற்றுமை விழாவாக இது அமைய இருப்பதால் அரசின் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம். அரசுக்கும் பொருளாதாரம், சுற்றுலா போன்ற துறைகளில் வளர்ச்சி கிட்டும். இன பேதமற்று சேர்ந்து வாழும் மக்களின் விழா என்ற பெருமைக்கும் இது வழிவகுக்கும்.