Backlogues என்பது சிங்கப்பூரின் கலை நிர்வாக வலையொலித் தளம் (arts management podcast). கடந்த 2022இல், Centre 42, SingLit Station ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 1980-1995 காலக்கட்ட சிங்கப்பூரில் கலை நிர்வாகம் குறித்த எட்டுப் பகுதிகளுள்ள வலையொலித் தொடரைத் தயாரித்தது. முனைவர் ஹோ சு ஃபெர்ன் (Dr. Hoe Su Fern), முனைவர் ஷெரில் ஜூலியா லீ (Dr. Cheryl Julia Lee) ஆகியோருடனான கூட்டுமுயற்சியான முன்னோடித் தொடருக்கு தேசியக் கலை மன்றம் மானியம் வழங்கி ஆதரவளித்தது. அத்தொடரின் முதல் பகுதியில் அருண் மகிழ்நனின் கலை நிர்வாக அனுபவங்களை அவருடன் உரையாடி செரீன் சென் (Serene Chen) கேட்டறிந்தார். அவ்வுரையாடலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட, சுருக்கமான தொகுப்பு இது. சுருக்கமும் மொழிபெயர்ப்பும்: சிவானந்தம் நீலகண்டன். முழு உரையாடலையும் https://www.backlogues.sg/episodes தளத்தில் கேட்கலாம்.
அருண் மகிழ்நன் 1980 முதல் 1990 வரை சிங்கப்பூர்க் கலைவிழாவை (Singapore Arts Festival) வழிநடத்தும் குழுவில் உறுப்பினராக இருந்தார். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் மோபில் ஆயில் (Mobil Oil) சிங்கப்பூர் நிறுவனத்தின் பொதுவிவகார மேலாளராக இருந்தார். மேலும் 1982 சிங்கப்பூர்க் கலை விழாவிற்குப் பெருந்தொகையாக 500,000 வெள்ளி நிதியுதவி வழங்க மோபில் முடிவெடுத்ததில் முக்கியப்பங்கு இவருக்குண்டு.
ஒரு கலை நிர்வாகி என்பவரின் தேவை, அவருக்கு இருக்கவேண்டிய தனித்துவமிக்க, பன்முகத் திறன்கள் ஆகியவற்றைக் குறித்து அருண் விழிப்புணர்வை உண்டாக்கினார். சிங்கப்பூரில் கலை நிர்வாகத்தை நிபுணத்துவப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நகர்வாக இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் கலாசாரக் கொள்கை வளர்ச்சியிலும் அருண் முக்கியப் பங்காற்றினார். தேசியக் கலை மன்றத்தை 1991இல் நிறுவுவதற்கான பணித்திட்ட வரைவை உருவாக்கிய கலை, கலாசார ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த துணைக்குழுவுக்குத் தலைமை வகித்தார்.
பொருளாதார ஆதரவு அளிப்பதைத் தாண்டி கலைவிழாவில் மோபிலின் பங்கு என்ன? கலை வளர்ச்சி குறித்த தனிப்பட்ட அக்கறை பெருநிறுவனங்களுக்கு உண்டா?
பெருநிறுவனங்களின் கலை ஆதரவு என்பது காசோலையில் கையெழுத்திடுவதோடு முடிவதாகப் பலரும் நினைக்கின்றனர். மோபிலில் முதலில் சூழல் அவ்வாறு இருந்தது. ஆயினும், கேரி ஸ்டீனும் (Gary Steen) பிறகு நானும் கலை விழாவின் வழிகாட்டுக்குழுவில் நுழைந்தபிறகு அந்நிலை மாறியது. மோபிலின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார உதவியைத் தாண்டிய கலை நிர்வாகப் பங்கேற்பு ஏற்கெனவே வழக்கத்தில் இருந்தது. மூத்த அதிகாரிகளை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குக்கூட கலை நிறுவன ஆதரவுக்காக அனுப்பினர். பெருநிறுவன அதிகாரிகளின் நிர்வாகத் திறன்கள் பல்வேறு நிலைகளில் கலை நிர்வாகத்திற்கு உதவின. பல எடுத்துக்காட்டுகள் உண்டு. சிங்கப்பூர்க் கலை வளர்ச்சிக்குக் கலை விழா வழிகாட்டுக் குழிவின் தலைவர் ராபர்ட் லாவின் (Robert Lau) பங்கு அளப்பரியது. இன்று நாம் எஸ்பிளனாட் (Esplanade) என அழைக்கும் கலை அரங்கின் முதல் தலைவர் அவர்தான். அரசாங்க ஊழியர்களோடு தனியார் பெருநிறுவன அதிகாரிகளின் திறன்களும் கைகோக்கும்போது கலை அதிகப் பயனடையும்.
சிங்கப்பூர்க் கலைவிழாவில் ஒரு தொழில்முறை கலை மேலாளரின் பங்கேற்பு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது?
நிறைந்த அனுபவமும் மிகுந்த திறமையும் உள்ள கலை இயக்குநர் ஒருவர் தலைமையேற்றால் கலை விழா அடுத்த கட்டத்துக்கு நகரும் என்பதில் எனக்கும் வழிகாட்டுக் குழுவிலிருந்த பலருக்கும் நம்பிக்கை இருந்தது. எடின்பர்க் கலைவிழா ஆகப்பெரியது. அதற்கடுத்த நிலையில் அடிலெய்ட் கலைவிழா இருந்தது. சிங்கப்பூருக்கு அது நல்ல முன்மாதிரியாக இருக்கும் என்று பட்டது. அதனால்தான் அதன் கலை இயக்குநர் அந்தோணி ஸ்டீலை (Anthony Steel) அணுகினோம். அரசாங்கத் தரப்பிலிருந்து கலாசார இயக்குநர் லீ வாய் கோக்குடன் (Lee Wai Kok) சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.
ஒரு வெளிநாட்டுக் கலை இயக்குநர் சிங்கப்பூர்ச் சூழலையும் தேவைகளையும் புரிந்து செயல்படுவாரா என்ற தயக்கமும் ஐயமும் பலருக்கு இருந்தது உண்மை. ஆனால் வழிகாட்டுக் குழுவில் பேராசிரியர் பெர்னட் டான் (Bernard Tan) போன்ற உள்ளூர்க் கலை ஆர்வலர்கள் பலர் இருந்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது. நீண்ட, தீவிரமான உரையாடலுக்குப்பின் ஸ்டீலின் மீது லீ வாய் கோக்குக்கு நம்பிக்கை பிறந்தது. ஸ்டீலை 1982இல் கலை இயக்குநராக நியமிக்க மனமாற்றம் ஏற்பட்டது.
சிங்கப்பூர்க் கலைவிழா எந்த அளவுக்குத் தொழில்முறையில் நடந்ததோ அதேயளவுக்குப் புதிய கலைஞர்கள் பங்கேற்கும் மக்கள் விழாவாகவும் நடந்துள்ளதைக் காணமுடிகிறது. அது எப்படி சாத்தியமானது?
ஏற்கெனவே கலை ஈடுபாடும் ரசனையும் கொண்ட ஒரு குழுவுக்காக மட்டும் கலைவிழா நடக்கக்கூடாது என்று நினைத்தோம். ஒருபக்கம் கலைவிழாவை நாடி ஈடுபாடுள்ளோர் வந்தனர் என்றால் மறுபக்கம் கலைவிழா பொதுமக்களை நாடிச்சென்று அவர்களைக் கலைக்குள் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அவ்வாறுதான் பெரும் கலை அரங்குகளில் மட்டுமின்றி வீடமைப்புப் பேட்டைகளுக்குள்ளும் கலைவிழா நுழைந்தது. திறந்தவெளி நிகழ்ச்சிகள், திடீர் மேடை நிகழ்ச்சிகள் என அது விரிவடைந்தது.
நமக்கு அதுவொன்றும் புதிதல்ல. ஒரு நூற்றாண்டாக வாயாங் (Wayang) நடத்திவருகிறோம். வீதி நாடகம் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. அதனால் கலைவிழாவின் ஒரு பகுதியாக அனைவரையும் உள்ளடக்கும் புறநகர்க் கலைவிழாவையும் (Fringe Festival) உருவாக்கினோம். கலை மக்களை நாடிச் செல்லவேண்டும், பலதரப்பட்டக் கலைஞர்களும் பங்கேற்கவேண்டும், கட்டணமின்றிக் கண்டுகளிக்கும் வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்துக்கொண்டோம். இயல்பாகவே அவற்றில் சிங்கப்பூரர்களின் பங்கேற்பு அதிகரித்தது. எடின்பர்க் கலைவிழாவிலும் அத்தகைய முயற்சிகள் நடந்தன. அவற்றிலிருந்தும் கற்றுக்கொண்டோம்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஜெஸிகா லியோ (Jessieca Leo) என்ற அறிவியல் பட்டதாரிக்கு இதுபோன்ற மக்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் திறனும் அதீத ஆர்வமும் இருந்தது. ஆனால் கலைவிழாவில் அறிவியல் பட்டதாரி என்ன செய்வார் என்ற தயக்கம் பலருக்கு இருந்தது. எனக்கு அவர்மீது நம்பிக்கை இருந்ததால் அவரை மோபில் நிறுவன ஊழியராக ஆக்கிக் கலைவிழாவுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் அனுப்பினேன். அவரது செயல்பாடுகளைப் பார்த்தபிறகு அமைச்சு அவரை முழுநேர அரசு ஊழியராகப் பின்னர் ஆக்கிக்கொண்டது. ஆகவே, கலைவிழா என்று வரும்போது பட்டப்படிப்பைவிட ஆர்வமும் படைப்பாக்கமும் புத்தாக்கமும் உள்ளோரை உள்ளிழுப்பது மிகவும் முக்கியம்.
சிங்கப்பூரின் கலாசாரக் கொள்கை உருவாக்கம் 1980களில் நிகழ்ந்தபோது அதில் நீங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். பிறகு 1991இல் தேசியக் கலை மன்றம் உருவானபோது அதற்கான திட்டக்குழுவின் தலைமை வகித்தீர்கள். பிறகு 2004இல் கலை விழாவுக்குத் தலைமை ஏற்றீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
கலைகளின் வளர்ச்சிக்காகக் கலாசார அமைச்சு இருந்தபோதிலும் அரசாங்கம் செயல்படும் முறைகள் காலப்போக்கில் கலைகளின் வளர்ச்சியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் நிலையை உருவாக்கிவிடும். சிங்கப்பூர் என்றல்ல, இவ்வுண்மை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஆகவே கலாசார அமைச்சுக்கு உட்பட்ட ஆனால் மாறுபட்ட நிர்வாகக் கட்டமைப்பையும் கலைவளர்ச்சியைக் குவிமையமாகவும் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க என் தலைமையிலான குழு சிந்தித்தது.
பொருளாதார வளர்ச்சியைப்போலக் கலை வளர்ச்சியை எளிதாக அளவிட இயலாது. அளவுகோல்களும் அகவயமானவை, ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியவை. ஆகவே அரசாங்கக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும் கலை அமைப்புகளுக்கு நீக்குப்போக்குகளும் அவசியம். பல நிறுவன அமைப்புமுறைகளை ஆராய்ந்தபிறகு Company Limited by Guarantee (CLG) என்னும் முறை பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்தோம். முதலில் எங்கள் குழுவிலேயே மாற்றுக்கருத்துகள் நிலவியபோதும் அவற்றை விவாதித்துப் போக்கிக்கொண்டோம். CLG அமைப்பை ஒரு தன்னாட்சி அமைப்பாகவும் அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதாகவும் வடிவமைத்தோம். பல வசதிகள் இவ்வமைப்பில் உண்டு. எடுத்துக்காட்டாக, அமைப்புக்கு ஆளெடுக்கும்போது அமைப்பின் நெறிமுறைகளுக்கு உட்பட்டால் போதும். அரசாங்க வழக்கங்களைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை.
விரிவான அறிக்கையைத் தயாரித்து துணைப்பிரதமர் ஓங் டெங் சியாங்குக்கு (Ong Teng Cheong) அனுப்பிவிட்டு நான் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றேன். அரசாங்கம், கலை மன்றத்தை CLG-ஆக அல்லாமல் ஆணைபெற்றக் கழகமாக (Statutory Board) நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்ததைச் செய்திகளில் பார்த்தேன். நிதி ஆதரவு அளிக்க ஆணைபெற்றக் கழக வடிவமே சிறந்தது என்ற காரணம் எனக்குச் சொல்லப்பட்டது. CLG-ஆக இருந்திருந்தால் கலை மன்றம் இன்னும் அதிகமாகச் சாதித்திருக்கும் என்பது என் நம்பிக்கை.
கலைவிழா 2004 குறித்துக் கேட்டீர்கள். என்னைவிடத் திறமை வாய்ந்த இளையர் பலர் இருந்தனர். கலை மன்றத்தின் லீ சுவன் ஹியாங்கும் (Lee Suan Hiang) கோ சிங் லீயும் (Goh Ching Lee) வலியுறுத்தியதால் நான் கலைவிழாவுக்குத் தலைமை ஏற்றேன். கொஞ்சம் அனுபவமும் தலை சற்று நரைத்திருப்பதும் உதவும் என அவர்கள் நினைத்திருக்கலாம். எனக்கும் கலைவிழா மீது தணியாத மோகம் உண்டு. சிங்கப்பூரில் கலைக்கு இடப்பட்ட அஸ்திவாரத்தை வலுவாக்க ஓரிரு செங்கற்களையாவது சேர்க்க வாய்ப்புக் கிடைத்ததில் நிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
சிங்கப்பூர்க் கலைவிழா போலவே 1993இல் ஆசிய நிகழ்கலை விழா (Festival of Asian Performing Arts) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதே, அது ஏன் நின்றுபோனது?
ஆசிய நிகழ்கலை விழா நல்ல திட்டம்தான். ஆனால் அதில் மேலைப் பண்பாட்டுத் தாக்கம் அதிகமிருந்தது. பேராசிரியர் டாமி கோ (Tommy Koh) போன்றோர் ஆசியத் தன்மைக்கு அதிக இடமளிக்க வேண்டியது குறித்து அக்கறை தெரிவித்தனர். எனக்கும் அதில் முழு உடன்பாடு உண்டு. நல்ல திட்டம் என்றாலும் மோசமான செயலாக்கத்திற்கு ஆட்பட்டால் அது தோற்றுவிடும். ஆசிய நிகழ்கலை விழா அப்படியாகத் தோன்றி மறைந்தது. ஆனால், ஈராண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த கலைவிழா தற்போது ஆண்டுதோறும் நடந்தேறுவதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே அந்தக் காரணத்தாலும் ஆசிய நிகழ்கலை விழா என ஒன்றைத் தனியாக ஏற்பாடு செய்வதற்கான அவசியம் இல்லாமற்போனது.
கலைவிழா, கலை ஆதரவு, கலை நிர்வாகம், கலை நிறுவன உருவாக்கம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளோம். கலைஞர்களுக்கும் கலை நிர்வாகிக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்?
குவோ பாவ் குன்னுக்கும் (Kuo Pao Kun) எனக்குமான உறவைப்பற்றிச் சற்று விளக்கினால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
பாவ் குன் அவரது கலைத்திறன்களாலும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் எனத் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சில ஆண்டுகள் சிறைக்குச் சென்றுவந்தவர் என்பதாலும் அவரைப் பலரும் அறிந்திருந்தனர். நான் மோபிலில் இருந்தபோது அவருடைய நாடகப் பயிற்சி, ஆராய்ச்சித் திட்டத்தில் (Theatre Training & Research Programme) பேராசிரியர் எடி குவோவுடன் (Eddie Kuo) என்னையும் அவரது ஆலோசனைக் குழுவில் சேர்த்துக்கொண்டார். நான் ஒரு கலை ஆர்வலனே ஒழிய கலைஞன் அல்ல. ஆயினும் கலை நிர்வாகத் திறனும் மனதிற்பட்டதை மறைக்காமல் பேசும் குணமும் என்னிடம் இருந்தது.
நாடகக் கலையின் உச்சங்களைத் தொட்டிருந்த பாவ் குன்னுடன் வழிபாட்டு உணர்வுடன் பழகிய பலர் இருந்தனர். எனக்கு அவருடன் பழக்கம் உண்டாவதற்கு முன்பே அவர்மீது பெரிய மதிப்பிருந்தது. இருப்பினும் குறையாகப் பட்டதை வெளிப்படையாக அவரிடம் சொல்வதற்கு நானும் அவரது குழுவில் இருந்த டான் பெங் லுவானும் (Tan Beng Luan) தயங்கவில்லை. அதற்காகவே அவர் எங்களை அருகில் வைத்துக்கொண்டார். ஏனென்றால் அவரது கலை மேலும் பொலிவுடன் விளங்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் எங்கள் கருத்துகள் வருகின்றன என்பதை அவர் புரிந்துகொண்டார்.
பாவ் குன்னும் டே கெங் சூனும் (Tay Kheng Soon) சப்ஸ்டேஷன் (Substation) என்ற அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டபின் நிதியாதரவுக்காக என்னை நாடினர். நான் மோபில் நிர்வாகத்துடன் பேசினேன். அவர்கள் சம்மதித்தனர், ஆனால் ‘மோபில் கலை மையம்’ என அமைப்புக்குப் பெயரிடுமாறு நிபந்தனை விதித்தனர். பாவ் குன் சம்மதிக்கவில்லை. மோபில், பாவ் குன் இருதரப்பிலும் இருக்கும் நியாயங்களை நான் உணர்ந்தேன். இறுதியாக மோபிலின் நிதியாதரவு கிடைக்கவில்லை. ஆனாலும் சப்ஸ்டேஷன் உருவானபோது அதன் நிர்வாகக் குழுவில் என்னை பாவ் குன் சேர்த்துக்கொண்டார்.
கலைஞர்களுக்கும் கலை நிர்வாகிக்கும் இடையே, பரஸ்பர மதிப்பு, தயக்கமின்றிக் குறைகளையும் மாற்றுச் சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்ளும் முதிர்ச்சி, ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை கொண்ட உறவு இருக்கவேண்டும். கலையும் நிர்வாகமும் வெவ்வேறு திறன்கள் என்ற புரிதலே அவ்வுறவுக்கு அடிப்படை.
சிங்கப்பூரில் கலை நிர்வாகி எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சவால் எது?
சிங்கப்பூரில் கலைகள் பெருமளவுக்கு அரசாங்கத்தின் கைகளில் உள்ளன. அந்த நிதர்சனத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதற்குள் எவ்வளவு சிறப்பாகச் செய்யவியலுமோ அதைச் செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக, பல்லின, பல்பண்பாட்டு, பன்மொழிச் சமுதாயமாகச் சிங்கப்பூரை அரசாங்கம் உறுதிசெய்ய முயலும்போது அவற்றை ஒட்டித்தான் கலைகளும் அவற்றுக்கான நிர்வாக அடிப்படைகளும் அமையவியலும். அதேவேளையில் ஒவ்வொரு கலை முன்னெடுப்பிலும் அனைத்து இன, பண்பாட்டு, மொழிகளையும் உள்ளடக்க இயலாது. மேலும், ஒரு கலை நிர்வாகி அரசாங்கத் துறைகளில் இருக்கிறாரா தனியார் துறையா என்பதைப் பொறுத்தும் சில கட்டுப்பாடுகளும் சுதந்திரங்களும் இருக்கும். தேசியக் கலை மன்ற நிர்வாகி ஒருவர் பிரிட்டிஷ் கலை மன்றத்தைத் தொலைபேசியில் அழைத்து அவர்களிடம் தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற இயலும். அரசு சாரா அமைப்புகளுக்கு அது அவ்வளவு எளிதில்லை.
சிக்கல்களும் சவால்களும் நீடிக்கும்போதிலும், சிங்கப்பூரில், தொழில்முறைக் கலை நிர்வாகிகள் பலரை என்னால் கடந்த பத்தாண்டுகளில் பார்க்கமுடிகிறது. எழுபதுகளில் நான் கலை நிர்வாகத்துக்குள் இறங்கியபோது அந்நிலை இல்லை. அப்போது கலையைச் சந்தைப்படுத்துதல் (marketing) என்ற சிந்தனையும் இல்லை. விளம்பரம் (publicity) செய்வதே குறிக்கோளாக இருந்தது. நிதியாதரவு தேடித்தருவது மட்டுமின்றி, சிறந்த நிர்வாகத் திறன்களின் அவசியத்தைக் கலைக்குழுக்களிடம் ஆற்றுப்படுத்துவதும் தற்காலக் கலை நிர்வாகியின் சவாலான வேலை.
சிங்கப்பூர் ஒரு கலாசாரப் பாலைவனமாக இருந்ததைக் குறிப்பிட்டு இவ்வுரையாடலைத் தொடங்கினோம். தற்போது எப்படி உள்ளது எனக்கேட்டு நிறைவுசெய்ய நினைக்கிறேன். நன்றி!
கலாசாரப் பூந்தோட்டமாக மட்டுமின்றி நம்முடைய கரையோரப் பூந்தோட்டத்தைப்போல பன்மைத்துவம் மேலோங்கிய ஒரு கலைச்சூழல் கடந்த சுமார் அரைநூற்றாண்டில் இங்கே உருவாகியிருக்கிறது. அந்த மாற்றத்திற்கு எந்தவொரு கலை அமைப்பையும்விட சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அரசாங்கம் கலை மேம்பாட்டுக்குச் செலவிடும் பொருளும் உழைப்பும் நேரமும் பாராட்டுக்குரியவை. அதேவேளையில், தனியார் துறையின் பங்களிப்பின்றி இன்று இந்த இடத்தை நம்மால் அடைந்திருக்கவியலாது. இப்பட்டியலில் கொடையாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் சேர்க்கவேண்டும். கலைஞர்களுக்காகத்தான் நாம் இயங்குகிறோம்.
கலை நிர்வாகம் என்பது கலைக்காகவே தவிர நிர்வாகத்துக்காக அல்ல என்பதை வலியுறுத்தி முடிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி, வணக்கம்!