ததும்புதலின் பெருங்கணம்
பெருங்கணத்தின் கவிதைகள்
ஒற்றை இலை, ஓரக்கண்ணீர், காலணிகள், தறிக்கப்பட்ட மரங்களின் ஓலம், மீன்கள் தரும் சாபம், ஞானமும் இனிமையும் கூடும் விழிப்பு, சொற்கள் இயற்கையாக மாறும் விந்தை எனப் பல “இனிய அதிர்ச்சிகளை” இந்தத் தொகுப்புத் தமிழுக்குக் கொண்டு வருகிறது.
தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஆற்றலும் அறிவும் அழகும் புதுமையும் தரும் கவிதைகள் இவை. தலைப்புச் சொல்வதுபோல ததும்புதலின் பெருங்கணங்கள் அல்ல இந்தக் கவிதைகள். அக்கணங்களையும் மீறித் தமிழுக்குப் புதுக்காற்றாய்த் ததும்புதலும் தயக்கமும் இல்லாமல் வருகிற கவிதைகள் இவை எனச் சொல்வதே பொருத்தம். இந்தக் கவிதைகளோடு கூட வருபவை நுட்பமான கணப்பொழுதுகளின் சித்திரப் படிமங்கள்.
“நெடும் பாதையில்
பற்றிக் கொள்ளக் கைகளைத் துழாவும்
கழிவிரக்கத்தை”
எனும் வரிகள் அதிசயத்தைப் பெரிதாக்குகின்றன.
“கதலிப்பாட்டு எனும் கவிதையில் அவர் சொல்கிறார்.
“இந்த வாழ்வு
என்னைத் தண்டிக்க
வேறு எந்த
சிறப்புக் காரணங்களும் இல்லை
வெறுமனே நீ
வந்து சென்றதைத் தவிர”
கண்ணாடிச் சாளரங்களில்
பகையையும் அன்பையும்
ஒரு சேர எழுதுகிறது காலம்
-என்கிறது அவரது இன்னொரு கவித்தொடர்.
இத்தகைய கவிவரிகள் தம் எளிமையின் அழகால் நம்மை எளிதில் ஏமாற்றி விடக் கூடியன. பழகிப்போன வழமையான சொற்களைக் கவித்துவப் படிமமாக்குகிற பெருவழி இத்தகைய கவிதை இயலில் சாத்தியமாக முடியும். இந்த வரிகளுக்கிடையில் எமக்குத் தெரிந்தவையும் உள்ளன. அதே நேரம். நாம் காண முடியாத அல்லது புகையில் தெரியும் முகங்களாக அலையும் சித்திரிப்புகளும் உள்ளன.
தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவகைப்பட்டவை. வாய்ப்புகளும் வளமும் ஒரு சேர அவர்களுக்குக் கிடைத்தாலும் முற்று முழுதாகச் “சிங்கப்பூரர்” (Singaporean) என்ற “தேசிய” அடையாளத்தை அவர்கள் பெற்றுக் கொள்வதும் வரித்துக் கொள்வதும் எளிதல்ல. கால ஓட்டத்தில் அவர்கள் சிங்கப்பூர்/ தமிழகம் அல்லது சிங்கப்பூர்/இந்தியா என்கிற இரட்டை உணர்வை எவ்வாறு வாழ்விலும் இலக்கியத்திலும் வெளிப்படுத்துகிறார்கள் என்பது எங்களுடைய கவனத்துக்கும் கணிப்புக்கும் உரியதாகும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பண்பாடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வரலாறுகளுக்கு உரித்துடையவர்களாக இருப்பதே இன்றைய காலத்தின் நியதியாக மாறி வருகிறது. நாடு கடந்த, நிலங்கடந்த அடையாளங்களும் இலக்கியமும் தமிழுக்கு வளத்தையும் செழுமையும் கூட்டுகின்றன என்று சொல்வது மிகையான கூற்றல்ல.,
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை. துரிதமாகக் காலத்தை நகர்த்துகிற பட்டின/நகர வாழ்வு மானுடத்தின் பொறுமையைக் கூறுபடுத்துவது; மானுடத்தை எண்ணிமக் கணினிக் கோடுகளாக மாற்றுவது; செயற்கைப் பூமரங்களுக்கும் பெரிய அங்காடிகளில் நீர் ஊற்றுவது. அத்தகைய வாழ்வில் கவிதைக்கான இடம் என்ன? அந்த வாழ்வில் வரும் புதிய, செழிப்பான கவிதைகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விகளுக்கு மோகனப்ரியாவின் கவிதைகள் அழகும், சில வேளைகளில் ஆழ்ந்த துயரமும் மிக்க ஒரு வடிவில் எமக்கு மறுமொழி வழங்குகின்றன.
மொழியின் வளமும் செறிவும் நயமும் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளுக்கு மந்திர இசையையும் வழங்குகின்றன.
அரசியல் நுண்ணுணர்வோடும் விமர்சனங்களோடும் கலையும் இலக்கியமும் கவிதையும் வெளிவருவதில் பல வகையான எல்லைப்பாடுகள் கொண்ட நாடு சிங்கப்பூர். அவற்றை மீறி, கலை தரும் சிறப்புரிமையை முன் வைத்து, ஒதுக்கப்பட்டவர்களையும் ஒடுக்கப்படுபவர்களையும் எங்களது கூலிமையையும் கூலித்தமிழையும் தமிழர்களையும் நாங்கள் பாட வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான விரிந்த சமூக, அனுபவ இலக்கியத் தளம் சிங்கப்பூரில் இருக்கிறது. •
— கவிஞர் சேரன்.